வேண்டிய வரம், செல்வம் தரும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்

தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் அமையப் பெற்றுள்ளது பிள்ளையார்பட்டி என்னும் சிற்றூர். இங்குள்ள கோயிலில் விநாயக பெருமான் கற்பக விநாயகராக குடிகொண்டு பக்
வேண்டிய வரம், செல்வம் தரும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
Updated on
2 min read

தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் அமையப் பெற்றுள்ளது பிள்ளையார்பட்டி என்னும் சிற்றூர். இங்குள்ள கோயிலில் விநாயக பெருமான் கற்பக விநாயகராக குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பிள்ளையார்பட்டி என்பது பலரும் அறிந்த பெயராக இருந்தாலும் இருகாட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைஸ்வரம், ராசநாராயணபுரம் என வேறு ஐந்து பெயர்களும் இதற்கு உண்டு.

இங்குள்ள அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். காலத்தால் பழமையான இக்கோயில், மகேந்திர வர்ம  பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டு தற்போது நகரத்தார்களால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.

தென்னிந்தியாவில் அர்ச்சுன வனத் திருத்தலங்கள் நான்கு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர், தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், ஆந்திர மாநிலத்தில் சைலம், சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியனயாகும்.

இங்கு அமையப்பெற்றிருக்கும் விநாயகப் பெருமானின் (பிள்ளையார்) துதிக்கை வலம் சுழித்ததாக இருக்கும். மற்ற இடங்களில் விநாயகருக்கு நான்கு கரங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள பிள்ளையாருக்கு இரண்டு கரங்கள்தான். அங்குச பாசங்கள் கிடையாது. மேலும் வயிறு ஆசனத்தில் படியாமல் அர்த்தபத்ம ஆசனம் போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்து, வலக்கரத்தில் மோதகம் தாங்கி அருள்புரிகிறார்.

ஆண்டுதோறும் ஆவணித் திங்களில் வரும் விநாயகர் சதுர்த்தியே இவ்வூரின் பெரிய திருவிழாவாக பத்து நாள் கொண்டாப்பட்டு வருகிறது. காப்புக் கட்டி கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். தினமும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் விநாயகப் பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

சதுர்த்தி விரதம் மேற்கொள்பவர்களும், சதுர்த்தி விரதம் நிறைவு செய்பவர்களும், நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து தங்கி தேசிலிநாயகன் திருமுற்றத்திலே நாள் முழுவதும் உண்ணாநோன்பு இருந்து கும்ப ஜெபம் நடத்தி அபிஷேகம் செய்து  விரதம் முடித்து விநாயகர் அருள் பெறுவர். இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் திருமணத் தடை அகலும், குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர், செய்தொழிலில் முன்னேற்றம் அடையலாம் என்பது பலரின் நம்பிக்கை. நினைத்த காரியம் நடந்தால் பக்தர்கள் நேர்த்திக் கடன்களாக சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.

இத்திருக்கோயிலில் தேர்த் திருவிழா சிறப்பான ஓன்றாகும். விநாயகருக்குத் தேர்த் திருவிழா நடைபெறும் இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஓன்றாகும். விநாயகருக்கும் சண்டிகேஸ்வரருக்கும் இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஓன்றை பெண்களும், மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேஸ்வரருக்கான தேரை பெண்களும் குழந்தைகள் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர்.

இக்கோயிலின் மற்றொரு சிறப்பு விநாயகர் சதுர்த்தியன்று 18 படி அரிசிமாவில் ராட்சத கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஓன்பதாம் நாள் விழாவான தேர் வலம் வரும்  அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுவதால் அக்காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ராட்சத கொழுக்கட்டை: ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகாலப் பூஜையின் போது விநாயகருக்கு முக்குருணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஓரே கொழுக்கட்டையை தயாரித்து நைவேத்தியம் செய்வர். இது மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். 18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் ஓருபடி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ, ஆகியவற்றை சேர்த்து ஓரே கலவையாக்கி உருண்டையாக துணியில் கட்டி மடப்பள்ளியில் உள்ள அன்னக் கூடையில் வைத்துக் கட்டுவார்கள். பின்னர் தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவில் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டிவிடுவர். அந்த பெரிய அளவிலானப் பாத்திரத்தில் இரண்டுநாள் தொடர்ச்சியாக வேகவைக்கப்படும். பின்னர் உலக்கை போன்ற கம்பியில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல் தூக்கி வந்து மூலவருக்கு உச்சிக் காலப் பூஜையில் நைவேத்தியம் செய்வர்.

தினமும் காலை 6 மணி முதல் 12 மணிவரையிலும் பின்னர்  மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். அதன் பிறகு நடை சார்த்தப்படும்.  

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும்,  மதுரையிலிருந்து 75 கி.மீ. தொலைவிலும், இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் காரைக்குடி. அருகிலுள்ள விமான நிலையம் மதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com