திரைக்கதிர்: கதை ஓன்று பயணம் இரண்டு!

கந்தகார் விமான கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு இரு படங்கள் தமிழில் உருவாகின்றன. அதில் ஒன்று "பயணம்'. பிரகாஷ்ராஜ் தயாரித்து நடிக்கிறார். நாகார்ஜூனா, சனாகான் நடிக்கின்றனர். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்
திரைக்கதிர்: கதை ஓன்று பயணம் இரண்டு!
Updated on
3 min read

கந்தகார் விமான கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு இரு படங்கள் தமிழில் உருவாகின்றன. அதில் ஒன்று "பயணம்'. பிரகாஷ்ராஜ் தயாரித்து நடிக்கிறார். நாகார்ஜூனா, சனாகான் நடிக்கின்றனர். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். ராதாமோகன் இயக்கி வருகிறார்.

இன்னொரு படத்தில் அமிதாப் பச்சன், மோகன்லால் நடிக்கின்றனர். சினேகா, அனன்யா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேஜர் ரவி இயக்குகிறார். தமிழ், மலையாளத்தில் இப்படம் "கந்தகார்' என்ற பெயரிலேயே உருவாகி வருகிறது. ஒரே சம்பவத்தைப் படமாக்குவதால் இரு படங்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. முதலில் படத்தை யார் முடிப்பது என்பதுதான் அந்தப் போட்டி. இதனால் இரண்டு பட யூனிட்டும் இரவு பகலாக வேலை பார்த்து வருகிறதாம். வழக்கமாக பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் படங்களின் ஷூட்டிங் ஆமை வேகத்தில் நடக்கும். ஆனால் "பயணம்' ஷூட்டிங் குறுகிய காலத்திலேயே இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. "கந்தகார்' ஷூட்டிங்கும் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. யார் முதலில் முடிப்பார்கள் என்பது சினிமா வட்டாரத்தில் எதிர்பார்க்கும் விஷயங்களில் ஒன்று.  

ஹை ஸ்பீட் காமிராவில் ஜீவாவின் சண்டை!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, ராதா மகள் கார்த்திகா, பியா நடிக்கும் படம் "கோ'. இந்தப் படத்தின் சண்டை காட்சிகளுக்காக ஃபான்டம் ஃபிளக்ஸ் என்ற கேமிராவைப் பயன்படுத்தியுள்ளனர். இது சினிமா உலகில் சமீபத்தில்தான் அறிமுகமானது. இந்தக் கேமிராவில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இது பற்றி இயக்குநர் ஆனந்த் கூறும்போது, ""இந்தக் கேமிரா அறிமுகமானது பற்றி அறிந்ததும் சந்தோஷப்பட்டேன். இது டிஜிட்டலில் ஹை ஸ்பீட் ரக கேமிரா. படமான உடனே அந்தக் காட்சியை திரையில் போட்டு பார்க்கலாம். மற்ற கேமிராக்களில் இந்த வசதி கிடையாது. ஜீவாவின் சண்டை காட்சிகளை இந்தக் கேமிராவில் படம் பிடித்துள்ளேன்'' என்றார்.

வித்தைக்குத் தயாரா வித்யா பாலன்?

கேரளத்தைச் சேர்ந்த வித்யாபாலன் தமிழில்தான் அறிமுகமாக இருந்தார். தயாரிப்பாளரின் நிராகரிப்பால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் ஹிந்தி சினிமாவுக்குச் சென்று பிரபலமானார். இப்போது முதல் முறையாக தமிழில் நடிக்க உள்ளார். சந்தோஷ் சிவன் தமிழ், மலையாளத்தில் இயக்கும் படம் "உருமி'. இதில் பிரித்விராஜ், பிரபுதேவா, ஜெனிலியா ஆகியோருடன் வித்யாபாலன் நடிக்கிறார். வித்தை காட்ட வேண்டிய வேடம். படத்தின் கதைப்படி ஒரு காட்சியில் வித்யாபாலன் மோகினி ஆட்டம் ஆட வேண்டும்.

இதற்கான ஷூட்டிங்கை மும்பையில் நடத்தத் திட்டமிருந்தார் சந்தோஷ் சிவன். ஆனால் திடீரென ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாது எனக் கூறியுள்ளார் வித்யாபாலன். சமீபத்திய உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட சதை பிடிப்புதான் இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. ""தோள் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் அவர் டான்ஸ் ஆட மறுத்துள்ளார். கடுமையான தோள் வலியினால் அவதிபடுகிறார். டான்ஸ் ஆடினால் வலி இன்னும் அதிகமாகும். அதனால் உடல் நிலை சரியான பின் அந்த டான்ஸ் காட்சியைப் படமாக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அந்தக் காட்சி இப்போதே அவசரம் என்றால் மாற்று ஏற்பாடு குறித்து இயக்குநர் தரப்புதான் முடிவு செய்ய வேண்டும்'' என வித்யாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லாராவின் விளம்பர விசிட்!

கடந்த சில வருடங்களாக மனைவி ஸ்வேதாவைப் பிரிந்து வாழ்கிறார் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி. இந்நிலையில் லாரா தத்தா - மகேஷ் பூபதி இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வப்போது நிகழ்ச்சிகளில் இவர்களை ஒன்றாகப் பார்க்க முடிந்தது. சமீப காலமாக ஹிந்தி பட விழாக்களுக்கு இந்த ஜோடி ஒன்றாக வர ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் யு.எஸ். ஓபன் நியூயார்க் நகரில் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 12 வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக மகேஷ் பூபதியுடன் அமெரிக்காவுக்குச் சென்று இருக்கிறாராம் லாரா தத்தா. டென்னிஸ் போட்டிகளைப் பார்ப்பதோடு இடையே காதலுனுடன் அமெரிக்காவைச் சுற்றவும் திட்டமிட்டு இருக்கிறாராம். லாராவுக்கு இப்போது ஹிந்தியில் எதுவும் படங்கள் இல்லை. ஒரு சில விளம்பரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இதனால் மகேஷ் பூபதியை திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் லாரா தத்தா அமெரிக்காவில் நடக்கவிருக்கும் விளம்பர ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக மட்டுமே அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் லாராவுக்கு இதில் விளம்பரம்தான்.

டாக்டரண்ணன்.. மீரா தம்பி!

விஜய் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் "மருதாணி'. "இதுதாண்டா போலீஸ்', "எவனா இருந்தா எனக்கென்ன?' உள்ளிட்ட ஆக்ஷன் படங்களில் நடித்த டாக்டர். ராஜசேகர் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். டாக்டர்.ராஜசேகருக்கு ஜோடியாக ஆர்த்தி அகர்வால் நடிக்கிறார். ராஜசேகரின் தங்கையாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். மயில்சாமி, ஆர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார் வி.ஆர்.பிரதாப். படத்தின் கதை கரு குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, ""தங்கையின் நல்வாழ்வுக்காக நிஜ வாழ்க்கையில் எந்தவொரு அண்ணனும் செய்யாத தியாகங்களை செய்யும் ஒரு அண்ணனின் கதைதான் "மருதாணி'. அண்ணனாக ராஜசேகரும், தங்கையாக மீரா ஜாஸ்மினும் நடித்துள்ளனர். ஆக்ஷன் படங்களில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட ராஜசேகர் இந்தப் படத்தில் வித்தியாசமாக தெரிவார். அண்ணன், தங்கை செண்டிமென்ட்டில் நிறைய கதைகள் தமிழ் சினிமாவுக்கு வந்திருந்தாலும். இது வேறுப்பட்டு தெரியும். "மருதாணி' என்ற தலைப்புக்கு ஏற்ப படத்தில் மருதாணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. "கிழக்கு சீமையிலே' படத்தில் வந்த ராதிகா போல் இதில் மீராஜாஸ்மின் பேசப்படுவார்'' என்றார் இயக்குநர்.

முரட்டு மச்சான்!

போடிநாயக்கனுர் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது "போடிநாயக்கனூர் கணேசன்.' ஹரிக்குமார், அருந்ததி நடிக்கின்றனர். ஞானம் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். "வெண்ணிலா கபடி குழு' படத்தில் நடித்த சூரி முக்கிய பாத்திரம் ஏற்கிறார். இப்படத்தின் கேரக்டர் குறித்து ஹரிக்குமாரிடம் கேட்ட போது, ""இந்தப் படம் சகோதர பாசத்தை அடிப்படையாக கொண்டது. யதார்த்தம் இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ வாழ்க்கையில் மனநலம் பாதித்த இருவரை நடிக்க வைத்திருக்கிறோம்.

இது 4-வது படம். "தூத்துக்குடி,' "திருத்தம்', "மதுரைசம்பவம்' என எல்லா படங்களுக்கும் மக்கள் ஆதரவு தந்துள்ளனர். இந்தப் படத்துக்கும் நிச்சயம் ஆதரவு இருக்கும். அந்த அளவுக்கு கேரக்டரும் கதையும் அமைந்திருக்கிறது. "தூத்துக்குடி' படத்தில் வரும் ""கருவா பையா...'' பாடல் போன்று இந்த படத்தில் ""முரட்டு மச்சான்....'' என்ற பாடல் இருக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் அளவுக்குத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மதுரை சம்பவத்தில் வந்த வசனம் போல் இந்தப் படத்தில் ""நல்ல மூடுக்கு பார்ம் ஆயிட்டோமுல'' என்ற வசனம் இருக்கிறது. கமர்ஷியல் ரீதியில் மக்களை இந்தப் படம் ஈர்க்கும்'' என்றார்.

நரேன்.. நந்தலாலா..!

"அஞ்சாதே' படத்துக்குப் பின் நரேன் நடிப்பில் உருவாகியிருக்கும் "தம்பிக்கோட்டை' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட இயக்குநர் மிஸ்கின் பேசுகையில், ""நரேன் ஒரு ஒளிப்பதிவாளராகும் ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தார்.

அதன்பின் அவருக்கு நடிப்பில் ஆசை வந்து இன்று நடிகராக இருக்கிறார். சினிமா பற்றி நிறைய தெரிந்தவர். மலையாளத்தில் அவர் நடித்த ஒரு படத்தைப் பார்த்துவிட்டுத்தான் "அஞ்சாதே' படத்துக்கு அவரைத் தேர்வு செய்தேன். நல்ல நண்பராகவும் இப்போது இருக்கிறார். உதவி இயக்குநர்கள் முதல் சினிமாவிலேயே தங்களது முத்திரையைப் பதிக்க வேண்டும். ஒரு "சேது', ஒரு "சுப்பிரமணியபுரம்' என எல்லைகளைக் கடந்த சினிமாவாக இருந்தால்தான் உதவி இயக்குநர் நிலைக்க முடியும். முதல் படம் முடிந்த பின்னர் பார்க்கலாம் என்றால், இங்கு அங்கீகாரம் கிடைக்காது. "சித்திரம் பேசுதடி', "அஞ்சாதே' இரண்டு நல்ல படங்கள். அதனால்தான் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. "நந்தலாலா' இன்னும் எத்தனை வருடம் கழித்து ரிலீசானாலும் ஓடும். "யுத்தம் செய்' படம் தமிழுக்கு புதிது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com