மதுரை மாநகரம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது உலகச் சிறப்பு வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்தான். சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, பார்வையாளர்கள் அதிசயிக்கும் வகையிலும், கோயிலோடு ஐக்கியப்பட வைக்கும் சக்தியுடன் இத்திருக்கோயில் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
இத்திருக்கோயிலைச் சுற்றியே நகரின் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. தாமரைப் பூவின் இதழ்கள் எப்படி மைய மகரந்தத்தைச் சுற்றி விரிந்திருக்கின்றனவோ, அதுபோலவே சித்திரை வீதிகள், ஆடி வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள் என மதுரை நகரின் வீதிகள் அனைத்தும் அழகுற அமைந்திருப்பதைக் காணலாம். வீதிகள் அனைத்தும் தமிழ் மாதங்களின் பெயரால் அழைக்கப்படுவது சிறப்பு அம்சம்.
திருக்கோயிலில் அருள்மிகு சுந்தரேஸ்வரரும், அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சியும் எழுந்தருளியுள்ளனர். சுந்தரேஸ்வரருக்கு மட்டும் 5 கோபுரங்களும், அம்மனுக்கு 3 கோபுரங்களும் உள்ளன. சித்திரை வீதிகளில் ஒவ்வொன்றிலும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன. கோயிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. மாலிக்காபூர் படையெடுப்புக்கு முன்னதாக இங்கு 28 கோபுரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தெற்கு கோபுரத்தில் நிறைய விக்ரகங்கள் காணப்படுகின்றன. மேற்கு, கிழக்குக் கோபுரங்களில் சுதை வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. வடக்குக் கோபுரம் சுதை வேலைப்பாடுகள் இன்றி உள்ளது. இதனால் இதை மொட்டைக் கோபுரம் எனவும் அழைக்கின்றனர். சித்திரை வீதிகளில் தற்போது டைல்ஸ் பதிக்கப்பட்டு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் சுற்றிவர வசதியாக பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன.
வடக்குக் கோபுர வாசலில் முனீஸ்வரர் சந்நிதி உள்ளது. கிழக்குக் கோபுரம் அருகே மதுரை வீரன் சந்நிதி உள்ளது. இடையில் காந்தி மண்டபம் உள்ளது. தெற்குக் கோபுரம் வழியாக நுழைந்தால், எதிரே தெரியும் முக்குருணி விநாயகரை தரிசித்தபடியே அம்மன் சன்னதிக்குச் செல்லலாம். அம்மன் சந்நிதி எதிர்ப்புறம் பொற்றாமரைக்குளம் உள்ளது. தெற்கு கோபுரம் வழியாக அம்மன் சந்நிதி செல்லும் வழியில் விபூதி பிள்ளையார் சிலை உள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மன் சந்நிதி எனப்படும் கிழக்குக் கோபுர வாயில் வழியாகவே அஷ்டசக்தி மண்டபம் வழியே வந்து உள்ளே செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி வந்து பின்னர் அம்மன் சந்நிதிக்குள் செல்வதையும் பெரும்பாலானோர் கடைப்பிடித்து வருகின்றனர்.
மீனாட்சியம்மன் சந்நிதி இரு பிராகாரங்களுடனும், இரு கோபுரங்களுடனும் அமைந்துள்ளது.
அம்மன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அவருக்கு நேராக வெளிப்பிராகாரத்தில் கோபுரம் இல்லாத வாயில் உள்ளது. அம்மன் சந்நிதியில் வழிபட்ட பிறகு சுவாமி சந்நிதிக்குச் செல்லும்போது சுவாமி சந்நிதி வெளிப்பிராகாரத்தின் வலது பகுதியில் செல்லலாம்.
அப்போது சுவாமி சந்நிதி வலது வெளிப்பிராகாரக் கூரையில் சுழலும் லிங்க ஓவியம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். அடுத்ததாக முக்குருணி விநாயகர் சந்நிதி பிரமாண்டமாக உள்ளது. திருமலை நாயக்கர் காலத்தில் தெப்பக்குளம் தோண்டப்பட்டபோது இந்த விநாயகர் சிலை கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்ததாக சுவாமி சந்நிதிக்குள் கம்பத்தடி மண்டபம் (சுவாமி சந்நிதி எதிரே உள்ள கொடிமரம் முன்புள்ள வழியாக) செல்லலாம். சுந்தரேஸ்வரர் சந்நிதி 3 பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. சந்நிதியிலிருந்து கிழக்குக் கோபுரம் வரையில் 5 கோபுரங்கள் அமைந்துள்ளன. சுவாமி சந்நிதியில் இடது புறம் வெள்ளி அம்பலத்தில் நடராஜர் கால்மாறி ஆடும் சிலை உள்ளது. நடராஜர் கோயிலை தமிழகத்தில் சபை என அழைக்கிறார்கள். அதன்படி இந்த வெள்ளி அம்பலம் ரஜதசபை (வெள்ளி) எனப்படுகிறது.
சுவாமி சந்நிதி அடுத்த உள்பிராகாரத்தில் 63 நாயன்மார், சப்தமாதர்களும், வலதுபுறம் சரஸ்வதி, அடுத்து தென்மேற்கு மூலையில் தட்சிணாமூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சுவாமி சந்நிதி பின்புறம் பிச்சாடணர் உள்ளார். சந்நிதிக்கு மேற்கு மூலையில் சித்தர், துர்க்கையும், வடகிழக்கு மூலையில் மகாலெட்சுமியும், அடுத்து பைரவரும் இடம் பெற்றுள்ளனர்.
சுவாமி சந்நிதி முன் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் கோயில் கொடிமரம், அதைச் சுற்றிலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மீனாட்சி திருக்கல்யாணம் உள்ளிட்ட பழமைச் சிற்பங்கள் நிறைந்துள்ளன. ஆகவே அந்தப் பகுதி சிற்பக் கருவூலமாகத் திகழ்கிறது. கொடி மரத்துக்கு முன் வீரபத்ரகாளி, வீரபத்திரர் ஆகிய விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன. சந்நிதிக்கு இடதுபுறம் நவக்கிரகங்கள், தியான மண்டபம் ஆகிவை இடம் பெற்றுள்ளன.
சுவாமி சந்நிதி, கம்பத்தடி மண்டபம் ஆகியவற்றுக்கு முன்னதாக கிழக்குக் கோபுரம் செல்லும் வழியில் நந்தியும், அதையொட்டி ஈசான மூலையில் ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன.
கிழக்காடி-வடக்காடி வீதி சந்திப்பில் மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு நடைபெறும் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. வலதுபுறம் வன்னிமரத்தடி விநாயகர் சந்நிதியும் அதன் முன் யானை, ஒட்டகம் பராமரிக்கும் இடமும் உள்ளன.
மேல ஆடி வீதியில் பசு மடம் உள்ளது. வடக்காடி வீதியில் திருவள்ளுவர் கழகம் உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மனித மூளையின் வடிவமாகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இத்திருக்கோயிலுக்கு உரிய துணைக் கோயில்கள் 22 உள்ளன. இதில் பழைமையான முக்தீஸ்வரர் திருக்கோயிலும் அடங்கும்.
பூஜைகள்: கோயில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு ஸித்தி விநாயகருக்கு பூஜை தொடங்கும். அதன்பின் திருவனந்தலா எனப்படும் அம்மன் சந்நிதி அருகே பள்ளி கொண்டிருக்கும் சோமசுந்தரப் பெருமானை துயில் உணர்த்தி வழிபாடு செய்யும் பூஜை நடைபெறும். பின்னர் மீனாட்சியம்மை ஆற்றலைப் பள்ளியறை உற்ஸவ திருவுருவுக்கு மாற்றும் மூக்குத்தி தீபாராதனை நடைபெறும்.
காலை 6.30 மணி முதல் 7.10 மணி வரையில் சந்நிதிகளில் திரையிடப்படும். திரிகாலசந்தி, உச்சிக்கால பூஜையாக ஆலவட்டம் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். பின்னர் 10.30 மணி முதல் 11.10 வரையில் திரையிடப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
பகல் 12.30 மணிக்கு கோயில் நடை முழுமையாகச் சார்த்தப்பட்டு பின்னர் மாலை 4.00 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.
பின்னர் இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரையில் அம்மன் சந்நிதி திரையிடப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் பள்ளியறை பூஜை தொடங்கி நடக்கும். அதன்பின் இரவு 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோயில் நடைசார்த்தப்படும்.
விழாக்கள்: கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும், சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத்திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை முக்கியமானதாகும். தமிழ் மாதமான சித்திரையில் நடைபெறும் இவ்விழாக்களில் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை புகழ்பெற்றவை. 12 நாள்கள் இத்திருவிழா நடைபெறுகிறது.
வைகாசி வசந்த உற்சவம், ஆனி ஊஞ்சல் விழா, ஆடி முளைக்கொட்டு, ஆவணியில் பிட்டுக்கு மண்சுமந்த வரலாறு, புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்டத் திருவிழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி எண்ணெய்க்காப்பு விழா, தை தெப்பத்திருவிழா, மாசிமகம், பங்குனி கோடை வசந்த விழா ஆகியவை நடைபெறுகின்றன.
கோயில் கிழக்குப் பகுதி சுற்றுச்சுவர் சிறிய பகுதி புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. கோபுரங்களில் நுழைவோரை ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்தும், மெட்டல் டிடெக்டர் சாதனம் மூலம் சோதித்தும் அனுப்புகின்றனர். கோயிலுக்கு என தனியாக பாதுகாப்பு பிரிவை போலீஸ் தரப்பில் அமைத்து கண்காணித்தும் வருகின்றனர்.
தினமும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் என சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.