திரைக்கதிர்: சூப்பர் ஸ்டார் பட்டம் சுலபமானதில்லை!

""நம் சினிமாவில் திறமையான பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஹாலிவுட் சினிமாவுக்கே சவால்விடும் அளவுக்கு வேலை செய்கிறார்கள். இது நமக்கெல்லாம் பெருமை. நான் ரஜினிகாந்தை வைத்து நிறைய படங்கள் இயக்கியு
திரைக்கதிர்: சூப்பர் ஸ்டார் பட்டம் சுலபமானதில்லை!
Updated on
3 min read

""நம் சினிமாவில் திறமையான பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஹாலிவுட் சினிமாவுக்கே சவால்விடும் அளவுக்கு வேலை செய்கிறார்கள். இது நமக்கெல்லாம் பெருமை. நான் ரஜினிகாந்தை வைத்து நிறைய படங்கள் இயக்கியுள்ளேன். படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகும்கூட அன்றைய தினம் என்ன நடந்தது? நான் எப்படி நடித்தேன்? நாளைக்கு எப்படிப்பட்ட காட்சி? என்று போனில் என்னிடம் பேசுவார் ரஜினி. இந்த விஷயத்தில் நள்ளிரவு, அதிகாலை என்றுகூட பார்க்க மாட்டார். காரணம், சினிமா மீது அவர் மிகத் தீவிரமான ஆர்வம் கொண்டிருந்தார். இன்றைக்கும் அவர் அப்படித்தான் இருக்கிறார். எங்கள் பாரத்தையெல்லாம் ரஜினி தன் தலைமேல் சுமப்பார். இப்படி சிந்தித்துப் பார்த்து நடிப்பதால் அவரால் நிறைய படங்களில் நடிக்க முடியவில்லை. இன்றைக்கு அவருக்கு கிடைத்திருக்கிற சூப்பர் ஸ்டார் பட்டம் சாதாரணமாகக் கிடைத்து விடவில்லை. கடின உழைப்பு, ஈடுபாடு, தன்னம்பிக்கை போன்ற விஷயங்கள்தான் அவரை உயரமான இடத்தில் வைத்திருக்கிறது.''

"பெருமான் தி ரஜினிகாந்த்' என்ற பெயரில் உருவாகும் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று தன் நண்பரான ரஜினியை பற்றி இப்படி பெருமையாக பேசினார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.



ரயில் நிலையத்தில் ரசிகர்கள் மத்தியில்...



நடிகர்கள், நடிகைகள் அவ்வப்போது எதிர்பாராமல் ரசிகர்களிடம் சிக்கிக் கொள்வது வழக்கம். அதே போல் ஒரு சம்பவம் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் அரங்கேறியது. லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா,மாதவன், சமீராரெட்டி, அமலாபால் நடிப்பில் உருவாகி வரும் படம் "வேட்டை'.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது. படப்பிடிப்பை முடித்து சென்னைக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்த லிங்குசாமி, சமீராரெட்டி, ஆர்யா மூவரையும் அழைக்க தாம்பரம் ரயில் நிலையத்துக்கு கார் வந்திருந்தது. ரயில் தாம்பரம் வந்து சேர தாமதம் ஏற்படவே, ரசிகர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஆர்யா தன்னிடம் இருந்த போர்வையால் உடல் முழுவதையும் மூடிக் கொண்டு, தொப்பி அணிந்து கொண்டார்.

லிங்குசாமி வேறு வழியில்லாமல் கர்ச்சீப்பால் முகத்தை மறைத்துக் கொண்டார். சமீராரெட்டி மட்டும் தன்னை ரசிகர்களிடம் இருந்து மறைக்கவில்லையாம். தன்னை கண்டு கொண்ட ரசிகர்களிடம் தானாகவே சென்று பேசினாராம்.



அஜ்மல்.. ஆனந்த்.. ஆஸ்கர்!




கே.வி.ஆனந்த் இயக்கும் "கோ' படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார் அஜ்மல்.

படம் குறித்து அவர் கூறியது, ""கோ' படத்தில் வரும் என் கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும். தமிழில் நான் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் நல்ல கதைகளைக் கொண்ட படங்கள்.

அதே போல்தான் இந்தப் படமும். புதிய திரைக்கதை ரசிகர்களுக்குப் பிடிக்கும். இந்தப் படம் தமிழ் சினிமாவில் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும்.

இது மாதிரியான படங்களைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். கோ படத்துக்காக பல வாய்ப்புகளை நான் தவிர்த்துவிட்டேன். ஜீவா, கார்த்திகா, பியா என அனைவருக்கும் நடிப்பில் போட்டி இருந்தது. இது நிச்சயம் தமிழ் சினிமாவில் எனக்கிருக்கும் நிலையை மாற்றி வேறு இடத்தில் வைக்கும். பெரிய இயக்குநர், பெரிய பட்ஜெட் படத்தில் நடிப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.

இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு நன்றி. இதையடுத்து ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் மலையாளப் படத்தில் நடிக்கிறேன்'' என்றார் அஜ்மல்.



எந்திரனை மறக்க வைத்த இடியட்!



ஹிந்தி "3 இடியட்ஸ்', தமிழில் "நண்பன்' ஆகிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் நடிக்கின்றனர். இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி கொண்டிருக்கிறார் ஷங்கர்.

""ரீமேக் படங்களையே இயக்க வேண்டாம் என்ற முடிவில் இருந்தேன். அந்தக் கட்டுப்பாட்டை உடைத்த படம் "3 இடியட்ஸ்'. இதுவரை இல்லாத ஆர்வத்துடன் உழைத்து வருகிறேன். என் நடிகர்களும் அப்படியே. "எந்திரன்' படப்பிடிப்புக்காக பூனே பக்கம் லோனாவாலா என்ற இடத்துக்கு சென்றிருந்தோம். படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய அருகில் இருந்த தியேட்டருக்கு "3 இடியட்ஸ்' பார்க்க சென்றேன். படம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அன்றைக்கு படமாக்க இருந்த எந்திரனின் காட்சி மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த விஷயம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து படத்தில் மனசு ஒட்ட ஆரம்பித்தது. கதை, காமெடி, காதல் என படத்தில் ஒன்றிவிட்டேன். படம் முடிந்த பின்தான் "எந்திரன்' பற்றிய நினைவுக்கே வந்தேன். அப்போதே இதை எஸ் பிக்ஸர்ஸிஸ் தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். இப்போது நானே இயக்குவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. படத்தில் நிறைய கேரக்டர்கள் இருப்பதால் இயக்குவதில் கஷ்டமில்லை. அதிக கேரக்டர்கள் வைத்து கதையை சொல்ல முடியும் என்பதை "3 இடியட்ஸ்' படத்தில் சொல்லிருப்பார் இயக்குநர் ராஜ்குமார் ஹீரானி. அவருக்கு இந்த நேரத்தில் நன்றி. ஷாரூக்கானின் "ரா ஒன்' படத்தின் டிரைலர் "எந்திரன்' படத்தின் டிரைலரை போல் இருப்பதாக சொல்லுகிறார்கள். "ரோபோ' பற்றி ஷாருக்கிடம் பேசியிருப்பதால் அந்த தாக்கம் இருக்கலாம். "எந்திரன் 2' பற்றி யோசிக்கவில்லை. "நண்பன்' முடிந்த பிறகு அது பற்றி யோசிக்கலாம் என்கிறார் இயக்குநர் ஷங்கர்.

அதிகச் சம்பளம் கேட்கவில்லை!

தமிழில் அதிக சம்பளம் கேட்பதால்தான் ஷீலாவுக்கு வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் பேசியபோது, ""தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கிறேன். இதனால் எனக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது. தயாரிப்பாளர்களும் சம்பளம் கொடுப்பதில் தயங்குவதில்லை. தமிழில் அதே மாதிரியான சம்பளத்தை எதிர்பார்க்கவில்லை. சின்ன பட வாய்ப்புகள் நிறைய வந்தன. மறுத்துவிட்டேன். காரணம், தமிழில் தவறான படங்களின் தேர்வால் இன்னும் என்னால் பெரிய இடத்துக்கு வர முடியவில்லை. அதனால்தான் மறுத்தேன். அவர்களில் யாராவதுதான் நான் அதிக சம்பளம் கேட்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். நியாயமான சம்பளம்தான் கேட்கிறேன். தெலுங்கைப் போல் தமிழிலும் கிளாமராக நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. வந்தால் நிச்சயம் நடிப்பேன். கிளாமராக நடிப்பதில் தவறு இல்லை. மலையாளத்தில் நடித்த "மேக்அப்மேன்' படம் ஹிட்டாகியுள்ளது. இந்தப் படம் மலையாளத்தில் என் மார்க்கெட்டை உயர்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழில் எந்தப் படங்களையும் ஒப்பந்தம் செய்யவில்லை'' என்றார் ஷீலா. 



திரையரங்கில் இருந்து திரைக்கு..!

"குள்ளநரி கூட்டம்' படத்தில் விஷ்ணுவின் தந்தையாக நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார் "இயல்' இளங்கோ. ""மதுரை நகரத்தின் பரபரப்பான ஒரு திரையரங்கின் மேலாளர் நான். அப்படியே சினிமா ஆசை. சென்னைக்கு வந்து வாய்ப்புகள் தேடினேன். இப்போது ஒரு சில படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறேன். "குள்ளநரி கூட்டம்' படத்தின் இயக்குநர் ஸ்ரீபாலாஜியும் மதுரைக்காரர் என்பதால். இந்தப் படத்தில் நடிக்க அழைத்தார். ஹீரோ விஷ்ணுவின் சாயல் என் முகத்தில் இருப்பதால் என்னை நடிக்க அழைத்திருக்கலாம் என நினைக்கிறேன். எனக்கு சினிமா வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. கேரக்டருக்காக நிறைய பாராட்டு கிடைத்திருக்கிறது. அறிமுக படத்திலேயே என் கேரக்டர் பேசப்பட்டதில் மகிழ்ச்சி. முக்கியமான இயக்குநர்கள் பலர் அழைத்து பாராட்டினார்கள். அடுத்து தொடர் சினிமா வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன். பாலா, அமீர், சேரன், ரவிகுமார் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க ஆசை. வாய்ப்புகள் வந்தால் அது எந்த கேரக்டராக இரு ந்தாலும் ஏற்று நடிப்பேன்'' என்றார் "இயல்' இளங்கோ.





 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com