திரைக்கதிர்: பச்சை என்கிற காத்து!

பரவலான பாராட்டுகளைப் பெற்ற "தமிழு', "வதை' குறும்படங்களை இயக்கிய கிரா, முதல்முறையாக "பச்சை என்கிற காத்து' என்ற படத்தை இயக்குகிறார். வி.சேகர், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய கீரா, இந்த
திரைக்கதிர்: பச்சை என்கிற காத்து!
Updated on
3 min read

பரவலான பாராட்டுகளைப் பெற்ற "தமிழு', "வதை' குறும்படங்களை இயக்கிய கிரா, முதல்முறையாக "பச்சை என்கிற காத்து' என்ற படத்தை இயக்குகிறார். வி.சேகர், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய கீரா, இந்தப் படத்தின் கதையை ஒரு ட்ரெய்லராக உருவாக்கி அதை பல தயாரிப்பாளர்களிடம் காட்டியுள்ளார். படம் பலரைக் கவர்ந்தாலும் படப்பிடிப்பைத் தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து "அ' என்ற நிறுவனத்தை நண்பர்களுடன் தொடங்கி படத்தை உருவாக்கி வருகிறார். படப்பிடிப்பில் இருந்தவரிடம் "பச்சை' பற்றி கேட்டபோது...

""அரசியல் பற்றி தவறான புரிதலும் அசட்டுத்தனமான கற்பனையும் கொண்ட ஓர் இளைஞன், அரசியல் சூழலில் எப்படி சிக்கிச் சீரழிகிறான் என்பதை யதார்த்தமாகக் கூறுவதுதான் கதை. இப்படிப்பட்ட இளைஞர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். ஒரே இரவில் தொடங்கி முடிவது போல திரைக்கதை அமைத்திருக்கிறோம். நடிகர்கள் தெரியக்கூடாது; கதாபாத்திரங்கள் மட்டுமே தெரிய வேண்டும் என்பதற்காக புதுமுகங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். இன்று வரும் பல படங்கள் ஆங்கிலப் படங்களின் எச்சங்களாகவும் பழைய தமிழ்ப் படங்களின் மிச்சங்களாகவும்தான் இருக்கின்றன. இதே காலகட்டத்தில் நல்ல கதை, மண் சார்ந்த உணர்வுகளுடன் வெளிவரும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை இயக்கி வருகிறேன். மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, விறுவிறுப்பு, பரபரப்பு போன்ற அனைத்து அம்சங்களும் படத்தில் இயல்பாக இடம்பெற்றுள்ளன'' என்றார் கீரா.

அடுத்த அருந்ததி!

அனுஷ்கா நடித்த "அருந்ததி' படம் தெலுங்கில் சுமார் 60 கோடி ரூபாய் வசூலானது. தமிழிலும் டப் செய்யப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அதே பாணியில் உருவாகும் "பஞ்சாக்ஷரி' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தயாரிக்கிறார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்தப் படத்தின் தமிழ் உரிமையை, வந்தனா மீடியா நிறுவனம் பெரும் தொகைக்கு பெற்றுள்ளது. இந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தோடு அமைக்கப்பட்டுள்ள அனுஷ்காவின் சண்டைக் காட்சிகள் ஆக்ஷன் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளன என்கிறது பட வட்டாரம்.

நகைச்சுவைப் புதையல்!

"வல்லமை தாராயோ' படத்தை இயக்கிய மதுமிதாவின் அடுத்த படம் "கொல கொலயா முந்திரிக்கா'. கிரிகுஜா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் திரிசக்தி சுந்தர்ராமனும் நளினி சுந்தர்ராமனும் படத்தைத் தயாரிக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். படத்தைப் பற்றி மதுமிதா, ""சிறு சிறு திருட்டுக்களைச் செய்து வரும் நாயகனும் நாயகியும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, இருபது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெரிய பொக்கிஷத்தைத் தேடிப் பயணிக்கிறார்கள். இரண்டு கடத்தல் கும்பல்களும் அவர்களைப் பின்தொடர்கிறது. இவர்கள் அனைவரையும் ஒரு போலீஸ் அதிகாரி பின்தொடர்கிறார். இந்தச் சூழ்நிலையில் நடைபெறும் சம்பவங்களை முழுக்க முழுக்கக் காமெடியாகச் சொல்கிறோம். முதல் காட்சியில் தொடங்கும் காமெடி கடைசி காட்சி வரை தொடரும். கிரேஸி மோகனின் "மாஸ்டர் பீஸ்' எனச் சொல்லும் வகையில் வசனங்கள் மிகச் சிறப்பாகவும் இயல்பாகவும் அமைந்துள்ளன. ஆபாசம், வன்முறை இல்லாமல் படத்தை உருவாக்கியிருக்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படத்தைப் பார்க்கும்போது மட்டுமல்லாமல் தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்'' என்றார்.

"துரோகி' யார்?

மணிரத்னத்திடம் பணியாற்றிய பெண் உதவியாளர் சுதா கே.பிரசாத் "துரோகி' படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார். "வெண்ணிலா கபடி குழு' விஷ்ணு, ஸ்ரீகாந்த், பூஜா, பூர்ணா, பூனம் பாஜ்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பில் இருந்த சுதாவிடம் "துரோகி' யார் என கேட்டபோது...

""எல்லோரும் ஒரு வகையில் எல்லோருக்கும் துரோகிதான் என்பதே இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. இதை வித்தியாசமான திரைக்கதையின் மூலம் பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாக்குகிறோம். நான் ஒரு பெண் என்பதால் எனக்கு மென்மையான கதையம்சம் உள்ள படம்தான் பிடிக்கும் என நினைத்துவிட வேண்டாம். நான் அதிகம் பார்க்கிற, ரசிக்கிற படங்கள் எல்லாமே ஆக்ஷன் படங்கள்தான். எனக்கு மிகவும் பிடித்த படமே "காட்ஃபாதர்'தான். ஆக்ஷன் என்பது வெறும் அடிதடி மட்டுமல்ல. வேறு வகையிலும் ஆக்ஷன் படம் செய்ய முடியும் என்பதற்கு இந்தப் படம் உதாரணமாக இருக்கும். படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை எமோஷன், வயலன்ஸ் கலந்த ஒருவிதமான ஆக்ஷன் இருந்துகொண்டே இருக்கும். படத்தில் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. "வெண்ணிலா கபடிகுழு' செல்வகணேஷ் படத்துக்கு இசையமைக்கிறார். சென்னை ராயபுரம் பகுதியில் தொடர்ந்து நாற்பது நாள்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றார்.

ஹீரோயிசம் இல்லாத போலீஸ் கதை!

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கண்டோன்மெண்ட் சண்முகம் "வில்லாளன்' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார். இதில் அவருடைய மகன் வெற்றிவேல் கதாநாயகனாக

அறிமுகமாவதோடு "அம்மா அப்பா செல்லம்' படத்தை இயக்கிய சூரியனோடு இணைந்து படத்தையும் இயக்குகிறார். "வில்லாளன்' பற்றி கேட்டபோது...

""மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு இன்னொரு பெயர் வில்லாளன். அந்த அர்ஜுனனைப் போல படத்தின் நாயகனும் கூர்மையான அறிவுத்திறனும் செயல்திறனும் கொண்டவன். இது முழுக்க முழுக்க போலீஸ் சம்பந்தப்பட்ட ஒரு க்ரைம் கதை. புதுமையான காட்சியமைப்பின் மூலம் இதுவரை வெளிவந்த போலீஸ் படங்களிலிருந்து இந்தப் படம் மாறுபட்டு இருக்கும். சினிமாவுலகுக்கு நானும் ஒரு புதுமுகம் என்பதால் புதியவர்களைக் கொண்டே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். ஆக்ஷன் காட்சிகளில் சகஜமாக நடித்த எனக்கு காதல் காட்சிகளில் நடிக்க மிகவும் சிரமமாக இருந்தது. இந்தப் படத்துக்காக எந்த போலீஸ் அதிகாரியையும் ரோல் மாடலாக நினைக்கவில்லை. கதையையும் கதாபாத்திரத்தின் தன்மையையும் உணர்ந்துகொண்டு ஓர் உதாரண போலீஸ் அதிகாரியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். படத்தின் எந்த ஒரு காட்சியிலும் ஹீரோயிசம் இருக்காது'' என்றார் வெற்றிவேல்.

முடிவை மாற்றிய நாட்டாமை!

இதுவரை பல அழைப்புகள் வந்தும் விளம்பரப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த சரத்குமார், முதல்முறையாக ஒரு வேஷ்டி விளம்பரத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருக்கிறார். எம்.சி.ஆர். காட்டன் நிறுவனம் முதலில் மோகன்லாலை புக் செய்துவிட்டு சரத்குமாரை அணுகியுள்ளனர். அந்த அழைப்பை ஆரம்பத்தில் மறுத்த சரத்குமாரை மோகன்லால் தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார். மோகன்லாலின் அன்புக்குக் கட்டுப்பட்ட சரத், தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பாண்டிச்சேரியில் மூன்றே நாள்களில் எடுத்துள்ளார். இந்த விளம்பர ஒப்பந்தத்துக்காக சரத்குமாருக்கு ஒரு கோடிக்கும் சற்று குறைவான தொகை சம்பளமாகத் தரப்பட்டுள்ளதாம்!

வசந்தபாலன்

"அங்காடித்தெரு' படத்துக்குப் பிறகு வசந்தபாலனுக்கு பல நிறுவனங்களிடமிருந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. சினிமாத்துறையை தங்களது பிடிக்குள் கொண்டுவரத் துடிக்கும் "அந்த' டி.வி. சேனல்களின் வாரிசுகள் எங்களுக்குத்தான் உங்களது அடுத்த படம் என அன்புக் கட்டளையிட்டு வருகிறார்களாம். அடுத்த படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்ய ஆறு மாத காலம் ஆகும். பிறகு முடிவைச் சொல்கிறேன் என இயக்குநர் வட்டாரம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com