
நிலைமொழியில் இ, ஈ, ஐ, இருந்தால் 'ய்' யும், ஏனைய உயிர்கள் இருந்தால் 'வ்' வும் 'ஏ' இருந்தால் இரண்டும் (ஏதாவது ஒன்று) உடம்படு மெய்யாக வரும். தே (த்+ஏ)+வ்+ஆரம்= தேவாரம். அவனே (ஏ)+ய்+அழகன் = அவனேயழகன்.
அமெரிக்காவில் 'ஆ' இருப்பதால் 'வ்' வந்தது. திருச்சியில் 'இ' இருப்பதால் 'ய்' வந்தது. தேவாரத்தில் 'ஏ' காரம் உள்ளது. இதில் 'வ்' வந்தது. அவனே - இலும் 'ஏ' காரம் இருக்கிறது. இதில் 'ய்' வந்தது (இரண்டும் வரும்). ஆனால் கோவில், கோயில் என இரண்டு வகையாய் எழுதுதல் சரியன்று. கோவில் என்பதில் 'ஓ' உள்ளது. 'ஓ' இருந்தால் 'வ்' தான் உடம்படு மெய். ஆதலின் கோவில் மட்டுமே சரி. கோ + இல் = கோ (க்+ஓ)வ் +இல் (வ்+இ=வி) கோவில்.
தெரிந்தும் தெரியாமலும்
தெரிந்து செய்யும் பிழைகள், தெரியாமல் செய்யும் பிழைகள் என இரண்டு உண்டு. நம் வாழ்வில் நம் செயல்களில் நேர்கின்ற பிழைகள் மட்டுமல்ல; மொழியை எழுதுவதிலும் இப்பிழைகள் இரண்டும் நேர்கின்றன.
கணபதி என்பது ஒருவர் பெயர் (வடமொழிப் பெயர்தான்). இதனை ஆங்கிலத்தில் மிடுக்காக Ganpath - கண்பத் என்று சொல்லத் தொடங்கினர். இப்போது 'கண்பத்'தும் போய் (பத்துக் கண்கள் அல்ல) 'கண்பட்' ஆகிவிட்டதே! இதுதான் கொடுமை; இது தெரிந்தே செய்யும் பிழை.
இவ்வாறே பழனிச்சாமி என்ற அழகிய தமிழ்ப் பெயரை Palanisamy என்று ஆங்கிலத்தில் எழுதி அதிலுள்ள Palani என்பதையும் சுருக்கி Pal - பால் என்றாக்கி, பால் சகோதரர்கள் 'Pal Brothers' என்று வணிக நிலையத்துக்குப் பெயர் வைக்கிறார்கள். மனம் தாங்காத இப்பிழையும் தாங்கித்தான் வாழுகிறோம்.
கோனார் தமிழ் உரைநூலின் முதலாசிரியர் ஐயன்பெருமாள் கோனார்; பெரும் புலவர். இந்தப் பெயரை ஐயன் பெருமாள் என்று சொல்லாமல் ஐயம் பெருமாள் என்று பேச்சு வழக்கில் உரைத்தனர். இது தொடர்ந்து இன்று அய்யன் கணபதி என்னும் பெயரை அய்யம் கணபதி என்று ஊடகங்களில் எழுதியும் வருகிறார்கள். இதிலுள்ள அய்யம், சந்தேகம் என்னும் பொருளைத் தருமே ஐயா. இது சரியா?
சித்திரை, வைகாசி மாதங்கள் இளவேனிற் பருவம்; இதனையே வசந்த காலம் என்பர். ஆனால் ஐப்பசி மாதத்தில், ஒருநாள் தொலைக்காட்சிச் செய்தியில், "இது வசந்த காலமாதலால் முதுமலை சரணாலயத்தில் விலங்குகள் அதிகம் கூட்டம் கூட்டமாய்க் காணப்படுகின்றன'' என்று படித்தார் ஒருவர். இந்தச் செய்தியை எழுதிய செய்தி ஆசிரியர்க்கோ, படித்தவர்க்கோ வசந்தகாலம் என்பது எது என்று தெரியவில்லை. ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலம் என்பார்கள். இந்தப் பருவத்தில் குளிர் மிகுதியாக இருக்கும். ஆதலின் இலக்கணத்தில் 'கூதிர்காலம்' என்ற பெயர் உண்டு.
கூதிர் (குளிர்) காலத்தை வசந்த காலம் (இளவேனில்) என்றது தெரியாமல் செய்த பிழை. அவர்களுக்கு இந்தப் பருவங்களின் பாகுபாடு பற்றித் தெரியவில்லை. ஆயினும் பிழை, பிழைதானே?
ஒரு செய்தியில் 'இராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் தாக்குதல்' என்று தலைப்புச் செய்தியில் சொன்னார்கள். நம் மீனவர்கள் எப்போது தாக்கத் தொடங்கினார்கள்? இவர்கள்தாம் அடிவாங்கி உதைபட்டு வருகிறார்களே! இந்தக் கொடுமை தீரவில்லையே! இந்த வாக்கியத்தில் ஒரு சொல்லை விட்டுவிட்டார்கள். 'இராமேசுவரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்' என்று சொல்லியிருக்க வேண்டும். 'மீது' விட்டுப் போனதால் வந்த வினை இது.
பேச்சு வழக்கில் படித்தவர்கள்கூட வியபாரம் என்றும், இராமியாணம் என்றும் பேசக் கேட்டிருக்கிறேன். வியாபாரத்தை (வணிகம்), இராமாயணத்தை இப்படிப் பிழையாகச் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டுவிட்டார்கள்.
கனவுப் பட்டறை என்று சரியாகச் சொல்லி கனவு பட்டறை என்று எழுத்தில் காட்டுகிறார்கள். மணிச் செய்திகள் என்று சொல்லி மணி செய்திகள் என்று எழுத்தில் காட்டுகிறார்கள். வேறுபாடு புரிவதில்லையா?
(தமிழ் வளரும்)
இதையும் படிக்க.. கட்டளையிடும் ஔவையார்! பிழையற்ற தமிழ் அறிவோம் - 70
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.