
""மேற்குத் தொடர்ச்சி மலையும்; கிழக்கு தொடர்ச்சி மலையும் சேருகிற இடத்தில் உள்ள அடர்வனம். தமிழ்நாடு,கர்நாடக எல்லைப் பகுதி. சேலத்திற்கு அருகே இருக்கிறது அது. அங்கொரு பாறை ஓவியம் இருப்பதாகவும், அதை எப்போதோ பார்த்ததாகவும் வனவாசி ஒருவர் தெரிவித்தார். அந்த ஓவியத்தைத் தேடி புறப்பட நினைத்தோம்.
"அடர்வனம் போகவேண்டாம்' - பல வனவாசிகள் கூறினர். வனவாசிகளாக இருப்பதனாலேயே எல்லாரும் வனத்தை அறிந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைப்பது தவறு. வனத்தை முழுமையாய் பார்க்காத வனவாசிகள் நிறைய பேர். ஒரு சிலர்தான் எங்களோடு வரத் துணிந்தனர்.
மனிதத் தடம் எதையும் எங்களால் அங்குப் பார்க்க முடியவில்லை. யானை, கடைமான்,காட்டு மாடுகளின் தடங்களைத்தான் பார்க்க முடிந்தது. எங்களுடன் வந்த வனவாசிகள் யானை,சிறுத்தைகளைவிட மாடுகளுக்குத்தான் அதிகம் பயந்தார்கள். அதற்கு அவர்கள் ஒரு காரணம் சொன்னார்கள்.
ஆரம்பத்தில் அங்கிருந்த காட்டு மாடுகளைப் பிடித்து அவர்கள் வசிப்பிடங்களில் வைத்து அதைத் தங்கள் தேவைக்கேற்ப பழக்கப்படுத்தி வளர்த்து வந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு காட்டு இலாகாவினர் அதற்குத் தடை செய்து மாடுகளையும் காட்டிற்குள்ளேயே விரட்டி அடிக்கச் சொல்லிவிட்டார்கள். அப்படி விரட்டி அடிக்கப்பட்ட மாடுகள் காட்டு மாடுகளோடும் சேர முடியாமல், மனிதர்களோடும் சேர முடியாமல் கோபத்தில் சுற்றுகின்றனவாம். அதனால் மனிதர்களைக் கண்டாலே விரட்டத் தொடங்கின்றனவாம்.
சண்டி மாடுகள் என வனவாசிகள் அழைக்கும் இந்த மாடுகள் குறித்த பயத்துடனே, நாங்கள் தேடி வந்த பாறையை வந்தடைந்தோம். அந்தப் பாறையின் மீது சிறுத்தையின் தடம் ஒன்று இருந்தது. அது சமீபமாய் பதித்தத் தடம்தான் என்று வனவாசிகள் தெரிவித்தனர். சிறுத்தை பயத்துடனே காய்ந்த மரங்களைக் கொளுத்திக் கொண்டு இரவு அங்கே தங்கி அந்த ஓவியத்தைப் புகைப்படம் எடுத்து வந்தோம். அரிய ஓவியம் இல்லையென்றாலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அந்த ஓவியம்: பன்றியை ஒருவன் வேட்டையாடுகிற காட்சி''
பாறை ஓவியங்கள், சுவரோவியங்கள் மீட்டெடுப்பு மற்றும் அது குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் கே.டி.காந்திராஜன் சொன்ன காட்சிகள்தாம் மேலுள்ளவை.
ஓர் ஓவியத் தேடலுக்குப் பின்னேயே இத்தகைய சுவாரஸ்ய தகவல்களுடன்கூடிய காட்சி என்றால்,தொல்லியல் துறையினரிடமே இல்லாத பல அரிய ஓவியங்களைச் சேகரித்திருப்பவரிடம் பெரும் களஞ்சியமே தொகுக்கிற அளவிற்கான தகவல்கள் இருக்கும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள முடியும். பி.எஸ்ஸி.,கெமிஸ்ட்ரி,மற்றும் கலை வரலாறில் பட்டமும் பெற்றிருக்கும் காந்திராஜன் மேலும் நம்மோடு பகிர்ந்துகொண்டவை:
""ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் நொபுரு கராஷிமா. உலகத் தமிழ் மாநாட்டுத் தலைவராக இருந்தவர். சோழர் காலத்து வரலாற்றை ஆய்வு செய்தவர். தென்மாநிலங்களின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் ஆய்விற்குத் தேவையான புகைப்படங்களை உமுரா என்பவர் எடுத்தார். உமுராவிற்கு உதவியாகப் பல்வேறு இடங்களுக்கு நான் பயணித்திருக்கிறேன். அடிப்படையில் நான் ஓவியம் பயின்றிருக்கிறேன் என்றாலும் இவர்கள் மூலம்தான் எனக்குச் சேகரிப்பில் ஆர்வம் அதிகரித்தது.
96 -ஆம் ஆண்டிலிருந்து 2002 - ஆம் ஆண்டுவரை சுவரோவியம் குறித்து ஆய்வில்தான் ஈடுபட்டு வந்தேன். மிகப் பழைமையான கோயில்கள் தமிழகத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேல் உள்ளன. இந்தக் கோயில்களில் இருந்த பல ஓவியங்கள் வெள்ளையடித்தல் கோயிலைப் புதுப்பித்தல் என்கிற பெயரால் அழிந்து போய்விட்டன. மீதம் உள்ளவற்றையும் மீட்டெடுக்கிற விழப்புணர்வு நம்மிடம் இல்லை. ஓர் ஓவியத்தை அழிப்பது என்பது ஓர் அரிய பொக்கிஷத்தை அழிப்பதைப்போல. சங்கப் பாடல்களில் நம் முன்னோர் வாழ்வு சொல்லப்பட்டிருக்கிறது என்றால் அது இங்கு காட்சியாக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். என்னால் முடிந்த அளவு ஒவ்வொரு கோயிலாகப் போய் அந்த ஓவியங்களை ஆவணப்படுத்துகிற வேலையில் ஈடுபட்டு வருகிறேன்.
2003-லிருந்துதான் பாறை ஓவியங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். சுவரோவியங்களைவிட இதுதான் சவாலான பணி. வனவாசிகள் இருக்கும் பகுதியில் பாறை ஓவியங்கள் குறித்து கண்காட்சி நடத்தி இதுபோன்ற ஓவியங்களை எங்காவது பார்த்தால் சொல்லும்படி கேட்பேன். அவர்கள் சொல்லித்தான் பல்வேறு பாறை ஓவியங்களை நான் கண்டறிந்திருக்கிறேன்.
இப்படிக் கண்டறிந்தவற்றில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நீலகிரி கரிக்கியூர் பகுதியில் கண்டறிந்த ஓவியங்கள். 250 அடி நீளத்திற்கு 500 ஓவியங்கள் இங்கு உள்ளன. இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் வரையப்பட்ட ஓவியமாகும். இதைக் கண்டறிந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சியைப்போல் வேறு யாரும் அடைந்திருக்க முடியாது.
சுவரோவியம் நிறுவனம் சார்ந்த ஒன்றாக இருந்திருக்கும். அதில் ஓவியனின் சுதந்திரத்தைப் பார்க்க முடியாது. ஏதோ ஒரு நிர்பந்தத்தின் கீழ் வரையப்பட்ட ஓவியங்கள். பாறை ஓவியங்கள் அப்படிப்பட்டவை இல்லை. பரிபூரண சுதந்திரத்துடன் வரையப்பட்ட ஓவியங்கள் அவை. மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள் என்று பாறை ஓவியங்களை அழைக்கலாம்.
வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த, வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறபோது பெரும்பாலான வடிவங்கள் ஒரே வகையில் இருக்கின்றன. இது எப்படி அமைந்தது என்று தெரியவில்லை. ஒருவரைப் பார்த்து ஒருவர் வரைந்திருப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை. காலம், நாடு எல்லாம் மாறுபடுகின்றன.
ஓவியக் காட்சிகள் பெரும்பாலும் வேட்டைக் காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன. முதலில் மனிதனைப் பயமுறுத்தக்கூடிய புலி போன்ற விலங்குகளைத்தான் வரைந்திருக்கிறார்கள். பிறகுதான் அவனுக்கு வசப்பட்ட மற்ற விலங்குகளை வரையத் தொடங்கிருக்கிறான். அதிகமாக மானைத்தான் எல்லோரும் வரைந்திருக்கிறார்கள். மனிதனால் அதிகம் பார்க்கப்பட்டதும், பலியானதும் மானாகத்தான் இருக்க வேண்டும்.
பாறை ஓவியங்களில் பறவைகள் அதிகம் காணப்படவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. பறவைகள் இடம்பெற்ற ஓவியங்கள் தமிழகத்தில் இரண்டு மூன்று பார்த்திருக்கிறேன். ஆனால் ஓவியத்தில் நம்மூர் பறவை எதுவும் இல்லை. அந்நியப் பறவை. அந்தப் பறவை வந்தால் மழை இங்கு பெய்யும் என்று கருதியிருக்கலாம் என்று அந்த ஓவியம் குறித்து வனவாசிகள் தெரிவித்தனர். அதைப்போல் மனிதன் மரணமடைவதைப்போன்ற காட்சிகளும் பாம்புகளும் ஓவியத்தில் இடம்பெறவில்லை.
வெள்ளை, சிவப்பு, பச்சை, கறுப்பு வண்ணங்களில்தான் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தாவரங்களின் சாறு, மண், விலங்கு கொழுப்புகளைக் கொண்டுதான் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ஓவியங்கள் அனைத்தையும் பல்வேறு வகையில் ஆவணப்படுத்தி வருகிறேன். இதுவரை நாலாயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களைச் சேகரித்து உள்ளேன். தற்போது இந்தியா முழுவதும் உள்ள அரண்மனைகளில் ஆய்வு செய்து வருகிறேன்'' என்கிறார் காந்திராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.