ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தேள் கடிக்குத் தேங்காய்ப் பூ!

கிராமத்தில் இருக்கும் என் வீட்டில் வெயில் காலம் வந்துவிட்டால் வீட்டின் அலமாரி, படுக்கையறை, கரி சாக்குப் பை போன்ற இடங்களில் தேள் வந்துவிடுகிறது. தேள் கொட்டிவிட்டால் ஏற்படும் கடுப்பு, வலி, விஷம் பரவாமலி
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தேள் கடிக்குத் தேங்காய்ப் பூ!
Updated on
2 min read

கிராமத்தில் இருக்கும் என் வீட்டில் வெயில் காலம் வந்துவிட்டால் வீட்டின் அலமாரி, படுக்கையறை, கரி சாக்குப் பை போன்ற இடங்களில் தேள் வந்துவிடுகிறது. தேள் கொட்டிவிட்டால் ஏற்படும் கடுப்பு, வலி, விஷம் பரவாமலிருக்க வழிகள் எவை?

பத்மநாபன், பாலூர்.

கோடை வந்துவிட்டால் மனிதர்கள் ஊட்டி, கொடைக்கானல் போவது போல, தேளும் வெப்பம் தாங்காமல் வீட்டிலுள்ள குளிர்ந்த இடங்களில் வந்து தங்கிவிடுகின்றது. வீட்டில் நாம் அதிகம் பயன்படுத்தாத இடங்களிலும் அவை பதுங்கிவிடும். சூடு குறைந்துவிட்டால் நாம் புழங்கும் இடங்களிலும் வந்துவிடும். தேள் இருக்கும் இடத்தை அறியாமல் கை வைத்துவிட்டால் நம்மைப் பதம் பார்த்துவிடும். நெருப்பை அள்ளிக் கொட்டியது போன்ற ஓர் எரிச்சல், கடும்வலி, அந்த வலியானது இதயத்தை நோக்கி கிடுகிடுவென ஏறுதல், கொட்டிய இடத்தில் சிவந்துபோதல் போன்றவை தேள் கொட்டியதால் ஏற்படும் பொதுவான அறிகுறிகள்.

தேள்களில் பல வகைகள் இருந்தாலும், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் இறந்து மக்கிப் போன இடத்தில் உற்பத்தியாகும் தேள்கள் மிகக் கொடுமையான வகைகளாகும். அவை கொட்டினால் மரணம் கூட ஏற்படலாம். கிராமங்களில் தேள் கொட்டியவுடன், வேப்பிலை அடித்து மந்திரித்து இறக்குவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. இதனால் மனதில் உண்டாகும் பயமும், அதிர்ச்சியும் குறைந்து உடலில் விஷம் வேகமாகப் பரவாமல் தடுக்க முடிகிறது.

தேள் கொட்டிய இடத்தில் கொடுக்கின் நுனியில் உள்ள முள் சிக்கிவிட்டால், கடுமையான வலி ஏற்படும். அந்த முள்ளை வெளியேற்ற, நன்கு பழுத்த பூவன் வாழைப் பழத்தைத் தோலுடன் நடுவே நறுக்கித் தேள் கொட்டிய இடத்திலும், அதனருகில் உள்ள பகுதிகளிலும், கரகரவென வேகமாகத் தேய்க்க வேண்டும். பழத்தினுள் முள் சிக்கிக் கொண்டு, வெளியே வந்துவிடும். சிலர் வாழைப் பழத்திற்குப் பதிலாக, பெரிய வெங்காயத்தைக் குறுக்கே நறுக்கி, அழுத்தித் தேய்த்தும் முள்ளை வெளியே எடுத்துவிடுவர். முள் அகலும் வரை நிற்காத கடுப்பு, அது வெளியேறியவுடன் அடங்கிவிடும். தேள் கொட்டிய இடத்திலுள்ள விஷத்தை வெளியேற்றப் பெருங்காயத்தை தண்ணீர் விட்டுக் குழைத்து அந்த இடத்தில் பூசி, தணலால் சூடு காண்பிக்க, அந்த இடம் வியர்த்து, விஷம் வெளியேறிவிடும். இதைப் போலவே நேர்வாளம் விதையைத் தண்ணீர் விட்டு உரைத்துக் கடிவாயில் ஒரு நூல் கனம் பூசி, அந்தப் பூச்சு சற்றுக் காய்ந்ததும் தணலால் சூடு காண்பித்து விஷத்தை முறிக்க முடியும். இந்த விதை ஒரு கடுமையான பேதியை ஏற்படுத்தும் சரக்கு என்பதால் கடிபட்டவரின் வாயில் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உடலின் இடதுபுறத்தைத் தேள் கொட்டினால் வலது கண்ணிலும், வலதுபுறத்தைத் தேள் கொட்டினால் இடது கண்ணிலும், உப்புக் கரைத்த தண்ணீரையோ, வெங்காயத்தின் சாற்றையோ இடுவதால், விஷம் பரவி மேல் ஏறும்போது ஏற்படும் கடும் வலியையும், மயக்கத்தையும் குறைத்துவிடலாம். இவை கண்ணைக் கரிக்கச் செய்து கண்ணீரை வெளியேற்றி, அதிர்ச்சி, மயக்கம் போன்ற உபாதைகளைக் குறைக்கும். இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலே போதும்.

இதுபோன்ற முதலுதவிகளைச் செய்தவுடன் தேங்காயைத் துருவி தேள் கொட்டிய இடத்தில் வைத்துக் கட்ட, சிறுவலி கூட இல்லாமல் இதமாக இருக்கும். அதுபோல, தேங்காயைத் துருவி சுமார் 30-50 மி.லி. அதிலிருந்து பால் எடுத்து, வெல்லம் கலந்து இனிப்பாக, தேள் கடிபட்டவருக்குக் குடிக்கக் கொடுக்க, மனதில் தெம்பும் உற்சாகமும் அவருக்கு ஏற்படும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com