

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்குக் கொழுப்பு அதிகமாகி இருக்கிறது. "ரொம்பத்தான் கொழுப்பு' என்று திட்டுவார்களே, அந்தக் கொழுப்பு அல்ல இது. உண்மையாகவே உடலில் உள்ள கொழுப்பின் அளவு அதிகமாகி இருப்பதை அவர் சமீபத்தில் செய்து கொண்ட மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது.
உடம்பில் எல்.டி.எல்., எச்.டி.எல். என்று இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன. இந்த இரண்டில் எல்.டி.எல். கெட்ட கொழுப்பு. இன்னொன்று நல்ல கொழுப்பு. சென்ற ஆண்டு ஒபாமாவுக்கு எல்.டி.எல். 96%, எச்.டி.எல். 68% என்ற கணக்கில் இருந்தது. சமீபத்திய சோதனையில் கெட்ட கொழுப்பு (எல்.டி.எல்.) 138% ஆக ஜம்ப் ஆகியிருக்கிறது. எச்.டி.எ. கொஞ்சம் குறைந்து 62% ஆகியிருக்கிறது. கொழுப்பின் மொத்த அளவு 200க்கு மேலே போனால் பாதுகாப்பான எல்லையைக் கொலஸ்ட்ரால் தாண்டியிருக்கிறது என்று அர்த்தம். ஒபாமாவுக்கு இப்போதுள்ள கொழுப்பின் அளவு 209 (சென்ற ஆண்டு 173)
"இது ரொம்பவும் சீரியஸ் அல்ல. பார்டர் லைனை இப்போதுதான் தாண்டியிருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நார்மலுக்கு வந்துவிடும்' என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
ஒபாமாவுக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. அதை அடியோடு விட்டுவிட அவரால் முடியவில்லை. அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட இப்போது "நிக்கோடின் கம்' என்ற சூயிங் கம் போன்ற ஒன்றை மெல்லுகிறார்.
"இதை வேண்டுமானால் மென்று விட்டுப் போங்கள். சிகரெட் பக்கம் போகாதீர்கள்' என்று அவருக்கு டாக்டர்கள் அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.
"உயரம் 6 - 1' எடை 82 கிலோ. (ஷுக்கள் போட்ட நிலையில்) நாடித் துடிப்பு 56; புற்றுநோய்க்கான அடையாளங்கள் ஏதுமில்லை. மொத்தத்தில் நார்மல்.
ஒபாமா ஃபிட் ஃபார் டியூட்டி! என்று டாக்டர்கள் சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.
மிக முக்கியான ஒரு மாற்றம் ஏற்பட்டாக வேண்டும் என்று 13 சீன பத்திரிகைகள் ஒரே மாதிரியான தலையங்கம் ஒன்றை எழுதி கலக்கியிருக்கின்றன.
"ஹுகோவ்' முறையை எதிர்த்து தீட்டப்பட்ட தலையங்கம் அது!
மாúஸதுங் காலத்திற்குச் சென்றால்தான் ""ஹுகோவ்'' புரியும். கிராமத்து மக்கள் நகரங்கள் நோக்கி நகர்ந்து வந்து குடியேறுவதைத் தடுப்பதற்காக அவர் காலத்தில் "இந்த மனிதர் இந்தப் பகுதியை அல்லது கிராமத்தைச் சேர்ந்தவர்' என்று பதிவு செய்யும் ரிஜிஸ்ட்ரேஷன்தான் ""ஹுகோவ்''.
ஆனால் காலம் மாறமாற, கிராமத்து மக்கள் அதிக எண்ணிக்கையில் நகரங்களுக்கு வரத் தொடங்கினார்கள். அவர்கள் அப்படி வந்தாலும், அவர்களின் பதிவு முறையின்படி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதால் நகர கல்வி போன்ற வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைப்பதற்கு ""ஹுகோவ்'' தடையாக இருப்பதுதான் பிரச்னை.
"எங்கு வேண்டுமானாலும் செல்லும் உரிமை அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று' என்று வலியுறுத்தியது அந்தத் தலையங்கம்.
ஒரு கிராமத்து ஆள் நகரத்துக்கு வருகிறான். எப்படியோ இங்கேயே தங்கி வாழ்கிறான். அவனுக்குக் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை நகரத்தில் பிறந்தாலும், அதன் ஹுகோவ், கிராமத்தில்தான் இது சற்று வித்தியாசமான சீன விதிமுறை.
"மாசேதுங் இதைக் கொண்டு வந்த காலத்தில் நியாயமாக இருந்திருக்கலாம். எல்லோரும் நகரத்திற்கே வந்துவிட்டால் கிராமத்தில் மக்கள் தொகை குறையும். அங்கே உழைக்க ஆளிருக்காது. ஆனால் இப்போது நகரமும், கிராமமும் ஒரு சேர முன்னேறி வருகையில் ஒருவன் எங்கே இருந்தால் என்ன, பிராக்டிகலாகச் சிந்திக்க வேண்டாமா?' என்கிறது அந்தத் தலையங்கம்.
அமெரிக்காவில் இப்போது ஒரு புது சந்தேகம் எழுந்திருக்கிறது. வியாதிகளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் பெற்றோர் "ஐயோ என் குழந்தை படும் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை. அவனைக் கொன்றுவிடுங்கள், டாக்டர்' என்று கெஞ்சிக் கேட்பதாகவும், அப்படிப்பட்ட நிலையில் டாக்டர்களும் மார்ஃபைன் மருந்தை அதிகமாகக் கொடுத்து "கருணைக் கொலை' செய்வதாகவும் ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவினரிடம் ஆம்... நான் அப்படித்தான் டாக்டரிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் ஒத்துழைத்து ஓவர்டோஸ் மருந்து தந்தார்' என்று சில பெற்றோர்கள் ஒப்புக் கொண்டார்கள். இப்படிக் கருணை கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"எப்படியும் மரணம் அடையத்தான் போகிறான் என்ற உறுதியான நிலையில், சிகிச்சை ஏதும் இனி பயனளிக்காது என்று நிச்சயமான நிலையில் அந்த மரணத்தை விரைவு படுத்துவதில் என்ன தவறு?' என்று சில பெற்றோர் வாதிடுகிறார்கள்.
இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டரின் கருத்து: "நோயாளியின் பெற்றோர் கேட்டுக் கொண்டிதற்காக எந்த டாக்டரும் கருணைக் கொலை செய்ய உடன்படுவார் என்பது சந்தேகத்துக்குரியது. நோயின் கடுமையைக் குறைக்க மருந்துகளின் அளவை அதிகரிக்கும்போது அந்த மருந்து நோயாளியின் சுவாசத்தை கடினமாக்கக் கூடும். அந்தக் கடினம் சிக்கலாகி உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கலாம்'.
இரண்டில் எது உண்மை என்பது இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
சின்னச் சின்னதாய்...
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 130 ஆண்டு பழைமையான டவுன் ஹாலில் பாதுகாப்பு பெட்டக அறைகளைச் சமீபத்தில் சுத்தப்படுத்தியபோது ஒரு கற்றை தலைமுடி கிடைத்தது. இந்த முடி மாவீரன் நெப்போலியன் மரணப் படுக்கையில் இருந்தபோது அவர் தலையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. தலைமுடி கற்றையுடன் இருந்த கடிதத்தில் (நெட் டாட் என்ற ஸ்காட்லாந்துக்காரர் எழுதியது) "எனக்கு இந்த தலைமுடி கற்றை ஒரு பெண்மணியால் தரப்பட்டது. அவருடைய சகோதரர் நெப்போலியன் இறந்த தருணத்தில் உடனிருந்தார்' என்று எழுதப்பட்டிருந்தது.
உலகில் வேறு எந்த நாடும் இதுவரை விற்பனை செய்யாத ஒன்றை ஸ்விட்ஸர்லாந்து செய்ய ஆரம்பித்திருக்கிறது. என்ன அது? சின்ன சைஸ் ஆணுறைகள்! ஏனாம்? அந்த நாட்டில் 12-14 வயதுக்குட்பட்ட ஆணும் பெண்ணும்கூட செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்களாம்! விதிகளின்படி பதினாறு வயது ஆக வேண்டும் என்றாலும் இந்த இளம் வயது உடலுறவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சரி, விளைவுகளையாவது கட்டுப்படுத்தலாமே என்றுதான் இந்த விற்பனை!
பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் சுயசரிதை ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறது. எழுதியிருப்பவர் பத்து வருடங்கள் இங்கிலாந்து பிரதமராக இருந்தவர். தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஒளிவு மறைவின்றி எழுதியிருக்கிறாராம் அந்தப் பிரதமர். அவர் பெயர்: டோனி பிளேர்!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனஸிர் புட்டோவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஐ.நா.கமிஷனுக்கு, இந்தக் கொலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்குத் தொடர்பிருக்குமா என்று ஒரு புதிய சந்தேகம் எழுந்திருக்கிறது. சந்தேகம் உறுதிப்பட்டால் பரபரப்பும் அதிகமாகும். இந்த மாதக் கடைசிக்குள் விசாரணை அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.