திரைக்கதிர்: ஹீரோயின் வேட்டை மன்னன்!

புதுமுக இயக்குநர் நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. படத்துக்கு 'வேட்டை மன்னன்' எனப் பெயரிட்டுள்ளனர். 'போடா போடி' படத்தை முடித்ததும் இதில் நடிக்கிறாராம் சிம்பு. இதன் படப்பிடிப்பில் பெரும்பா
திரைக்கதிர்: ஹீரோயின் வேட்டை மன்னன்!
Updated on
3 min read

புதுமுக இயக்குநர் நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. படத்துக்கு 'வேட்டை மன்னன்' எனப் பெயரிட்டுள்ளனர். 'போடா போடி' படத்தை முடித்ததும் இதில் நடிக்கிறாராம் சிம்பு. இதன் படப்பிடிப்பில் பெரும்பாலானவை மெக்சிகோ நாட்டில் நடக்கிறது. முழுநீள ஆக்ஷன் கதையாக உருவாகிறது. படத்தில் சிம்புக்கு மூன்று ஜோடியாம். ஹீரோயின் தேர்வில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார் சிம்பு. யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.

உறவைச் சுமந்து செல்லும் 'ரதம்'!

'ரதம்' என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் மன்சூர் அலிகான் ஷேக்ஸ்பியரியன் நாடக வசனங்களைப் பேசி நடித்துள்ளார். இதுகுறித்து படத்தின் இயக்குநர் வியாஸ் கூறியதாவது,

''அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் கதை. கூத்துப் பட்டறை மாணவர் வினோத் கதாநாயகனாக நடிக்கிறார். வித்யா என்ற மாடல் கதாநாயகியாக நடிக்கிறார். காதல், மோதல் என இரு பாதைகளில் பயணிக்கும் கதை 'ரதம்'. இதில் மன்சூர் அலிகான் செருப்பு தைக்கும் தொழிலாளியாக நடிக்கிறார். ஷேக்ஸ்பியரின் பிரபலமான நாடக வசனங்களை பேசி நடித்துள்ளார். தனது வசனங்களுக்கு இடையே அவ்வப்போது ஆங்கிலத்தில் அந்த வசனங்களைப் பேசுவார். சமீபத்தில் கொடைக்கானல் பகுதிகளில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. 'இதுவரை 140-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். கேப்டன் பிரபாகரனுக்குப் பின் இந்தப் படத்தில்தான் எனக்கு ஆத்ம திருப்தி கிடைத்திருக்கிறது' எனச் சொல்லி மன்சூர் அலிகான் நெகிழ்ந்தார்'' என்றார் வியாஸ்.

அசின் மொழி!

'ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாகவும், 5-க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகிறதே...' என அசினிடம் கேட்டபோது, ''ஹிந்தியில் 2 முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடிக்க இருக்கிறேன். அதற்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. அதற்குள் அதுபற்றி விரிவாக பேச முடியாது. ஹிந்தி படங்களில் மட்டும்தான் அதிக கவனம் செலுத்துவதாக சில மீடியாக்கள் செய்தி போடுகிறது. அதில் உண்மை இல்லை. எந்த மொழியில் நல்ல கதைகள் வந்தாலும் அதில் நடிப்பேன். தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது தென்னிந்திய நடிகை என்றார்கள். ஹிந்தியில் நடிப்பதால் பாலிவுட் நடிகை என்கிறார்கள். மாநிலம் வாரியாக என்னை பிரித்துப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. குறிப்பிட்ட மொழியில்தான் நடிக்க விரும்புகிறேன் என்ற முடிவை எப்போதும் எடுக்கமாட்டேன். தெலுங்கில் விஜயன் மகன் சபரீஸ் ஹீரோவாக நடிக்கும் படத்திலும், விஜய்யின் 'காவலன்' படத்திலும் தற்போது நடித்து வருகிறேன்'' என்றார் அசின்.

படத்தில் ஆக்ஷன் கிங்; செட்டில் ஹ்யூமர் கிங்!

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வல்லக்கோட்டை' படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருக்கிறார் ஹரிப்பிரியா. ''இந்தப் படத்துக்கு முன் ஓரிரு படங்கள் வந்திருந்தாலும் 'வல்லக்கோட்டை' நிச்சயம் நல்ல பெயர் வாங்கித் தரும். அர்ஜுன் சாருடைய ரசிகை நான். அவரின் படங்கள் அனைத்தையும் சின்ன வயதில் இருந்து பார்த்து வருகிறேன். 'ஜெய்ஹிந்த்', 'கர்ணா' எல்லாம் ஸ்கூல் படிக்கும் போது பார்த்தது. இப்போது வாய்ப்பு கிடைத்தாலும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இப்போது அவருக்கு ஜோடியாக நடிப்பது பெருமையாக இருக்கிறது. அர்ஜுன் சாரை படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகத்தான் பார்த்திருக்கிறேன். நெருங்கிப் பழகும்போது அவர் மிகுந்த நகைச்சுவை உணர்வுள்ளவர் எனத் தெரிந்துக் கொண்டேன். கேமிரா முன் நிற்கும் போது மட்டும்தான் அவர் நடிகர். மற்ற நேரங்களில் காமெடி செய்து ஷூட்டிங் பகுதியையே கலகலப்பாக ஆக்கிவிடுவார். இந்தப் படத்தில் கிளாமர் மட்டுமே இல்லாமல் நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள கதையாகவும் வந்திருக்கிறது. பாடல்களில் மட்டுமே கிளாமர் இருக்கும்'' என்றார் ஹரிப்பிரியா.

நிஷாவின் இடத்தில் சாக்ஷி!

ராம்கோபால் வர்மாவுக்கு அவ்வப்போது யாராவது ஒரு நடிகை ஃபேவரைட்டாக இருப்பார்கள். தொடர்ந்து தனது பல படங்களில் அவரையே ஹீரோயினாக நடிக்க வைப்பார். அந்தப் பட்டியலில் ஊர்மிளா, அந்த்ராமாலி, நிஷா கோத்தாரி எனப் பலர் உள்ளனர். இதில் நிஷா கோத்தாரியுடன் மட்டும் வர்மாவுக்கு மோதல் ஏற்பட்டது. 'ஆக்' என்ற படத்தை வர்மா இயக்கினார். இதில் நிஷாதான் ஹீரோயின். படுதோல்வி அடைந்த படமிது. ''இந்தப் படத்தில் நடித்தது என் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு'' என அப்போது பரபரப்பு பேட்டி தந்தார் நிஷா. இதனால் வர்மா - நிஷா இடையே மோதல் ஏற்பட்டது. இனி ராம்கோபால் வர்மாவின் படங்களில் நடிக்கமாட்டேன் என்றார் நிஷா. இந்நிலையில் இப்போது தெலுங்கில் 'அப்பல் ராஜூ' என்ற படத்தை தயாரிக்கிறார் வர்மா. இதில் சுனில் ஹீரோ, அவருக்கு ஜோடியாக புதுமுகம் சாக்ஷி நடிக்கிறார். நிஷாவின் சாயலில் இருக்கும் அவரை வர்மாதான் ஹீரோயினாகத் தேர்வு செய்தாராம். நிஷாவுக்கு போட்டியாக சாக்ஷியை இதில் நடிக்க வைப்பதாகவும் டோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.

இது வேற 'காந்தி கணக்கு'!

பூஜா ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'காந்தி கணக்கு'. ரமணா கதாநாயகனாக நடிக்கிறார். மும்பை மாடல் ரிச்சா சின்ஹா கதாநாயகியாக நடிக்கிறார். ஷரவண சுப்பையா, மனோபாலா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். புதுமுக இயக்குநர் சம்பத் ஆறுமுகம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

''காந்தி கணக்கு என்றால் வராத கடனை கேலியாக கூறுவதுண்டு. ஆனால் நான் சொல்லும் காந்தியின் கணக்கு வேறு. எல்லோருக்கும் காந்தி என்றால் கதராடை, கண்ணாடி, கைத்தடி ஏந்திய உருவம்தான் நினைவுக்கு வரும். ஆனால் பாரிஸ்டர் பட்டம் பெற்ற துடிப்பான லாயராக மிடுக்கான தோற்றத்துடன் இருந்த இளைஞர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட இளைஞர் காந்தியின் பாதிப்பில் படத்தின் நாயகனை உருவாக்கி இருக்கிறேன். இன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரிய பிரச்னையாகவும், பல சிக்கல்களுக்கு காரணமாகவும் உள்ள பிரச்னையை எடுத்துக்கொண்டு தீர்வு சொல்லியிருக்கிறேன். படத்தின் முன் பாதி கோவையிலும் மறுபாதி சென்னையிலும் நடைபெறுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர் சம்பத் ஆறுமுகம்.

தியாகிகள் படத்தைக் கழட்டிவிட்ட பிரியாமணி!

சங்கொலி நாயண்ணா என்ற கன்னடப் படத்தில் நடிக்க மறுத்து, படத்திலிருந்து விலகியுள்ளார் பிரியாமணி. இதில் தர்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். நாகண்ணா இயக்குகிறார். கர்நாடகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் கதையாக இப்படம் உருவாகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி கொல்லப்பட்ட தியாகி வேடத்தில் தர்ஷன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கத்தான் பிரியாமணியிடம் கேட்டனர். முதலில் நடிக்க சம்மதித்தவர் இப்போது திடீரென ''இதில் நடிக்க முடியாது'' எனக் கூறிவிட்டாராம்.

''இந்தப் படத்தில் நடிக்க சில மாதங்களுக்கு முன் கேட்டபோது, பிரியாமணி 'ஓ.கே.' சொல்லியிருந்தார். சமீபத்தில் அவர் மேனேஜரும் இதை உறுதி செய்திருந்தார். அட்வான்ஸ் தொகை தருவது பற்றிப் பேசியபோது, இதில் நடிக்கவில்லை என பிரியாமணி கூறிவிட்டார். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தியாகியின் படம் என்பதால் படத்தில் கமர்ஷியல் விஷயங்கள் இருக்காது. அது தெரிந்துதானே முதலில் நடிக்க சம்மதித்தார். இப்போது ஏன் விலக வேண்டும். படத்தில் அவருக்கு கிளாமர் வேடம் கிடையாது. அதனால்தான் அவர் நடிக்க மறுத்துள்ளார்'' என்கிறார் நாகண்ணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com