திரைக்கதிர்: டாப்சின் கதகளி நடனம்

பிடிவாதமான வாலிபனும், இளம் பெண்ணும் தங்கள் லட்சியங்களை எப்படி அடைகின்றனர் என்பதுதான் "வந்தான் வென்றான்' படத்தின் கரு. ஜீவா, டாப்சி ஜோடி. மைசூர் மேல்கோட்டை வனப் பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. இதற்காக வ
திரைக்கதிர்: டாப்சின் கதகளி நடனம்
Updated on
3 min read

பிடிவாதமான வாலிபனும், இளம் பெண்ணும் தங்கள் லட்சியங்களை எப்படி அடைகின்றனர் என்பதுதான் "வந்தான் வென்றான்' படத்தின் கரு. ஜீவா, டாப்சி ஜோடி. மைசூர் மேல்கோட்டை வனப் பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. இதற்காக வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. மரம் வெட்டக் கூடாது, தீ மூட்டக் கூடாது என்ற பல நிபந்தனைகளுடன் ஷூட்டிங் நடந்து வருகிறது. கேரளத்தில் இருந்து கதகளி நடனக் குழுவினர் வந்துள்ளனர். படத்தில் முக்கிய பாடல் ஒன்றில் கதகளி நடனம் அமைக்கப்பட உள்ளது. டாப்சி கதகளி ஆடுவது போல் இந்தப் பாடல் வரும். இதற்காக சிறப்பு பயிற்சி பெற கேரளம் செல்கிறார் டாப்சி. பாடல் காட்சிகள் முடிந்தவுடன் மும்பை வனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மேம்பால செட்டில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது.

 பலநாள் ஆசை!

 "பூ', "களவாணி', "நெல்லு' படங்களுக்கு இசையமைத்ததையடுத்து "தேநீர் விடுதி' என்ற படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.எஸ்.குமரன். "இனிது இனிது' படத்தில் நடித்த ஆதித், ரேஷ்மி இப்படத்தில் மீண்டும் ஜோடியாகிறார்கள். கொடுமுடி, ஸ்வேதா ஆகிய புதுமுகங்களும் இதில் ஜோடியாக நடிக்கிறார்கள். பீக்காக் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் குறித்து எஸ்.எஸ்.குமரனிடம் பேசிய போது, ""திரைப்படக் கல்லூரி மாணவரான நான் அங்கு படித்த ஒளிப்பதிவாளர் பட்டத்திற்கு வேலை கொடுக்காமல் இசையமைப்பாளர் ஆனதும், முதல் படத்திலேயே என் இசை பேசப்பட்டதும் ஆச்சர்யம். தற்போது இசையையும் தாண்டி இயக்குநர் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இசைத்துறையில் நல்ல வாய்ப்புகள் வரும் நிலையில் ஏன் இந்த இயக்குநர் வேலை எனக் கேட்கிறார்கள். ஆனால் என் மனதில் பல நாள்களாக இருந்த ஆசைதான் இது. இயக்குநர் பட்டம் பெறத்தான் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் ஒளிப்பதிவாளர் கோர்ஸ்தான் கிடைத்தது. இருபது ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் என்னுடன் படித்தவர்கள் இதில் தொழில்நுட்பக் கலைஞர்களாக உள்ளனர். நமது வாழ்வோடு எல்லா தருணங்களிலும் ஒன்றிணைந்து விட்ட டீ கடைதான் கதை. தேநீர் விடுதியில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளாத மனிதர்களே கிடையாது. அதுதான் கதை.'' என்றார்.

 வாழ்வின் எல்லைகளை...

 "தமிழ்ப்படம்', "வ குவாட்டர் கட்டிங்' படங்களையடுத்து சிவா கதாநாயகனாக நடிக்கும் படம் "பதினாறு'. அவருக்கு ஜோடியாக மது ஷாலினி அறிமுகமாகிறார். பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை, சபாபதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். "பரதன்', "வி.ஐ.பி.', "புன்னகை பூவே' படங்களுக்குப் பின் இவர் இயக்கும் படம் இது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவா பேசுகையில், ""சினிமா நான் எதிர்பார்க்காத ஒரு துறை. இப்போது என் வாழ்வில் நிறைய மாற்றங்கள். "சென்னை 28' படத்தின் மூலம் அறிமுகமானேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து "தமிழ்ப்படம்', "வ குவாட்டர் கட்டிங்'. எல்லாவற்றையும் மொக்கை படங்கள் என சொல்லிக் கொள்வேன். ஆனால் இந்தப் படம் அப்படியில்லை. இந்தப் படத்தில் நடித்ததற்காக நிஜமாகவே பெருமைப்படுகிறேன். வாழ்க்கையின் சில எல்லைகளை இந்தப் படம் உடைத்து நிற்கும். இப்போதும் நிறைய பேர் நீங்கள் நடிக்கும் வழக்கமான படங்களில் இதுவும் ஒன்றுதானே என்று கேட்கிறார்கள். இது சத்தியமாக மொக்கை படம் இல்லை. இது நான் நடித்ததிலேயே நல்ல படம். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்'' என்றார்.

 உதவும் சட்டக்கல்லூரி அனுபவம்!

 "ஒச்சாயி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தயா அடுத்து "கோட்ட மந்தை' என்ற படத்தில் நடிக்கிறார். ""ஒச்சாயி படத்துக்குப் பின் இப்போது நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன். "ஒச்சாயி' படத்தை தயாரித்த ஆச்சி கிழவி திரைக்கூடம் அடுத்து தயாரிக்க உள்ள "கோட்ட மந்தை' என்ற படத்தில் நடிக்க உள்ளேன். "ஒச்சாயி' போன்றே இது வித்தியாசமான கதை. சினிமாவுக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது. எம்.ஏ.எம்.பில். படித்து விட்டு அடுத்த கட்ட இலக்குக்கு காத்திருந்த போதுதான் "ஒச்சாயி' வாய்ப்பு கிடைத்தது. மதுரை மாவட்ட மக்களிடையே அந்தப் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. "ஒச்சாயி' படத்தின் வெளிநாட்டு உரிமத்தை வாங்கிய டி.எம்.ஆர். நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் சட்ட கல்லூரி மாணவராக நடிக்கிறேன். ஏற்கனவே சட்ட கல்லூரி அனுபவம் இருப்பதால் நிறைய நம்பிக்கை இருக்கிறது'' என்றார் தயா.

 படமாகும் மும்பை தாக்குதல் சம்பவம்!

 மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் 26-ல் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவங்களை மையமாக வைத்து கன்னடத்தில் லெட்சுமி என்ற பெயரில் படம் தயாராகிறது. சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியாமணி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கோமல் நடிக்கிறார். இப்படத்துக்காக மும்பை தீவிரவாத தாக்குதல் குறித்த தகவல்களைச் சேகரிக்கிறார் இயக்குநர் ராகவ் லேகி. தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களின் விவரங்கள், தாஜ் ஹோட்டலில் எந்தெந்த வேலைகளுக்காக தங்கியிருந்தனர், வெளிநாட்டு பயணிகள் குறித்த விவரங்கள், காதலர்கள், தாக்குதலின் போது எடுக்கப்பட்ட கிளிப்பிங்ஸ் ஆகியவற்றை சேகரிக்கும் பணியில் ராகவ் லேகியின் உதவியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சிவராஜ்குமார் தற்போது நடித்து வரும் ஜோகயா படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், லெட்சுமி படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்துக்காக பிரியாமணி நீண்ட நாள்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டியிருப்பதால் தற்போது படப்பிடிப்பில் உள்ள படங்களை வேகமாக முடிக்கிறார் பிரியாமணி.

 சினிமாவில் வராத நடன அசைவுகள்!

 வசந்தபாலன் இயக்கும் "அரவாண்' படத்தில் பழங்கால நடன முறையில் பாடல்கள் உருவாக்கப்படுகின்றன. ஆதி, தன்ஷிகா ஜோடியாக நடிக்கும் இப்படத்துக்கா பழங்கால நடன அமைப்புகளில் நடனங்களை அமைத்து வருகிறார் நடன இயக்குநர் "காதல்' கந்தாஸ். ""மெட்டி ஒலி' சீரியல்தான் எனக்கு விசிட்டிங் கார்டு. "காதல்' படத்தில் ஆரம்பித்த என் பயணம் இப்போது நூறு படங்களை தொட்டு விட்டது. எல்லாப் படங்களிலும் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. "காதல்', "வெயில்', "அங்காடித்தெரு' உள்ளிட்ட படங்களின் நடன அசைவுகள் பெரிய அளவில் பேசப்பட்டன. இப்போது "அரவாண்' உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்து வருகிறேன். "அரவாண்' பீரியட் கால படம் என்பதால் அந்தக் காலக் கட்ட நடன அசைவுகளைப் பாடல்களில் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக சில ஆய்வுகள் மேற்கொண்டு நடனங்களை அமைத்திருக்கிறேன். நம்முடைய பழைய படங்களில் வரும் நடன அசைவுகளையும் இதில் சேர்த்திருக்கிறேன். இதுவரை சினிமாவில் வராத நடன அசைவுகளை நீங்கள் பார்க்கலாம்.'' என்றார்.

 அட்டையில் : அபர்ணா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com