பயறும் பயிறும், புரம் எது? - பிழையற்ற தமிழ் அறிவோம்! – 49

வேண்டாத ஒற்றுகள் - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...
தமிழ் அறிவோம்
தமிழ் அறிவோம்Pandia Rajan
Published on
Updated on
2 min read

நகர்ப்பகுதிக்கு வெளியே அமைந்ததே நாட்டுப்புறம் என்று சொல்லப்பட்டது. அஃதாவது சிற்றூர் (கிராமம்) சார்ந்தவை அவை. அந்த மக்களின் இசை, நடனம் முதலிய கலைகள் நாட்டுப்புறக் கலைகள் எனப்பட்டன.

புரம் என்பது வடசொல். வாழ்விடம் என்னும் பொருள் கொண்டது. புரம் - கோட்டை எனும் பொருளிலும் வரும். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் என்பர் சிவபெருமானை. இந்நாளில் பெரிய நகரங்களின் உள் பகுதிகளுக்குப் புரம் என்று பெயர் அமைத்துள்ளார்கள் (எ-டு) சீனிவாசபுரம், மன்னார்புரம். பெருநகரில் அண்ணாநகர், பெசன்ட் நகர் என்று சொல்லுகிறோமே அதுபோன்றது புரம் என்பதும்.

அந்த நாளில் மன்னர்களின் அரண்மனையில் அரசியார் இருக்குமிடம் அந்தர்ப்புரம் எனப்பட்டது. (அந்தப்புரம் என்பது பிழை) அந்தர்ப்புரம் என்பதே சரி. (கதிரைவேற் பிள்ளையின் பேரகராதி காண்க) இச்சொல்லுக்கு உள் வீடு, அரசியார் மாளிகை என்று பொருள் கொள்ளலாம். நாட்டுப்புறத்தோடு - புரத்தைச் சேர்ப்பது பொருந்தாது.

முன்னர் எழுதினோம்: மாறன் - தமிழ்ச்சொல் (பாண்டியன்). மாரன் - வடசொல் (மன்மதன்). ஆதலின் சுகுமாரனைச் சுகுமாறன் என்றெழுதுதல் பிழை என்பதாக. (திருமாறன், நன்மாறன், நெடுமாறன் - நற்றமிழ்ச் சொற்கள்) அதுபோன்றே நாட்டுப்புறம் என்பதை நாட்டுப்புரம் எனல் பிழையேயாகும்.

மீண்டும் மீண்டும் பிழைகள்

இருபது முப்பது ஆண்டுகள் முன்னர் வெளிவந்த நூல்களில், ஏடு, இதழ்களில் இன்றுபோல் பிழைகள் மலிந்திருக்கவில்லை. கையால் அச்சுக் கோப்பவர் மிகக் கவனமாகத் தம் பணியைச் செய்தார்கள். தமிழில் எழுத்தறிவு, சொல்லறிவு நிரம்பியிருந்தார்கள். அப்படியே பிழைகள் இருப்பினும் பிழை திருத்துவோர் அவற்றைத் திருத்திவிடுவார்கள். அத்தகைய புலமை உடையவர்கள் பிழை திருத்துபவராக இருந்தனர். இதற்கும் மேல் எப்படியோ சில பிழைகள் நூலில் இருந்துவிட்டால் கடைசிப் பக்கத்தில் 'பிழையும் திருத்தமும்' ஓர் அட்டவணையிட்டு வெளியிடுவார்கள்.

இந்நாளில் கணினி வழியாக எழுத்துகளைத் தட்டி உருவாக்கும் முறையில் நிரம்பக் கவனக் குறைவு, மொழியறிவு இன்மை, தமிழ்தானே என்னும் புறக்கணிப்பு எண்ணம் ஆகியவை மிகுந்துள்ளன. விளைவு, பிழை மலிந்த ஏடுகள், புத்தகங்கள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டுள்ளன.

ஒரு சிறந்த மனிதரைப் பற்றி எழுதும்போது, 'மத்திய அரசு தமக்கு வழங்கப்படவிருந்த பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்தார்' என்று ஒரு புத்தகத்தில் ஒரு நல்ல எழுத்தாளர் எழுதியிருப்பதைப் படித்தேன். மத்திய அரசால் வழங்கப்படவிருந்த என்றோ, மத்திய அரசு வழங்கவிருந்த என்றோ இருப்பின் இந்த வாக்கியம் பிழையற்றதாகும். இதே புத்தகத்தில் வேறு ஒரு பக்கத்தில் '... நிறுவனத்தில் இவர் வேலைப் பார்த்து வந்தார்' என்றும் இருக்கிறது. வேலை பார்த்தார் என்று ஒற்று (ப்) மிகாமல் எழுதிட வேண்டும். வேலைப் பார்த்தார் எனில் வேல் என்ற கருவியைப் (வேல் +ஐ) பார்த்தார் என்று பொருளாகும். இவ்வாறே வெற்றி பெற்றார் என்பதை, வெற்றிப் பெற்றார் என்றும் எழுதுகிறார்கள்.

பயிர்த்தொழில் என்பது ஒன்று. உழவுத் தொழில் என்றும் உரைப்போம். இந்த உழவுத் தொழில் உலகுக்கெல்லாம் பேருதவியாக (உபகாரமாக) இருப்பதால் இத்தொழிலை வேளாண்மை என்றும் குறிப்பிடுவோம். (வேளாண்மை - உபகாரம் - பேருதவி)

பயறு ஒருவகை உணவுப் பொருள். பாசிப் பயறு, தட்டைப் பயறு, மொச்சைப் பயறு எனப் பல பயறுகள் உண்டு. இந்தப் பயறு என்னும் சொல்லைப் பயிறு ஆக்கக் கூடாது. ஆனால், அரசு விளம்பரம் ஒன்று அரசுத் தொலைக் காட்சியில் வருகிறது. அதில், பயிறு வகைப் பயிர்களுக்கு.... என்று எழுத்தில் காட்டுகிறார்கள். இது பிழை. இவ்வாறே பயிர்களுக்கு என்னும் சொல்லை பயிறுகளுக்கு என்றெழுதுவதும் பிழையே. பயறு வகைப் பயிர் என்பதே சரியானது.

(தமிழ் வளரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.