சிறுகதை: வாழ்க்கையும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்...

இன்று காலையில் மாதவன் அலுவலகத்தைத் திறக்கும்போதே தொலைபேசி அலறிக் கொண்டிருந்தது. வக்கீல்தான் கூப்பிடுகிறாரோ என்று அவசரமாக கதவைத் திறந்து ஓடிவந்து எடுத்தான். ""ஹலோ.'' ""மாதவா... நான்தான் சிவராமன் பேசறேன
சிறுகதை: வாழ்க்கையும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்...
Published on
Updated on
4 min read

இன்று காலையில் மாதவன் அலுவலகத்தைத் திறக்கும்போதே தொலைபேசி அலறிக் கொண்டிருந்தது. வக்கீல்தான் கூப்பிடுகிறாரோ என்று அவசரமாக கதவைத் திறந்து ஓடிவந்து எடுத்தான்.

""ஹலோ.''

""மாதவா... நான்தான் சிவராமன் பேசறேன்.''

"இவனா?'

சட்டென்று கோபமும் எரிச்சலும் வந்தது.

""சொல்லு. என்ன விஷயம்?''

""ஆயிரம் ரூபாய் வேணும் மாதவா. வீட்டில ரொம்ப கஷ்டம்.''

""ஆயிரம் ரூபாயா? அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போறது? என்கிட்ட ஒரு பைசா கிடையாது.''

""அப்படிச் சொல்லாத மாதவா. எனக்கு உன்னைவிட்டா யாரைத் தெரியும்? வீட்டில நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சு மாதவா. ப்ளீஸ்... எப்படியாச்சும் ஏற்பாடு பண்ணு. நான் நேர்ல வர்றேன்.''

""சிவராமா... சொல்றதைக் கேளு. என்கிட்ட பணம் இல்ல. இல்லாத பணத்தை எப்படிக் கொடுக்கறது?''

""எப்படியாச்சும் ஏற்பாடு பண்ணிக்கொடு. உன்னால முடியும் மாதவா. நான் பத்து நாள்ல பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுவேன்.''

"பத்து நாள்லயா? எப்படிக் கொடுப்பே? இதுவரைக்கும் எவ்வளவு பணம் என்கிட்ட வாங்கியிருப்பே? அதெல்லாம் கணக்கு போட்டுப் பார்த்தா ஆயிரக் கணக்கில வருமே. இனிமே உனக்கு ஒரு பைசாகூட தரமாட்டேன். வெறுத்துடுச்சு சிவராமா. போதும் ஆளைவிடு' மனசுக்குள் பொறுமினான்.

""என்ன மாதவா பேசமாட்டேங்கறே. பத்து நாள்ல தந்துடுவேன். கீதாவோட அப்பா ஒரு பெரிய அமவுண்ட் தர்றதா சொல்லியிருக்காரு. சொந்தமா பிஸினஸ் பண்ணலாம்னு இருக்கேன்.''

""சிவராமா என்னைத் தொந்தரவு பண்ணாதே. என்கிட்ட ஒரு பைசா கிடையாது.''

மாதவன் போனை வைத்துவிட்டு அலுவலகத்தைப் பெருக்க ஆரம்பித்தான். போன் அடித்தது. எடுக்கவில்லை. நான்கைந்து தடவை அடித்து ஓய்ந்துவிட்டது. மாதவன் கம்ப்யூட்டரை ஆன் செய்துவிட்டு உட்கார்ந்தான்.

பத்து மணிக்கு மாணிக்கம் வந்தார்.

""மாதவா... வக்கீல் கோயமுத்தூர் போயிட்டாரு. இன்னைக்கு வரமாட்டாரு'' என்றார்.

மாணிக்கத்திற்கு ஐம்பத்தைந்து வயதுக்கு மேலிருக்கும். வக்கீல் தேவராஜிடம் கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்து நிறைய வருடங்களாகிவிட்டன. மாணிக்கமே ஒரு முக்கால் வக்கீல்தான். வக்கீலுக்குத் தெரியாத சட்ட நுணுக்க விஷயங்களை இவர்தான் எடுத்துத் தருவார். மாதவன் வக்கீல் ஆபிசில் வேலைக்குச் சேர்ந்து ஆறு வருடங்களாகிவிட்டன. மாணிக்கம் ஏற்கனவே பழக்கம் என்பதால் அவர் மூலமாகத்தான் இங்கே வேலைக்குச் சேர்ந்தான். டைப்பிஸ்ட் வேலை.

மாதவனுக்கு வயது முப்பத்தைந்து. அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமணம் ஆகுமா என்பதும் தெரியவில்லை.

இந்த அழகில் சிவராமனின் கடன் தொல்லை வேறு. சிவராமன் பெரியப்பாவின் மகன். இவனைவிட இரண்டு வயதுதான் அதிகம். அவன் நன்றாகப் படித்தான். டிப்ளமோ முடித்தான். முடித்த மூன்றாவது வருடத்தில் அவனுக்குத் திருமணம். அப்போது கோயமுத்தூரில் ஒரு பெரிய டெக்ஸ்டைல்ஸ் மில்லில் எலக்ட்ரிக்கல் சூபர்வைசர். கல்யாணத்திற்குப் பின்னால் இரண்டு வருடம் ஒழுங்காக வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான். மில்லில் ஓர் என்ஜீனியருக்கும் அவனுக்கும் ஏதோ தகராறு. வேலையை விட்டுவிட்டு பொள்ளாச்சிக்கு வந்துவிட்டான். அப்புறம் அம்பராம்பாளையம் மில்லுக்குப் போனான். கொஞ்ச நாள்தான். ரொம்ப சின்ன மில், வேலை ஒத்துவராது என்று நின்றுவிட்டான்.

இதேபோல இரண்டு மூன்று பக்கம் வேலைக்குப் போய் நின்றுவிட்டான். ரோஷக்காரனாக இருந்தால் பிழைக்க முடியுமா? இதற்கிடையில் இரண்டு குழந்தைகள் வேறு. பெரிய பையன் பத்தாம் வகுப்பும், சின்னவன் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

சிவராமன் மாதவனை எங்கு பார்த்தாலும் விடமாட்டான். பத்தோ அம்பதோ கேட்பான். சில சமயம் நூறு ரூபாய். இரண்டு மூன்று தடவை ஐநூறு ரூபாய் வாங்கியிருக்கிறான். ஆரம்பத்தில் மாதவன் சிவராமனிடம் இருந்து பணம் திரும்பிவந்துவிடும் என்று ரொம்பவும் நம்பிக் கொண்டிருந்தான்.

இதுவரை அவனிடம் இருந்து ஒரு பைசாகூட திரும்பிவந்ததில்லை. அவனுக்கு மாதவனைப் பற்றிய கவலையோ அக்கறையோ கொஞ்சமாவது இருப்பதாகத் தெரியவில்லை. இத்தனை வயதாகியும் பொறுப்பற்றவனாக இருக்கிறானே என்று சிவராமன் மேல் மாதவனுக்கு கோபம் இருந்தது.

மீண்டும் பதினேறு மணிக்கு சிவராமனிடமிருந்து போன்.

""சொல்லு சிவராமா.''

""டே மாதவா... ரொம்பக் கஷ்டம்டா. மூர்த்திகிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கிட்டேன். அவன் திருப்பிக்கொடுன்னு தினம் வந்து நிக்கறான்டா. வீட்டுக்கு முன்னாடி வந்து சத்தம் போடறான். ஆயிரம் ரூபாய் ரெடி பண்ணிக் கொடுடா. அக்கம் பக்கத்துல எல்லாம் அசிங்கமா பாக்கறாங்க. குழந்தைங்க சங்கடப்பட்றாங்கடா. கொஞ்சம் ரெடி பண்ணிக் குடுடா. அவனோட மூஞ்சியில வீசி எறிஞ்சிடலாம்.''

மாதவனுக்கு எரிச்சலாக வந்தது.

""உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா? பணம் இல்ல சிவராமா. என்னைத் தொந்தரவு பண்ணாதே.''

""மாதவா வச்சிடாதே. நான் அரைமணிநேரத்தில் உன்னோட ஆபீசுக்குக் கிளம்பி வர்றேன்.''

""நான் ஆபீஸ்ல இருக்கமாட்டேன். கோர்ட்டுக்குப் போகணும்.''

""நான் வர்றேன்.''

மாதவன் போனை வைத்துவிட்டான்.

""என்ன மாதவா பிரச்னை?'' மாணிக்கம் கேட்டார்.

""எங்க பெரியப்பா பையன் சார். பணம் பணம்னு உயிரை வாங்கறான். ஆயிரம் ரூபாய் கேட்கறான். ஏற்கனவே கொடுத்த பணம் எதுவுமே திரும்பி வரலே. ஆயிரம் ரூபாய்ங்கறது நமக்கு எவ்வளவு பெரிய தொகை? சொன்னா புரிஞ்சுக்க மாட்டங்கறான். வேலைக்கும் போறதில்லே. அப்பா அம்மா பென்ஷன் வருது. அதை வச்சு காலத்தை ஓட்டிட்டு இருக்கான்.''

""ஆபிசுக்கு வர்றன்னு சொல்றாரா?''

""ஆமாங்க சார். நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.''

வேலையில் கவனத்தை செலுத்தினான். பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். ஏ ஃபோர் பேப்பர் தீர்ந்துபோயிருந்தது.

""சார் பேப்பர் தீர்ந்துடுச்சு. வாங்கிட்டு வந்துடறேன்.''

செருப்பைத் தொட்டுக் கொண்டே கீழே பார்த்தான். கீழே சிவராமன் டெய்லர் கடையில் ஏதோ விசாரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மாடியில் இருக்கும் வக்கீல் ஆபிசுக்கு வழி கேட்கிறான்.

"அடப்பாவி! அதுக்குள்ள வந்துட்டானா?'

""சார் எங்க அண்ணன் வந்துட்டான். நான் பாத்ரூமுக்குள்ள ஒளிஞ்சுக்கிறேன். கேட்டா கோர்ட்டுக்குப் போயிருக்கான். வர லேட்டாகும்னு சொல்லி அனுப்புடுங்க.''

""சரி'' என்றார்.

அப்போது போய் கழிப்பறைக்குள் ஒளிந்தவன்தான். ருவன் கழிப்பறைக்குள் எவ்வளவு நேரம் ஒளிந்து கொண்டிருக்க முடியும்? அதுவும் இரண்டுக்கு இரண்டடி கொண்ட இருட்டுக்குள். மாதவனுக்கு மூச்சு முட்டியது. ஒன்றரை மணி நேரமாய் ஒளிந்து கொண்டிருக்கிறான். அலுவலக அறைக்குள் சிவராமன் பேசிக் கொண்டிருப்பது இன்னமும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அவன் எப்போது போவது? இவன் எப்போது வெளியே வருவது?

"பாவி... சீக்கிரமாய்ப் போய்த் தொலையேன்டா.'

கிளார்க் மாணிக்கத்திடம் சினிமா, அரசியல் என்று பேச ஆரம்பித்தால் போதும். அவ்வளவுதான். பேசிக்கொண்டேயிருப்பார். சும்மா ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் சிவராமனுக்கு எத்தனை விஷயங்கள் தெரிந்திருக்கிறது. டி.வி சீரியலைக்கூட விட்டு வைக்கவில்லை. இந்தியா, அமெரிக்கா, கிரிக்கெட், காமன் வெல்த், எந்திரன், பவர்கட் என்று ஆரம்பித்து உலகத்தையே சுற்றி வந்துவிட்டார்கள். சிவராமன் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தான். மாணிக்கம், மாதவனுடைய அவஸ்தையைப் பற்றிய கவலையே இல்லாமல் பேச்சை சுவாரஸ்யமாக இழுத்துக் கொண்டே போனார்.

இடையில் டீக்கடைப் பையனின் வருகை. மாணிக்கம் வடை வேறு சொல்லிவிடுகிறார்.

""என்ன சார் மாதவனை இன்னும் காணோம்?‘' சிவராமன் ரொம்ப கவலையோடு கேட்டான்.

""அவன் வர ரொம்ப லேட்டாகும் சார். கோர்ட்டுல நிறைய வேலை இருக்கும். எப்படியும் நாலு அஞ்சு மணி ஆயிடும்.''

"யப்பா... கிளம்புடா சாமி.'

""லஞ்சுக்கு வருவனல்ல''

""இல்ல சார். வரமாட்டான். ஓட்டல்ல சாப்பிட்டுக்குவான். இன்னைக்கு அவன் சாப்பாடு கொண்டு வரல''

கொஞ்சம் அமைதி. லொடக் லொடக்கென்று ஃபேன் ஓடும் சத்தம். இரண்டு நாளாக சத்தம் போட்டுக் கொண்டு சுற்றுகிறது. எலக்ட்ரீசனுக்கு வேறு சொல்ல வேண்டும். வக்கீல் இரண்டு தடவை சொல்லிவிட்டார்.

""நாலு மணிக்கு வந்தா பாக்கலாமா சார்?‘'

""இல்ல. அஞ்சு ஆறாயிடும்''

""அஞ்சு மணிக்கு வரட்டுமா? '

""அஞ்சு மணிக்கு வக்கீல் இருப்பாருங்க சார். நாளைக்கு வாங்களேன்.''

""நாளைக்கா.? ரொம்ப கஷ்டம் சார். பணம் ரொம்ப அவசரம் சார்.''

""அப்படியா மாதவன் வந்ததும் சொல்றனே...''

""சொல்லுங்க சார். ரொம்ப கஷ்டம் சார்.

""கண்டிப்பா சொல்றேன். உங்க வீட்டுக்கு வேணும்னா வரச் சொல்றேன்.''

""ரொம்ப நன்றிங்க. வர்றனுங்க சார்.''

""வாங்க.''

சிவராமன் கிளம்பிவிட்டான். அவன் செருப்புச் சத்தம் ஓய்ந்ததும் ""மாதவா... ஆள் போயாச்சு வெளிய வா'' என்றார் மாணிக்கம்.

மாதவன் வெளியே வந்தான். அவன் முகமெல்லம் வியர்த்துப் போய் கடுப்போடு வெளியே வந்தான். மின்விசிறிக்கு கீழே நின்று காற்று வாங்கினான்.

""என்ன மனுசன் சார். நகரவே மாட்டேங்கறான். ஒன்றரை மணி நேரம் கக்கூஸ்க்குள்ள நிக்க வச்சுட்டான்.'' மாதவன் புலம்பினான்.

""சரி சாப்பிடலாம் வா. டைம் ஆச்சு.''

""அய்யோ... வேண்டாம் சார். இன்னைக்கு என்னால சாப்பிடவே முடியாது.''

இந்த சிவராமன் ஏன் இப்படி இருக்கிறான்? அடுத்தவர் கஷ்டத்தைக் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாதவனாக.

மாதவனின் எரிச்சல் அடங்கவில்லை.

இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் எதிர்காலக் கனவுகள் ஏதுமற்ற தன் வாழ்க்கை நிலையை நினைத்துப் பார்த்தான். அவனுக்குப் பாலகுரு நினைவுக்கு வந்தான். பாலகுரு அரசு போக்குவரத்துத் துறையில் வேலை. ரொம்ப நாள் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவந்தான். போன வருடம் ஒருநாள் பஸ்சில் அவனைப் பார்த்தான். அவனுக்கு கல்யாணமாகியிருந்த விஷயம் அப்போதுதான் தெரிந்தது. கல்யாணம் முடிந்து ஒரு மாசமாகிவிட்டது என்றான்.

""மாதவா கல்யாணம் பண்ணிக்கடா. எனக்கு கல்யாணத்தோட அருமை இப்பத்தான் தெரியுது. இன்னும் எத்தனை வயசு வரைக்கும் இப்படியே இருக்கப் போறே நமக்கு ஒரு துணை அவசியம். நம்ம கஷ்டத்தைப் புரிஞ்சுக்க, ஆறுதல் சொல்ல இதுமாதிரி துணை கிடைக்காது. நான் கல்யாணம் வேண்டாம்னு தள்ளிப்போட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப புரிஞ்சுக்கிட்டேன். நீ இப்படியே இருக்காதே. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க. வயசு போயிட்டே இருக்கு...'' என்று வயிற்றில் புளியைக் கரைத்தான். மாதவன் அன்றைக்கு ரொம்பவும் பயந்து குழம்பிப் போயிருந்தான்.

மணி ஐந்தாகிவிட்டது. மாணிக்கம் வெளி வேலையாக கிளம்பிக் கொண்டிருந்தார்.

""மாதவா... அஞ்சு மணிக்கு வேலவன் பிரிண்டர்ஸ்ல விசிட்டிங் கார்டு தர்றதா சொல்லியிருந்தாங்க. ரெடியாயிருந்தா வாங்கிட்டு வந்திடு. நீ வந்த பின்னாலதான் நான் தாலுக்கா ஆபிசுக்குப் போகணும்.''

மாதவன் எழுந்தான். சந்தேகமாய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவனுக்கு சுள்ளென்றது.

பெட்டிக் கடையருகே சிவராமன் நின்று கொண்டிருந்தான்.

"அடப்பாவி... இவன் போகவேயில்லையா? எவ்வளவு நேரமாய் இங்கேயே நின்று கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லையே?'

மாதவனுக்கு ஆத்திரமாக இருந்தது.

""சார்... சிவராமன் பெட்டிக் கடைக்கிட்ட நின்னுட்டு இருக்கான் சார். அவன் வீட்டுக்கே போகலே போலிருக்கு.''

""அடப்பாவமே...'' என்று மாணிக்கம் அதிர்ச்சியோடு பார்த்தார்.

""இப்ப என்ன பண்றது?''

மாதவன் மறுபடியும் கீழே எட்டிப்பார்த்தான். சிவராமன் கைகளைக் கட்டிக் கொண்டு எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மாதவனுக்குப் பாவமாக இருந்தது. மாணிக்கத்திடம் திரும்பினான்.

""சார் ஆயிரம் ரூபாய் கொடுங்க சார். சம்பளம் வாங்கினதும் கொடுத்துடறேன்'' என்றான் மாதவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com