மரபு: கடவுளைப் பிரபலப்படுத்திய கலைஞர்கள்!

இன்று காலண்டர்கள் இல்லாத வீடுகள் இல்லை. பெருவாரியான மக்கள் வழிபடும் தெய்வங்கள் எல்லாம் காலண்டர்களாக அச்சிடப்பட்டு, சட்டகங்களுக்குள் அடைக்கப்பட்டு குடிசை முதல் மாளிகை வரை பூஜையறைகளை அலங்கரிக்கின்றன. இன
Published on
Updated on
4 min read

இன்று காலண்டர்கள் இல்லாத வீடுகள் இல்லை. பெருவாரியான மக்கள் வழிபடும் தெய்வங்கள் எல்லாம் காலண்டர்களாக அச்சிடப்பட்டு, சட்டகங்களுக்குள் அடைக்கப்பட்டு குடிசை முதல் மாளிகை வரை பூஜையறைகளை அலங்கரிக்கின்றன. இன்று பெரும் ஓவியர்களாகப் புகழ் பெற்றிருப்பவர்கள் அனைவரும் தாம் பள்ளி மாணவராக இருந்தபோது இந்தக் காலண்டர் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு தூரிகையைக் கையில் எடுத்தவர்கள்தாம். கர்ப்பக்கிரகத்தில் பாதுகாத்து வந்த கடவுளர் உருவங்களைக் கடையனுக்கும், கடையனாக உள்ள மக்களின் குடிசைகளுக்குள் கொண்டு வந்த பெருமை இந்தக் காலண்டர் ஓவியர்கள், மற்றும் சிவகாசி அச்சகங்களையே சாரும்.

இக்கலையை வெகுமக்கள் கலை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் இந்த ஓவியங்களைப் பஜார் ஆர்ட் சிவகாசி காலண்டர்கள் என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்த வெகுஜனக் கலையை ஆய்வு செய்வதில் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரும் பிரச்னை. ஆய்வுக்காகப் பழைய காலண்டர்களைச் சேகரிக்கும்போது அவை முழுமையாகக் கிடைப்பதில்லை. அதை வரைந்தவர் யார் என்ற விவரம்கூட அதில் இருக்காது. இதனால் இக்கலையின் முக்கிய அம்சமான வட்டாரத் தன்மையை அவர்களால் கணிக்க முடியவில்லை.

நீண்டகாலமாகத் தெளிவு பெறாமல் இருந்த இப்பிரச்னைக்குக் கோவில்பட்டியைச் சேர்ந்த ஒருவர் தீர்வு தருகிறார்.

பழைய சிவகாசிக் காலண்டர் ஓவியமாக இருந்தாலும் அதை வரைந்தவர் யார் என்பதை அந்த ஓவியத்தை ஒருமுறை பார்த்ததுமே சரியாகச் சொல்லிவிடுகிறார்.

அவர் பெயர் மாரீஸ். அதைப் பற்றி அவரே தெளிவாக விளக்குகிறார்..

"தெய்வீக உருவ காலண்டர் என்றதுமே ராஜா ரவிவர்மாவை சொல்லுவார்கள். ராஜா ரவிவர்மா, தெய்வப் படங்களை மேற்கத்திய பாணியில் வரைந்தவர்.

ஆனால், தெய்வீக உருவங்களைத் தனக்கே உரிய நாடக திரைச்சீலை உத்திகளோடு ஓவிய மரபில் வரைந்து தனக்கான பாணியாக உருவாக்கியவர் பிரபல ஓவியர் கொண்டைய ராஜு அவர்கள்தான்.

நாடகத் தந்தை ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை ஒரிஜினல் ஸ்ரீ மீனலோசனி பால சற்குண சபா பாய்ஸ் கம்பெனியில் நாடகங்களுக்கான காட்சிகளை வரையும் ஓவியராகக் கொண்டைய ராஜு தமிழகம் மற்றும் இலங்கை முழுவதும் பயணம் செய்தார். கொண்டைய ராஜு ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரும் ஆவார். இரண்டாவது உலக யுத்த காலத்தில் மதுரை, ராஜபாளையம் சுற்றி வந்த நாடக சபா கோவில்பட்டியில் முகாமிட்டபோது பொருளாதார காரணத்தால் நாடக சபா அங்கேயே கலைக்கப்பட்டது. கொண்டைய ராஜு மற்றும் அவரது சீடர்கள் தங்கள் தொழிலைத் தொடர்வதற்காகக் கோவில்பட்டியிலேயே தங்க நேர்ந்தது. புரவலர்கள் பலர் அவர்களுக்கு ஆதரவளித்தனர். அப்போது சிவகாசியில் அச்சுத்தொழில் வெகு வேகமாக வளர்ந்து வந்த நேரம். வர்த்தக நிறுவனங்களுக்கான காலண்டர்களை அச்சிட்டு விளம்பரம் செய்ய விரும்பினர். அதற்கு கொண்டையராஜு மற்றும் அவரின் சீடர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். முதன்முதலாக மதுரையிலுள்ள நகைக்கடை ஒன்றுக்கு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணக் கோல ஓவியம் காலண்டராக அச்சிடப்பட்டது. இம்முயற்சி பெரும் வெற்றி அடைந்ததால் தொடர்ந்து காலண்டர்கள் அச்சிடுவதில் அச்சக உரிமையாளர்கள் அதீத ஆர்வம் காட்டினர்.

அருகிலேயே பிரபல ஓவியர் கொண்டைய ராஜு இருந்தது அவர்களுக்கு இன்னும் வசதியாகப் போயிற்று. அச்சிடப்பட்ட காலண்டர்களை உடனுக்குடன் அவரிடம் காண்பித்து கலர் கரெக்ஷன் செய்ய முடிந்தது, இதனால் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்தது. கொண்டைய ராஜு ஓவியங்கள் காலண்டர்களின் வழி பிரபலமடைந்ததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

மேலும் ரவிவர்மா ஆயில் வண்ணத்தைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்தார். கோவில்பட்டி ஓவியர்கள் போஸ்டர் கலர்களைப் பயன்படுத்தினர். இதனால் வண்ணங்கள் உடனே காய்வதுடன், பளிச்சென்றும் இருந்தன. தவிரவும், உள்ளூர்களில் பிரபலமாக இருந்த தெய்வங்களின் படங்களையே காலண்டர்களுக்குத் தேர்வு செய்தனர். இக்காரணங்களால், கொண்டையராஜு வரைந்த காலண்டர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தன.

கொண்டைய ராஜு துவக்கி வைத்த இப்பாணி பின்னர் தமிழ்நாட்டுப் பாணியாகவே மாறிப் போனது. இதை நான் சொல்லவில்லை. ஆசிய வெகுஜனக் கலைகள் குறித்து நீண்டகாலமாக ஆய்வு செய்து வரும், கனடாவிலுள்ள மியூசியம் ஆப் சிவிலிசேசன் (ஙன்ள்ங்ன்ம் ர்ச் இண்ஸ்ண்ப்ண்ள்ஹற்ண்ர்ய்) அருங்காட்சியகத்தின் முதன்மைக் காப்பாட்சியர், பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸ்டீபன் இங்கிலீஷ் கூறியுள்ளார்.

இவரது முயற்சியால் இந்த அருங்காட்சியகத்தில் சிவகாசிக் காலண்டர்கள் சேகரிக்கப்பட்டுக் கலைப் பெட்டகங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் ஆசிய நாடுகளின் வெகுஜனக் கலைகள் குறித்த பல அமைப்புகளில் இயக்குனராகவும் இவர் உள்ளார். இவர்தான் முதன் முதலில் இந்திய ஓவியங்களில் கொண்டைய ராஜு பாணி ஓவியக்கலை குறித்த ஆய்வுகளை 1980- களிலேயே மேற்கொண்டு அவரது மரபின் முக்கியத்துவம் குறித்து உலகுக்குச் சிறப்பாக அறிவித்தவர். அவர்தான், தமிழ்நாட்டின் தொடக்க கால பாப்புலர் ஆர்ட் ஓவியங்களைக் கூட யார் வரைந்தது எப்போது வரையப்பட்டது என்று கண்டுபிடிப்பதில் மாரீஸ் முக்கியமானவர். அவர் கணிப்பு மிகவும் துல்லியமாகவும் இருக்கிறது என்று தனது ஆய்வுக் கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளார்'' என்று அவர் கூறினார்.

அதை எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள் அதற்கான உள்ளீடுகள் எவை என்ற கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

"ஆய்வாளர்கள் இதனை சாமி படங்கள், பஜார் ஆர்ட் என்கிற சிவகாசிக் காலண்டர்கள் என்று அழைக்கிறார்கள். 60களிலிருந்து சிவகாசிக் காலண்டர்கள் பிரபலமாக உள்ளன.

இவற்றை ஆய்வு செய்ய பழைய காலண்டர்களைச் சேகரிக்கிறார்கள். அவ்வாறு கிடைக்கும் காலண்டர்களில் பல நேரங்களில் அந்த ஓவியங்களை வரைந்த ஓவியர்களின் பெயர்கள் இல்லாதபோது அவர்களுக்கு அதைப் பட்டியல் படுத்துவது சிரமமாக இருக்கிறது. ஆனால் அதைக் கண்டுபிடிப்பது எப்படி என்பதும்கூட அவர்களுக்குப் பிரச்னைதான்.

அதிலும் சிலர் வரைந்த ஓவியங்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரித் தோன்றும். ஆனால், நுட்பமாகப் பார்த்தால்தான் அதிலுள்ள வேறுபாட்டைக்

கண்டுபிடிக்க முடியும். நான் சிறு வயதிலிருந்தே இந்த ஓவியங்களோடு தொடர்ந்து பயணித்து வருவதால் எனக்கு கோவில்பட்டி ஓவியர்களின் ஸ்டைல், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய வண்ணங்கள் ஆகியவற்றோடு நல்ல பழக்கம் இருந்தது.

இதனால் ஒரு காலண்டர் ஓவியத்தை வரைந்தவர் யார் என்று தெரியாவிட்டாலும் அதை யார் வரைந்தது எந்தக் காலகட்டத்தில் வரையப்பட்டது என்பதை எளிதாகக் கூற முடிந்தது.

ஸ்டீபன் இங்க்லீஸ் போன்ற ஆய்வாளர்களுக்கே கூட இது பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

இது பற்றித்தான் இங்க்லீஸ் தனது ஆய்வுக்கட்டுரையில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதினார்.

காலண்டர் ஓவியங்கள் வரைவதில் தொடக்க காலத்தில் கோவில்பட்டி ஓவியர்களே அதிகம் ஈடுபட்டிருந்தனர்.

1960 - கள்தான் இதன் தொடக்க காலமாக இருந்தது. காலண்டர்கள் ஓவியர்களில் பிரபலமானவர்கள் கொண்டைய ராஜு, சுப்பையா, ராமலிங்கம்,

டி.எஸ். மீனாட்சிசுந்தரம், சீத்தாராம், சிவகாசி ரவி போன்ற பலர் இருந்தனர். முதலில் சொன்னபடி இவர்கள் ஸ்டைலில் சின்னச் சின்ன நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.

பேக் டிராப், தெய்வங்களின் நகைகள், ஸ்ட்ரோக், லைட்டிங், எக்ஸ்ட்ரா டீடெயில்ஸ் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வரைவார்கள்.

இதை வைத்துத்தான் அதை யார் வரைந்தது என்று கண்டுபிடிக்கிறேன். மேலும், 1960-களில் பீக்காக் புளூ வண்ணத்தின் ஆதிக்கம் அதிகம் கிடையாது.

எனவே அக்கால ஓவியங்களில் பீக்காக் கலர் ஆதிக்கத்தை அதிகம் காண முடியாது. 1970-களில் மெஜந்தா, பீக்காக் ஆகிய இரு வண்ணங்கள் அதிகம் கோலோச்சின.

பாப்புலர் ஆர்ட்டில் இது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். மக்களை வெகுவாகக் கவர புதிய அம்சங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். 1960- களில் ஆதிக்கம் செலுத்திய வண்ணங்களை மீண்டும் 1970-களில் பயன்படுத்தவில்லை. அதன்பிறகு, 1980-ல் நுகர்வுக் கலாசாரம் மேலும் வளர்ந்தது.

அதற்கேற்ப புதிய வண்ணங்களில் போஸ்டர் கலர்கள் வந்தன. அப்போது அதையே அதிகமாகப் பயன்படுத்தினார்கள். இன்று வரை இது தொடர்கிறது. சில ஆண்டுகள் முன்பு ஹட்ச் விளம்பரத்தில் ஆரஞ்சு கலர் பயன்படுத்தப்பட்டது.

அப்போது வந்த அனைத்து விளம்பரங்களிலும் எங்காவது ஒரு இடத்தில் அந்த சிவப்பு வண்ணத்தைப் பார்க்கலாம். இதுபோன்ற எளிய முறைகளில்தான் நான் யார் வரைந்தது

எப்போது வரையப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கிறேன்'' என்ற மாரீஸின் நுணுக்கமான அணுகுமுறை ஆச்சர்யப்படுத்துகிறது.

கோவில்பட்டியில் பிறந்து வாழ்ந்து வரும் மாரீஸ் பிரபல ஓவியர் கொண்டைய ராவின் பேரன் ஆவார். கொண்டைய ராஜுவின் முதன்மை மாணவர் சுப்பையா இவரது தந்தை. அதுமட்டுமல்ல. உலகப் புகழ் பெற்ற பாப்லோ பிகாசோ நூற்றாண்டு இந்தியப் பெருநகரங்களில் எந்த அளவுக்குக் கொண்டாடப்பட்டது என்று தெரியாது. ஆனால், கோவில்பட்டியில் 1981-இல் அவரது நூற்றாண்டை ஒட்டி பிரமாண்ட ஓவியக் கண்காட்சி கோவில்பட்டி இலக்கியவாதிகளால் நடத்தப்பட்டது. இதற்கான முழு முயற்சியையும் மேற்கொண்டவர் மாரீஸ். தொடர்ந்து கார்ட்டூன்கள் கண்காட்சி, உலக சமாதான ஓவியக் கண்காட்சிகளையும் அச்சிறு நகரத்தில் நடத்தியுள்ளார். அச்சுத் துறையிலும், பதிப்புத் துறையிலும் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார். கணினி மற்றும் ஆப்செட் வசதிகளைப் பயன்படுத்தி இலக்கியப் புத்தகங்களை நவீனப்படுத்தியதில் மிக முக்கியமானவர். அன்னம் முதல் தமிழினி வரை பல்வேறு பதிப்பகங்களின் நூற்றுக்கணக்கான புத்தக அட்டைகளையும், புத்தகங்களையும் வடிவமைத்துள்ளார்.

விடைபெறும்போது, கம்ப்யூட்டர் தொழில் நுட்பமும் தெரிந்து கொண்டால் உங்கள் ஓவியத் திறமைக்குச் சிகரங்கள் தொடலாமே என்றோம்.

"தமிழகத்தில் சாமி பட காலண்டர் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. ஆனால் அதை வரைந்தவர் யாரென்று பலருக்கும் தெரிவதில்லை. இந்த மரபின் கண்ணியாக இருந்து அவர்களை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்துவதையே என் நோக்கமாக வைத்திருக்கிறேன்'' என்கிறார் மெல்லிய சிரிப்போடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com