திரைக்கதிர்: யார் அந்த 'இடியட்ஸ்'

இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஜெமினி நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. இதில் தமிழின் மூன்று இளம் நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வ
திரைக்கதிர்: யார் அந்த 'இடியட்ஸ்'
Published on
Updated on
3 min read

இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஜெமினி நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. இதில் தமிழின் மூன்று இளம் நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஹிந்தியில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஜீவாவிடம் கேட்டிருக்கிறார்கள். ''நான் இப்போது 'கச்சேரி ஆரம்பம்', 'ரெளத்திரம்', 'சிங்கம்புலி', 'கோ' படங்களில் பிஸியாகவுள்ளேன். இருந்தாலும் '3 இடியட்ஸ்' ரீமேக்கில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். என்னைத் தவிர மற்ற இரண்டு 'இடியட்ஸ்' யார் என்பதை முடிவு செய்து சொல்லுங்கள்; அதையடுத்து என்னுடைய முடிவைக் கூறுகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறாராம்.

'உத்தமபுத்திரன்' தனுஷ்!

தெலுங்கு, கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆன 'ரெடி' படம், தமிழில் 'உத்தமபுத்திரன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் தனுஷ், ஜெனீலியா, பாக்யராஜ், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 'யாரடி நீ மோகினி', 'குட்டி' ரீமேக் படங்களை இயக்கிய மித்ரன் கே.ஜவஹர் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்தப் படத்திலும் தனுஷை இயக்குகிறார். காமெடிக்கும் இசைக்கும் முக்கியத்துவம் அளித்து உருவாகும் இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பாலாஜி ஸ்டுடியோஸ் பி.லிட். நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

நாகரிகமான காதல் கதை!

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய 'உயிர்', 'மிருகம்' படங்களை இயக்கிய சாமி 'சரித்திரம்' படத்தை இயக்கிவந்தார். அந்தப் படம் வெளிவரும் முன்பே 'சிந்து சமவெளி' என்ற புதிய படத்தைத் தொடங்கியிருக்கிறார். 'நாடோடிகள்' படத்தைத் தயாரித்த எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் கஜினி, ஹரீஷ் ஆகியோருடன் அமலாபால் நடிக்கிறார். படத்தைப் பற்றி கேட்டபோது...

''இது ஒரு நாகரிகமான காதல் கதை. இந்தியாவில் கி.மு. 2000-க்கு முன்பு தோன்றிய சிந்து சமவெளி நாகரிகத்தில் மனிதன் திட்டமிட்டு வாழ்ந்தான். கலைகளை வளர்த்து முறையான குடும்ப உறவுகளைப் பின்பற்றினான். அந்தக் காலத்திலிருந்து கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் கூட மனிதன் சமூகத்திற்காக ஒரு வாழ்க்கையும் தனக்காக ஒரு வாழ்க்கையையும் நடத்தி வருகிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடக்கும் காதலையும் அதைச் சார்ந்த விஷயங்களையும் நவீனத்துவத்தோடு இந்தப் படத்தில் சொல்கிறோம். என்னுடைய மூலக்கதைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைவடிவம் தந்திருக்கிறார். இதற்கு முன்பு நான் விரும்பாமலேயே என்னுடைய படங்களை விட நான் அதிகம் பேசப்பட்டிருக்கிறேன்; விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் 'சிந்து சமவெளி'யில் என்னை விட என் படைப்புதான் அதிகமாகப் பேசப்படும்'' என்றார் சாமி.

ஊரைக் காலி செய்து ஷூட்டிங்!

பாக்யராஜ், பார்த்திபன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய புவனேஷ் இயக்கியுள்ள புதிய படம் 'ஆறாவது வனம்'. 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைப் பற்றிய இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக ஒரு கிராமமே 5 நாள்கள் ஊரைக் காலி செய்து ஒத்துழைப்பு தந்திருக்கிறது. இதுகுறித்து கேட்டபோது...

''ஒரு காதல் ஜோடியின் காதலுக்காக அந்தக் கிராமத்தில் உள்ள அனைவரும் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். இரண்டு பேர் மட்டும் அங்கேயே இருக்கிறார்கள். இது நடந்த உண்மைச் சம்பவம். அந்த இரண்டு பேர் இப்போதும் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களிடம் படத்தின் கதையைச் சொல்லி அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டோம். ஆனால் கடைசி வரை அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. அவர்களுடைய உணர்வைப் புரிந்துகொண்டு அதே போன்ற ஒரு கிராமத்தைத் தேடினோம். கோவைக்கு அருகேயுள்ள சிங்கராம்பாளையம் பொருத்தமாக இருந்தது. ஊர்ப் பெரியவர்களிடம் நிலைமையைச் சொல்லி, 5 நாள்கள் ஊரை விட்டு வெளியேறினால் படப்பிடிப்பை முடித்துக்கொள்வோம் எனக் கூறினோம். அவர்கள் சம்மதிக்கவேயில்லை. ஆனாலும் தொடர்ந்து 10 நாள்கள் அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி சம்மதம் பெற்றோம். அந்த 5 நாள்கள் ஊரை விட்டு வெளியேறியதால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை பணம்

கொ டுத்து ஈடு கட் டி னோம். பொதுவாக பலரை ஓரிடத்தில்கூடச்செய்து படப்பிடிப்பு நடத்துவது வழக்கம். ஆனால் இந்தக் கதைக்காக நூற்றுக்கணக்கானவர்களைக் கிராமத்தை விட்டு வெளியேற்றி படப்பிடிப்பை நடத்தினோம். படம் சிறப்பாக வந்துள்ளது. வழக்கத்துக்கு மாறான வித்தியாசமான காட்சிகள், புதிய கதைக் களம் போன்றவை ரசிகர்களைக் கவரும்'' என்றார் இயக்குநர் புவனேஷ்.

மூன்று கோடி லட்சியம்!

திருட்டு வி.சி.டி., படம் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் திரையிடும் போக்கு, குறைந்து வரும் தமிழ்ப் படங்களின் வசூல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தன்னுடைய திரைவாழ்க்கையில் ஒரு புதிய அணுகுமுறையைக் கையாளத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசியபோது...

''என்னை நான் மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்கான முயற்சிதான் இது. அதன்படி ஆர்ஆர்ஆர் (ராதிகா, ரேயான், ராகுல்) புரொடக்ஷன்ஸ் சார்பாக தொடர்ச்சியாக சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கவுள்ளேன். இதில் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். எனக்கேற்ற கதை அமைந்தால் நானும் நடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் யார் நடித்தாலும் ஒன்று மட்டுமே நிச்சயம்... படத்தின் குறைந்தபட்ச பட்ஜெட் 1.25 கோடிதான். அதிகபட்ச பட்ஜெட் ரூ.3 கோடி. இந்த ஆண்டு மட்டும் மூன்று படங்களைத் தயாரிக்கவுள்ளேன். பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து குறைந்த லாபம் சம்பாதிப்பதை விட சிறிய பட்ஜெட்டில் படம் எடுத்து, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் லாபம் பெற வேண்டும் என்பதுதான் என் நோக்கம். எனக்கு இன்னொரு ஆசை. நான் நடிக்க வந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய இறுதி நாள் வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும், ஆங்கிலத்தில் ஒரு படத்திலும் சொந்தக் குரலில் பேசி நடித்து விட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இதற்கிடையே என்னுடைய அரசியல் பணியையும் தொடர்ந்து கவனித்துக்கொள்வேன். தற்போது தமிழில் 'விடியல்' என்ற படத்திலும் மலையாளத்தில் 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', 'ஓரிடத்து ஒரு போஸ்ட்மேன்' படங்களிலும் கன்னடத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். இந்த ஆண்டிலிருந்து புதுப்பொலிவுடன் புதிய சிந்தனையை வெளிப்படுத்தக்கூடிய சரத்குமாரைப் பார்ப்பீர்கள்'' என்றார்.

ஜெயம் ரவிக்கு சிம்பு வாய்ஸ்!

ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, தமன்னா நடிக்கும் 'தில்லாலங்கடி' படத்தில் பாடல் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இடம்பெறும் உச்ச ஸ்தாயி பாடல் ஒன்றுக்காக ஜெயம் ரவிக்கு குரல் கொடுத்திருக்கிறார் சிம்பு. பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய 'பட்டு பட்டு பட்டாம்பூச்சி, விட்டு கண்ணாமூச்சி, கண்ணுக்குள்ளே காதல் காட்சி...' என்ற இந்தப் பாடலை யுவன்ஷங்கர்ராஜாவின் இசையில் இரண்டரை மணி நேரத்தில் பாடி அசத்தியிருக்கிறார் சிம்பு.

மீண்டும் ஆண்ட்ரியா!

விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வரும் செல்வராகவன், இதையடுத்து ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இதில் பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் ராமநாயுடுவின் பேரன் ராணா கதாநாயகனாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இனி ஆண்ட்ரியாவுடன் பேச்சே இல்லை என தெரிவித்த செல்வராகவன், இந்தப் புதிய படத்திலும் ஆண்ட்ரியாவைக் கதாநாயகி ஆக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com