பெயர்ச் சொல்... கொஞ்சம் இலக்கணம் - பிழையற்ற தமிழ் அறிவோம்! – 33

வினையாலணையும் பெயர் போன்றவை பற்றி - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...
தமிழ் அறிவோம்
தமிழ் அறிவோம்Pandia Rajan
Published on
Updated on
2 min read

ஞானச்செருக்கு

'திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையே' என்றான் மகாகவி பாரதி. ஆழ்ந்தகன்ற அறிவினால் வரும் பெருமிதத்தையே பாரதி ஞானச் செருக்கென்றான். மெய்யறிவுத் திறமுடையார் செருக்குடன் இருப்பது இயற்கையே. நம் தமிழறிவு பெருகினால் பிழைகள் நீங்கும்; பிழைகள் நீங்கிடில் தமிழ்மொழி சிதையாமல் செழிக்கும். மொழி செழிப்புற்றால் தமிழர் வாழ்வு வளம் பெறும்.

'நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வே' என்றார் பாவேந்தர். 'நன்னிலை உனக்கென்றால் எனக்கும்தானே' என்றும் அவர் தமிழோடு பேசுகிறார். இந்த அடிப்படை நினைவை உணர்வை நாம் எப்போதும் உள்ளத்தில் கொள்ள வேண்டும்.

இலக்கணச் செய்தியொன்று பார்ப்போமா?

நேற்று வந்தவன் இன்றும் வந்தான்.

இத்தொடரில் வந்தவன் என்பது வினையாலணையும் பெயர். வந்தான் என்பது வினைமுற்று. வருதல் என்பது தொழிற்பெயர். ஒன்றும் புரியவில்லையா? உயர்நிலைப் பள்ளிப் பருவநினைவுகளை மனத்திரையில் ஓடவிடுங்கள். தமிழாசிரியர் இவற்றைப் பற்றி விளக்கியிருப்பாரே!

பெயர்ச்சொல் என்னவென்று உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயர்ச்சொல்லில் ஆறுவகை தெரியுமோ? எடுத்துக்காட்டுகளை நோக்குக.

ஏடு, எழுதுகோல், உணவு - பொருட்பெயர்

சென்னை, மதுரை, வீடு - இடப்பெயர்

காலை, மாலை, ஆவணி - காலப் பெயர்

இலை, கிளை, கழுத்து - சினைப் பெயர்

செம்மை, பசுமை, நன்மை - பண்புப் பெயர்

ஆடல், பாடல், முயற்சி - தொழிற் பெயர்

ஆகப் பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை (உறுப்பு), குணம், தொழில் என அறுவகைப்படும். இவற்றுள் தொழிற் பெயர் என்று ஒரு பெயர் வருகிறது. அஃது என்ன?

வந்தான் - வினைச்சொல் (வினை முற்று) இவன் வருதல் ஆகிய வினையைச் செய்தவன். இப்படிக் குறிக்க வேண்டுமாயின் வந்தவன் என்போம். இந்த வந்தவன் என்ற சொல் வினையால் அணையும் பெயர். அவன் என்ன செய்தான்? வந்தான் என்னும் போது வினைச் சொல். வருதல் அவன் செய்த தொழிலுக்கு (வினைக்கு)ப் பெயர். ஆதலின் அது தொழிற்பெயர். ஆக வினைச் சொல் வேறு, தொழில் பெயர் வேறு எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து வந்தவன் எனும் சொல் வருதல் என்ற தொழிலைக் (வினையைக்) குறிக்காமல் வருதலைச் செய்த ஆளைக் குறிக்கிறது. வருதல் எனும் வினையால் தழுவப் பெற்ற பெயர் ஆதலின் இது வினையாலணையும் பெயராயிற்று.

மீண்டும் எடுத்துக்காட்டுகள் காண்போம்.

பாடினாள் - வினைமுற்று, பாடுதல் - தொழிற்பெயர், பாடியவள் - வினையாலணையும் பெயர்.

ஒரு தொழிலுக்கு (செயலுக்கு)ப் பெயராக வருவது தொழிற்பெயர். அத்தொழிலைச் செய்தவர்க்குப் பெயராக வருவது வினையாலணையும் பெயர். தொழிற் பெயர் காலம் காட்டாது. வினையாலணையும் பெயர் காலம் காட்டும். தொழிற்பெயரில் ஒருமை, பன்மை, பால் (ஆண், பெண், பலர்) பாகுபாடுகள் இரா. வினையாலணையும் பெயரில் இவையுண்டு.

தேடியவன் - ஆண்பால் வினையாலணையும் பெயர்.

நாடியவள் - பெண்பால் வினையாலணையும் பெயர்.

வந்தவர்கள் - பலர்பால் வினையாலணையும் பெயர்.

தேடுதல்- தொழிற்பெயரில் ஒருமை, பன்மை, ஆண், பெண், பலர் எனும் பாகுபாடு காண முடியாது.

(தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com