தமிழின் தனித்தன்மை கெடாதிருக்க.. - பிழையற்ற தமிழ் அறிவோம்! – 37

காசும் பணமும் குலைவும் குழைவும் - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...
தமிழ் அறிவோம்
தமிழ் அறிவோம்Pandia Rajan
Published on
Updated on
2 min read

தமிழிலிருந்து...

ஆங்கில மொழி அகராதியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. கட்டுமரம் (ஒரு வகைப் படகு) என்பது கட்டமரான் என்றும் மிளகுநீர் (ரசம்) முலிகுடவ்னி என்றும் காணலாம். பாதை எனும் தமிழ்ச்சொல்லே பாத் என ஆங்கிலத்தில் ஆகியது. இவ்வாறே நாசி என்பது நோஸ் என்றும் காசு என்பது கேஷ் என்றும் ஆயின எனக் கொள்ளலாம். சந்தனம், சாண்டல் என்றும் அரிசி, ரைஸ் என்றும் ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்றன.

கட்டுமரம், மிளகுநீர், சந்தனம், அரிசி போன்ற பொருட் பெயர்களை அப்படியே தம் மொழியில் தம்மொழி இயல்புக்கேற்ப ஏற்றினர் ஆங்கிலேயர்.

பாதை என்பது வழி, ஆறு (ஆற்றுப்படை), அதர் என்றும் தமிழில் வழங்கக் காணலாம் (ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்). நாசி, மூக்கு என்றே நற்றமிழில் வழங்கப்பட்டு வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி ஐம்பொறிகள் என்போம். இப்பொறிகளால் உணரப்படுவன ஐம்புலன் என்போம். காசு எனும் சொல்லிற்குக் குற்றம் என்ற பொருளும் உண்டு. ஆசு, மாசு, காசு என்பன ஒரே பொருள் கொண்டவை.

பொற்காசு, வெள்ளிப் பணம் என்பவை (காசு, பணம்) மக்கள் பேச்சிலும் எழுத்திலும் இன்றும் இருப்பவை. வாசி தீரவே காசு நல்குவீர் எனத் தேவாரத்தில் காசு (பணம் எனும் பொருளில்) இடம் பெற்றுள்ளது.

முத்தமிழை இயல், இசை, நாடகம் எனப் பிரித்ததுபோல் இன்றைய எழுத்தாக்கத்தில் அச்சியல், கணினியல், வடிவியல் எனும் மூவகைப் பிரிவுகள் அமைந்திருப்பதைக் காண்கிறோம். இந்த மூவகையானும்கூட மொழி சிதையும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றாலும் தமிழ்மொழியின் தனித்தன்மை கெடாமல், விழிப்பாக நாம் இருக்க வேண்டும்.

நேரmo பத்tharai வருவtho நித்thirai என்பதுபோல் எழுத்துக் கலப்புச் செய்து புதுமை செய்கிறார்களாம். வேண்டாம் ஐயா இந்தப் போக்கு.

இது என்ன தமிழ்?

அண்மையில் நிகழ்ந்த தேர்தல் விளம்பரங்களுள் ஒன்று - தொலைக்காட்சி ஒன்றில் எழுத்தில் காட்டினார்கள்:

கண்ணியம் குழையாமல்...

கண்ணியத்தைக் குலைக்காமல் (கெடுக்காமல்) என்று நினைத்துக்கொண்டு இப்படி எழுதியுள்ளார்கள். குழைதல் என்றால் சோறு குழைதல் (மிகவும் வெந்துபோவது) பற்றிச் சொல்லலாம். குழைந்து குழைந்து பேசுபவர் பற்றிச் சொல்லலாம். சுழற்றிச் சுழற்றி வீசுவதைச் சொல்லலாம் (குழைக்கின்ற கவரியின்றி - கம்பன்)

ஒருவர் பேசுகிறார்: 'எல்லார்க்கும் எனது தாழ்வான வணக்கம்'. நல்ல உயர்வான வணக்கத்தை அவர் சொன்னால் என்ன? ஏன் தாழ்வான வணக்கம் சொல்ல வேண்டும். அவர்தம் வணக்கத்தை மிகவும் பணிவோடு (தாழ்மையுடன்) சொல்லுகிறாராம். இந்தத் தமிழ் வேண்டாம் அய்யா... வேண்டாம்!

பலமுறை எழுதிவிட்டோம். ஒருமை, பன்மை பற்றிக் கவலையின்றி வாக்கிய அமைப்புச் செய்கிறார்கள். ஒரு தமிழ்ப் பேராசிரியர் எழுதியுள்ள நூலில், 'அவரது அனுபவ உரை எனக்குப் பெரிதும் பயன் தந்தன' என்று எழுதியுள்ளார். அனுபவ உரை பயன் தந்தது என்றுதானே எழுத வேண்டும்? அல்லது அனுபவ உரைகள் பயன் தந்தன எனலாம். ஏன் இப்படி எழுதுகிறார்கள்? அவரே மேலும் ஓரிடத்தில்: 'எனக்கு எதிர்காலத்தில் பயன்படக்கூடிய நூல்கள் எவையெனத் தாங்கள் நினைக்கிறீர்களோ, அதை வாங்கித் தாருங்கள்'. நூல்கள் எவை எனத் தொடங்கி அதை என முடித்துள்ளார். அவற்றை என்று எழுதத் தெரியவில்லையா? அக்கறை இல்லை. நாவல் இலக்கியம் என்ற சொல்லாட்சியும் பல இடங்களில் அந்நூலில் பார்த்தோம். புதினம் என்று தமிழில் எழுதலாகாதோ?

மற்றொரு மூத்த பேராசிரியர் நூலுள் பார்த்தோம்: 'வீரம், தன்னம்பிக்கை, நாவன்மை, புத்திக் கூர்மை அனைத்தும் அவனிடம் உள்ளது'. அனைத்தும் உள்ளன என்று முடித்திடத் தெரியாதவரா? ஆங்கில மொழியில் எழுத்தாளர் எவரும் இப்படி எழுதுவார்களா? தமிழ் என்றால் அத்துணைத் தள்ளுபடியா?

'முதுகலைத் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. நான் முதல் வகுப்பில் முதல் மாணவனாக பல்கலைக்கழக அளவில் வெற்றிப் பெற்றேன்.' முனைவர் பட்டம் பெற்றவரின் நூலொன்றில் தன்னைப் பற்றி இப்படி எழுதியுள்ளார். மாணவனாகப் பல்கலைக் கழக அளவில் என்று ஒற்றுமிக வேண்டும். அதை விட்டுவிட்டார். வெற்றி பெற்றேன் என்று இயல்பாக (ஒற்று மிகாமல்) வர வேண்டிய இடத்தில் ஒற்றைச் சேர்த்துவிட்டார்!

(தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com