
எனது வயது 73. 2006 ஆம் ஆண்டு தொண்டையில் கேன்சர் கட்டியை நீக்குவதற்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். தற்போது தொண்டையின் கீழ்ப் பகுதியில் சளி தொடர்ந்து உற்பத்தியாகி தேக்கம் ஏற்பட்டு மிகவும் அவஸ்தையாக உள்ளது. இரவு 3 மணியளவில் தொண்டை கட்டிவிடுவதால் உப்புக் கரைசல் வெந்நீரைக் கொப்பளித்து விரலைவிட்டு சளியைச் சிறிது சிறிதாக வெளியேற்ற ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. அதன் பிறகு தூக்கமே கிடையாது. இந்த உபாதையிலிருந்து விடுபட ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?
கே.நடராஜன், மதுரை-10.
இரவில் இட்லி, தோசை, தேங்காய்ச் சட்னி, தயிர், குளிர்ந்த தண்ணீர் போன்றவற்றை நீங்கள் சாப்பிட வேண்டாம். உளுந்து சேரும் உணவு வகைகளால் தொண்டையில் கபக்கட்டு ஏற்படும். அதன் இனிப்புச் சுவையாலும், எளிதில் செரிமானமாகாத தன்மையாலும் கபத்தை வளர்க்கிறது. சளி உற்பத்தியைத் தடுக்கும் உணவு வகைகளில் சிறந்தது - ஒரு பிடிக் கொள்ளு, பயத்தம் பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, துவரம் பருப்பு ஆகியவற்றைச் சுமார் 3 லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, அரை லிட்டராகத் தண்ணீர் குறுகியதும் வடிகட்டி, சூடு ஆறியதும் சிட்டிகை இந்துப்பு கலந்து, அரை ஸ்பூன் தேனும் சேர்த்து, இரவு உணவாகப் பருகுவதுதான். மேலும் தொண்டையில் சளி உற்பத்தியைப் பெருமளவு தடுக்கும் ஒரு சில உணவுப் பொருட்களின் தொடர் உபயோகத்தின் மூலமாகவும் நீங்கள் பயன்பெறலாம். அதன் விவரம் வருமாறு:
* ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அரை கிளாஸôக ஆனதும் வடிகட்டி, இரவில் படுக்கும் முன், தொண்டையில் படும் வகையில் விட்டு, கொப்பளித்துத் துப்பிவிடவும். தொண்டைப் புண் ஏதேனுமிருந்தால் ஆறிவிடும். சளி முறிந்து எளிதில் வெளியாகும்.
* மிளகைத் தூள் செய்து தேனில் குழப்பி நடுவிரலில் தோய்த்துத் தொண்டையினுள் தடவ, உள்நாக்கு தொங்குதல், டான்ஸில் சதை வளர்ச்சி, தொண்டையில் கட்டி, சளி அடைப்பு போன்றவை நீங்கிவிடும். மிளகையும் வால் மிளகையும் நல்லெண்ணெய்யில் பொரித்துச் சாப்பிட, தொண்டையில் சளி கட்டாது. இவற்றையே நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், தொண்டை வேக்காளத்தைக் குறைத்து வறண்ட இருமலையும், தொண்டை எரிச்சலையும் போக்கும்.
* 4 - 5 பூண்டைப் போட்டு விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் 10 மி.லி. வீதம் சேர்த்துக் காய்ச்சி, 5 மி.லி. வீதம் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நுரையீரல், தொண்டைப் பகுதிகளில் அடைந்து கிடக்கும் கபத்தை இளக்கி வெளியே கொண்டு வந்துவிடும். கபத்திலுள்ள நாற்றத்தைப் போக்கும். அதிலுள்ள கிருமிகளை அழித்துவிடும். குழந்தைகளுக்கு ஏற்படும் அள்ளுமாந்தம் எனும் நுரையீரல் கப உபாதையிலும் இதனைக் கொடுக்கலாம். உள்ளிப் பூண்டின் சாறு 1 அவுன்ஸ் (30 மி.லி.), தேன் 1/2 அவுன்ஸ் (15 மி.லி.) சேர்த்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு தினம் 3, 4 வேளை உள்நாக்கில் படும்படி தடவி வர, தொண்டை சளி ஏற்படாமல் பாதுகாக்கும்.
* ஒன்றிரண்டு வெற்றிலையுடன் சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து உணவுக்குப் பிறகு சாப்பிட, சளி அடைப்பைப் போக்கிவிடும்.
ஒரு சில ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு உதவும். வியோஷாதி வடகம் 5 கிராம், காலை இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட நல்லது. வியாக்ரயாதி கஷாயம் 15 மி.லி.யை, 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து 1/2 ஸ்பூன் தாளீஸபத்ராதி சூரணம் சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 21 நாட்கள் சாப்பிடவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.