சேவை: தோழர்கள் ஆயிரம்!

நேற்றுவரை உங்களோடு வாழ்ந்தேன். இன்று பிணமாக. இறந்தவர் நினைவாய் தாஜ்மஹால் கட்டுகிற நாடு இது. எனக்கு தாஜ்மஹால் வேண்டாம் மரியாதைக்குரிய அடக்கம் தாருங்கள்... - என்ற வாசங்கள் அடங்கிய அழைப்பிதழ்... திருமணம்
சேவை: தோழர்கள் ஆயிரம்!

நேற்றுவரை

உங்களோடு வாழ்ந்தேன்.

இன்று பிணமாக.

இறந்தவர் நினைவாய்

தாஜ்மஹால் கட்டுகிற நாடு இது.

எனக்கு தாஜ்மஹால் வேண்டாம்

மரியாதைக்குரிய அடக்கம் தாருங்கள்... 
- என்ற வாசங்கள் அடங்கிய அழைப்பிதழ்...

திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, சதாபிஷேகம், கிரகப்பிரவேசம், சஷ்டியப்தபூர்த்தி போன்றவற்றிற்கு அழைப்பிதழ் அச்சடிப்பதை கேள்விபட்டிருக்கிறோம். இறுதிச் சடங்குக்கு அழைப்பிதழ் அடித்துள்ளது கோவையைச் சேர்ந்த தோழர் அமைப்பு...

அழைப்பில் இருந்தபடி அக்டோபர் 7ம் தேதி, கோவை அரசு மருத்துமனைக்கு சென்றோம். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தேரில் வைக்கப்பட்டிருந்தது ஒரு சடலம். கோவை மாநகராட்சி துணைமேயர் நா.கார்த்திக் துவக்கிவைக்க மயானத்தை நோக்கிப் புறப்பட்டது அந்த ஊர்வலம்.

முதியோர்களை புறக்கணிக்காதே, அனாதைச் சடலம் நாட்டின் அவலம், யாரும் அனாதை இல்லை, புகை உயிருக்கு பகை, உடலைச் சாம்பல் ஆக்காதே சமூகத்துக்கு கொடு மருத்துவ ஆய்வுகளுக்கு தானம் செய், கண் தானம் செய், போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கருப்பு பலூன்கள் மற்றும் பதாகைகளை கையில் ஏந்தியபடி, பள்ளி கல்லூரி மாணவர்கள், திருநங்கைகள், முதியோர், தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள், அதிகாரிகள், பெண்கள், முற்போக்குவாதிகள் என புடைசூழ அந்த உடல் புலிகுளம் மைதானத்தை அடைந்தது.

உடல் புதைக்கப்பட்ட பின்னர், எங்கள் ஊரில் அனாதைகள் யாரும் இல்லை... ஆதரவில்லாமல் ஒருவர் இறந்தால் அன்னையாய், தந்தையாய், தமக்கையாய், சகோதரராக, நண்பனாக இருந்து அந்த  சடலத்தை நல்லடக்கம் செய்வோம் என உறுதிமொழி ஏற்றனர் அனைவரும். கூட்டம் அங்கிருந்து கலைந்து செல்ல, தோழர் அமைப்பின் நிர்வாகி சாந்தகுமாரிடம் விபரம் கேட்டோம்...

""கோவையில் மார்ச் 28, 2004ஆம் ஆண்டு நான்கு அனாதை உடல்களை அடக்கம் செய்வதில்  ஆரம்பித்தோம்... ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்யும் இந்தப் பணியை. பூ வியாபாரிகளான நாங்கள் சாந்தகுமார், இப்ராகீம், ஜீவானந்தம், அண்ணாதுரை, சம்பத்குமார் ஆகியோர் ரத்ததானம் செய்ய கோவை அரசு மருத்துவனைக்குச் சென்றோம். மருத்துவமனை வளாகத்தில் பிணவறை அருகே அடித்த துர்நாற்றத்தை சகிக்கமுடியாமல் விசாரித்தபோது அனாதைச் சடலங்கள்

அதிக அளவில் குவிந்து கிடப்பதாகவும் அதன் துர்நாற்றம் தான் என கூறினர் பிணவறை ஊழியர்கள்.

அதே இடத்தில் ஐவரும் ஒரு முடிவுக்கு வந்தோம் "அது என்ன அனாதை... நாங்கள் இருக்கும் போது யாரும் அனாதை இல்லை...' என்று சபதம் எடுத்தோம். நாய்கள் பூனைகளுக்குக்கூட இன்று புளு கிராஸ் போன்ற அமைப்புகள் வந்துவிட்டன. அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என நாம் பெருமிதமாய்க் கூறும் ஒரு பிறவிக்கு இப்படி ஒரு நிலையா?... இனி நம் சொந்த செலவில் இந்த உடல்களை அடக்கம் செய்வோம் என்று முடிவெடுத்து "தோழர்' அறக்கட்டளையைத் தொடங்கி எங்களுடைய சொந்த செலவில் ஆதரவற்ற உடல்களை மருத்துவமனையில் இருந்து பெற்று சாதி, மத, சடங்குகள் இல்லாமல் நல்ல முறையில் தூய்மையான வெள்ளைத் துணி போர்த்தி மலர்களுடன் நல்லடக்கம் செய்தோம்.

அரசு மருத்துவமனையில் நோய்வாய்பட்டு அனுமதிக்கப்படும் நோயாளி இறந்துவிட்டால் இறுதிச் சடங்கு செய்ய வசதி இல்லாமல் உறவுகள் விட்டு செல்லும் நிலை இன்னும் இந்த சமூகத்தில் நீடித்துகொண்டுதான் இருக்கிறது. அப்படிவிடப்படும் உடல்கள் மட்டுமல்லாமல், ரயிலில் அடிபட்டு அடையாள கண்டறியமுடியாத உடல்கள், முதியோர் இல்லங்களில் வசிக்கும் மூத்தோர், தகாத உறவில் பிறந்து குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் தளிர்கள், சட்டை பையில் எந்த வித அடையாள அட்டையோ, விலாசமோ, தொலைபேசி எண்ணோ இல்லாமல் இறக்கின்றவர்கள், மருத்துவமனை சவக்கிடங்கில் பல மாதங்கள் அடையாளம் காணமுடியாமல் கிடப்பில் போடப்பட்ட உடல்கள், யாரும் உரிமை கோராத உடல்கள், உறவுகள் இருந்தும் பொருளாதார வசதியின்மைக் காரணமாக இறுதிச் சடங்க செய்ய முடியமாத உடல்கள்.. என எப்படிப்பட்ட உடல்களாக இருந்தாலும் எந்தவித மதச்சடங்குமின்றி நாங்கள் சென்று எங்களது சொந்த செலவில் மாலை மரியாதையுடன் அடக்கம் செய்கிறோம். உறவுகள் கோரும் பட்சத்தில் அவர்களின் மதச்சடங்குபடியும் அடக்கம் செய்கிறோம். இதுமட்டுமல்லாமல் தற்போது கோவையில் வடமாநிலத்தவர் பலர் இங்கு பணிக்காக வருகின்றனர். அவர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்புகிறோம்.''

இதுவரை நீங்கள் எத்தனை உடல்களை அடக்கம் செய்துள்ளீர்கள்?

இன்றுடன் ஆயிரம் உடல்களை அடக்கம் செய்துள்ளோம். ஆயிரமாவது உடலை சிறப்பான முறையில் ஆண், பெண், திருநங்கைகள், மாணவர்கள், முதியோர் என ஆயிரம் உறவுகளை அழைப்பிதழ் கொடுத்து அழைத்து இந்த உடலை அடக்கம் செய்தோம்.



ஆயிரமாவது உடலை கொண்டாட்டமாக அடக்கம் செய்யக் காரணம்?

ஆயிரம் என்பது எங்களுக்கு ஆனந்தமல்ல... இந்த சமூகத்தின் அவலமே... ஏன் என்றால் கடந்த ஆறு ஆண்டுகளில் கோவையில் மட்டும் ஆயிரம் அதரவற்ற உடல்கள் என்றால் உறவுகள் எப்படிச் சீர்குலைந்துவிட்டன என்பதற்கு வேறு அத்தாட்சி தேவையில்லை. அடக்கம் செய்யும் பேரணியில் பங்கேற்க எங்கள் நண்பர்கள் மட்டுமின்றி அனைவரையும் அழைத்தோம். இத்தனை நாள் நம்முடன் இந்த சமூகத்தில் வாழ்ந்து இறந்த அந்த உடலுக்கு நம் அனைவருமே உறவினர். இந்த உலகத்தில் ஒருவருக்கு ஒருவர் உறவினர். ஆனாதை யாரும் இல்லை என்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி ஒரு அடக்கத்துக்கு ஏற்பாடு செய்தோமó.

உங்களது பணிக்கான பொருள் செலவை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

மனிதநேயம் உள்ளம்படைத்த பலரின் உதவியுடன் நடத்துகிறோம். நியூ மத்திய அரிமா சங்கம் எங்களுக்கு உடல்களை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளனர். ரோஷினி தன்னார்வ தொண்டு நிறுவனம் எங்களுக்கு |5 லட்சம் வழங்கினர். கோவை மத்திய சிறைவாசிகள் தங்களின் ஊதியத்தில் இருந்து |10ஆயிரம், தியானப்பிரஸ்தா, ராகவேந்திரா சேவா அறக்கட்டளை போன்றோரும் உதவினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com