திரைக்கதிர்: இந்தி இஷா தமிழ் பாஷா!

என் சுவாசக் காற்றே', "நெஞ்சினிலே', "நரசிம்மா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இஷா கோபிகர். பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்தார். உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் ஸ்லிம் தோற்றத்தில் கடந்த வ
திரைக்கதிர்: இந்தி இஷா தமிழ் பாஷா!
Updated on
3 min read

என் சுவாசக் காற்றே', "நெஞ்சினிலே', "நரசிம்மா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இஷா கோபிகர். பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்தார். உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் ஸ்லிம் தோற்றத்தில் கடந்த வாரம் சென்னை வந்தவர், தெரிந்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைச் சந்தித்து வாய்ப்பு கேட்டார். ""பார்க்கலாம்'' என சொன்னவர்களுக்குத் தனது செல்போன் எண்களைத் தந்து சென்றவர், தற்போது சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல்.

""தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களைச் சந்தித்தது உண்மைதான். சென்னை வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால் தெரிந்தவர்களையெல்லாம் பார்த்துவிட்டு வந்தார். சென்னை வந்ததன் காரணம் ஒரு புதுமுக இயக்குநரின் அழைப்புதான். பல மாதங்களாக கதை சொல்ல காத்திருந்தவரிடம் சென்னை வந்தே கதை கேட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில்தான் அறிமுகம் என்பதால், எப்போதும் தமிழ் சினிமா வாய்ப்புகளை எதிர்பார்த்து இருக்கிறார். "நெஞ்சினிலே' படத்தின்போது பல ஹிந்தி படங்கள் அவர் கையில் இருந்தது. ஆனால் அதைவிட்டு அப்போது "நெஞ்சினிலே' படத்தை முடித்து கொடுத்தார். பாலிவுட்டிலேயே இத்தனை நாள் இருந்ததால் இனி தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

தமிழ் பேசவும் பயிற்சி எடுத்துவருகிறார். அதனால்தான் இந்த சென்னை பயணம்'' என்கிறது இஷா கோபிகரின் வட்டாரம்.

டாப்ஸி... டாப்ஸிலிப்!

தெலுங்கில் "ஜூம்மண்டி நாதம்' படம் மூலம் அறிமுகம் ஆனவர் டாப்ஸி. இப்படத்தை மஞ்சு லட்சுமி தயாரித்தார். இப்போது தான் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க அவரை மீண்டும் கேட்டிருக்கிறார். இதில் நடிக்க மறுத்து விட்டாராம் டாப்ஸி. ஏற்கனவே லட்சுமியின் படத்தில் நடிக்க டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டாப்ஸி மீது புகார் அளித்திருக்கிறார் லட்சுமி. எப்படியும் டாப்ஸி இந்தப் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என முடிவெடுத்திருக்கிறாராம் லட்சுமி. தெலுங்கு நடிகர் சங்கத்தில் டாப்ஸி உறுப்பினராகச் சேரவில்லை. இப்பிரச்னையில் நடிகர் சங்கத்தின் தயவு தேவைப்படுவதால், நடிகர் சங்கத்தில் சேர முடிவெடுத்தாராம் டாப்ஸி.

அப்போது நடிகர் சங்கத்தில் கால்ஷீட் பிரச்னை காரணமாகவே லட்சுமியின் படத்தில் நடிக்க முடியவில்லை என விளக்கம் அளித்தாராம். இதை கேட்ட நடிகர் சங்கமும் டாப்ஸிக்கு ஆதரவாகவே குரல் கொடுத்துள்ளதாம். டாப்புக்கு போகும்போது இப்படி ஸிலிப்புகள் வருவது சகஜம்தான்.

கற்பைப் போல நட்பும் முக்கியம்!

அகத்தியர் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம் "பீமன் அஸ்தினாபுரம்'. கதாநாயகனாக வசந்த் அறிமுகமாகிறார். "டூ' படத்தில் நடித்து வரும் சங்கீதா பட் கதாநாயகியாக நடிக்கிறார்.

அப்புக்குட்டி, நமோ நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் விஜயவாணன். படம் குறித்து அவர் பேசுகையில், ""உணவு, உடை, இருப்பிடம் இவற்றையெல்லாம்விட அன்புதான் இந்த உலகத்தில் பெரியது எனச் சொல்லுவார்கள்.

அந்த அன்பை வாழ்வின் கடைசி வரை கொண்டு வந்து நிறுத்துவது நட்புதான். நட்பு என்பது கற்பைப் போல உயரியது என்ற கருத்தை உள்ளடக்கியதுதான் இந்த திரைக்கதை. தனது நண்பனுக்குச் செய்கிற துரோகம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதைக் கரு. "பீமன் அஸ்தினாபுரம்' என்ற தலைப்பு ஒரு குறியீடாகத்தான் வைக்கப்பட்டுள்ளது. மலையும், மலைச் சார்ந்த பகுதிகளில் நடப்பதாக திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். யுகபாரதி, அண்ணாமலை ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். சபேஷ் - முரளி இசையமைக்கிறார்கள்'' என்றார் இயக்குநர் விஜயவாணன்.

ராஜபாட்டையில் பயணம்!

"அழகர்சாமியின் குதிரை' படத்துக்குப் பின் சுசீந்திரன் இயக்கும் படம் "ராஜபாட்டை'. விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாள சினிமாவில் பிரபலமான தீக்ஷா ஷேத் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தம்பி ராமையா முக்கிய பாத்திரம ஏற்கிறார். படம் குறித்து விக்ரமிடம் பேசிய போது, ""ராஜபாட்டை' என்ற பெயரே என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறது. "தில்', "தூள்', "சாமி' உள்ளிட்ட படங்களுக்குப் பின் கதையில் புதிய தேடல்கள் இருந்தன.

அனைத்திலும் கதைக்கும் கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்தேன். இதனால் கமர்ஷியல் படங்களில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. "தெய்வத்திருமகள்' வித்தியமான கோணத்தில் என்னை வெளிப்படுத்தும். தற்போது நடித்து வரும் "கரிகாலன்' படமும் அப்படியான ஒரு கதைதான். அடுத்து ஒரு படம் கமர்ஷியலாகத்தான் இருக்க வேண்டும் என யோசித்தேன்.

அதற்கேற்றவாறு இயக்குநர் சுசீந்திரனும் ஒரு அருமையான கதையை கொண்டு வந்தார். "வெண்ணிலா கபடி குழு', "நான் மகான் அல்ல', "அழகர்சாமியின் குதிரை' என அவரும் பல கோணங்களில் செயல்பட்டு வருகிறார். அவர் சொன்ன கதையின் கமர்ஷியல்தனம் பிடித்திருந்தது. முழுக்க முழுக்க சென்னைதான் களம். பாடல்கள் மட்டும் வெளிநாடுகள் படமாக்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார் விக்ரம்.

பூனம் புது அவதாரம்!

ஸ்ரீகாந்த் ஜோடியாக "எதிரி எண் 3' படத்தில் நடித்து வருகிறார் பூனம் பஜ்வா. இது குறித்து அவர் கூறுகையில், ""எதிரி எண் 3' வித்தியாசமான கதையம்சம் உள்ள படம். எனக்கு நல்ல ரோல். இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப ஒரு படம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. தொலைக்காட்சி நிருபர் வேடம்.

இப்படம் எனக்கு திருப்பம் தரும். சில மாதங்களாக நான் தமிழ் சினிமாவில் இல்லை என்பது உண்மைதான். காரணம் கவனம் ஈர்த்த கதைகள் இல்லை. ஒரே மாதிரியாக நடிக்க பிடிக்கவில்லை. ஒரே மாதிரியான தோற்றத்திலேயே நடிக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டேன். அழகாகவும் அதே நேரத்தில் கிளாமராகவும் இருக்கும் ஹீரோயின்கள்தான் சினிமாவில் நிலைத்திருக்க முடியும். எனவேதான் கிளாமருக்கு என்னை மாற்றிக் கொண்டு போட்டோ ஷூட் நடத்தினேன். அதைப் பார்த்து நிறைய பேர் கதை சொல்ல வருகிறார்கள்.

இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. அப்படி வந்த வாய்ப்புகளில் முதலில் டிக் அடித்த கதைதான் இந்த "எதிரி எண் 3'. பாலிவுட்டில் நடிக்க ஆசை இல்லை. தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் அதிக கவனம் செலுத்துவேன். இனி என்னை எல்லாவிதமான கேரக்டர்களிலும் பார்க்கலாம்'' என்றார் பூனம் பஜ்வா.

மீண்டும் ஷோபனா!

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஷோபனா. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். இதே போல் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் ஆகியோருடன் இணைந்து நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

அதன் பின் பரத நாட்டியப் பயிற்சி பள்ளியை சென்னையில் நடத்தி வந்த, ஷோபனா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். தமிழில் சிம்பு நடிக்கும் "போடா போடி' படத்தில் பரத நாட்டிய கலைஞராகவே நடிக்கிறார். கேரளம், புதுச்சேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த முதற் கட்டப் படப்பிடிப்பில் ஷோபனா பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com