

திருமணத்துக்குப் பின் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மாளவிகா. "வெற்றிக் கொடி கட்டு' உள்ளிட்ட பல படங்களில் நடித்த மாளவிகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடித்து சினிமாக்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். இயக்குநர்கள் பலர் கதை சொல்லியும் குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில் "நிலா' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எம்.ஜி.ஆர் நம்பி இயக்கும் "பொறுத்திரு' என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார். ""திருமணத்துக்குப் பின் சினிமாக்களைத் தவிர்த்து வந்த மாளவிகா இப்போது என் படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். கதை சொல்ல நேரம் கேட்ட போதே ""சினிமாக்களில் நடிக்க ஆர்வம் இல்லை, இப்போது என் குழந்தைகளுடன் நேரத்தைக் கழித்து வருகிறேன். அதனால் கதைகள் கேட்பதில் ஆர்வம் இல்லை'' என்று மறுத்தார். கதையைக் கேட்டதும் ஆர்வமாகி ""கதை நன்றாக இருக்கிறது. நிச்சயம் நடிக்கிறேன்'' என்றார். இதில் மாளவிகா சினிமா நடிகையாகவே வருகிறார். அதே போல் 12 வருடங்களாக நடிக்காமல் இருந்த மறைந்த எஸ்.எஸ்.சந்திரனும் கேரக்டர் பிடித்திருந்ததால் இதில் நடித்தார்'' என்றார் இயக்குநர் எம்.ஜி.ஆர் நம்பி.
தந்தை மகன் பாசம்!
தந்தைக்கும் மகனுக்குமிடையிலான பாசத்தைப் பற்றி பேசுகிற படமாக உருவாகிறது "யுவன் யுவதி'. பரத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ராம் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. பரத்தின் ஜோடியாக கேரளத்தைச் சேர்ந்த ரீமா கல்லிங்கள் என்ற மாடல் அறிமுகமாகிறார். சந்தானம், சம்பத் ஆகிய இருவரும் முக்கிய பாத்திரம் ஏற்கிறார்கள். "நினைத்தாலே இனிக்கும்' படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். ""சென்னையில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் மாடர்ன் இளைஞனாக பரத் நடிக்கிறார். அவரது தந்தையாக சம்பத் நடிக்கிறார். தந்தை - மகன் இருவருக்குமான அன்பை, நகரப் பின்னணியில் சொல்லப் போகிறேன். கதையோடு பின்னிப் பிணைந்த முக்கியப் பாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். அவரது காமெடி திரைக்கதைக்குப் பலமாக அமைந்துள்ளது. ஆக்ஷன், காமெடி, காதல் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகி வருகிறது. தென் ஆப்ரிக்காவின் அருகில் இருக்கும் சீசெல்ஸ் தீவுகளில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவின் படப்பிடிப்பு முதன் முதலாக இப்போதுதான் அங்கு நடத்தப்பட்டு இருக்கிறது. விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்'' என்றார் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன்.
விஷால் தயாரிப்பில் நகுல்!
அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிக்கும் படங்களில் விஷால் நடித்து வந்தார். இப்போது சொந்த நிறுவனத்தில் இன்னொரு ஹீரோவை வைத்து படம் தயாரிக்கிறார் விஷால். நகுலன் தெலுங்கு நடிகர் மனோஜ் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இப்படம் உருவாகிறது. தெலுங்கில் நகுலன் நடித்த வேடத்தில் வருண் சந்தோஷ் நடிக்கிறார்.திரில்லர் கலந்த காதல் கதையாக இக்கதை உருவாகியுள்ளது. ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. "தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தை இயக்கிய திரு இப்படத்தை இயக்குகிறார். சுவிட்சர்லாந்து, சென்னை, ஐதராபாத், தலக்கோணம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
உதயத்தில் தொடங்கி உதயம் வரை!
"யுகம்' படத்தில் "அதே நேரம் அதே இடம்' என்ற படத்தில் நடித்த ராகுல் மாதவ் கதாநாயகனாக நடிக்கிறார். "பட்டாளம்' படத்தில் நடித்த தீப்தி நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். ரவிமரியா, பாவா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பவதிவாளர் பவன் சேகர் கதை, திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். ""ஃபேமிலி திரில்லராக உருவாகும் இப்படத்தின் கதை சூரிய உதயத்தில் தொடங்கி, மறுநாள் சூரிய உதயத்தில் முடிகிறது. திருமணம் முடிந்து புதுமணத்தம்பதியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதிகளுக்குக் குடியேறிய நிமிடத்திலிருந்து அடுத்த 24 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களைத் திடுக்கிடும் காட்சிகள் நிறைந்த திரைக்கதையாக வடிவமைத்துள்ளேன். கணவன் - மனைவி இடையேயான காதல், ஊடல், கோபம், சந்தோஷம் என அனைத்து வகையான உணர்ச்சிகளின் கலவையாக இப்படம் உருவாகியிருக்கிறது. இளமை ததும்பும் பாடல் காட்சிகள் திரைக்கதைக்கு அழகு சேர்க்கும். ஹாலிவுட் படங்களுக்கு இணையான திரில்லர் காட்சிகள் இக்கதையில் இடம் பெற்றிருக்கிறது. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. பாடல் காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர் பவன் சேகர்.
ஒளித்து வைக்கப்பட்ட உயிர்!
உலகப் புகழ் பெற்ற ஹாரிபாட்டர் நாவலின் 7-ம் பகுதி "ஹாரிபாட்டரும் உயிர் ரகசியமும்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவருகிறது. தான் ஒரு வயது சிறுவனாக இருக்கும்போதே, தன் பெற்றொரை கொலை செய்து விட்டு, தன்னையும் கொலை செய்ய முயற்சி செய்த வால்டர்மோர்ட்டை இந்த 7-ம் பாகத்தில் நேருக்கு நேர் யுத்தத்தில் சந்திக்கிறான் ஹாரி. கொல்லப்பட முடியாத வால்டர்மோர்ட் தனது உயிரை சிறு சிறு பகுதிகளாக பிரித்து பல இடங்களில் ஒளித்து வைத்திருக்கும் ரகசியத்தை தற்செயலாக அறிகிறான் ஹாரி. அவை எங்கு, எப்படி ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி எதுவும் தெரியாமல் அடர்ந்த காடுகளிலும், பனி மலைகளிலும் வால்டர்மோட்டின் உயிர் ரகசியத்தை தன் நண்பர்களுடன் தேடி அலைகிறான் ஹாரி. இந்நிலையில் அவனைப் பிடிக்கத் துரத்துகிறது சாவை விழுங்கும் சாத்தான்களின் படை. ஹாரி சாத்தான்களிடமிருந்து தப்பித்தானா, வால்டர்மோர்ட்டின் உயிர் ரகசியத்தை கண்டுபிடித்தானா என்பதுதான் இந்த 7-ம் பாகத்தின் கதை. நவம்பர் 19-ம் தேதி ரிலீசாகும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
பில்லா -2 இது புதுசு!
"பில்லா 2' படத்தில் அடுத்த ஆண்டு நடிக்க உள்ளார் அஜித். ரஜினி நடித்த "பில்லா' படம், அமிதாப் பச்சனின் "டான்' பட ரீமேக். அதே "டான்' படத்தை மீண்டும் ஹிந்தியில் உருவாக்கியபோது ஹாருக்கான் நடித்தார். இப்போது "டான் 2' வில் ஷாருக்கான் நடித்து வருகிறார். "டான் 2' படத்தின் ரீமேக்தான் "பில்லா 2' என தகவல் பரவியது. ஆனால் இதை மறுக்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன். ""டான் 2' ரிலீசுக்கு முன்பே எங்கள் படம் தொடங்கிவிடும் "பில்லா 2' எந்த கதையின் சாயலிலும் இருக்காது. இது புதுக் கதை'' என்றார் விஷ்ணுவர்தன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.