திரைக்கதிர்: நடிகையும் நானே; டிசைனரும் நானே!

அறிமுகம் மற்றும் முன்னணி இயக்குநர்களின் தேர்வில் இருக்கிறார் அமலாபால். முன்னணி இயக்குநர்களை விட அறிமுக இயக்குநர்களிடமே கதைகளைக் கேட்டு ஓ.கே. செய்து வருகிறார். "தெய்வத்திருமகன்', "முப்பொழுதும் உன் கற்ப
திரைக்கதிர்: நடிகையும் நானே; டிசைனரும் நானே!
Updated on
3 min read

அறிமுகம் மற்றும் முன்னணி இயக்குநர்களின் தேர்வில் இருக்கிறார் அமலாபால். முன்னணி இயக்குநர்களை விட அறிமுக இயக்குநர்களிடமே கதைகளைக் கேட்டு ஓ.கே. செய்து வருகிறார். "தெய்வத்திருமகன்', "முப்பொழுதும் உன் கற்பனைகள்' ஆகிய படங்களுக்குப் பின் அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்கிறார். அடுத்தடுத்த படங்களுக்கான தன்னுடைய காஸ்டியூம்களை தானே டிசைன் செய்ய ஆரம்பித்து இருப்பதுதான் இப்போதைய புது செய்தி. சமீபத்தில் புடவை ஒன்றை டிசைன் செய்து பாலிவுட் காஸ்டியூமருக்கு அனுப்பி தயாரிக்க சொன்னாராம். புடவையைப் பார்த்த மற்ற பாலிவுட் நடிகைகள், "யார் இதை டிசைன் செய்தது?' எனக் கேட்க ஆரம்பித்து விட்டார்களாம். இதில் சந்தோஷமாகிப் போன அமலாபால், இனிமேல் தன்னுடைய படங்களில் தானே காஸ்டியூம்களை டிசைன் செய்கிற யோசனையில் இருக்கிறாராம். இதற்காக கூடுதல் சம்பளமும் கேட்க முடிவு எடுத்திருக்கிறாராம்.

பத்மபிரியாவுக்கே தெரியாதாம்!

கேரளத்து ஹீரோயின்கள் தமிழில் வரிசையாய் வந்து கவனம் ஈர்த்தனர். அந்த வரிசையில் வந்தவர்தான் பத்மபிரியா. "பொக்கிஷம்', "மிருகம்', "பட்டியல்' போன்ற படங்களில் நடிப்பை வெளிப்படுத்தியும் தொடர் வாய்ப்புகள் அவரைத் தேடி வரவில்லை. கிளாமராக நடித்தால் வாய்ப்புகள் வரும் என நம்பி அப்படியும் நடித்துப் பார்த்தார். ஊஹீம்... தமிழில்தான் அப்படியென்றால் மலையாளத்திலும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. மனதை தளரவிடாத பத்மபிரியா வாய்ப்புக்காக காத்துக் கிடக்கவில்லை. வெளிநாடுகளில் மேடைகளில் ஆடும் வாய்ப்புக்கு முன்பு மறுப்பு தெரிவித்து வந்தார். இப்போது அந்த வாய்ப்பு வந்தால் ஏற்க தயக்கம் காட்டுவதில்லை. சமீபத்தில் அமெரிக்காவில் மேடை நடனம் ஆட புறப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் பத்மபிரியாவின் நடிப்பில் நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பு தர முன் வந்திருக்கிறார் மலையாள இயக்குநர் சத்தியன் அந்திக்காடு. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். இந்த விஷயம் இன்னும் பத்மபிரியாவுக்கே தெரியாதாம்! அமெரிக்காவிலிருந்து பத்மபிரியா திரும்பிய பிறகு அவரிடம் இதுபற்றி பேச முடிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

காதலுக்கு ஜாதி மட்டுமா பிரச்னை?

பிர்லியன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "திவ்யா மீது காதல்'.

படம் குறித்து இயக்குநரும், ஹீரோவுமான மதன் கூறுகையில், ""கிராமத்து இளைஞர்களின் எதார்த்தமும், அந்த மண்ணுக்குரிய காதலும்தான் கதை. வெவ்வேறான ஜாதியைச் சேர்ந்தவர்களின் காதலுக்கு ஜாதி மட்டுமே பிரச்னை இல்லை. அதைத் தாண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் கதை. இப்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்டுக்கு ஏற்றாற் போல் திரைக்கதை உருவாகி இருக்கிறது. கமர்ஷியலான விஷயங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதுதான் கதையின் பலம். மனித நாகரிகத்தின் வளர்ச்சியிலும், பண்பாட்டிலும், சமூகத்திலும் பல புரட்சிகளைச் செய்த காதலுக்கு இன்றும் எதிர்ப்பு இருப்பது ஏன்? என்பதும் கதையில் இருக்கிறது. தற்போதைய காதல் சினிமாக்களில் இருந்து இது கொஞ்சம் வித்தியாசப்பட்டு நிற்கும். பெங்களூர் மாடல் அழகி நிஷா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஒளிப்பதிவை ராஜராஜன் கவனிக்கிறார். இசையமைப்பாளராக ஜே.ஆர். ஜோசப் அறிமுகமாகிறார். கடலூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார் மதன்.

தமிழ் சினிமாவில் தரம் நிரந்தரம்!

கன்னடப் பட உலகின் பிரபல வில்லன் பாலசந்தர், ஏவி.எம். நிறுவனம் தயாரித்து வரும் "முதல் இடம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகத் தகவல். தேடிப் பிடித்தால் ஆர்வமாகப் பேசுகிறார்.

""தருமபுரி மாவட்டம்தான் என் பூர்விகம். தொழில் விஷயமாக பெங்களூருக்குச் சென்றேன். சின்ன வயதில் நிறைய நாடகங்களில் நடித்த அனுபவம் இருந்ததால், சினிமா ஆசையும் கொஞ்சம் இருந்தது. அதனால் பெங்களூரிலேயே தங்கி சினிமா வாய்ப்புகளைத் தேடிப் பிடித்தேன். இப்போது கன்னடப் பட உலக சினிமாக்களில் முக்கியமான வில்லன்களில் ஒருவனாக இருக்கிறேன். "அக்ரஹாரம்', "மச்சான்', "காலேஜ் காலேஜ்' ஆகிய படங்கள் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. இந்நிலையில் தமிழ் படங்களில் நடிக்க ஆசை இருந்தது. அதற்கு நிறைய முயற்சிகள் செய்தேன். சென்னை வந்தபோது இயக்குநர் குமரனைச் சந்தித்துப் பேசினேன். வாய்ப்பு தருவதாகச் சொன்னார். இப்போது அந்தப் படத்தை ஏவி.எம்.நிறுவனம் தயாரிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இதை என் பாக்கியமாக கருதுகிறேன். தமிழ் சினிமா எப்போதும் நன்றாகவே இருக்கிறது. நல்ல கதைகளை என்றைக்கும் ரசிகர்கள் ஆதரிக்கிறார்கள். மற்ற மொழிச் சினிமாக்களை விட தமிழ் சினிமாவில்தான் தரம் நிரந்தரமாக இருக்கிறது. இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை. இந்தப் படத்தின் கேரக்டர் ரோல் எனக்கு தொடர் வாய்ப்புகளை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார் பாலசந்தர்.

அன்று "கேடி'; இன்று "நண்பன்'!

"கேடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இலியானா. நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது ஷங்கர் இயக்கத்தில் "நண்பன்' படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர், திடீர் சிக்கலில் இருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆருடன் "சக்தி' என்ற படத்தில் நடித்தார். இப்படத்தின் புரமோஷன் விழாக்களுக்கு அழைத்தபோது, வர மறுத்து விட்டாராம். இதையடுத்து படத் தயாரிப்பாளர் தெலுங்கு நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். அதை ஏற்றுக் கொண்ட சங்கம், இலியானாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கிடையில் இலியானா அளித்த ஒரு பேட்டியில் ""குறிப்பிட்ட படத்தின் கதையை முதலில் என்னிடம் சொன்ன போது மிகவும் வித்தியாசமாக இருந்தது. நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் ஷூட்டிங் தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக கதை மாற்றப்பட்டது. முதலில் என்னிடம் சொன்னதற்கும் படத்துக்கும் நேர்மாறாக இருந்தது. இதற்கு மேல் இது பற்றி சொல்லவிரும்பவில்லை'' என்று கூறி உள்ளார்.

காஞ்சனாவாக சோனியா அகர்வால்!

நடிகையின் நிஜமான வாழ்க்கை அவ்வப்போது படமாவது வழக்கம். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ஹிந்தியில் படமாகி வருகிறது. சில்க் ஸ்மிதா கேரக்டரில் வித்யாபாலன் நடிக்கிறார். இதற்காக சில்க் ஸ்மிதாவிடம் நெருங்கிப் பழகிய நபர்களை சந்தித்துப் பேசி வருகிறார். தமிழில் பட வாய்ப்புகள் தந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், உடன் நடித்த நடிகர்கள் எனப் பலரையும் சந்தித்து பேச வித்யாபாலன் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் 1960 முதல் 70 வரை முன்னணி நாயகியாகத் திகழ்ந்த காஞ்சனாவின் வாழ்க்கை படமாகிறது. தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்

150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காஞ்சனா, சிவாஜி, எம்.ஜி.ஆர். ஜெமினி, முத்துராமன் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்தார். வசீகர அழகால் ரசிகர்களைக் கவர்ந்த காஞ்சனாவின் சமீபத்திய வாழ்க்கை பற்றி வந்த பல செய்திகள் அதிர்ச்சியடைய வைத்தன. விமானப் பணிப் பெண்ணாக இருந்து நடிகையாக மாறிய காஞ்சனாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. காஞ்சனா கேரக்டரில் சோனியா அகர்வால் நடிப்பார் எனத் தெரிகிறது. கடந்த வாரம் சோனியா அகர்வாலைச் சந்தித்து கதையை சொல்லி சம்மதம் வாங்கியிருப்பவர், தமிழில் ஓரிரு படங்களை இயக்கிய ராஜ்கிருஷ்ணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com