முரண்சுவை -30 : அஞ்சா நெஞ்​சன்!

திருவாரூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சுயமரியாதைக் கருத்துகளைக் கனல்தெறிக்கப் பேசினார் ஒருவர். சிங்கத்தின் சீற்றமும், சிறுத்தையின் பாய்ச்சலும் அவரது பேச்சின் வீச்சில் கண்டான் ஒரு சிறுவன். கேட்ட அவன
முரண்சுவை -30 : அஞ்சா நெஞ்​சன்!

தி ருவாரூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சுயமரியாதைக் கருத்துகளைக் கனல்தெறிக்கப் பேசினார் ஒருவர். சிங்கத்தின் சீற்றமும், சிறுத்தையின் பாய்ச்சலும் அவரது பேச்சின் வீச்சில் கண்டான் ஒரு சிறுவன். கேட்ட அவன் மெய்சிலிர்த்துப் போனான்.

பேச்சின் உச்சக்கட்டத்தில் காச நோயாளியான  அந்த மனிதர் மேடையிலேயே மயங்கி விழுந்தார். மற்றவர்களோடு அந்தச் சிறுவனும் பதறிப்போய் மேடைக்கு ஓடி கைத்தாங்கலாக  அந்த மனிதரைப் பிடித்தான்.

அப்பொழுது அந்தச் சிறுவன் அவரைப் பார்த்து ""ஏனய்யா நோயாளியான நீங்கள் இந்த அளவிற்கு ஆவேசமாகப் பேசலாமா?'' என்று வருத்தத்தோடு  கேட்டான். அதற்கு அந்த மனிதர் ""என்னப்பா செய்வது  என்னைவிட இந்த நாடு மிகவும் நோயாளியாக இருக்கிறதே. அதைக் குணப்படுத்தத்தான் இவ்வளவு சிரமப்படுகிறேன்'' என்றார். அதைக் கேட்ட அந்தச் சிறுவன் அன்றிலிருந்து அந்த மனிதரின் தாசனாக மாறி, முழு நேர அரசியலில் ஈடுபட்டான்.

அந்தச் சிறுவன் வளர்ந்து பிற்காலத்தில் தன்னுடைய மகனுக்கு அவரது பெயரை வைத்தான். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, முதல்வர் கருணாநிதி தான். மேடையில் பேசிவிட்டு மயங்கி விழுந்த அந்த மனிதர் தான் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி.

அழகிரியின் சொந்த ஊர் பட்டுக்கோட்டைக்கும், புதுக்கோட்டைக்கும் இடையே உள்ள கருக்காக்குறிச்சி என்கிற கிராமம்.

1900 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வாசுதேவநாயுடு என்பவருக்கும், கண்ணம்மா என்பவருக்கும் ஒரே மகனாய் பிறந்தார். அழகிரி ஐந்து வயது இருக்கும்போதே தந்தையை இழந்தார்.

அழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் என்ற பெயரில் பலரை உறுப்பினராகக் கொண்டு ஒரு சங்கம் ஆரம்பித்தார். அதன் பின்னரே சுயமரியாதை இயக்கம் பெரியாரால் தொடங்கப்பட்டது.

அழகிரியின் 27 வது வயதில் அவருக்குத் திருமணம் நடந்தது. அழகிரியின் பேச்சைக் கேட்ட பக்தர்களும், பணக்காரர்களும், பெரும் பதவியில் இருந்தவர்களும்  பல்வேறு வகைகளில்  அழகிரிக்குத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர்.

இதன் காரணமாக அழகிரியின் வீட்டிலே வறுமையும், நாட்டிலே அவருக்கு எதிர்ப்பும் வளர்ந்தது. இருப்பினும் எதற்கும் கவலைப்படாமல் மூடநம்பிக்கைகளை எதிர்த்து தீவிரப் பிரசாரம் செய்து வந்தார். எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அவரை ராஜா என்றோ, மந்திரி என்றோ, அடைமொழி கொடுத்து அழைக்க மாட்டார். பெரியார் உட்பட எல்லோரையும் தோழர் என்றுதான் குறிப்பிடுவார்.

"நமது இயக்கத்தை விட்டு ஆயிரம் வல்லத்தரசுகள் போனாலும், ஆயிரம் ஜீவானந்தங்கள் போனாலும், ஆயிரம் அய்யாமுத்துகள் போனாலும் சரி  அவர்கள் எல்லோரையும் சேர்த்து ஈடுகட்டும் வகையில் இதோ ஒரு அண்ணாதுரை நமக்கு கிடைத்திருக்கிறார்' என்று அண்ணாவைப் பாராட்டி பேசினார்.

எப்போதுமே மல் வேட்டியும், தூய்மையான வெள்ளை நிற ஜிப்பாவும்தான் அணிந்திருப்பார். எவ்வளவு பணம் கிடைத்தாலும், அதை அன்றே செலவு செய்துவிடுவார். குறிப்பாக நண்பர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பார்.

கம்யூனிஸ்டுகளை மிஞ்சும் அளவிற்கு  அழகிரி பணக்காரர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவார். அழுகிப் போய் நாறிக்கிடக்கும் குதிரையின் எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் புழுவை ஒத்த பணக்காரர்களின் மனப்பான்மை ஒழிக என்று எப்போதும் முழங்குவார்.

இந்த நிலையில் டிபி.நோய் அழகிரியை அதிகம் தாக்கியது. எனவே அவர் தாம்பரம் சானிட்டோரியம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அழகிரியைப் பார்த்து, நீங்கள் உடல் நலக்குறைவாக இருப்பதாக "விடுதலை' ஏட்டில் நிதி உதவி கேட்டு அறிக்கை வெளியிடுங்கள் என்று அண்ணா முதல் பலரும் யோசனை சொன்னார்கள். இந்தக் கடைசி நேரத்திலா என்னை பிச்சை கேட்கச் சொல்லுகிறீர்கள் என்று கூறி "விடுதலை' பத்திரிகையில் அறிக்கைவிட மறுத்துவிட்டார்.

ஒரு நாள் அழகிரி மனம் நொந்து நண்பர் கலைவாணரைப் பார்த்து ""கிருஷ்ணா என் உடல் நிலை மிகவும் கெட்டு விட்டது,  நான் சாவதைப் பற்றி கவலைப்படவில்லை. என் குடும்பத்திற்கு ஏகப்பட்ட கடன் இருக்கிறது. அதை நீதான் அடைக்க வேண்டும்'' என்றார். அழகிரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க கலைவாணர் அவரது குடும்பத்திற்கு உதவி செய்தார்.

ஓரளவிற்கு வியாதி குணமான அழகிரியை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அண்ணா சந்தித்தார். அழகிரியை அண்ணா கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார். எதற்கும் கலங்காத அழகிரியும் அன்று கண்ணீர் விட்டார்.

அண்ணாவைப் பார்த்து அழகிரி நான் மரண வாயிலில் நின்று கொண்டிருக்கிறேன். என் உடலில் பாதியைக் கட்சி தின்று விட்டது.

மீதியை நோய் தின்று விட்டது. நீர் அன்போடு செய்த உதவிகளுக்கு எனது நன்றியைத் தெரித்துக் கொள்கிறேன் என்று மனம் உருகி கூறினார்.

எத்தனையோ எதிர்ப்புகளையும் கல்லடிகளையும் சொல்லடிகளையும் கண்டு அஞ்சாது நின்று சமுதாயத்திற்காகப் போரிட்ட மாவீரன் அழகிரியை 1949-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி  அன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில், காசநோய் தன்னுடைய கொடுமையான கரங்களால் கொன்றுவிட்டது.

அழகிரி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மதவெறி, மூடநம்பிக்கை, சாதி போன்ற சமூக கரையான்களை ஒழிக்கப் பாடுபட்டார். பின் தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காகப் போராடினார். ஆனால் அவரைத் தொற்றிக்கொண்ட காசநோயோடு போராட முடியாமல் தோற்றுப் போனார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com