விஸ்வரூபம்' படத்துக்கான கதாநாயகி தேடல் இன்னும் முடிந்தபாடில்லை. செல்வராகவன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்தை கமலே இயக்கி நடிக்க முடிவெடுத்தார். செல்வராகவன் இயக்குவதாகப் பேசப்பட்ட நேரத்தில் ரீமாசென்னுக்கு கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் கமல் வசம் படம் வந்த பின் ரீமாசென் நிராகரிக்கப்பட்டார். தீபிகாபடுகோனிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ரஜினியுடன் "ராணா' படத்தில் நடிக்க இருப்பதால் இப்போதைக்கு வேறு எந்தத் தமிழ்ப் படத்திலும் நடிக்கும் முடிவை எடுக்கவில்லை என அவர் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து வித்யாபாலன், அனுஷ்கா, சமீராரெட்டி உள்ளிட்ட பலரிடம் பேச்சு நடந்தது. கால்ஷிட் பிரச்னையால் அவர்களும் நடிக்கவில்லை. படத்தில் கதாநாயகி கால்ஷிட் ஆறு மாதங்கள் வரை நீளும் என்பதால்தான் நடிகைகள் பலர் நடிக்க முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்காக ஹிந்தி நடிகை இஷான் ஷெர்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கமலின் சகோதரியாக அவர் நடிக்கிறார். இஷான் ஷெர்வானி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாயகனுக்கே நாயகிக்குத் தட்டுப்பாடா?
சனுஷாவுக்குப் பதில் பாமா!
செல்வராகவனின் "இரண்டாம் உலகம்' படத்திலிருந்து ஆண்ட்ரியா வெளியேறினார். "போல் பச்சான்' என்ற ஹிந்திப் படத்திலிருந்து ஜெனிலியா வெளியேறினார். இவர்களைத் தொடர்ந்து கன்னடப் படம் ஒன்றிலிருந்து வெளியேறி இருக்கிறார் சனுஷா. கணேஷ் நடிக்கும் கன்னடப் படம் "சைலு'. எஸ்.நாராயண் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக சனுஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கால்ஷிட் கொடுத்தப்படி சனுஷா ஷூட்டிங் வரவில்லை. கோபம் அடைந்த இயக்குநர் சனுஷாவிடம் கேட்ட போது, ""அதே தேதியில் நடிக்க மலையாள படம் ஒன்றுக்கு கால்ஷிட் கொடுத்து விட்டேன்'' என்றார். இதையடுத்து "சைலு' படத்திலிருந்து சனுஷா நீக்கப்பட்டார். இதனால் ஷூட்டிங் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. ""சைலு' படத்துக்கு அதிக நாள்கள் செலவழித்து விட்டேன். மேலும் தாமதப்படுத்தினால் என்னால் கால்ஷிட் தர'' முடியாது என்று ஹீரோ அவசரப்படுத்தினார். இதையடுத்து சனுஷாவுக்குப் பதிலாக பாமா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சின்னக் கவுண்டரின் சின்னக் கவுண்டர்!
தன் மகன் சண்முகப்பாண்டியனை ஹீரோவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் விஜயகாந்த். இதற்காக நியமிக்கப்பட்ட தனிக் குழுக்கள் இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வருகின்றன. புதுமுக இயக்குநர்களுக்கு ஒரு குழு, பிரபல இயக்குநர்களுக்கு ஒரு குழு எனத் தனித்தனியாக கதை வேட்டை நடக்கிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களும், 10-க்கும் மேற்பட்ட பிரபல இயக்குநர்களும் கதை சொல்லி முடித்திருக்கிறார்கள். தேர்வு செய்யப்பட்ட 10 கதைகளில் மூன்று கதைகளின் திரைக்கதை வடிவம் விஜயகாந்திடம் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் இரண்டு பிரபல இயக்குநர்களின் கதையும் ஒரு புதுமுக இயக்குநரின் கதையும் அடக்கம். முதல் படம் காமெடி கலந்த ஆக்ஷன் பாணியில் இருக்க வேண்டும் என நினைக்கிறாராம் விஜயகாந்த். இயக்குநர் பூபதி பாண்டியனின் கதை ஒன்று பிடித்துப் போக, அவரை அழைத்து விஜயகாந்த் பேசியதாகவும் தெரிகிறது. சின்னக் கவுண்டரின் சின்னக் கவுண்டர் வருகிறார் பராக்... பராக்!
அழகாய் பூக்குதே...
எஸ்.எஸ்.வி. எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "அழகாய் பூக்குதே'. கதாநாயகனாக ராக்கா அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஜெர்ஷா அறிமுகமாகிறார். புதுமுகங்கள் பலர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ராஜ். படம் குறித்து அவர் பேசியது, "" காதல்தான் களம். நல்ல அனுபவங்களை வாழ்வின் எல்லா நேரங்களிலும் காதல் தருவதில்லை. சிலருக்கு வாழ்வின் கடைசி எல்லை வரை ஞாபகங்களை மட்டுமே தருகிறது. சிலருக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் கசந்து விடுகிறது. திருமணத்துக்குப் பின் பிரிந்து போன காதல்கள் தனி. எல்லா கால கட்டத்திலும் எல்லோருக்கும் காதல் ஓர் அனுபவம். இதில் வரும் கதையும் அப்படித்தான். சமூகத்தின் கீழ் தட்டில் உள்ள இளைஞனுக்கும், காவல் துறை அதிகாரியின் தங்கைக்கும் காதல். அது முட்டி மோதி ஜெயிக்கிறதா என்பதுதான் திரைக்கதை. அதிகார வர்க்கத்துக்கு பயந்து காதல் ஜோடிகள் ஊரை விட்டு ஓடுகிறார்கள். நண்பர்கள் துணையுடன் காட்டுப் பகுதிகளில் தஞ்சமடையும் ஜோடிக்கு அங்கு நேர்ந்த அனுபவங்கள் என்ன என்பதைத் திகைக்க வைக்கும் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறோம். பேராவூரணியை ஓட்டியுள்ள வனப்பகுதிகளில் ஷூட்டிங் நடந்து வருகிறது'' என்றார் இயக்குநர் ராஜ்.
எப்போதும் இல்லை... எப்போதாவது!
இனி எப்போதும் நடிப்பில்லை. எப்போதாவது மட்டுமே நடிப்பேன் என்றார் பாடலாசிரியர் சினேகன். "உயர்திரு 420' படம் குறித்து அவர் பேசும் போது, ""வாழ்க்கைக்கான போராட்டங்கள் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்வதே சிரமம் ஆகிவிடும் சூழ்நிலையில் எல்லா மனிதர்களும் தவறுகிறார்கள். நேர்மைக்கும், உழைப்புக்கும் நிறைய சவால்கள் காத்து கிடக்கின்றன. அது மாதிரியான ஒரு நிலையில் தன் வாழ்வை இந்தக் கதையில் வரும் மாந்தர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதுதான் கதை. கதையின் களம் புதிது. எந்தக் கதையின் சாயலும் இருக்காது. புதுப் புது விஷயங்களை முன் எடுத்து வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கதையைப் போலவே ஷூட்டிங்கும் சவால் நிறைந்திருந்திருந்தது. ஆக்ஷனை மையமாக வைத்த கதை என்பதால், நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறேன். நிறைய சேஸிங் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன். கவிஞர் பா.விஜய் ஹீரோவாக நடித்ததால்தான் நானும் ஹீரோவாகி விட்டேன் என நிறைய பேர் பேசிக் கொள்கிறார்கள். அதில் உண்மையில்லை. எனக்கான ஒரு கதை அமைந்தது. நடிக்கக் கேட்டார்கள். நடித்து விட்டேன். "ஞாபகங்கள்' படத்தை பார்த்து விட்டு பா. விஜய்யிடம் ""நீங்கள் கவிஞராகவே நடித்திருக்க வேண்டாம்'' என மனம் திறந்து சொன்னேன். யாருடனும் போட்டி போட இந்தக் கதாநாயகன் வேஷத்தைக் கட்டவில்லை. எழுதுவதுதான் என் முதல் பணி. நடிப்பது எப்போதாவது நடக்கும்'' என்றார் சினேகன்.
பொருத்தமான முத்தம்!
ரம்யா நம்பீசன் மலையாளத்தில் உருவாகி வரும் "சப்பா குரிசு' என்ற படத்தில் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியது, ""ஓர் அழகான காதல் கதையாக உருவாகி வருகிறது "சப்பா குரிசு'. காதலின் மென்மையான உணர்வுகளைச் சொல்லும் படமாக இது இருக்கும். இயக்குநர் பாசில் மகன் சாகத் பாசில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்துக்காக ஒரு முத்தக் காட்சியில் நடித்திருக்கிறேன். இதை மீடியாக்கள் பெரிதுபடுத்துகின்றன. ஏதோ சினிமாவில் யாரும் செய்யாத குற்றம் போலப் பேசுகிறார்கள். நான் முதலில் கிளாமர் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தேன். தமிழில் கிளாமர் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களை நிராகரித்து உள்ளேன். இப்போது வந்துள்ள "சப்பா குரிசு' வித்தியாசமான கதை. தமிழில் வந்த "விண்ணைத்தாண்டி வருவாயா' போல் எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக காதலர்களுக்கு மிகவும் பிடிக்கும். படத்தில் வரும் முத்தக் காட்சி கதைக்குப் பொருத்தமானது. இதில் நடிக்கலாமா என முதலில் யோசித்தேன். படத்துக்கு மிகவும் முக்கியம் எனக் கேட்டதால் பிடிவாதம் பிடிக்கவில்லை. மலையாளத்தில் இரண்டு படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறேன்'' என்றார் ரம்யா நம்பீசன்.