செல்வராகவன் இயக்கத்தில் "இரண்டாம் உலகம்' படத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா.
இது குறித்து அவர் கூறியது, "ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறேன். தனுஷ் நாயகனாக நடிக்கிறார். இது ஒரு மாறுபட்ட கதையாக இருக்கும். செல்வராகவனின் முந்தைய படங்களிலிருந்து இது தனித்து நிற்கும் வண்ணம் உருவாகி இருக்கிறது. செல்வராகவனின் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக கூறுவதில் உண்மையில்லை.
ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களில் நடித்து கால்ஷீட் பிரச்னையில் சிக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. சில படங்கள் அவ்வளவுதான். இன்னும் 50 ஆண்டுகள் கழித்துப் பேசினால் ஆண்ட்ரியா இந்தக் கதையில் இப்படி நடித்தார் எனப் பேச வேண்டும்.
அதுதான் என் குறிக்கோள். இசை நிகழ்ச்சிகளில் இசையமைப்பாளர்கள் கேட்டு கொள்வதின் பேரில்தான் கலந்து கொள்கிறேன். பாடல்களையும் தேர்ந்தெடுத்துத்தான் பாடுகிறேன். நான் பிஸியானவள் எனச் சொல்லிக் கொள்ள ஆசைப்படவில்லை. எனக்குப் பிடித்தவற்றை செய்கிறேன்'' என்றார் ஆண்ட்ரியா.
காதல் Vs தீவிரவாதம்
"நாளை நமதே' படத்தைத் தொடர்ந்து விநயன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "காதல் வேதம்.' இது தமிழில் விநயன் இயக்கும் 5-வது படம். முரளிகிருஷ்ணன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மற்றொரு நாயகனாக கௌதம் நடிக்கிறார்.
கதாநாயகியாக "காதல் சொல்ல வந்தேன்' படத்தில் நடித்த மேக்னாராஜ் நடிக்கிறார். திலகன் மற்றும் சாருஹாசன் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள்.
ஜார்ஜ் லட்சுமி, கிரிஜா, சுதீர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படம் குறித்து இயக்குநர் விநயன் கூறும் போது, ""இன்று உலகம் முழுவதும் வேரூன்றி இருப்பது வன்முறையும், தீவிரவாதமும்தான். அதை எதிர்த்து போராடும் கதைக்களமே "காதல் வேதம்.'
தீவிரவாதத்துக்கும் காதல் வேதம் தலைப்புக்கும் தொடர்பில்லாதது போல் தோன்றும். கதை காதல்தான். அதற்குப் பின்னால் தீவிரவாதம் எந்த விதத்தில் அந்தக் காதலை நசுக்கப் பார்க்கிறது என்பதுதான் திரைக்கதை.
திலகனும் சாருஹாசனும் சுதந்திரப் போராட்ட தியாகிகள். அவர்கள் தாங்கள் போராடி பெற்ற சுதந்திரம் தங்கள் கண் முன்னால் எப்படி அரசியல்வாதிகளால் வியாபாரமாக்கப்படுகிறது என்பதை கண்டு கொதித்து எழும் கேரக்டரில் நடிக்கிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் புதுமையாக இருக்கும்.
பணத்துக்காக வாழும் அரசியல்வாதிகளைத் தோலுரித்துக் காட்டும் தெருப் பாடகன் கருப்பன் என்ற வேடத்தில் திலகன் நடித்திருக்கிறார். சென்னை, கேரளம், பெங்களூர் ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கிளைமாக்ஸ் காட்சி பெங்களூரில் நடத்தப்பட இருக்கிறது'' என்றார்.
உயிர்க்கொலையைக் கண்டித்து...
"கிழக்குச் சீமையிலே', "கருத்தம்மா', "கடல் பூக்கள்', "தமிழ்ச்செல்வன்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய ரத்னகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் "செங்காத்து பூமியிலே'. இந்தப் படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார் இளையராஜா.
""தென்மாவட்டங்களில் நடக்கும் சம்பவங்களும், வாழ்க்கை முறைகளும் மனித உறவுகள் பற்றிய உணர்வையும், உறவுகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகளையும் இதில் பதிவு செய்திருக்கிறேன். கதை முக்கியத்துவத்தை உணர்ந்து இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று நினைத்தோம்.
பத்து நாள்கள் படப்பிடிப்பு முடித்து வாருங்கள், படமாக்கப்பட்ட விதம் திருப்தியாக இருந்தால் இசையமைத்து தருகிறேன் என்றார் இளையராஜா. படப்பிடிப்பு முடிந்து பார்த்த இளையராஜா மகிழ்ச்சியடைந்து இசையமைத்து தந்தார்.
அதோடு இல்லாமல் இந்தப் படத்தை முதன் முறையாக உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையையும் நான் பெற்றுக் கொள்கிறேன் என்று அதிர்ச்சியடைய வைத்தார். புதுமுகங்கள் நடிப்பில் உருவான இந்தப் படத்துக்கு இளையராஜாவின் இந்த அங்கீகாரம் மிகப் பெரிய தகுதியாக இருக்கும். பட்டி தொட்டி மட்டுமில்ல.
நாடு நகரம் மட்டுமல்ல... பாரத நாடு மட்டுமில்ல... உலகம் எங்கெங்கும்... உயிர் கொலையைக் கண்டிக்கும் ஒரே திரைப்படம்.. செங்காத்து பூமியிலே என தன் கைப்பட இளையராஜா எழுதிய வார்த்தைகள் என் சினிமா கனவுகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என்றார் இயக்குநர் ரத்னகுமார்.
பாட்டுக்கு வந்த பஞ்சம்!
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகியோரின் பாடல்களை ஒரே ஆடியோவில் தொகுத்து சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் பாக்யராஜ் பேசியது, ""தத்துவ பாடல்களில் மக்களைக் கவர்ந்தவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் கவர்ந்தவர் சிவாஜி.
இவர்கள் இருவரிலிருந்து மாறுபட்டு பெண்களைக் கவர்ந்தவர் ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர். பாடிய தத்துவ பாடல்களான ""சின்னப் பயலே.. சின்னப் பயலே...'', ""காடு வெளஞ்சென்ன மச்சான்...'', ""தூங்காதே தம்பி தூங்காதே...'' போன்றவை வாழ்க்கையில் நம்பிக்கை தரும் பாடல்களாக அமைந்திருந்தன.
அது போல் தத்துவப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் தரும் நடிகர்கள் இன்றில்லை. ஏதோ ஓரிரு பாடல்களுக்கு அதுபோல் நடிக்கிறார்கள். அவர்கள் அதைத் தொடர்ந்து செய்வதில்லை. ரஜினியின் படங்களில் சில காலம் அது மாதிரியான பாடல்கள் வந்தன.
இப்போது வருவதில்லை. என் மகன் சாந்தனுவுக்கு நான் கூறிய அறிவுரை நடிப்பில் சந்தேகம் இருந்தால் சிவாஜி படத்தைப் பார். ஏழை முதல் பணக்காரர் வரை மாஸ் அட்ராக்ஷன் பெற வேண்டும் என்பதை எம்.ஜி.ஆரின் படங்களில் பார்த்து தெரிந்து கொள் எனச் சொல்லியிருக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.