நெசவு: நெகமம் புடவைக்கு நூறு வயசு!

இன்றைய நாகரீக உலகில் பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது நகைகளும் புடவைகளும். அதிலும் குறிப்பாக நாகரீக மங்கைகளைக் கவர்வது சாயம் போகாத, கண்ணைக் கவரும் விலை குறைந்த வண்ணக் காட்டன் புடவைகள் என்றால் கேட்கவே
நெசவு: நெகமம் புடவைக்கு நூறு வயசு!
Updated on
2 min read

இன்றைய நாகரீக உலகில் பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது நகைகளும் புடவைகளும். அதிலும் குறிப்பாக நாகரீக மங்கைகளைக் கவர்வது சாயம் போகாத, கண்ணைக் கவரும் விலை குறைந்த வண்ணக் காட்டன் புடவைகள் என்றால் கேட்கவே வேண்டாம். பட்டுப் புடவைகளை விரும்பாத பெண்கள்கூட இந்தக் காட்டன் புடவைகளை விரும்புகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

அந்த வகையில் பொள்ளாச்சி அருகே நெகமம் என்ற பேரூராட்சிப் பகுதியில் தயாராகும் காட்டன் புடவைகளுக்குப் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இன்று நாட்டிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்துக்கும் நெகமத்தில் தயாராகும் காட்டன் புடவைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

கடந்த சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நெகமத்தில் காட்டன் புடவைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நெகமத்தில் தயாராகும் காட்டன் புடவைகளுக்கும் பிற இடங்களில் தயாராகும் காட்டன் புடவைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. நெகமம் புடவைகளில் பார்டர்களும் காட்டனில்தான் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் பிற இடங்களில் தயாராகும் புடவைகளில் பார்டருக்குப் பாலியெஸ்டர் வைப்பார்கள். இதனால் சிறிது நாள்களில் புடவைச் சுருங்கும்போது பாலியெஸ்டர் பல்லை இளிக்கத் துவங்கும். இதனால் அந்தப் புடவைகளை நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்த முடிவதில்லை. மேலும் ஒவ்வொரு சேலையின் அகலமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

ஆனால் நெகமம் காட்டன் புடவைகளுக்கு அந்தப் பிரச்னையே இல்லை. இதனால் நீண்ட காலத்துக்கு உழைத்து பெண்களின் மனதைக் கவர்கிறது. எத்தனை சேலைகள் எடுத்தாலும் அகலம் ஒரே மாதிரி இருக்கும்.

நெகமம் காட்டன் புடவைகளில் கண்ணைக் கவரும் பல்வேறு விதமான டிசைன்கள் நெய்யப்படுகின்றன. முழுக்க முழுக்க கைத்தறியில்தான் இந்தப் புடவைகள் நெய்யப்படுவது இதன் தனிச்சிறப்பு. மேலும் வெயில் காலங்களில் காட்டன் புடவைகளைப் பெண்கள் விரும்பி அணிகின்றனர். நெகமம் சேலைகளின் அளவு மிகச் சரியாக இருக்கும்.

நெகமத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் தறிகளில் இச்சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்குச் சுமார் 5 லட்சம் சேலைகள் தயாராகின்றன. நாடு முழுவதும் அனுப்பப்படும் இந்தச்சேலைகளைப் பெரிய நகரங்களில் உள்ளவர்கள் வாங்கி துபாய், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றனர்.

முழுக்க முழுக்கக் கைத்தறி சேலை என்பதால் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து நெய்ய வேண்டியிருக்கிறது. இந்தச் சேலைகள் மொத்த விலையில் குறைந்தபட்சம் ரூ.650 முதல் அதிகபட்சம் ரூ.2400 வரைதான். அதுவும் டிசைன்களுக்குத் தகுந்தாற்போல. நெசவாளர்களுக்குக் கூலியும் ரூ.300 முதல் அதிகபட்சம் ரூ.1200 வரை தரப்படுகிறது.

நெகமத்தில் லட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் என்.கே. நாச்சிமுத்து கூறியது:

""நெகமம் காட்டன் சேலைகள் 100 ஆண்டுகளுக்கும் மேலான பெருமை உடையவை. இங்கிருந்து நாடு முழுவதும் அனுப்பப்படுகிறது. இங்கு தயாராகும் காட்டன் புடவைகள் கைத்தறியில் நெய்யப்படுவதால் எந்த டிசைன் வேண்டுமானாலும் போட முடியும். இங்கு தயாராகும் புடவைகளுக்கு கலர் கேரண்டி உண்டு.

தரமான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் பெண்களால் அதிகம் விரும்பப்படுகிறது. நாகரீகப் பெண்களை எங்கள் சேலைகள் கவரும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு முறை இந்தச் சேலைகளைக் கட்டியவர்கள் கண்டிப்பாக மீண்டும் இதே சேலைகளை விரும்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை’’ என்றார்.

இந்தத் தொழிலை நம்பி நெகமம் மற்றும் சுற்றுப்புறங்களில் சுமார் 20 முதல் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

நூல் விலையில் அடிக்கடி ஏற்படும் மாறுதல், தொடரும் மின்தடை என நெகமம் காட்டன் சேலை தயாரிப்போருக்குப் பிரச்னைகள் இருந்தாலும் நாகரீகப் பெண்கள் விரும்பும் வரை இச்சேலைத் தயாரிப்புத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com