ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பற்களைப் பலப்படுத்த..

என் வயது 63. மூன்று கடைவாய்ப் பற்கள் கூசுகின்றன. பல் மற்றும் ஈறு தேய்மானம் இருப்பதால்  அந்தப் பற்களை எடுத்துவிடுவது நல்லது என்று பல் மருத்துவர் கூறுகிறார். சொத்தை இல்லாததால் நான் பல்லை எடுக்க விரும்பவ
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பற்களைப் பலப்படுத்த..
Updated on
2 min read

என் வயது 63. மூன்று கடைவாய்ப் பற்கள் கூசுகின்றன. பல் மற்றும் ஈறு தேய்மானம் இருப்பதால்  அந்தப் பற்களை எடுத்துவிடுவது நல்லது என்று பல் மருத்துவர் கூறுகிறார். சொத்தை இல்லாததால் நான் பல்லை எடுக்க விரும்பவில்லை. எனக்குச் சர்க்கரையும் இரத்தக் கொதிப்பும் உள்ளது. இந்த உபாதை ஏற்படக் காரணம் என்ன? எப்படிக் குணப்படுத்தலாம்?

சி.குமாரசாமி, ஈச்சங்குடி.

"போதக கபம்' எனும் உமிழ்நீர், வாயினுள்ளே எப்போதும் கசிந்து கொண்டேயிருக்கும் ஒரு நீர் ஊற்றாகும். இந்த நீர், நாம் சாப்பிடும் உணவிலுள்ள காரம், புளிப்பு, சூடு போன்றவற்றால் வாயின் உட்புற ஜவ்வுகளில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையுடையது. இதற்கு நேர்மாறாக, இரைப்பையில் உள்ள பித்தத் திரவம், சூடும், வேக வைக்கும் தன்மையும் கொண்டது. இந்தப் பித்தத்திலுள்ள சூட்டைக் கட்டுப்படுத்துவதற்காகவே, வாயிலுள்ள உமிழ்நீர் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கிறது.

பற்கள் திடமாகவும் ஈறுகள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும், இந்த போதக கபமும், வயிற்றிலுள்ள பித்தத் திரவமும் சரியான நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளாலும் உணவு வகைகளாலும் உங்களுடைய வாயிலுள்ள உமிழ்நீர் வலுவிழந்திருக்கக் கூடும். அப்போது, இரைப்பையின் பித்தத் திரவத்திலுள்ள புளிப்பு, வாய்ப் பகுதியைத் தாக்கினால் வாய் வேக்காடு, நாக்குப் புண், பல் கூச்சம், வாய்நாற்றம், பற்களின் இடுக்குகளில் காரை படிதல், சீழ் தங்குதல் போன்ற உபாதைகள் ஏற்படக் கூடும். அதனால் உமிழ்நீரையும், அதிலுள்ள சக்தியைப் பாதுகாக்கவும் ஆயுர்வேதம் கசப்பு, துவர்ப்பு உவர்ப்புமிக்க பொருட்களைக் கொண்டு பல் துலக்க வேண்டும் என்று கூறுகிறது.

அந்த வகையில் எருக்கு, ஆல், கருங்காலி, புங்கு, மருது, மா, வேலம் போன்றவற்றின் குச்சிகளைப் பரிந்துரை செய்கிறது. இரவின் தூக்கத்தினால், உமிழ்நீர் கோளங்கள் சிறிது ஓய்வு பெறுவதால், பித்த வேகத்தை மறுநாள் காலையில் வாய் உலர்வு மற்றும் சிறிது கசப்பின் மூலமாகவும் உணரலாம். கை, கால் கழுவி வாயை நீரால் கொப்பளித்ததும், கோளங்கள் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. அப்போது துவர்ப்பும் கசப்பும் வாயிலுள்ள கபத்தையும் பித்தத்தையும் அகற்றவும், உரைப்பு அவற்றை நெகிழச் செய்யவும் உதவுகின்றன. அந்த வகையில் "தசனகாந்தி' எனும் பல்பொடியைக் கொண்டு காலை இரவு பல் தேய்த்து வர, பல் கூச்சத்திலிருந்து நீங்கள் விரைவில் விடுபடலாம்.

எலும்புகளின் வலுவானது சர்க்கரையின் உபாதையினால் குறையக் கூடும். அதனால் எலும்புகளை வலுப்படுத்தும் கோதுமை, பூண்டு, பச்சைப் பயறு, முருங்கை இலை, கொண்டைக் கடலை சுண்டல், பிரண்டைத் துவையல் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்கவும். எலும்புகளின் ஒரு கழிவான பற்கள் இதுமாதிரியான உணவு வகைகளால் வலுப்படும் என்பதால் உங்கள் உபாதை குறையக் கூடும்.

வெளிப்புறத்திலே மிகக் கடினமான காங்கிரீட் பூச்சு (தந்தவல்கம்), உள்புறத்திலே மிக மென்மையான நரம்பு மண்டலம் அமைந்த ஜவ்வு (தந்த மஜ்ஜா) என்ற அமைப்புடன் கூடிய பற்களை வலுப்படுத்தும் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய அரிமேதஸ் தைலத்தை நீங்கள் இரவில் படுக்கும் முன் ஒரு ஸ்பூன் வாயிலிட்டு, நன்றாகக் கொப்பளித்துத் துப்பி வர, பல் கூச்சம் உபாதை விரைவில் மட்டுப்படும். பற்களின் மேல் புளிப்பு, இனிப்பு கலந்த பொருள் சிறிது நேரம் தங்கியிருந்தாலும் சிறிது சிறிதாகப் பற்களின் கவசம் நொறுங்க ஆரம்பித்துவிடும். அப்போது உட்புற நரம்பு மண்டலம் பாதிப்படையும். அதை இந்தத் தைலம் கெடாமல் பாதுகாத்துவிடும். உணவுப் பொருளைச் சாப்பிட்டதும் வாயை நன்றாகக் கழுவவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com