

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மனம் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவையே சிறைச்சாலைகள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சில நொடிகளில் ஏற்பட்ட விபரீதத்தால் குற்றவாளிகளாக்கப்பட்டவர்களே அதிகம்.
குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்டு சிறைக்குச் செல்பவர்களை சராசரி மனிதர்களாக மட்டுமன்றி அவர்களை சமூகத்தில் ஒரு தகுதியோடு வாழ வழி செய்யும் பணியில் தமிழ்நாடு சிறைத் துறை தற்போது அதீத கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், கொலைக் குற்றவாளியாகச் சிறைக்குச் சென்று 9 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஓர் இளைஞர், தண்டனைக்குப் பிறகு தற்போது சிறிய தொழிற்சாலை ஒன்றை உருவாக்கி பலருக்கு வேலை அளிக்கும் வகையில், தொழில் முனைவோராக உருவாகியுள்ளார் என்பது வியப்புக்குரிய விஷயம்தானே!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவரான அந்த இளைஞரின் பெயர் வாசுதேவன் . துறையூர் பேருந்து நிலையம் அருகில் "பிளாஸ்டிக் பைல்கள்' உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஏறத்தாழ 250 சதுர அடி பரப்பளவுக் கொண்ட ஓர் அறையில் இரண்டு பெரிய கருவிகளுக்கிடையே அமர்ந்து பரபரப்பாக "பைல்'களை தயாரித்துக் கொண்டிருந்த முன்னாள் சிறைவாசியும் இந்நாள் தொழில்முனைவோருமான வாசுதேவனைச் சந்தித்தோம்.
""கடந்த 1997-ம் ஆண்டு சொந்த ஊரில் ஒரு சிறிய பிரச்னை. உறவினர்களுக்குள் மோதிக் கொண்டோம். அதில், எதிர் தரப்பைச் சேர்ந்த உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். இந்தச் சம்பவத்தில் நானும், எனது தம்பி ரமேஷும் கைது செய்யப்பட்டு இருவருக்கும் தலா 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நான் சிறைக்குச் செல்லும் முன்பு பிளஸ் 2 வரை படித்திருந்தேன். சிறைத் துறை, சிறைவாசிகளுக்கென பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளித்து வரும் விவரத்தை சிறைக்குச் சென்ற சில மாதங்களில் அறிந்து கொண்டேன்.
சிறைக்குள் இருந்தபடியே எம்.ஏ. (வரலாறு) படித்தேன். கணினி இயக்கும் பட்டயப் படிப்பையும் (டி.சி.ஏ.) முடித்தேன். பின்னர், "ஸ்கிரீன் பிரின்டிங்' வேலைகளையும் தெரிந்து கொண்டேன்.
இருப்பினும், சிறைக்குச் செல்வதற்கு முன்பு சென்னையில் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சில மாதங்கள் வேலை பார்த்து இருந்தேன் என்பதால், பிளாஸ்டிக் பைல்கள் தயாரிப்பு சம்பந்தப்பட்ட விவரங்களையும் சிறையில் இருந்தபடியே அறிந்து கொண்டேன்.
9 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடியும் தருவாயில், அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி கடந்தாண்டு செப்டம்பர் 15-ம் தேதி விடுதலையானவர்களுடன் நானும் சிறையில் இருந்து வெளியே வந்தேன்.
சிறையில் இருந்து வெளியே வந்ததும் யாரும் வேலை கொடுக்க முன்வரவில்லை.
இந்தச் சமூகத்தில் நானும் பெரிய ஆளாக வர வேண்டும் என்ற நினைப்பில் வருமானத்துக்காக பல முயற்சிகள் மேற்கொண்டேன். எதுவும் பலனளிக்கவில்லை. பிளாஸ்டிக் பைல்கள் தயாரிப்பில் இறங்க வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால், அதற்கான பணம் என்னிடம் இல்லை.
அணுகாத முக்கியப் பிரமுகர்களும், ஏறாத வங்கிப் படிகளும் இல்லை என்ற நிலையாகிவிட்டது. அப்போதுதான் சிறைக் கண்காணிப்பாளர் ஆ. முருகேசனை தொடர்பு கொண்டு என் நிலைமையைக் கூறினேன்.
அவர் உதவி செய்ததால், பாரதப் பிரதமர் சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், கனரா வங்கி மூலம் | 2.46 லட்சம் கடனுதவி கிடைத்தது. இதில் | 62 ஆயிரம் மானியம். தற்போது மாதம் | 3,000 வரை வங்கியில் செலுத்தி வருகிறேன்.
எனது தொழிற்சாலையில் "பி.வி.சி. எலக்ட்ரானிக் வெல்டிங்' இயந்திரங்கள் உள்ளன. அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைல்கள், மருத்துவமனை, கல்வி நிறுவனங்களில் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறைகள் உள்ளிட்ட பொருள்களைத் தற்போது தயாரித்து வருகிறேன். என்னுடன் 6 பேர் பணியாற்றுகிறார்கள்.
தற்போது சிறிய அளவில்தான் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறேன். பெரிய அளவில் தொழிற்சாலை தொடங்கி ஏராள மானோருக்கு வேலை வழங்குவதுதான் எனது எதிர்கால லட்சியம். அத்தோடு திருமணமும்தான்' என முடித்துக் கொண்டார் வாசுதேவன்.
திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆ. முருகேசன் கூறியது:
"சிறையில் இருந்து வெளியே சென்று கஷ்டப்படுபவர்களுக்குச் சிறை மீண்டோர் நலச் சங்கம் மூலம் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறோம். சிறைக்குள் வந்துவிட்டோமே என மனமுடைந்துவிடாமல் முயற்சி செய்தால் ஒரு தொழிற்சாலையை உருவாக்கி, பலருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்று உணர்த்தியுள்ள வாசுதேவனை மற்றவர்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.