

"விஸ்வரூபம்' படம் கமல் நடிக்க செல்வராகவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. திடீரென்று தெலுங்குப் படம் இயக்குவதாக செல்வராகவன் அறிவித்தார். இதையடுத்து அவர் விஸ்வரூபம் படத்திலிருந்து நீக்கப்பட்டு இயக்குநர் பொறுப்பையும் கமலே ஏற்றார். ஹீரோயினாக சோனாக்ஷி சின்ஹா தேர்வானார். ஜூன் முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்கத் திட்டமிடப்பட்டது.
திடீரென்று இதில் மாற்றம் செய்தார் கமல். இதனால் சோனாக்ஷி தரப்பு மற்ற படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் சிரமப்பட்டது. கமல் கேட்ட கால்ஷீட்டில் சோனாக்ஷியால் கலந்து கொள்ள முடியாத சூழல். அந்த நேரத்தில் சஞ்சய் லீனா பன்சாலியின் "ரவுடி ராத்தோட்' ஹிந்தி படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இதையடுத்து "விஸ்வரூபம்' படத்திலிருந்து சோனாக்ஷி வெளியேறினார்.
அவருக்கு பதிலாக தீபிகா படுகோனே}யை நடிக்க வைக்க கமல் முடிவு செய்திருக்கிறாராம். ஏற்கனவே "ராணா' படத்தில் தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினியின் உடல் நிலை காரணமாக ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமல் படத்தில் நடிப்பது பற்றி தீபிகா என்ன முடிவெடுப்பார் என கமல் தரப்பு காத்திருக்கிறது.
ஒரு சேனல் நாயகனின் முகம்!
யுனைடெட் ஸ்டார் ஃபிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "சோக்காலி'. புதுமுகங்கள் சைதன்யா, ராம் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள்.
கதாநாயகியாக சுவாசிகா நடிக்கிறார். கஞ்சா கருப்பு, சிட்டிபாபு, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் புதுமுகம் சரணா. படம் குறித்து அவரிடம் பேசியபோது, ""நிஜ வாழ்க்கை வேறு, கலை வாழ்க்கை வேறு என்பதை விளக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சினிமாவில் நல்லவர்களாக, மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களாக, அன்பு செலுத்துபவர்களாக வருபவர்கள் நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பதில்லை. சினிமாவில் வேறு முகமும், நிஜ வாழ்க்கையில் வேறு முகமும் அவர்களுக்கு உண்டு.
இதுதான் மையக் கரு. ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வரும் ஒருவனுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள். அதைப் பயன்படுத்தி அவன் சமுதாயத்தில் எப்படி உலாவுகிறான்? அவனை இந்தச் சமுதாயம் எப்படி மதித்தது... என்பதுதான் கிளைமாக்ஸ். சுவாசிகாவுடன் மற்றொரு கதாநாயகி தேர்வும் நடக்கிறது. மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்கிறார். பரமத்தி வேலூர்,கரூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார் இயக்குநர் சரணா.
தொப்பை மாதவன்!
போலீஸ் கேரக்டரில் நடிப்பதென்றால் நம் ஹீரோக்கள் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக வைத்திருப்பதுதான் வழக்கம். ஆனால் போலீஸ் வேடத்துக்காக தொப்பை விழும் அளவுக்கு உடல் எடையைக் கூட்டியுள்ளார் மாதவன். லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகி வரும் "வேட்டை' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் மாதவன். ஆர்யா, சமீராரெட்டி, அமலாபால் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்காக தன் உடல் எடையை வெகுவாக கூட்டியிருக்கிறார். கடந்த மாதம் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட மாதவனின் உடல் வெகுவாகப் பெருத்திருந்தது. சக நடிகர்கள் இது குறித்து கேட்டபோது, "வேட்டை' படத்தில் போலீஸôக நடிப்பது குறித்த உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.
போலீஸா? எப்படி? என சிலர் கேட்க ""வேட்டையாடு விளையாடு' கமல், "காக்க காக்க' சூர்யா போல் இல்லாமல் சோம்பேறித்தனமான குண்டான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறேன். காமெடி கலந்த போலீஸ் வேடம் என்றாலும், படத்துக்கான முக்கியமான ரோல் என்னுடையது என்று கூடுதல் தகவல்களையும் அளித்திருக்கிறார்.
மறுக்கிறார் மேக்னா!
"காதல் சொல்ல வந்தேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மேக்னா. மலையாளப் பட உலகில் முக்கிய படங்களைக் கையில் வைத்திருக்கிறார். தற்போது கவிஞர் சினேகனுடன் "உயர்திரு 420' படத்தில் நடித்துள்ளார். தமிழில் சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேர அழைத்த போது மேக்னா மறுத்ததாகத் தகவல்.
இது குறித்து அவரிடம் பேசினால், ""சீனியர் நடிகர்களின் படங்களில் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் இப்போதுதான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். முதலில் சீனியர் நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புதான் வந்தது. நிறைய வாய்ப்புகளை மறுத்து விட்டேன். மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்தது குறித்து கேட்கிறார்கள். அவர் பெரிய ஸ்டார். ஸ்டார் படங்களில் நடிக்க யாருக்குத்தான் பிடிக்காது. ஸ்டார் அந்தஸ்தில் உள்ள சீனியர் நடிகர்களுடன் நடிப்பதில் தவறில்லை.
அது எல்லா நடிகைகளுக்கும் பிடிக்கும். "உயர்திரு 420' படத்தில் அதிக கிளாமர் இருப்பதாக சொல்லுகிறார்கள். பட ஸ்டில்களில் மட்டும்தான் அது தெரியும். படம் பார்க்கும் போது கிளாமர் உறுத்தாது. மலையாளத்தில் முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடித்துவிடும் அளவுக்குப் படங்கள் வந்திருக்கின்றன. அது பற்றி பேச வேண்டாம். அந்தப் பட்டியலில் என் பெயர் இடம் பெறட்டும் அப்போது பார்த்துக் கொள்ளலாம்'' என்றார் மேக்னா.
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்குகிறார் மன்சூர் அலிகான்!
நடிகர் மன்சூர்அலிகான் நடித்து இயக்கும் படம் "கடன் வாங்கி கல்யாணம்'. நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ரோசியா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். படம் குறித்து மன்சூர் அலிகான் கூறியது, ""என் தயாரிப்பில் வந்த முந்தைய படங்கள் வசூல் ரீதியான வெற்றிகளைப் பெற்றது. நகைச்சுவைதான் என் தயாரிப்புகளில் அதிகமாக இருக்கும்.
இந்த முறை இயக்குநராக அறிமுகமாகிறேன். நகைச்சுவைதான் இந்தக் கதையில் அதிகமாக இருக்கும். கதை, வசனத்தையும் நானே எழுதியிருக்கிறேன். கடன் வாங்கவே கூடாது. அப்படி வாங்கினாலும் அதை அடைக்காமல் விடக் கூடாது.
அப்படி அடைக்காமல் விட்ட கடன் எந்த மாதிரியான தொல்லைகளை வாழ்வில் தருகிறது என்பதுதான் கதை. அதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன். கடன் வாங்கி கஷ்டப்படும் பாத்திரத்தில் அம்ரேஷ் கணேஷ் நடிக்கிறார். கடன் கொடுத்தவர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.
அம்ரேஷ் கணேஷ் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இந்தக் கதை அவருக்கு ஏற்றால்போல் இருந்ததால், கதை சொன்னேன். உடனே ஒப்புக் கொண்டார். ஆர். சுந்தரராஜன், பாண்டு, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடிக்கின்றனர். வட மாவட்டங்களில் படப்பிடிப்பு நடக்கிறது'' என்றார் மன்சூர் அலிகான்.
புதுமுகமே போதும்!
"அரசு', "கம்பீரம்', "சபரி' உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேஷ் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் "வெளவால் பசங்க'. இது குறித்து சுரேஷ் கூறும்போது, ""பெரிய நடிகர்களின் படங்களை இயக்கிவிட்டு, இப்போது திடீரென சின்ன நடிகர்களை இயக்குவது குறித்து நிறைய பேர் கேட்கிறார்கள். நல்ல கதைகளைப் படமாக்க வேண்டும் என்பதற்காகத்தன் கொஞ்சம் இடைவெளிவிட்டிருந்தேன்.
இந்தப் படத்துக்கு சின்ன நடிகர்களே போதும் எனத் தோன்றியது. அதனால் புதுமுகங்களை வைத்தே படப்பிடிப்பை முடித்து விட்டேன். என் வழக்கமான ஆக்ஷன் பாணியிலிருந்து எதார்த்தமான கதைக்கு வந்திருக்கிறேன். ஒரு குடும்பத்தில் வேறு வேறு மனநிலை கொண்ட மகன்கள் இருப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும் அவர்களைப் பற்றி ஒரு புரிதல் இருக்கும். ஒருவருக்கு அதிக செல்லம் கொடுப்பார்கள். ஒருவரை கண்டு கொள்ளவே மாட்டார்கள். வெவ்வேறு விதமாக வீட்டில் இருவரையும் நடத்துவார்கள். அது நாட்டுக்கும் குடும்பத்துக்கும் நல்லதா? என்பதுதான் திரைக்கதை. நடன இயக்குநர் லலிதா மணியின் மகன் ராகுல் நாயகனாக அறிமுகமாகிறார்.
மலையாள நடிகை ஊர்மிளாவின் மகள் உத்ரா உண்ணி நாயகியாக அறிமுகமாகிறார். திருவாரூர், திருவில்லிபூத்தூர் தேரோட்டங்கள் பிரபலமானது. அதற்கு அடுத்தாற் போல் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தோரோட்டம் பிரபலமானது. அங்கு நடைபெற்ற சித்திரை மாத தேரோட்டம் முழுவதும் படமாக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், பட்டீஸ்வரம், சுவாமிமலை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார் சுரேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.