ஓய்வு பெற்ற ஆசிரியை கோ.ப.செல்லம்மாள் ஆடுவது விளக்கு நடனம்தான். ஆனால் அவர் ஆடுவது திருக்குறள் விளக்க நடனம். அறம், பொருள், இன்பம் என முப்பாலையும் விளக்கும் வகையில் (படத்தைப் பார்க்கவும்) மூன்று விளக்குகளை ஏந்திக் கொண்டு ஆடி,பாடி திருக்குறள் கருத்துகளை வெளிநாடுகளிலும் அவர் பரப்பி வருகிறார். அவரைச் சென்னை கோட்டூரில் "திருக்குறள்' எனப் பெயரிடப்பட்டுள்ள அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசினோம். செல்லம்மாளின் எல்லாக் குரலோசையும் - குறளைப் பற்றியே ஒலித்தது:
""வந்தவாசியில் உள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்தபோது திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். இந்த வெற்றி என்னுடைய வாழ்க்கையில் புதிய பாதையை அமைத்தது என்று சொல்லலாம். இதன்பிறகுதான் திருக்குறளில் நான் ஆழ்ந்து போகத் தொடங்கினேன். பின்னர் ஆசிரியர் பயிற்சி பெற்று பல்வேறு மாணவர்களுக்குத் திருக்குறள் நடத்த தொடங்கியபோது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆசிரியர் பணி என்பது தெய்வீகப் பணி.
நான் எப்போதுமே பாடத்தைத் வெறுமனே நடத்திப் போனது இல்லை. உதாரணத்துக்கு திருக்குறள் வகுப்பு எடுக்கிறபோது, அதை ராகத்துடன் பாடி, அதை ஒரு காட்சியாக உருவகப்படுத்தி ஆடிக் காட்டிப் பாடம் நடத்துவேன். இப்படி நடத்துகிறபோது மாணவர்கள் பாடத்தையும்,திருக்குறளையும் மறந்து போகவே வாய்ப்பு இல்லை.
சென்னை அடையாறில் உள்ள செயின்ட் ஆண்டனி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றியபோது நடந்த ஒரு சம்பவம். பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் பங்கேற்பதற்காக எங்கள் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றிருந்தோம். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி உட்பட அங்கு நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவர்களே அதிகம் பரிசு பெற்றார்கள். இதில் கோபமடைந்த மற்ற பள்ளி ஆசிரியர்கள் போட்டி நடத்தியவர்களிடம் "அந்தப் பள்ளிக்கே அதிகம் பரிசு கொடுக்கிறீர்கள்' என்று சண்டைக்குப் போய்விட்டார்கள். எங்கள் மாணவர்கள் பரிசு அதிகம் வாங்கியதற்கு பிரத்யேகக் காரணம் ஒன்றுமில்லை. அவர்களுக்குப் புரியும்படி நடத்தியதுதான் முக்கிய காரணம் என்று பிறகு நாங்கள் விளக்கி அவர்களைச் சமாதானப்படுத்தினோம். அதற்குப் பிறகு எங்கள் பள்ளி மாணவர்களைப் பிற பள்ளிக்கூடங்களில் நடக்கும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லவில்லை. நாங்களே நடத்தி நாங்களே பரிசு கொடுத்து ஊக்குவித்தோம்.
பள்ளிக்குப் போன நேரம் போக மீதமிருந்த நேரங்களில் வீட்டிலேயே பொதுமக்களுக்குத் திருக்குறள் வகுப்புகள் நடத்தி வந்தேன். அதைப்போல திருக்குறளைப் பரப்பும் அமைப்புகளின் சார்பில் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். "திருக்குறள் இசைக் கதம்பம்', "காமத்துப்பாலில் ஒருமைப்பாடு', "பெண்ணியச் சிந்தனைகள்' போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளேன். இப்படிப் பல வகையிலும் திருக்குறளையும் பரப்புகிற முயற்சியில் ஈடுப்பட்ட பிறகு அடுத்த கட்டம் என்ன செய்யலாம் என்று நினைத்தபோதுதான் விளக்கு நடனத்தின் மீது என் கவனம் திரும்பியது.
இதற்கு முன்பே நான் கரகாட்டம்,காவடி,மணிபுரி உட்பட பல்வேறு நடனங்களைக் கொஞ்சம்கொஞ்சம் கற்றிருந்தேன். பாடவும் எனக்கும் இயல்பாக வரும். நாட்டுப்புறப் பாடல்களை நன்றாகப் பாடுவேன்.
இதையெல்லாம் கொண்டுதான் திருக்குறள் விளக்க நடனம் அரங்கேற்றி வருகிறேன்.
இரண்டு கைகளிலும் இரண்டு விளக்குகளை வைத்துக்கொண்டு விளக்கு நடனம் ஆடுவார்கள். நாம் ஏன் அறம், பொருள், இன்பம் முப்பாலையும் விளக்கும் வகையில் மூன்று விளக்குகளைக் கொண்டு ஆடக்கூடாது என யோசித்தேன். இதனையடுத்து மூன்றாவது விளக்கை தலையில் வைத்து ஆடுகிற வகையில் அமைத்து திருக்குறள் பிரச்சாரம் செய்து வருகிறேன்.
இதற்காக நானே பிரத்யேகமாக பாட்டு எழுதி இசையமைத்து பாடி ஆடு வருகிறேன். இதற்குப் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் ஆறாவது உலகத் தமிழ் ஒற்றுமை மாநாடு கோலாலம்பூரில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் திருக்குறளை விளக்கி விளக்கு நடனம் புரிந்துபோது பார்வையாளர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு இருந்தது. இதைப்போன்று திருக்குறளைப் பிரச்சாரம் செய்தால் தமிழ் எளிதில் அழியாது என்றும் பலர் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.
திருக்குறள் சொல்லும் கருத்துகளை எழுதி புத்தகமாகப் போட்டால் அது படித்தவர்களிடம்தான் போய்ச் சேரும். ஆனால் இதுபோல் நாட்டியம் மூலம் விளக்குகிறபோது பாமர மக்களுக்கும் எளிதில் போய் சேரும். திருக்குறள் பிரசாரத்திற்காக என்னை எங்கு அழைத்தாலும் வருவதற்குத் தயாராக இருக்கிறேன். சிறைச்சாலைக்கு அழைத்தாலும் பிரசாரம் செய்வேன். திருக்குறள் நல்லவர்களுக்கு மட்டும் இல்லை. தீயவர்கள் நல்லவர்களாக ஆவதற்கும் இது அவசியம்.
என்னுடைய ஆசைகளில் ஒன்று திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்பது. அது இப்போதுதான் நிறைவேறியது. ஒன்றரை இலட்ச ரூபாய் செலவில் அந்தச் சிலையை உருவாக்கினோம். அதை பொது இடத்தில் வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அது முடியவில்லை. அதனால் வீட்டு முகப்பிலேயே சிலையை தொல்.திருமாவளவன் உட்பட பலரை நிர்மாணித்துள்ளேன். இந்தப் பணியை என்னோடு விட்டுவிடக் கூடாது என்பதற்காக என் மகன், மகளையும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.