லா ல்குடியைச் சேர்ந்த புலவர் அருணாவின் மகள் "தமிழ்'. இவருக்கு வயது 33. பள்ளிப் பருவத்திலேயே அப்பாவுடன் கருத்து வேறுபாடு - தற்கொலை முயற்சி, வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம், எச்ஐவி தொற்று, கணவன் மரணம், எச்ஐவி தொற்றாளர்களுக்கான கூட்டமைப்பு, காவல்துறையினருக்கான பயிற்சியாளர் என சோகமும் சுவாரசியமும் கலந்த வாழ்க்கையில் தன்னம்பிக்கையாளராக வலம் வருகிறார் தமிழ். அவருடன் பேசியதில் இருந்து...
தமிழின் குடும்பம் பற்றி...?
அப்பா புலவர் அருணா திராவிடர் இயக்கத்தவர். வீரப்பெண்ணாக வர வேண்டும் என்று ஆரம்பத்திலேயே எனக்கு குச்சி சண்டை பயிற்றுவித்து வளர்த்தார். பள்ளிப் பருவத்திலேயே பெற்றோர் சம்மதம் இல்லாமல் முருகேசன் என்பவருடன் திருமணம். திருமணம் நடக்கும்போது எனக்குப் பதினெட்டு வயது. நண்பர்கள்தான் எங்களுடைய திருமணத்தை நடத்தி வைத்தனர். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை. தற்போது 10-ம் வகுப்பு படிக்கிறாள்.
கணவரின் மரணம் தந்த இழப்பில் இருந்து மீண்டது எப்படி?
பெண் குழந்தை பிறந்த பிறகு சில மாதங்களிலேயே கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் எதையும் வெளிப்படையாகப் பேசமாட்டார். எனவே அவருடன் பேசிப் பேசி அவருக்கு "எச்ஐவி தொற்று' இருப்பதைத் தெரிந்துகொண்டேன். உயிர்கொல்லி நோயால் அவர் பாதிக்கபட்டு இருப்பதைத் தெரிந்து கொண்ட சில மாதங்களிலேயே அவர் இறந்து போய்விட்டார்.
இதற்கு பிறகு மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனையின் முடிவில் எச்ஐவி எனக்கும் தொற்றியிருப்பதைத் தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன். குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்துவிடலாம் என்றெண்ணி தற்கொலை முயற்சியைத் தள்ளிப்போட்டேன். அவளுக்கு எச்ஐவி தொற்றவில்லை என்பதை அறிந்த பிறகுதான் வாழ வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அரசியலில் ஈடுபட்டது பற்றி சொல்லுங்கள்?
எச்ஐவி தொற்றாளர் என்றபோதும் என்னை முதலில் அரவணைத்தது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்தான். அவர்கள் தந்த ஊக்குவிப்பால் மாந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியுற்றேன். அதன் பிறகு அரசியல் தொடர்பில்லை.
விழிப்புணர்வுப் பணிக்கு வந்தது எப்படி?
என் கணவர் இறந்த காலத்தில் எய்ட்ஸ் நோய் உயிர்க்கொல்லி நோய் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால், அவரது மரணத்துக்குப் பிறகுதான் எச்ஐவி- எய்ட்ஸ் தொற்றாளர்களைத் தகுந்த மருத்துவ சிகிச்சையால் நீண்ட காலம் உயிரோடு வாழ வைத்திருக்க முடியும் என்பது தெரியவந்தது. தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியபோது இதற்கான முயற்சி குறித்த விவரங்கள் தெரியவந்தன. எச்ஐவி தொற்றாளர்களுக்கான அந்த மருந்தை இலவசமாக அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த காலத்தில், நாடாளுமன்றக் குழுவை நேரில் சந்தித்து பிரச்னைகளை விளக்கி முறையிட்ட குழுவில் நானும் இடம்பெற்றேன். இப்போது லட்சக்கணக்கானோருக்கு இந்தக் கூட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீங்கள் தலைவராக உள்ள திருச்சி மாவட்ட எச்ஐவி உடன் வாழ்வோர் கூட்டமைப்பு பற்றி கூறுங்களேன்?
நான் தலைவராக உள்ள திருச்சி மாவட்ட எச்ஐவி உடன் வாழ்வோர் கூட்டமைப்பில் இப்போது 1,200 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உறுப்பினர்கள் அனைவரும் எச்ஐவி தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்கின்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் என் மகளும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறாள்.
அன்றாடம் நீங்கள் மேற்கொண்டு வரும் முக்கிய பணிகள் என்னென்ன?
எச்ஐவி தொற்றுள்ள நோயாளிகளுடன் உரையாடுதல், அதன்மூலம் அவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்குதல், அவர்களைச் சமூக ஒதுக்குதலில் இருந்து பாதுகாப்பது, மற்ற மக்களுக்கு எச்ஐவி பரவாமல் தடுப்பது போன்ற முப்பெரும் தளங்களில் தற்போது நான் பணியாற்றி வருகின்றேன்.
இதுவரை நீங்கள் எச்ஐவி தொடர்பான எத்தனை பயிலரங்குகளில் பங்கேற்று இருப்பீர்கள்?
இதுவரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எச்ஐவி- எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பயிலரங்குகளில் பங்கேற்று உள்ளேன். காவல்துறையினரிடம் எச்ஐவி- எய்ட்ஸ் பற்றியும், தொற்றாளர்களின் உரிமைகள் பற்றியும் பேசிய பயிலரங்குகள் சில நூறுகளைத் தாண்டியிருக்கும்.
திருச்சி வயலூர் சாலையிலுள்ள தமிழின் அலுவலகத்துக்கு எப்போதும் சிலர் வந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். எச்ஐவி தொற்று குறித்த அச்சமுள்ளவர்களுக்கு இவரும், இவரின் பணியாளர்களும் எளிமையாக வழிகாட்டுகின்றனர்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட தமிழ் வெறும் எச்ஐவி பாஸிட்டிவ் (தொற்றுள்ள) பெண்மணி மட்டுமல்ல; "பாஸிட்டிவ்' பெண்மணியும்கூட.