ீணை என்ற சொல்லோடு கலைஞர் எனும் சொல் சேரும்போது 'க்' வருமா? என்று ஓர் அன்பர் தொலைப்பேசியில் வினவினார். ஆம். க் வரும் - கண்டிப்பாய் மிக வேண்டும் என்றேன். வீணை (ஐ) உயிர் ஈறு, (க,ச,த,ப நான்கில்) 'க' வல்லெழுத்து வருமொழி. வீணையை மீட்டும் கலைஞர் என்று பொருள் விரித்தல் வேண்டும். இரண்டாம் வேற்றுமை உருபும் (ஐ) பயனும் (மீட்டும்) உடன் தொக்க தொகை இது என்றேன்.
அப்படியானால் வீணை என்பதோடு கற்றான் எனும் சொல் சேரும்போது 'க்' வருமா? என்றார். 'வராது' என்றேன். இங்கும் வருமொழி க - தானே? ஏன் மிகாது? வீணையைக் கற்றுக் கொண்டான். ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மட்டும் தொக்கி வருவதால் வலி மிகாது என்றேன். தமிழ் கற்றான்- தமிழைக் கற்றான்; தமிழ்ப் பேராசிரியர்- தமிழில் வல்ல பேராசிரியர், தமிழைக் கற்ற பேராசிரியர் என்பதும் ஈண்டு நினைக்கத்தக்க எடுத்துக்காட்டுகள்.
சந்தி பிரித்தெழுதல்
பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்புச் செய்பவர் நன்கு பொருள் விளங்க வேண்டும் என்பதற்காக செய்யுள் அடிகளில் அமைந்த சீர்களைச் சந்தி பிரித்து எழுதுகிறார்கள். சந்தி பிரிப்பதால் பொருள் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. எடுத்துக்காட்டாக,
'தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை'
கொழுநற்றொழுதெழுவாள்- கொழுநனை (கணவனைத்) தொழுது எழுவாள் என்று பொருள் தரும் இதனைக் 'கொழுநன் தொழுது எழுவாள்' என்று பிரித்து எழுதினால் என்ன ஆகும்? கொழுநன் (கணவன்) வந்து தன்னைத் தொழுதிடப் பின் எழுவாள் அவள் என்று ஆகிவிடும்.
வாள்+தடங்கண்= வாட்டடங்கண்; புல்+தரை= புற்றரை. இதனை வாள்த்தடங்கண், புல்த்தரை என்று எழுதுதல் தவறாம். இவ்வாறே பற்பொடி, கற்கண்டு இவற்றை பல்ப்பொடி, கல்க்கண்டு என்றெழுதுதல் பிழை.
அவற்கு, அவட்கு, அவர்க்கு - இம்மூன்று சொற்களின் வேறுபாட்டை இந்நாளில் பலர் அறியார். அவன்+கு= அவற்கு (ஆண்பால்) அவள்+கு= அவட்கு (பெண்பால்), அவர்+கு= அவர்க்கு (பலர் பால்). அங்கு வந்தவற்கு எனின், வந்தவன் ஒருவன் மட்டுமே. அங்கு வந்தவர்க்கு எனில், வந்தவர் பலராவார். இப்போது நாம் இச்சொல்லை வந்தவர்களுக்கு எனக் "கள்' விகுதி சேர்த்து எழுதிப் பழகிவிட்டோம்.
பொன்+தாமரை= பொற்றாமரை என்று ஆவதைவிட்டு பொன் தாமரை என்று எழுதினால் பொன் வேறு, தாமரை வேறு என்று இருபொருளைக் குறிப்பதுபோல் ஆகிவிடக் கூடும். புணர்ச்சி இலக்கணம் மிக விரிவானதொன்று. சில குறிப்புகளை ஆங்காங்கே தருகிறோம்.
கவிஞர்களுக்கு ஒரு குறிப்பு
புதுக்கவிதை வாணர் பற்றி நாம் எதுவும் எழுதுவதற்கில்லை. மரபுப் பாவலர்களுள் இருவகையினர் உள்ளனர். யாப்பு இலக்கணம் முற்றிலும் அறிந்து எழுதுபவர்கள் ஒருவகை. இலக்கணம் அறியாமலே மரபுக் கவிதைப் பயிற்சியால் எழுதுபவர் மற்றொருவகை. வெண்பா எழுதுவதற்கு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட வேண்டும் எனக் கவிஞர் அறிவர். மா முன் நிரை - இயற்சீர் வெண்டளை. விளம் முன் நேர், காய் முன் நேர் வெண்சீர் வெண்டளை என்னும் இவ்விரு தளையன்றிப் பிற வாரா என்பது ஒருவிதி. அவ்வாறே இறுதியில் நாள் (நேர்), மலர் (நிரை), காசு (நேர்பு), பிறப்பு (நிரைபு) எனும் நான்கு அமைப்பில் ஏற்ற ஒன்றைக் கொண்டு முடிதல் வேண்டும். நாள், மலர் என்பன போல் ஓரசைச்சீர் வரும். ஈரசைச் சீராயின் இரண்டாம் அசை குற்றியலுகரமாக இருத்தல் வேண்டும்.
'தேடு பரம்பொருளாம் தெய்வம்' என்பது போலக் கவிஞர் சிலர் ஈற்றடி எழுதிவிடுகிறார்கள். தெய்வம் (நேர்நேர்) தேமாச்சீர் ஆகும். இப்படி வருதல் பிழை. குற்றியலுகர 'யதி' வழு வராமலும் எழுத வேண்டும். 'அன்பு அகத்திருக்க ஆர்வம் பெருகி வர' என்று வெண்பாவின் முதலடி அமைக்கிறார் ஒருவர். அன்பு இதில் உள்ள உகரம் கெடும். அன் பகத்திருக்க - முதற்சீர் ஓரசையாய் நின்று யாப்பு அழிந்தது. அன்ப கத்திருக்க என்று சிலர் பிரித்தாலும் யாப்பு சிதைகிறது. இத்தகைய இடையூறு நேராதவாறு சொற்களை ஆள வேண்டும்.
(தமிழ் வளரும்)