பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெரின் நடிப்புக் கல்லூரியில் பயிற்சி பெற்று "சிவா மனசுல சக்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுயா, அடுத்து சில படங்களில் நடித்தாலும் அவை, அவருடைய பெயரைச் சொல்லவில்லை. இதற்கிடையே "நஞ்சுபுரம்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். வாய்ப்புகள் இல்லாததால்தான் ஒரு பாடலுக்கு நடனமாடினீர்களா? எனக் கேட்டால்...
"அப்படியெல்லாம் இல்லை. அந்தப் படத்தின் கதாநாயகன் ராகவ், ஒரு டி.வி. நிகழ்ச்சியின் மூலம் பழக்கம் என்பதால் அவருக்காக ஒரு பாடலுக்கு ஆடினேன். அந்தப் பாடல் விளம்பரத்துக்கானது. டி.வி.யில் மட்டுமே ஒளிபரப்பாகும். உடனே எல்லோரும் ஒரு பாடலுக்கு நடனமாட அழைக்கிறார்கள். இப்போது சுந்தர்.சி ஜோடியாக "நகரம் மறுபக்கம்' படத்தில் நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். நான் கதாநாயகியாக நடிக்கும் படத்திலேயே வெறுமனே டூயட்டுக்காக ஆடுவது எனக்குப் பிடிக்காது. அப்படி இருக்கும்போது நான் எப்படி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவேன்?'' என்கிறார்.
வீணையில் எழுவது வேணு கானமா!
முதல்வர் கருணாநிதியின் 75-வது திரைப்படைப்பாக வெளிவருகிறது "பெண் சிங்கம்'. புதியவர் பாலி சிறீரங்கம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்தப் படத்துக்காக கருணாநிதி எழுதியுள்ள "வீணையில் எழுவது வேணு கானமா, திருவாவடுதுறையின் தோடி ராகமா...' என்ற பாடல் இன்றைய இளம் பாடலாசிரியர்களுக்கும் கவிஞர்களுக்கும் போட்டியை ஏற்படுத்தும் வண்ணம் மிகச் சிறப்பாகவும் நல்ல தமிழ் வார்த்தைகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இசைத்துறையில் சிறந்து விளங்கிய இசைவாணர்களைப் போற்றிப் புகழும் வகையில் புனையப்பட்டுள்ள இந்தப் பாடல் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. உதய்கிரண், ரிச்சர்டு, மீராஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் காதல், நட்பு, நகைச்சுவை, பெண்களின் போராட்டக் குணம் போன்றவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து... "முதல்வர் எழுதியுள்ள பாடலில் இடம்பெற்றுள்ள "செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம்...' என்ற குறுந்தொகை வரிகளை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கவிஞன்... இந்த வரிகள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்படும் என நினைத்துப் பார்த்திருப்பானா? அதற்கு காரணம் இந்தக் காலத்துக்கும் ஏற்றவாறு அதை நினைவுக்குக் கொண்டு வந்து எழு திய கலை ஞர் தான். அது தான் கலைஞரின் வலிமை! எனப் புகழாரம் சூட்டிக் கொண்டேயிருந்தார். இந்தப் படத்தில் இடம்பெறும் நீதிமன்ற விவாதக் காட்சிகள் பராசக்தியை நினைவுபடுத்தும் அளவுக்கு பரபரப்பாகப் பேசப்படும் என்கிறது பட வட்டாரம்.
தனி மனித அரசாங்கம்!
இயக்குநர் சரணிடம் உதவியாளராகப் பணியாற்றிய கவின்பாலா இயக்கியுள்ள புதிய படம் "கனகவேல் காக்க'. இதில் கரண் கதாநாயகனாக நடித்திருக்கிறார். படத்தைப் பற்றி கோலிவுட் வட்டாரத்தில் பலரும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி இயக்குநரிடம் பேசியபோது...
"இது ஓர் உலகளாவிய கதைக் களம். இந்திய சினிமாவில் இதுவரை எந்த ஒரு ஹீரோவும் மேற்கொள்ளாத புது முயற்சி. ஒரு தனி மனிதன் சந்தர்ப்ப சூழலால் எப்படி தானே ஓர் அரசாங்கமாக மாறுகிறான் என்பதுதான் கதை. நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை எல்லோருக்கும் தெரிந்த - யாராலும் தீர்க்க முடியாத ஒரு பிரச்னையைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. தமிழகத்தில் பாதி பேருக்கு மேல் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மீதிப் பேருக்கு எப்போது வேண்டுமானாலும் வரக் கூடிய பிரச்னை! விவகாரமான பிரச்னைக்குரிய கதைதான் என்றாலும் கரண் தைரியமாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்காக மட்டும் நான்கு மாதங்கள் ஜிம்மில் பயிற்சி செய்து உடலைக் குறைத்திருக்கிறார் கரண். படத்தின் ரஷ் பார்த்த கமல்ஹாசன், "இந்தப் படத்தின் ரிலீஸýக்கு என்னைத் தவறாமல் அழையுங்கள்; முழு படத்தையும் நான் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்' எனக் கூறியது, பல விருதுகளுக்குச் சமமானது. விஜய் ஆண்டனியின் இசையில் "பணியாரக் கொண்டைக்காரி' பாடல் இப்போதே பட்டித் தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளது. பத்திரிகையாளர் பா.ராகவனின் வசனங்கள் படத்துக்கு மிகப் பெரிய பலம்.
சிக்ஸ் பேக் ஒரு ஹம்பக்!
இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடித்து வரும் "மந்திரப் புன்னகை' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடப்பில் பரபரப்பாக இருந்த கரு.பழனியப்பனிடம் படத்தைப் பற்றிப் பேசியபோது...
"மாதம் 60 ஆயிரம் சம்பாதித்து தனியாக, யாருக்கும் எதற்காகவும் வளைந்து கொடுக்காத ஓர் இளைஞனைப் பற்றிய பதிவுதான் "மந்திரப் புன்னகை'. ஒருவன் எப்படியோ வாழ்ந்து வருவான்; அவனுடைய வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுவாள். காதல் ஏற்படும். உடனே அவனுடைய வாழ்க்கையில் மாறுதல் உருவாகும். எப்பேர்ப்பட்டவனையும் காதல் மாற்றிவிடும் என்றெல்லாம் பல படங்களைப் பார்த்திருக்கலாம். அவையெல்லாம் இல்லை. தன் மனம் போன போக்கில் வாழ்ந்து வரும் ஒருவனுக்குக் காதல் அனுபவம் ஏற்படுகிறது. ஆனால் அவன் அந்தக் காதலாலும் மாறுதல் அடையாமல் தானாகவே இருப்பதுதான் கதை. இந்தப் படத்தில் குத்துப் பாடல் உண்டு. ஆனால் அரை குறை ஆடையணிந்த நடிகைகள் இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அறிவுமதி பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்துக்காக உடலைக் குறைத்தீர்களா? சிக்ஸ் பேக் வைத்திருக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்கிறார்கள். அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நடிகன் எனப்படுபவன் உடலை நன்றாக, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய உடலை மட்டும் வளர்ப்பது அவனுடைய வேலை இல்லை என்பதுதான் என் கருத்து'' என மந்தகாசப் புன்னகை பூத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.