நெஞ்சம் மறப்பதில்லை: காலம் விழுங்கிய கடமலைக்குண்டு ஜமீன்!

இடிந்துபோன கட்டடங்கள், காரை பெயர்ந்த நிலையிலும் கலைவண்ணம் அழியாத  குட்டிச் சுவர்கள்....என கேள்விக்குறியாக நிற்கிறது கடமலைக்குண்டு ஜமீன் அரண்மனை. எஞ்சிய மாளிகைப் பகுதியில் ஒரு புறம் பள்ளி மாணவர்களுக்கா
Published on
Updated on
3 min read

இடிந்துபோன கட்டடங்கள், காரை பெயர்ந்த நிலையிலும் கலைவண்ணம் அழியாத  குட்டிச் சுவர்கள்....என கேள்விக்குறியாக நிற்கிறது கடமலைக்குண்டு ஜமீன் அரண்மனை. எஞ்சிய மாளிகைப் பகுதியில் ஒரு புறம் பள்ளி மாணவர்களுக்கான விடுதி அறைகள் அமைந்துள்ளன. மற்றொரு பகுதியில்  ஆடு, மாடுகள் அடைக்கலம் புகுந்துள்ளன. இப்படித்தான் காட்சியளிக்கிறது கடமலைக்குண்டு ஜமீன்தார் அரண்மனை.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைக்கு உள்பட்டது கடமலைக்குண்டு. ஆண்டிப்பட்டி-தேனி சாலையில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி அருகே க.விலக்கிலிருந்து வருஷநாடு செல்லும் வழியில் உள்ளது இந்த ஊர்.

இந்த ஊராட்சியானது ஒரு காலத்தில் தமிழகத்தின் பெரிய ஜமீன்களில் ஒன்றாகத் திகழ்ந்தது என்றால் யாராலும்

நம்பமுடியாது.

மன்னர் ஆட்சிக் காலத்தில் பாளையங்களாக இருந்தவை, ஆங்கிலேயர் ஆட்சியில்ஜமீன்களாக மாறின. இப்படி மாறிய 72 ஜமீன்களில் பெரிய ஜமீனாகவும் அதிக வரிவசூல் செய்யும் ஜமீனாகவும் விளங்கியது கண்டமனூர் ஜமீன். இதன் மொத்த சுற்றளவு 291 சதுரகிலோமீட்டர். ஆண்டு தோறும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு கட்டிய கிஸ்தியின் (கப்பம்) மதிப்பு | 13,414 ஆகும்.

இந்த ஜமீன், பாளையமாக இருந்தபோது மௌஸýம் நாயக்கர்தான் முதல் பாளையக்காரராக இருந்துள்ளார். அடுத்து அவரது மகன் கொண்டலநாகம நாயக்கரும், அவரது மகன் வேலப்ப நாயக்கரும் இருந்துள்ளனர். கடமலைக்குண்டு 1790 முதல் 1817 வரை பாளையமாக இருந்துள்ளது.

வேலப்ப நாயக்கர்தான் முதன்முதலாக கடமலைக்குண்டு ஜமீன்தாராக ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்டு பட்டயச் சான்று பெற்றவர். வேலப்ப நாயக்கருக்கு குழந்தை இல்லை.

ஆகவே அவரது தம்பியான இளைய வேலப்ப நாயக்கர் 1817  முதல் 1830 வரையில் ஜமீன்தாராக இருந்தார். இவர் 3 பெண்களை மணந்த நிலையில் குழந்தைப் பேறு இல்லை. இதனால் நான்காவதாக வெள்ளையம்மாள் என்ற பெண்ணை மணந்தார். வெள்ளையம்மாள் கர்ப்பமானபோது, அரண்மனையில் கொன்றைப் பூ பூத்ததால் அவருக்கு ஆண் மகவு பிறக்கும் என ஜோதிடம் கூறினார்களாம்.

இந்த நிலையில் வேலப்ப நாயக்கர் திடீரென இறந்துவிட்டார். கர்ப்பிணியான வெள்ளையம்மாளிடம் ஜமீன் பொறுப்பை வழங்கக்கூடாது என வேலப்ப நாயக்கரின் தூரத்து உறவினர் ராமசாமி நாயக்கர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த ஆங்கிலேய அதிகாரிகள் வெள்ளையம்மாளுக்குப் பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தைக்கே ஜமீன் வாரிசாகும் தகுதி உண்டு எனவும், பெண் குழந்தை என்றால் ராமசாமி நாயக்கரை ஜமீனுக்கு அதிபதியாக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் கூறிவிட்டனராம்.

இந்தப் பிரச்னையால் 1866 முதல் 1888 வரையில் கண்டமனூர் ஜமீன் ஆங்கிலேய அதிகாரிகளது நேரடிப் பொறுப்பில் இருந்தது. பின்னர் வெள்ளையம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர்தான் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர். அவர் 1888 முதல் 1906 ஆம் ஆண்டு வரை ஜமீன்தாராக இருந்தார்.

திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கரின் மனைவி வேலுத்தாயம்மாள். இவருக்கு முதல் பெண் குழந்தையாக கதிர்வேல் தாயம்மாள் என்ற ராஜமாணிக்கம் பிறந்தார். வேலுத்தாயம்மாள் மீண்டும் கர்ப்பமானபோது அரண்மனை வளாகத்தில் கொன்றைப்பூ பூத்ததால் இரண்டாவதாக பிறப்பது ஆண் என ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர் இறந்துவிட்டார். இதனால் வேலுத்தாயம்மாள் ஜமீனின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தார். அவருக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு டி.ஆர்.எஸ்.கதிர்வேல்சாமி பாண்டியன் எனப் பெயரிட்டனர். அவர் 1906 முதல் ஜமீன்தாரி ஒழிப்பு முறை செயல்படும் வரையில் கடமலைக்குண்டு ஜமீனாக வலம் வந்தார். அவரை "மைனர் ஜமீன்' "மைனர் பாண்டியன்' என்றே அழைத்து வந்துள்ளனர்.

மைனர் பாண்டியனின் சகோதரியான ராஜாமணியை ஏரசக்கநாயக்கனூர் ஜமீனில் திருமணம் செய்துகொடுத்தனர். கடைசிக்காலம் வரை மைனர் ஜமீனான கதிர்வேல்பாண்டியன் திருமணம் செய்யாமலே இறந்துவிட்டார். இப்போது ஜமீனுக்கு நேரடி ஆண் வாரிசு யாருமில்லை.

கடமலைக்குண்டு ஜமீனுக்கு உள்பட்ட நிலப்பகுதி வளம்

மிக்க ஊர்களையும், மலைப்பகுதியையும் உள்ளடக்கியதாக இருந்ததால் ஆங்கிலேயருக்கு அதிக கிஸ்தி (ஆண்டுதோறும் கட்டும் கப்பம்) செலுத்திவந்தனர்.

 இதனால் மற்ற ஜமீன்களைவிடவும் கடமலைக்குண்டு ஜமீன்களுக்கு அதிக சலுகைகளை ஆங்கிலேயர் அளித்துவந்துள்ளனர். அதன்படி 7 குதிரைகள் பூட்டிய சாரட்டில் செல்லுதல் உள்ளிட்ட சிறப்புச் சலுகைகளை கடமலைக்குண்டு ஜமீன்கள் பெற்றிருந்தனர்.

ஆண் வாரிசு இல்லாத நிலையில் இந்த ஜமீனுக்குரிய அனைத்துச் சொத்துகள், பொருள்கள் ஏலம் போனதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜமீனுக்குரிய பொருள்களும், நினைவுபடுத்தும் வகையிலான கட்டடங்களும் இப்போது இல்லை. எட்டையபுரம் உள்ளிட்ட ஜமீன்கள் சார்பில் அந்த அரிய பொக்கிஷங்கள் ஏலம் எடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள் கடமலைக்குண்டு பகுதி மக்கள்.

தற்போது, கடமலைக்குண்டு அருகே ஜமீன்தார்களது சமாதியும் இடிந்த நிலையில் காரை பெயர்ந்து காட்சியளிக்கிறது. ஜமீன் கருவூலமாக இருந்த அறை இப்போது தனியார் வீடாக உள்ளது.

ஆண் வாரிசு இல்லாத நிலையில் பலரும் ஜமீனின் வாரிசு எனக்கூறி எஞ்சிய சொத்துக்கும், உரிமை கொண்டாடி நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும் அப்பகுதி போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கண்டமனூர் ஜமீனில் பிறந்த ராஜாமணியம்மாள் எரசக்கநாயக்கனூர் ஜமீன் கதிர்வேல்சாமி நாயக்கருக்கு வாழ்க்கைப்பட்டார். அவர்களின் வாரிசாக உள்ள மாரி ரத்தினம் இப்போது எரசக்கநாயக்கனூர் மாளிகையில் வசித்து வருகிறார்.

அவரை நேரில் சந்தித்து கண்டமனூர் ஜமீன் குறித்து கேட்டோம். அப்போது அவர் கூறியது:

மூன்று தலைமுறைக்கு முன் கடமலைக்குண்டு மலைப்பிரதேசத்தில் பளியர்சித்தர் இருந்துள்ளார். அவர் கொசுக்களின் வாயைக்கூட கட்டிவைக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்.

அவரை கடமலைக்குண்டு ஜமீன்தார் வரவழைத்து மக்களை கொசுக்கடியிலிருந்து காப்பாற்ற கொசுக்களது வாயைக் கட்டிப்போடவேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு பளியர் சித்தர், தனது மனைவி கர்ப்பிணியாக இருப்பதால் வாயில்லா ஜீவராசிகளான கொசுக்களின் வாயைக் கட்டி அவற்றை இரைதேடாமல் செய்வது நல்லது அல்ல என்றும், வேண்டுமானால் சிறிதுநேரம் அந்தக் கொசுக்கள், யாரையும் கடிக்காமல் கட்டுப்படுத்தி வைக்கமுடியும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஜமீன்தார், சிறிது நேரம் கொசுக்களின் வாயை கட்டிப்போடுமாறு பளியர்சித்தரிடம் வற்புறுத்த, அவரும் அப்படியே செய்துள்ளார். ஆனால், மீண்டும் கொசுக்களது வாயைத் திறக்கும் மந்திரத்தை பளியர்சித்தர் கூறுவதற்குள் அவரைக் கொன்றுவிட ஜமீன்தார் உத்தரவிட்டார்.

பளியர்சித்தர் கொல்லப்பட்ட பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. "நான் எனது குழந்தையைப் பாக்காமலே இறப்பதால், இனி கண்டமனூர் ஜமீனில் ஆண் வாரிசு பிறக்கும் போதெல்லாம் பதவியில் இருக்கும் ஜமீன் உயிருடன் இருக்கமாட்டார் என்று பளியர்சித்தரும் பின்னர் அவரது மனைவியும் இட்ட சாபத்தால், பின்னர் கண்டமனூர் ஜமீனில் ஆண் வாரிசு பிறக்கும் போதெல்லாம் பதவியிலிருக்கும் ஜமீன்தார் உயிருடன் இருப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால், இப்போதும் ஜமீன்தார் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை என்றார்.

டெயில் பீஸ்: கடமலைக்குண்டு ஜமீன்தார்கள் உல்லாசப் பிரியர்களாக இருந்துள்ளனர். இதற்காக பல பெண்களுடன் தொடர்புவைத்திருந்தனர். மல்யுத்த வீரர்களை அரண்மனையில் தங்கவைத்து ஆதரித்தும், ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் நடத்தியும், காட்டிற்கு சென்று வேட்டையாடியும் வந்தனர்.  எது எப்படியோ, மாடமாளிகை, கூடகோபுரங்கள் என வாழ்ந்ததாகக் கூறப்படும் ஜமீன் இன்று அடிச்சுவடு இல்லாமல் அழிந்து போயிருப்பது காலத்தின் கோலம். ஜமீன்தார்களின் புகைப்படத்தைக்கூட வைக்க இடமில்லாமல் போனது யார் செய்த பாவம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com