காரை பெயர்ந்த சுற்றுச்சுவர், உயர்ந்து நிற்கும் பழைய கட்டடம், ஒரே கருங்கல்லில் நான்குபுறமும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட முன் மண்டபம் என பார்ப்பதற்கே பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது எரசக்கநாயக்கனூர் ஜமீன் மாளிகை.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா தென்கிழக்குப் பகுதியில் கண்டமனூர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு இடையே உள்ளது எரசக்கநாயக்கனூர் ஜமீன். இது 59 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஐந்து கிராமங்கள் அடங்கிய பகுதியாகும்.
ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆட்சிக்கு உள்பட்டதாக ஆரம்பத்தில் இருந்த இப்பகுதி பின்னர் பாளையமாகத் திகழ்ந்தது.
1790-ல் இதன் முதல் பாளையக்காரராக முத்து அழகிரி நாயக்கர் இருந்தார். அப்போது ஆங்கிலேயர் பாளையத்தை ஜமீன் என்ற பெயரில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன்படி முதல் ஜமீன்தாராகப் முத்துஅழகிரி நாயக்கர் திகழ்ந்தார். குறுகிய காலத்திலேயே முத்துஅழகிரி நாயக்கர் இறந்ததால், அவரது 8 வயது மகன் சின்ன ஓவளநாயக்கர் ஜமீன்தாராகப் பதவியேற்றார்.
இவர் வளர்ந்து பெரியவராகி சின்னம்மாள் என்ற பெண்ணை மணந்தார். அவருக்குக் குழந்தை இல்லை. இதனால் இரண்டாவதாக பாப்பம்மாள் என்பவரை மணந்தார். இந்த நிலையில் 28 வயதில் சின்ன ஓவளநாயக்கர் இறந்தார்.
இதனால், அவரது மூத்த மனைவி சின்னம்மாள் வருவாய் அதிகாரி அந்தஸ்தில் ஜமீன் பொறுப்பைக் கவனித்தார். இரண்டாவது மனைவியான பாப்பம்மாளுக்கு பிறந்த பெண் வீரகாமுள அம்மாள் பெரியவளாகிய நிலையில் அவருக்கு ஜமீன் பொறுப்பு அளிக்கப்பட்டது. ஆனால், வீரகாமுள அம்மாளுக்கு ஜமீன் பொறுப்பு அளிக்கக்கூடாது என கதிரயசாமி என்பவர் வழக்குத்தொடர்ந்தார். ஆங்கிலேய உயர்நிலைக்குழு இதுகுறித்து விசாரணை நடத்தியது. அதில் வீரகாமுளஅம்மாளுக்கு சாதகமாகத் தீர்ப்புக் கூறப்பட்டது.
இதையடுத்து அவர் ஜமீன்தாரிணியாகப் பொறுப்பேற்றார். இவர் காலத்தில்தான் எரசக்கநாயக்கனூர் ஜமீன் வருவாய் பெருகியதாகக் கூறப்படுகிறது. அதன்மூலம் ஆங்கிலேய அரசுக்கு ஆண்டுக்கு | 2061 கிஸ்தி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்குப் பிறகு அவரது மகன் கதிர்வேல்சாமிநாயக்கர் பதவிக்கு வந்தார். அவருக்கு அம்மையநாயக்கனூர் ஜமீனில் அக்குளம்மாள் என்பவரை மணம்முடித்தனர். கதிர்வேல்சாமி நாயக்கர் 1881 முதல் 1886 வரையில்தான் பதவியில் இருந்தார். ராஜபிளவை நோய் தாக்கி அவர் உயிரிழந்தார். இதனால் அக்குளம்மாள் பட்டத்துக்கு வந்தார். அப்போது அக்குளம்மாளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வீரகாமுளஅம்மாள் எனப் பெயரிட்டனர். அக்குளம்மாள் தனது மகளை அம்மையநாயக்கனூர் ஜமீனாக இருந்த தனது சகோதரர் மகனான சீனிமார்க்கயசாமிக்கு திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு வைரமணி, நாகரத்தினம் என இரு மகள்களும், கதிர்வேல்சாமி எனும் மகனும் பிறந்தனர். அக்குளம்மாளுக்குப் பிறகு அவரது மகள் வழிப் பேரன் கதிர்வேல்சாமி நாயக்கர் ஜமீன் ஆகி 1945 முதல் 1947 வரை இருந்தார்.
கதிர்வேல்சாமி நாயக்கருக்கு கண்டமனூர் ஜமீன் திருமலைராம கிருஷ்ணசாமியப்ப நாயக்கர் மகள் கதிர்வேல் தாயம்மாள் என்ற ராஜமாணிக்கத்தை திருமணம் செய்துவைத்தனர். அவர்களுக்கு ராதாமணி, ரத்னமணி என்ற மகள்களும், காமராஜ் என்ற கதிர்வேல்பாண்டி என்ற எஸ்கேகே பாண்டியன் என்ற மகனும் இருந்தனர்.
எஸ்கேகே பாண்டியனுக்கு 5 குழந்தைகள். அவரது மகன் மாரிரத்தினம் என்ற ஆறுமுகசாமிதான் தற்போது எரசக்கநாயக்கனூர் ஜமீன் மாளிகையில் வசித்து வருகிறார். விவசாயத் தொழில் செய்துவரும் அவரிடம் ஜமீன் குறித்து கேட்டபோது கூறியது:
ஜமீனுக்குரிய பழைய சில பொருள்கள் உள்ளன. மாளிகை போன்ற வீட்டைப் பராமரிக்க முடியவில்லை. இந்த வீட்டில் இருந்தவர்களை பணம் கொடுத்தே வெளியேற்ற முடிந்தது. மகன்
எம்.எஸ்.சி. படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். 4 மகள்கள். அதில் ஒரு மகளின் கணவர் ராணுவவீரர்.
தற்போதுள்ள அரண்மனை வீரகாமுளம்மாள் காலத்தில் 180 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது என்றார்.
நடைமாட்டு வண்டிகளும், ஏராளமான மாடுகளும் ஜமீனில் இருந்துள்ளன. இப்போது 3 மோட்டார் சைக்கிள் மட்டும் உள்ளன. நடைமாட்டு வண்டியிலே ஜமீன்தார்கள் பயணித்துள்ளனர். குறிப்பிட்ட மாட்டுவண்டி காளைகள் நடப்பதே அவை ஓடுவது போல இருக்குமாம். இதுபோன்ற ஒரு மாடு இறந்த நிலையில் அந்த மாட்டின் கொம்பை வைத்து தற்போதும் வணங்கிவருகின்றனர்.
வீரகாமுளம்மாள் காலத்தில் கரியழகர் பெருமாள், லட்சுமிநாராயணப் பெருமாள் உள்ளிட்ட கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கோயில்களுக்கு மானியமாக நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது சிவன் கோயில் பாழடைந்து சிதைந்து உள்ளது.
இப்போதும் ஜமீன் குடும்பத்துக்கு அந்தப் பகுதி மக்கள் மரியாதை அளிக்கத் தவறுவதில்லை என்கிறார் மாரிரத்தினம். ஊரில் மழை இல்லாவிடில், ஜமீன் கதிர்வேல்பாண்டியன்-அக்குளம்மாள் படத்தை மாட்டுவண்டியில் வைத்து ஊரை வலம்வந்தால் மழை பெய்யும் என நம்புகின்றனர்.
தற்போது பாழடைந்து கிடக்கும் பங்களாவின் கீழ்ப்பகுதியில் மாரிரத்தினம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஜமீன் மாளிகையின் முன்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க இடம் அளித்து அதில் வருவாய் தேடும் நிலையும் உள்ளது. ஊர் பொதுக்குளம், பள்ளிக்கூடம் என பல சமுதாயச் சேவைகள் செய்த ஜமீன் குடும்பம் இன்று மாளிகையை பராமரிக்கக்கூட பணமின்றியும், யோசித்து செலவழிக்கும் நிலையிலுமே இருப்பதைக் காணமுடிகிறது. இங்கு அடிக்கடி சினிமா படப்பிடிப்பும் நடப்பதுண்டு.
ஒரு காலத்தில் ஜமீன்தார் பராக்... பராக்... என்ற குரல் கேட்ட உடனேயே குதிரை வண்டிகள், நடைமாட்டு வண்டிகள் என வரிசையாக அணிவகுக்கும். ஜமீன்தார் எந்த வண்டியில் ஏறுகிறார் எனத் தெரியாமல் பதற்றத்துடன் கைகட்டி நிற்பார்கள் பணியாளர்கள். இப்போது, அந்த மாளிகை அமைதியாக, கடைசிக்காலத்தை கழிக்கும் முதியோரின் நிலையில் காட்சியளிக்கிறது.
காலம் அதன் கணக்கில் ஜமீனை மறந்தாலும், அந்த சரித்திரத்தின் சாட்சியாக எழுந்து நிற்கும் இந்தக் கட்டடம் இன்னும் எத்தனை காலம் ஜமீனை நினைவுபடுத்துவதாக நிற்கப்போகிறதோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.