நினைவலைகள்: அமரர் எம்.ஜி.ஆர். படத்துடன் ஜட்கா வண்டி!

எம்.ஜி.ஆரின் பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் அவரின் மெய்காப்பாளராகவும் முப்பது வருடங்களுக்கு மேலாக இருந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். இவர், பன்முகக் கலைஞரான எம்.ஜி.ஆரின் படத் தயாரிப்பு முறை குறித்து இங

எம்.ஜி.ஆரின் பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் அவரின் மெய்காப்பாளராகவும் முப்பது வருடங்களுக்கு மேலாக இருந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். இவர், பன்முகக் கலைஞரான எம்.ஜி.ஆரின் படத் தயாரிப்பு முறை குறித்து இங்கு அசை போடுகிறார்:

எம்.ஜி.ஆர். மிகப்பெரிய நடிகர் மட்டுமல்ல, மிகச் சிறந்த சண்டைக் கலைநிபுணர் என்பதோடு மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர் என்ற விவரம் பொதுவாக அனைவரும் அறிந்த ஒன்று. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் மிகச் சிறந்த வல்லமையாளர் என்ற சிறப்பு அகில இந்திய அளவில் சினிமா துறையைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது என்றால் அது மிகையல்ல. இவ்வாறு சினிமா துறையைப் பொறுத்தவரை பன்முகக் கலைஞர், பல்துறை வித்தகர் என்று திகழ்ந்த எம்.ஜி.ஆர் ஒரு தலைசிறந்த தயாரிப்பாளராகவும் விளங்கினார் என்ற விவரம் அவரது தயாரிப்பில் வெளியான படங்களில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தனது வாழ்க்கைப் பயணம் வெற்றியா? தோல்வியா? என்ற நிலையில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே எடுக்கப்பட்ட தனது முதல் திரைப்படமான "நாடோடி மன்னன்' திரைப்படத் தயாரிப்புக்குப் பிறகு மிகுந்த பொருள் செலவில் எடுக்கப்பட்ட தனது இரண்டாவது திரைப்படமான "அடிமைப்பெண்' படத்தின் கலைஞர்களுக்கு, தயாரிப்பாளர் என்ற வகையில் எம்.ஜி.ஆர் மேற்கொண்ட செலவுகளையும், சிறப்பான பணிகளையும் யாரும் மறக்க இயலாது. ஒரு தயாரிப்பாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

இத் திரைப்படம்÷எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் ஒரு மைல்கல் என்பது நிதர்சனமான உண்மை. படம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதிலும் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதிலும் எம்.ஜி.ஆர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அதற்காகச் செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். படத்தில் ஒரு புதுமையைப் புகுத்த எண்ணி ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தார்.

""மிகவும் கடினமான முயற்சி, தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும், மிகுந்த சிரமங்கள் ஏற்படலாம்'' என்று எம்.ஜி.ஆரது அண்ணன் சக்ரபாணியும், இயக்குநர் கே.சங்கரும் எம்.ஜி.ஆரிடம் எடுத்துக்கூறியும், எம்.ஜி.ஆர் கேட்கவில்லை. தான் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்று பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உறுதியுடன் இருந்தார் எம்ஜிஆர். அதன்படி இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பாலைவனத்துக்குப் படப்பிடிப்புக்குழு சென்றது.

இந்தப் பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த இயலாதவாறு குறைகள் அதிகம் இருந்ததேயொழிய நிறைகள் அதிகம் காணப்படவில்லை. காரணம் தங்குவதற்கு வசதியான இடங்களோ சாப்பிட நல்ல உணவகங்களோ இல்லை. மனிதனின் அத்தியாவசியத் தேவையான தண்ணீர்கூடத் தேவைக்குக் கிடைக்காத இடம். வெப்பத்தைப் பற்றிக் கூறவே வேண்டாம். அந்த அளவுக்குக் கடுமையான வெப்பம். படப்பிடிப்புக்குச் சற்றும் பொருந்தாத இடத்தைத் தேர்வு செய்தார் எம்ஜிஆர்.



கே.பி.ராமகிருஷ்ணன்

இங்கு வந்த படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் வயிறு கலங்கியது என்பது உண்மையே. எவ்வாறு படப்பிடிப்பைச் சிரமம் இன்றி நடத்தி முடித்துத் திரும்பிச் செல்வோம் என்ற பயம் அனைவரையும் பிடித்துக் கொண்டது.

அனைவரது எண்ண ஓட்டங்களுக்கும் மாறாக அமைந்தன. எம்.ஜி.ஆரது செயற்கரிய செயல்கள். அனைவரது அதிருப்தியும் எம்.ஜி.ஆருக்கு மிகச் சவாலாக அமைந்த போதும், அவற்றை இன் முகத்துடன் ஏற்றுக்கொண்டு யாருக்கும் சற்றும் சிரமமோ, முகச் சுழிப்போ ஏற்படாதவாறு மிகச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். குறிப்பாக தண்ணீர் இங்கு அதிகமாக கிடைக்காத காரணத்தால் முதலில் செய்தது அங்கிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து லாரிகளில் ஏராளமான கொ கொ கோலா, போன்ற குளிர்பானங்களை வரவழைத்தது. தேவைக்கு அதிகமாகவே அவை தருவிக்கப்பட்டன. கூடவே ஐஸ்சும்.

மற்றொரு பிரச்னையும் அங்கு ஏற்பட்டது. இரவு நேரங்களில் அங்குள்ள மணல் பரப்பில் கைவிரல்கள் அளவுள்ள சிறிய பாலைவனப் பாம்புகள் உள்ளிருந்து வெளியே வரும் என்றும், அவை விஷம் வாய்ந்தவை என்றும்,அங்கிருந்தவர்கள் கூறினார்கள். உடனே எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு நடைபெறும் வரையிலான பகுதிக்கு மணலில் மேற்பரப்பில் பாம்புகள் வெளிவராத வகையில் உடனடியாக மிக கனமான தரை விரிப்புகளை வரவழைத்து அதை விரித்து அவற்றின் தொந்தரவு இல்லாதவாறு பார்த்துக் கொண் டார்.

அதேபோல் மொத்த யூனிட்டுக்குமே நம் ஊர் சாப்பாடு தயாரித்து வழங்கியாக வேண்டும். எத்தனை நாள்தான் சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு அங்கே படிப்பிடிப்பில் இருப்பது? இதற்காகவே ஓர் ஊரில் சமையல் செய்ய கேண்டீன் நிறுவினார். அங்கிருந்து நேரா நேரத்திற்கு வண்டிகளில் எல்லோருக்கும் டிபன், சாப்பாடு, நொறுக்குத்தீனி எல்லாமே வரவழைத்தார். இதற்காக அந்த ஊர்க்காரர்களையே வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு உணவும், ஊதியமும், அவர்களது எதிர்ப்பார்ப்புக்கு அதிகமாகவே வழங்கினார்.

அங்குள்ளவர்களுக்கு இந்தி மட்டுமே தெரியும். எம்.ஜி.ஆருக்கும் ஓரளவு இந்தி புரியும். தமிழ், இந்தி பேசும் ஓரிருவர் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தனர். படப்பிடிப்புக்குச் சுமார் 300 - க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் தேவைப்பட்டன. அவற்றிற்கு தினமும் 500- ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டதோடு அல்லாமல் அதன் மீது சவாரி செய்யும் நபர்களுக்கும் தினசரி சம்பளம், சாப்பாடு வழங்கப்பட்டது. இதுவரை சினிமாவைப் பற்றியே தெரியாத இவர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பொறுமையுடன் கோபம் கொள்ளாமல் அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தனர் எம்.ஜி.ஆரும் இயக்குனர் சங்கரும்.

இப்படத்தின் ஆரம்பக் காட்சியில் இடம்பெற்ற சண்டை, மிகவும் புதுமையானது. அதாவது ஈட்டிகள் வரிசையாக அமைக்கப்பட்டு அதன் மீது வலை கட்டப்பட்டு, அந்த வலை மீது ஒற்றைக்காலுடன் எம்.ஜி.ஆரும், அசோகனும், மோதும் வாள்சண்டை மிக பிரமாதமாக அமைந்தது. முதலில் தரைத் தளத்திலேயே அமைக்கலாம் என்ற இயக்குனர் சங்கரின் யோசனையை ஏற்காத எம்.ஜி.ஆர்., தான் விரும்பியவாறு ஒரு புதுமையான சண்டை காட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்து அதன்படி அவரே அமைத்த சண்டைக் காட்சி அது.

இந்தச் சண்டைக் காட்சியின் ஒரு கட்டத்தில் காலில் எம்.ஜி.ஆருக்கு அடி ஏற்பட்டு பிளாஸ்டர் போடப்பட்டு சுமார் 2 மணி நேரம் கழித்து மீண்டும் முழு உத்வேகத்தோடு சண்டைக் காட்சிகளில் நடித்தார். இந்தப் படப்பிடிப்பில் வேறு யாருக்கும் கிடைத்திராத ஒரு சிறப்பு எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. அதுவரை ஜெய்ப்பூர் அரண்மனையின் சில பகுதிகளில் யாருக்கும் அனுமதி தரப்படுவதில்லை. ஆனால் அந்த இடங்களில்கூடப் படப்பிடிப்பை நடத்த எம்.ஜி.ஆருக்கு விஷேச அனுமதியை வழங்கினார்கள்.

ஜெய்ப்பூர் அரண்மனையின் ஆறாவது மாடியில் மன்னனின் படுக்கை அறை உள்ளது. முதலில் அங்கு பார்வை இடச் சென்ற எம்.ஜி.ஆருக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போனது. இயக்குனர் சங்கர் எம்.ஜி.ஆரிடம், "இங்கு சில காட்சிகளை எடுத்தால் நன்றாக இருக்கும், ஆனால் செலவு அதிகமாகும்' என்றார். "என்ன செலவு?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். "அதாவது தரையில் விரிக்கப்பட்டுள்ள கார்பெட்டுக்குப் பதிலாக சன்மைக்கா போன்ற பளபளக்கும் விரிப்புகள் அமைத்தால் பாடல் காட்சிகளின் மெருகு ஏறும்' என்றார். உடனே எம்.ஜி.ஆர். "செலவு பற்றி கவலை வேண்டாம்' என்று கூறியதுடன், உடனடியாக உயர்தர சன்மைக்கா கிடைக்க டெல்லிக்கு ஒரு ஆளை அனுப்பி வைத்தார். விதவிதமான சன்மைக்காக்களை வரவழைத்துவிட்டார். இதன் மதிப்பு அப்போதே சுமார் 50 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டது. "ஆயிரம் நிலவே வா' பாடல் காட்சிகளில் பெரும்பாலானவற்றை அங்கு எடுத்தார்.

அந்த அரண்மனைக்கு உள்ளேயே தனது ஆலோசனைப்படி ஒரு அரண்மனை போன்ற அரங்கை அமைக்கும்படி ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவைப் பணித்தார். அவ்வாறு ஒரு புதுமையான செட் போடப்பட்டு அப்பாடலின் மீதக் காட்சிகளும், மற்ற சில காட்சிகளும் அங்கு எடுக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாகப் படப்பிடிப்பிற்கு ஜெய்ப்பூர் சென்றவுடனேயே எம்.ஜி.ஆர். செய்த முதல் நல்ல காரியம் ராஜஸ்தான் வறட்சி நிதிக்காக ரூ.50 ஆயிரம் நிதியை வழங்கியதுதான். இது அங்கு அவருக்கு மிகப் பெரிய பாராட்டை ஏற்படுத்தியது மட்டுமின்றி ஜெய்ப்பூரில் எங்கு வேண்டுமென்றாலும் படப்பிடிப்பு நடத்தலாம் என்ற நிலையையும் உருவாக்கியது.

இப்படத்தின் பெரும்பான்மையான எடிட்டிங் மேற்பார்வையை எம்.ஜி.ஆரே மேற்கொண்டதும், இப்படத்தின் சிறப்பு அம்சம். எடிட்டிங் கலையில் எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த நிபுணரும்கூட. படப்பிடிப்பின் இறுதி நாளில் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் ஏராளமான அன்பளிப்புகளை அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

இப்படத்தின் நாயகி ஜெயலலிதாவிற்கு இரட்டை வேடம். இப்படத்தில் அவர் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்று விரும்பினார், எம்.ஜி.ஆர். இதை ஜெயலலிதாவிடம் எம்.ஜி.ஆர் தெரிவித்தபோது அவர் முதலில் மறுப்பு தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை அழைத்துப் பேசி டியூன் தயார் செய்யும்படி கூறினார். கவிஞர் வாலியிடம் பாடல் எழுதும்படி பணித்தார். பின்னர் கே.வி.மகாதேவனும், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவைச் சம்மதிக்க வைத்தனர். ஜெயலலிதாவின் அந்தப் பாடல் மிகச் சிறப்பாக அமைந்து அனைவரும் பாராட்டும்படி ஆனது. ""அம்மா என்றால் அன்பு'' என்ற பாடல்தான் அது. அதேபோல் எல்லாப் பாடல்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர்., கே.வி.மகாதேவனிடம் "செலவு பற்றி கவலை கொள்ளாதீர்கள், எத்தனை வாத்தியக் கருவிகள் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளுங்கள். எனக்குப் பாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும்,அவ்வளவே' என்று கேட்டுக்கொண்டதுடன், அவருக்கு முழு சுதந்திரமும் ஒத்துழைப்பும் கொடுத்தார்.

ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடைபெற்றபோது அனைவருக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய ஒரு வட நாட்டு வாலிபனை நியமித்தார் எம்.ஜி.ஆர். அவ்வாறே அவ்வாலிபனும் தனது குதிரை வண்டியில் (அவரது பெயர் நினைவில்லை) வெகுதூரம் சென்று தண்ணீர் கொண்டு வந்து அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்தார். அவ்வாலிபனின் சுறுசுறுப்பையும், நேர்மையையும் கண்டு வியந்த எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு முடியும் தருவாயில் அவரை அழைத்துப் பாராட்டியதோடு ரூ.10 ஆயிரம் பரிசாக அளித்தார்.

1976-ம் ஆண்டு "மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்' திரைப்படத்திற்காக நாங்கள் மீண்டும் ஜெய்ப்பூர் செல்கிறோம். படப்பிடிப்பு இல்லாத ஒரு நாளில் நண்பர்களுடன் அஜ்மீர் தர்காவுக்குச் சென்றிருந்தோம். அங்கு எம்.ஜி.ஆர். படம் வைக்கப்பட்ட குதிரை வண்டி ஒன்றைக் கண்டு அருகே போய் விசாரித்தால் அந்த நபர் அடிமைப்பெண் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரால் பண உதவி செய்யப்பட்ட அதே நபர்!

எங்களைப் பார்த்ததும் புரிந்துகொண்டார் அவர். மிகவும் மகிழ்ச்சியடைந்த அந்த இளைஞர் எம்.ஜி.ஆரைப் பார்க்கத் துடித்தார். எம்.ஜி.ஆர்., அப்போது கொடுத்த பணத்தில் ஒரு வண்டி வாங்கி அதன் பின்பு அந்த வருமானத்தில் மேலும் இரண்டு வண்டிகளை வாங்கி ஜெய்ப்பூரில் வாடகைக்கு விட்டுள்ளதாகவும், பழைய வண்டியை தானே ஓட்டுவதாகவும் கூறிய அவர், அனைத்து வண்டிகளிலும் எம்.ஜி.ஆர். படம் மாட்டியுள்ளதாக நன்றிப் பெருக்குடன் கூறினார்.

நாங்கள் எவ்வளவோ மறுத்தும் தனது அன்பின் அடையாளமாகக் கடைக்குச் சென்று எங்களுக்கு குளிர்பானங்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் அஜ்மீர் தர்கா சென்று வெளியில் வரும் வரை எங்களுக்காகவே காத்திருந்த அவர் உடனடியாக எம்.ஜி.ஆரிடம் அவரை அழைத்துச் செல்லுமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டார்.

அவரிடம், "இப்போது உடனே உங்களை அழைத்துச் செல்ல இயலாது. ஜெய்ப்பூர் கோட்டையில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இரண்டொரு தினங்கள் கழித்து நீங்கள் அங்கு வாருங்கள்' என்று அவரிடம் கூறிவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.

கேட்டுக்கொண்டபடி, ஜெய்ப்பூர் கோட்டைக்கு வந்து எங்களைச் சந்தித்தார் அவர். நாங்கள் அவரை எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றைக் கூறினோம். அந்த இளைஞரை {அவருக்கு ஞாபகமிருந்தது. ஆனால் "அடிமைப்பெண்' படப்பிடிப்பின்போது அவருக்குப் பணம் கொடுத்த விபரம் ஞாபகம் இல்லை. அவரது தொழிலைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் கேட்டறிந்தார். அந்த நபர் கேட்டுக் கொண்டவாறே அவருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்து புகைப்படமும், எடுத்துக்கொண்டார். மேலும் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டதற்கு எனக்கு எதுவும் வேண்டாம், தங்களை நான் இப்போது கண்டதே போதும் என்று கூறி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து வணங்கினார் அவர்.

எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை செய்த உதவிகள் எதுவும் நினைவில் நிற்காது. உதவிபெற்றவர் சொன்னால் மட்டுமே புரியும். அவ்வாறே வட நாட்டில் படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் ஒருவரது வாழ்க்கையை மேம்படுத்தி சிறப்பு செய்தவர் எம்.ஜி.ஆர். சாதி, சமய, இன உணர்வுகள், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு மனித நேயத்துடன் உதவியவர் எம்.ஜி.ஆர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.

தமிழ் திரையுலகிலும் தமிழக அரசியல் களத்திலும் சரித்திர நாயகனாக திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் மெய்காப்பாளராகப் பணியாற்றிய நாட்களை நினைவில் நிறுத்தி நான் இப்போது அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.

1957 -ம் ஆண்டு எம்.ஜி.ஆருடன் அவரது சொந்த திரைப்படமான "நாடோடிமன்னன்' முதல் அவருடைய இறுதி திரைப்படமான "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' வரை ஸ்டண்ட் காட்சிகளிலும் மற்ற காட்சிகளிலும் நடித்ததும், திரைப்படங்களில் எம்.ஜி.ஆருடன் நடிக்கத் துவங்கிய காலம் முதலே அவரது அரசியல் பொது வாழ்விலும் மெய்காப்பாளராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றதும் என் வாழ்வில் கிடைத்த பெரும்பேறு.

"இனியொருவர் நிகரில்லை உனக்கு' என்கிற வாக்கியம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com