சிறுகதை: ஓட்டைக் குடை

சிறுகதை: ஓட்டைக் குடை

குழந்தையை வேனில் ஏற்றி ஸ்கூலுக்கு அனுப்பியதுமே ஆபீஸýக்குக் கிளம்பத் தயாரானாள் வனிதா. இலேசான மேக்கப்பில் அவளது முகம் பளிச்சிட்டது. கல் பதித்த ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் வைத்துக்கொண்டதும் தனது அழகு மேல

குழந்தையை வேனில் ஏற்றி ஸ்கூலுக்கு அனுப்பியதுமே ஆபீஸýக்குக் கிளம்பத் தயாரானாள் வனிதா.

இலேசான மேக்கப்பில் அவளது முகம் பளிச்சிட்டது. கல் பதித்த ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் வைத்துக்கொண்டதும் தனது அழகு மேலும் அதிகரித்து விட்டதாக அவளுக்குத் தோன்றியது.

ஃபிரிட்ஜிலிருந்து மல்லிகைச் சரத்தை எடுத்து கூந்தலில் தழையத் தழைய வைத்துக் கொண்டாள்.

பின் கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு வெளியே வந்தவள் மேகம் மூடியிருப்பதைக் கவனித்தாள். காலையில் டி.வி.யில் வானிலை ஆராய்ச்சி மையத்துக்காரர் ததக்குப் புதக்கென்று குழறியது ஞாபகத்திற்கு வர, "எதுக்கும் குடையை எடுத்துக்கிறது புத்திசாலித்தனம்...' என நினைத்தவளாய் மீண்டும் உள்ளே வந்தாள்.

குடை பீரோ மேல் தூசி படிந்து கிடந்தது. கடைசியாக எப்போது உபயோகித்ததோ? எடுத்துத் தட்டினாள்.

பின் உள்ளே பூச்சி, வண்டு ஏதும் இருக்கலாம் என்ற ஐயத்தில் குடையைப் பிரித்தாள். உடனேயே அவளது முகம் சுருங்கியது. "சே! ஒரு கம்பி பிய்ஞ்சிருக்கே!'

"சரி- வழியில் குடை ரிப்பேர்க்காரன் எவனும் சிக்கினால் சரி செஞ்சுக்கலாம்...' என்று நினைத்தவளாய் குடையை மடக்கிச் சுருக்கிக் கைப்பைக்குள் திணித்துக் கொண்டாள்.

வீட்டுக்கதவைப் பூட்டி வாசலுக்கு வந்தபோது கைப்பையில் இருந்த செல்போன் "போனால் போகட்டும் போடா..' என்ற பாடல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள். சித்தி! "வருஷக் கணக்கில் நம்ம கூடப் பேசாதவ இப்ப எதுக்குப் பேசுறா?' என்று வியந்தபடி பச்சை பட்டனைத் தட்டினாள்.

"என்ன வனிதா- நான் சித்தி பேசுறேன்.. நல்லாருக்கியா... நேத்து சுந்தரி வந்தா. திருச்சியில ஏதோ சினேகிதி வீட்டு விசேஷத்துக்கு வந்தாளாம். அப்பிடியே என்னைப் பார்க்கவும் வந்தா. அவ ஏதேதோ சொல்றாளே வனிதா? ஆனா நான் நம்பலை.. வனிதா- இப்ப உன் வீட்டுக்காரர் உங்கூடத்தானே இருக்கார்'' வனிதாவுக்குக் "குப்'பென வியர்த்தது. உடலே கூசிப்போய் வெட்கத்தில் சுருண்டாள். "அடுத்தவர் மனசைக் குத்திக் கிண்டி நோகடிக்கிறதுலதான் இவர்களுக்கு எத்தனை சந்தோஷம்?' என்று அடி ஆழத்திலிருந்து கோபம் கிளர்ந்தெழுந்தது. "ஹலோ?'' என்றாள் எதுவுமே காதில் விழாதது போல்.

பின்," ஹலோ... ஹலோ... எதுவும் கேக்கலியே.. சே.. சுத்தமா டவர் போயிடுச்சோ வேற என்ன எழவோ... ஹலோ.. நீங்க பேசுறது எதுவும் இங்க கேக்கமாட்டேங்கிது... நீங்க யாராயிருந்தாலும் சரி அப்புறமா சாயந்திரம் வாக்கில பேசுங்க. நான் இப்ப ஆபீஸýக்குக் கௌம்பிக்கிட்டிருக்கேன்!'' என்று சொல்லிவிட்டு உடனேயே போனைக் "கட்'செய்தாள்.

ஆபிஸில் அவளுக்கு வேலையே ஓடவில்லை. சித்தியின் முகம் மறுபடி மறுபடி அவளது நினைவுக்கு வந்து அவளது மனதை நோகடித்தது. எங்கோ திருச்சியில் இருக்கும் சித்திக்கே தெரிந்துவிட்டதென்றால் அக்கம் பக்க வீட்டாருக்குத் தெரியாமலா இருக்கும் என்று மனதில் தோன்ற அவளது மனவலி அதிகரித்தது. அவள் ஆபிஸýக்குப் போகும்போதும், மீண்டும் வீட்டுக்கு வரும்போதும் அண்டை அயல் பெண்கள் அவளைப் பார்க்கும் பார்வையில் உள்ளே ஆழமாய்ப் புதைந்து கிடக்கும் கேலியையும் கிண்டலையும் தான் இத்தனைநாள் கவனிக்காது விட்டுவிட்டோமே என நினைத்து குமைந்தாள். அப்பார்வைகளை மறுபடி நினைவுக்குக் கொண்டுவந்து அவற்றில் அழுந்திக்கிடக்கும் இரகசியங்களை இப்போது விலக்கிக் கண்டு துணுக்குற்றாள். அவளது முகத்தில் மலர்ச்சி வற்றியது. யாரையும் ஏறிட்டுப் பார்க்கவே கூசியது. வலிய வந்து இயல்பாய் பேசுபவர்களிடம்கூட வாயைத் திறக்கச் சங்கடமாக இருந்தது.

சமூகத்தில் எல்லோரையும் போல தாமும் இருக்கத்தான் எல்லா போராட்டங்களும். அல்லது எல்லோரையும்விட ஒருபடி உயர்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நான்கு பேர் இருக்கும் சபையில் நம் கௌரவம் கீழே விழாமல் இருப்பதைத்தான் மனிதன் வாழ முயற்சி செய்வதாகச் சொல்கிறோம். நமக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இன்னலை யாரிடம் சொல்லி அழுவது என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் வனிதா.

மனவலியிலும் தாழ்வுணர்ச்சியிலும் அன்றையப் பொழுது ஓடியது. மாலையில் அலுவலகம் முடிந்து வெளியே வந்தவள் அப்படியே பின் வாங்கினாள்.

மழை தூற ஆரம்பித்திருந்தது. இடிமுழக்கம் வேறு. கைப்பையில் அவளது ஓட்டைக்குடை கனத்தது. "இந்தக் கம்பி பிய்ஞ்ச ஓட்டைக்குடையைப் பிடிச்சுக்கிட்டு எப்பிடி வெளிய போறது? பாக்கிறவங்க கேலியாய்ச் சிரிக்கமாட்டாங்க?' வனிதா உள்ளே வந்தாள்.

குடை வைத்திருப்பவர்கள்,ரெயின் கோட்காரர்கள் எனப் பாதி அலுவலகம் காலியானது. வனிதா தனது இருக்கையில் அமர்ந்தாள். மழைவிட்ட பிறகே போகலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

கணக்குப் புத்தகங்களோடு போராடிக்கொண்டிருந்த கேஷியர் சந்துருவுக்கு வாய்ப்பு. "மேடம், வீட்டுக்குக் கௌம்பலை? வழக்கமா ஆபீஸ் விட்டதும் மொதல் ஆளா "டாண்' கௌம்பிடுவீங்களே?'' வனிதா புன்னகைத்தாள்.

"வெளிய மழை தூறுது. அதான் வெயிட் பண்றேன்..''

"குடை கொண்டு வரலையோ?'' இதற்குப் பதில் சொல்ல வனிதா தயங்கினாள். "கொண்டு வந்திருக்கேன்னு' சொன்னா "அப்புறம் என்ன, குடையைப் பிடிச்சுக்கிட்டு "விர்'னு நடக்க வேண்டியதுதானே?" என்பார். "அப்ப நாம நம்ம ஓட்டையைக் குடையைப் பிரிக்கும்படியாயிடும். இவரும் சரி, மிச்சமிருக்கும் பணியாளர்களும் சரி குடையோட லட்சணத்தைப் பார்த்துச் சிரிப்பாங்க.. எதுக்கு வம்பு..?' எந்தப் பதிலும் சொல்லாமல் எந்தக் குறிப்பையும் காட்டாத புன்னகையை மட்டும் வீசினாள்.

"அப்ப நீங்க எங்குடைய எடுத்துப் போங்க மேடம். இந்த மழை நிக்க இன்னும் ஒரு மணி நேரமாச்சும் ஆகும். அதுவரைக்கும் நீங்க எதுக்கு இங்க காத்துக் கெடக்கணும்? நான் ஆபீûஸவிட்டுப் போக எப்பிடியும் எட்டு மணி ஆயிடும். அதுக்குள்ளே மழை விட்டும்.. எனக்குக் குடை தேவைப்படாது.. எனக்குக் குடை தேவைப்படாது..'' தர்மசங்கடத்துடன் "இல்ல .. வேணாம்..'' என்று மறுத்தாள் வனிதா. ஆனால் சந்துரு அதைப் பொருட்படுத்தாது எழுந்து வந்து தன் குடையை அவளது கையில் திணித்தான்.

"இனி என்ன செய்றது?' என்று நினைத்தவளாய் அவனது குடையை இலேசாகப் பிரித்தபடி எழுந்தாள். "மை காட்! என்ன இது? ரெண்டு கம்பிக அப்பிடிச் சாயுதுக?' அவளது திகைப்பையும் சங்கடத்தையும் பார்த்து சந்துரு சொன்னான். "மேடம்,குடை இப்பிடி இருக்கேனு பார்க்காதீங்க. சும்மா பிடிச்சுக்கிட்டுப் போங்க. கொஞ்சத்துக்குக் கொஞ்சம் நனையாமல் காப்பாத்துமில்ல..'' வனிதா தயங்கினாள். "ஓட்டைக் குடையைப் பிடிச்சுக்கிட்டுப் போக வெட்கமா இருக்கா மேடம்? இதுல வெட்கப்பட என்ன இருக்கு? இந்தக் குடையை நாமளா செஞ்சோம்? எவனோ செஞ்சான். இது ரிப்பேர்னா இதைச் செஞ்சவன்தான் வெட்கப்படணும்! மனுஷருக்கு முழுசா உதவ முடியலேனு இந்தக் குடைதான் வெட்கப்படணும்! சும்மா கூச்சப்படாமப் பிடிச்சுக்கிட்டுப் போங்க மேடம். ஓட்டைக் குடையைப் பார்த்து எவனாது சிரிச்சான்னா அவன் இன்னும் பக்குவமடையலைனு அர்த்தம்- மனுஷர்ல சேர்த்தியில்லேனு அர்த்தம்!'' வனிதா தெளிவடைந்தாள்.

யாரோ செய்கிற தவறுகளுக்கு நாம் எதற்கு வெட்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற எளிய உண்மையை ஓர் ஓட்டைக்குடையின் மூலம் புரிந்து கொண்ட சந்தோஷம்.

புன்கைத்தப்படி குடையைச் சந்துருவிடம் திருப்பித் தந்தாள். "ரொம்ப நன்றிங்க சார்.. என் ஹேண்ட் பேக்ல என் குடை இருக்கிறதை மறந்துட்டேன்..' தன் கைப்பையைத் திறந்து தன் ஓட்டைக்குடையை எந்தக் கூச்சமும் இல்லாது அவள் எடுத்தபோது அவளது செல்போன் "போனால் போகட்டும் போடா' என அழைத்தது. சித்திதான்! கம்பீரமாகப் பட்டனைத் தட்டினாள். "ஹலோ- சித்தியா.. நல்லாருக்கீங்களா..?''

"இருக்கேன் இருக்கேன். காலைல போன் பண்ணினேன். நீ பேசுறது கேட்டுச்சு- ஆனா நான் பேசுறது உனக்குக் கேக்கலை போல. வந்து.. சுந்தரி எங்க வீட்டுக்கு வந்து எதையெதையோ லேசாச் சொன்னா. நான் நம்பலை. போடி இவளேன்னுட்டேன்.. ம்.. வனிதா.. இப்ப எங்கிருக்கே? வீட்டுக்கு வந்துட்டதானே-?''

"இல்லீங்க சித்தி ஆபீஸ்லதான் இருக்கேன். சும்மா சொல்லுங்க.. ஆபீஸ் டைம்தான் முடிஞ்சு போச்சே.?''

"ஒன்னுமில்லே வனிதா.. உன் வீட்டுக்காரர் இப்ப உங்கூடத்தானே இருக்கார்-?'' வனிதா பலமாகச் சிரித்தாள். பின் இறைந்தாள்.

"உங்களுக்கு இன்னும் அது தெரியாதங்க சித்தி..? அந்த மனுசன் என்னையும் தான் பெத்த கொழந்தையையும் கைவிட்டுட்டு எனக்கென்னன்னு அடுத்தவன் பெண்டாட்டியை இழுத்துக்கிட்டு ஓடீட்டான் சித்தி! நாலு மாசமாகிறது..''

எதிர்முனையில் சித்தி மென்று விழுங்கினாள். "என்ன வனிதா இப்பிடிக் கத்திப் பேசுற? "அவர் எங்கூடத்தான் இருக்கார்'னு சொல்லுவேனு நெனைச்சேன். நீ என்னடானா கொஞ்சமும் கூசாம ஆபீஸில இருந்து இப்படி இரைஞ்சு பேசுறியே-?'' அதே கம்பீரத்துடன் இரைந்தாள்.

"நான் எதுக்குங்க சித்தி கூச்சப்படணும், வெட்கப்படணும்? ஓடிப்போன அந்த ஆளுதான் கூச்சப்படணும், வெட்கப்படணும்! அவங்களை இப்பிடிக் கேவலமானவங்களா வளர்த்துக்காக அவங்களைப் பெத்தவங்கதான் வெட்கப்படணும், கூச்சப்படணும்-?'' போனைக் "கட்' பண்ணிவிட்டு,வனிதா தனது ஓட்டைக்குடையைப் பிடித்துக்கொண்டு தலை நிமிர்ந்து வெளியே நடந்தாள்!

சந்துரு ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com