நான் 10 ஆண்டுகளாக மனச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வருகிறேன். மனநோய்க்கு ஆயுர்வேதத்தில் ஏதேனும் வைத்தியம் உண்டா?
மனதைச் சார்ந்த ரஜஸ் மற்றும் தமஸ் எனும் இரு தோஷங்களின் ஆதிக்கத்தினால் மனச்சிதைவு நோய் ஏற்படக் கூடும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இவற்றின் ஆதிக்கம், உடலைச் சார்ந்த வாத, பித்த, கப தோஷங்களையும் சீற்றமுறச் செய்யும்.
செல்வம், மனதிற்கு உகந்தவர் இழப்பு போன்றவற்றின் இழப்பைப் பொறுக்க முடியாமல், தாக்குதலையடைந்து உடல் வெளுத்தவராகி, பரிதாபத் தோற்றத்துடன் அடிக்கடி மயக்கமடைவர். புலம்புவர். காரணமின்றி அழுவர். காரணமின்றிச் சிரிப்பர். இழந்த பொருளின் குணங்களைப் பற்றிப் பெருமிதப்படுத்தி எண்ணுவர். வருத்தத்தால் கலக்கமடைந்து அப்பொருளையே தியானம் செய்வர். கண் விழித்திருப்பர். விகாரமாய் சேஷ்டைகளைச் செய்வர் என்று மனச் சிதைவு நோயால் உண்டாகும் அறிகுறிகள் என அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.
பிராம்மீ கிருதம் - கல்யாணக கிருதம் - மஹா கல்யாணக கிருதம் போன்ற நெய் மருந்துகளில் ஒன்றை மட்டும் சிறுகச் சிறுகப் பருகச் செய்து, அம்மருந்தின் பூரண வரவை உடல் ஏற்றதும், அதற்கான குறிகளை வெளிப்படுத்தும். அதன் பிறகு, பாதிக்கப்பட்டவரை ஒரு பெரிய பெட்டியில் உட்கார வைத்து, மூலிகை இலை, தழை, வேர்களால் கொதிக்கவிட்ட நீராவியைச் செலுத்தி வியர்வையை வரவழைத்து, பின்னர் வாந்தி, பேதி சிகிச்சை முறைகளைச் செய்து குடலைச் சுத்தம் செய்வர். பஸ்தி எனும் எனிமா முறை, நசியம் எனும் மூக்கிலிடும் மருந்து ஆகியவற்றையும் பிரயோகிக்க வேண்டும். இந்த சிகிச்சைகளின் மூலம் மனம் தெளிவடையும்.
இவ்வாறு சிகிச்சை செய்வித்தும் நோய் தொடர்ந்து இருந்தால், ஊடுருவிச் செல்லும் நசிய மருந்துகளையும், கண்ணில் இடும் மருந்துகள் கலந்த கண் மை பிரயோகங்களையும் செய்ய வேண்டி வரும். மேலும் சந்தோஷமுண்டாக்குதல், ஆறுதல் கூறுதல், கலங்கச் செய்தல், பயமுண்டாக்குதல், அதட்டுதல் போன்ற வைத்திய முறைகளும், எண்ணெய்த் தேய்ப்பு, மூலிகைப் பொடியைத் தேய்த்தல், புகையிடுதல், மூலிகை நெய் பருகுதல் போன்றவற்றாலும், குடல் சுத்திமுறைகளைச் செய்வதாலும் மனதை சுயநிலைக்குக் கொண்டு வரலாம்.
மேற்குறிப்பிட்ட சிகிச்சைமுறைகள் உத்தமமானவை.
சாதாரணமாக வெளிநோயாளியாக இருந்து கொண்டு சிகிச்சை செய்து கொள்ளக் கூடிய மனச் சிதைவு நோய்க்கான மருந்துகளும் ஆயுர்வேதத்தில் உள்ளன. ஆனால் அவற்றை நீண்ட நாட்கள் சாப்பிட வேண்டிய நிர்பந்தமுண்டு. அவை அனைத்தும் நபருக்கு நபர் வேறுபடும் என்பதால் நீங்கள் ஆயுர்வேத மருத்துவரை அணுகி இதற்கான தீர்வைப் பெறலாம். தலைக்குத் தேய்த்துக் கொள்ளக்கூடிய பிரம்மீதைலம், திரிபலா தைலம் போன்றவற்றின் தொடர் உபயோகத்தாலும் உங்களுக்கு மன அமைதி ஏற்படலாம். சங்கு புஷ்பம், ஜடாமாஞ்சி, வல்லாரை, வசம்பு, அதிமதுரம், பிரம்மீ, சீமக் கொட்டம், திப்பிலி, வாலுளுவை போன்ற மனச்சிதைவை நீக்கும் மிகச் சிறந்த ஆயுர்வேத மருந்துகளை உள்ளடக்கிய டானிக் மருந்துகள், மாத்திரைகள் தற்சமயம் விற்பனைக்கு வந்துள்ளன.
(தொடரும்)