

ஹிந்தியில் அஜய்தேவ்கனுடன் "தில் தோ பச்சா ஹே ஜி' படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி. கூடவே இசை ஆல்பம் தயாரிப்பது, இசை நிகழ்ச்சிகளை நடத்துவது என பிஸியாக இருக்கிறார். இதற்கிடையே "ஹில்ஸ்' என்ற ஹாலிவுட் படத்தில் பின்னணி பாடியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் மல்லிகா ஷெராவத். ஸ்ருதியின் பாடலுக்கு மல்லிகா ஷெராவத் வாயசைப்பார். இதில் பாடியது பற்றி ஸ்ருதி கூறும்போது, ""டேவிட் குஷ்னர் எனக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் இசையமைப்பாளர். அவரது இசையில் பாடுவேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. இப்போது பாடகியாக ஹாலிவுட்டில் நுழைந்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார். ஹாலிவுட் படம்... ஹிந்தி நடிகை... தமிழ்ப் பாடகி நல்ல காம்பினேஷன்தான்!
* அஜய் விரும்பும் சில்க்!
சில்க் ஸ்மிதாவின் கதையை தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் தயாரிக்கிறார் ஏக்தா கபூர். இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடிப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் அவர் நடிக்கவில்லையாம். கவர்ச்சியான தோற்றமுள்ள நடிகை ஒருவரை தேடி வருவதாக பட வட்டாரங்கள் கூறுகின்றன. சமீபத்தில் இப்படம் தொடர்பான ஒரு டிஸ்கஷன் நடத்தியுள்ளார் ஏக்தா கபூர். இதில் நடிகர் அஜய் தேவ்கன், இயக்குநர் மிலன் லுதாரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சில்க் ஸ்மிதாவை விரும்பும் வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். சில்க் வேடத்தில் நடிக்கும் நடிகைதான் இன்னும் முடிவாகவில்லை. அடுத்த மாதம் ஷூட்டிங்கை ஆரம்பித்து விடவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
* "ஜெயிலர் பாஸ்கர்' பேசுவான்!
பிரபுசாலமன் இயக்கத்தில் ரிலீசாக உள்ள "மைனா' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சேது. ""பிரபு சாலமன் என் நண்பர். சினிமா பற்றிய என்னுடைய பல எண்ணங்களை அவருடன் நீண்ட காலமாகவே பகிர்ந்து வந்திருக்கிறேன். சினிமா ஆர்வத்தைப் புரிந்துகொண்டு "மைனா'வில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். ஜெயிலர் பாஸ்கர் என்ற முக்கிய பாத்திரம் கொடுத்தார். அந்த கேரக்டர் நிச்சயம் பேசப்படும். ஓடுகிற எல்லாப் படங்களும் பிடிக்கும். கமர்ஷியல் படங்களைப் பெரிதும் விரும்பிப் பார்ப்பேன். எம்.பி.ஏ. படித்திருக்கிறேன். இனி சினிமாவில் தொடர்ந்து இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்'' என்றார் சேது.
* கை கழுவிய ஹிந்தி; கை கொடுத்த தெலுங்கு!
"கட்டா மிட்டா' மூலம் ஹிந்தியில் அறிமுகமானவர் திரிஷா. இப்படத்தை அக்ஷய்குமார் நடித்து தயாரித்திருந்தார். "கட்டா மிட்டா' உள்ளிட்ட அவரது நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க திரிஷாவை அக்ஷய் ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் "கட்டா மிட்டா' படம் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. இதில் அக்ஷய்குமாருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் படங்கள் தயாரிக்கும் திட்டத்தை அவர் தள்ளி போட்டுள்ளாராம். இதையடுத்து அக்ஷய்குமாரின் படங்களில் திரிஷா நடிக்க போடப்பட்ட ஒப்பந்தமும் ரத்தாகிவிட்டதாக பாலிவுட் மீடியாக்கள் செய்திகள் சொல்லுகின்றன. இதனால்தான் உடனடியாக தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
* நடிப்புக்கு முற்றும்!
நயன்தாராவுடன் விரைவில் திருமணம் என அறிவித்து விட்டார் பிரபுதேவா. நயன்தாராவுக்கு இப்போது தமிழில் படங்கள் இல்லை. இடையில் வந்த அமீரின் பட வாய்ப்பு, ஹிந்தியில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பு எதையும் அவர் ஏற்கவில்லை. கன்னடத்தில் "சிம்பல்', மலையாளத்தில் "எலெக்ட்ரா' படங்களை அவர் முடித்து விட்டார். மற்ற மொழிகளிலும் அவர் புதுப் படங்களை ஏற்க மறுத்து விட்டார். திருமணத்துக்கு பின் நயன் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார். அதனால்தான் படங்களை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பின் நயன்தாரா நடிக்கக் கூடாது என்பதுதான் பிரபுதேவாவின் விருப்பமாம். அதனால்தான் நயன் இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.