திரைக்கதிர்: தமிழ் கற்கும் பியா!

"கோ' படத்தில் கவனம் ஈர்க்கும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை பியா. அப்பட அனுபவம் குறித்து அவரிடம் பேசினால், ""கோ' நான் நடிக்கும் ஐந்தாவது படம். படத்துக்குக் கிடைத்துள்ள எதிர்பார்ப்பை நான் எதி
திரைக்கதிர்: தமிழ் கற்கும் பியா!
Updated on
3 min read

"கோ' படத்தில் கவனம் ஈர்க்கும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை பியா. அப்பட அனுபவம் குறித்து அவரிடம் பேசினால், ""கோ' நான் நடிக்கும் ஐந்தாவது படம். படத்துக்குக் கிடைத்துள்ள எதிர்பார்ப்பை நான் எதிர்பார்த்தேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு படத்தில் கதைக்குப் பக்க பலமான கேரக்டர். கே.வி.ஆனந்த், ஜீவா, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் ஆகியோரின் அனுபவங்களால்தான் படம் நன்றாக வந்திருப்பதாக நினைக்கிறேன். அனைவருக்கும் என் நன்றி. முதலில் இந்த கேரக்டரில் நடிப்பதற்குப் பயமாக இருந்தது. கதை சொல்லும் போதே இது ஜாலியான கேரக்டர். ஒரே சமயத்தில் கிளாமராகவும், கேரக்டர் ரோலாகவும் நடிக்க நல்ல வாய்ப்பு. 

இனி இப்படி நடிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை என ஆர்வமூட்டினார் கே.வி. ஆனந்த். அவ்வாறு அவர் சொன்னது நம்பிக்கையைக் கொடுத்தது. அடுத்த படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. இன்னும் முடிவு செய்யவில்லை. கிளாமராக நடிப்பதில் எனக்கு இஷ்டம்தான். நீச்சல் உடை என்றாலும் அது கதைக்குத் தேவையானதாக இருக்க வேண்டும். தமிழ் சினிமாவில் கவனம் செலுத்துகிறேன். இதற்காக தமிழ் கற்று வருகிறேன். ஹிந்தி சினிமாவில் ஆர்வம் இருக்கிறது. அதற்கான சூழல் விரைவில் உருவாகும் என நினைக்கிறேன்'' என்றார் பியா.

மகா "தீரன்'!

""நானும் சிரஞ்சீவியும் ஆரம்ப கால நடிகர்கள். இதே சென்னையில் பல தெருக்களில் அவரின் ஷூட்டிங்கும், என் பட ஷூட்டிங்கும் ஒன்றாகவே நடந்திருக்கிறது.  இப்போது அவர் மகன் நடித்து வெளிவந்த "மகாதீரா' படம் அதிர்ஷ்டத்தால் ஓடிய படம் இல்லை.

அதற்குத் தேவையான உழைப்பு அதில் நிறையவே இருக்கிறது. ஆரோக்கியமான படம் இது. தமிழைப் போற்றிக் கொண்டாடுகிற நிறையத் தெலுங்கர்கள் இங்கு இருக்கிறார்கள். தமிழைத் தாய்மொழியாக ஏற்றுக் கொண்டவர்களும் இங்கு நிறையப் பேர் இருக்கிறார்கள்.

நான் தெலுங்கு நடிகர். அதே போல் ராம்சரண் தேஜாவும் தமிழ் நடிகர் ஆக வேண்டும். வெளிநாட்டவர்கள் பலர் இந்திய சினிமா என்றால் அது மும்பையில்தான் எடுக்கப்படுகிறது என நினைக்கிறார்கள். கேரளத்திலும், தமிழ்நாட்டிலும், ஆந்திரம் உள்பட பல இடங்களிலும் சினிமா எடுக்கிறார்கள் என அவர்கள் நினைப்பதில்லை.

அதை உடைக்க தெலுங்கும், தமிழும் சேர வேண்டும். நாம் நினைத்தால் பாகிஸ்தானைத் தாண்டியும் படம் காட்டலாம். உலக வர்த்தகத்தில் நாம் பங்கு எடுத்துக் கொள்ளாதது தவறு என்றே நினைக்கிறேன்.''

"மகாதீரா' படத்தின் தமிழ் பதிப்பான "மாவீரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசினார் நடிகர் கமல்ஹாசன்.



தமன்னா கையில் அரிவாள்!

விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "வேங்கை.' தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். ராஜ்கிரண், ஒய்.ஜி. மகேந்திரன், ஊர்வசி, "நிழல்கள்' ரவி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஹரி. படம் குறித்து அவரிடம் பேசிய போது, ""என் ஃபார்முலா சினிமாதான் இது. குடும்ப சென்டிமெண்ட், காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்துக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. முதன் முதலாக தனுஷ், தமன்னா ஜோடியில் நான் இயக்கும் படம் இது. தனுஷ் முதன் முறையாக அப்பா பேச்சை தட்டாத  நல்ல  பிள்ளை கேரக்டரில் நடிக்கிறார்.

தனுஷ், ராஜ்கிரண் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசனைக்குள்ளாகி நெகிழ வைக்கும். கிராமத்துக் கலாசாரத்தின் பின்னணியில் அழகான காதல் கதையாக உருவாகி இருக்கிறது. "கோபக்காரன் அருவா எடுத்தாதான் தப்பு, காவல்காரன் அருவா எடுத்தா தப்பு இல்லை'.

இதுதான் படத்தின் மையக்கரு. என் படங்களில் வழக்கம் போல் அருவா முக்கியத்துவம் பெறும். அது இதிலும் உண்டு. அருவா சீன்கள் விமர்சனத்துக்குள்ளாவது உண்டு. திருநெல்வேலி கலாசாரத்தில் அதைத் தவிர்த்து கதை சொல்ல முடியாது. இந்தப் படத்தில் கூடுதலாக தமன்னா கையிலும் அருவா இருக்கும்''என்றார் ஹரி.

இளையராஜாவின் கண்ணீர் வார்த்தைகள்!

"சேனாதிபதி' படத்தை இயக்கிய ரத்னகுமார் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் 'செங்காத்து பூமியிலே'. புதுமுகங்கள் நடிக்கும் இப்படம் குறித்து இயக்குநர் கூறியது, ""தேசிய விருதுகளைப் பெற்ற "கிழக்கு சீமையிலே', "கடல் பூக்கள்', "கருத்தம்மா' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன்.

அதன் பின் சினிமாவை விட்டு விலகியிருந்தேன். "சேனாதிபதி' படத்துக்குப் பின் இப்போது நான் உருவாக்கி இருக்கும் திரைக்கதைதான் இந்த "செங்காத்து பூமியிலே'. இயந்திரத்தனமான மனித வாழ்க்கையில் இன்று உணர்வுகளுக்கு மதிப்பு குறைந்து வருகிறது. வறண்டு போன பூமி போல மனித உறவுகளும், உணர்வுகளும் மறைந்து வருகின்றன.

அதை மீட்டெடுக்கின்ற எதார்த்தமான பதிவாக இந்தப் படம் இருக்கும். மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்துள்ளோம். நிலம் சார்ந்த படைப்பாக இது இருக்கும்.  இளையராஜாவின் இசைதான் படத்துக்கு முக்கிய பலம். ரீ ரெக்கார்டிங்கின் போது படத்தை பார்த்த இளையராஜா கண் கலங்கி அருமையான பதிவு

எனப் பாராட்டினார். இளையராஜாவின் கண்ணீர் வார்த்தைகள் எனக்குப் பெரிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இளையராஜாவின் உணர்வை நீங்களும் உணர்வீர்கள்'' என்றார் ரத்னகுமார்.

தட்டிக் கழித்த ஜெனிலியா!

தமிழ், தெலுங்கில் இருந்து ஹிந்திக்கு சென்றவர் ஜெனிலியா. ஹிந்தி சினிமாக்களில் தொடர்ந்து நடித்ததால், ஹீரோ ரித்தேஷுடன் காதல் என செய்திகள் வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் "டான்ஸ் பே சான்ஸ்' என்ற படத்தில் சாகித் கபூருடன் ஜோடி சேர்ந்தார் ஜெனிலியா. இருவரும் தொடர்ந்து விளம்பர படங்களிலும் நடித்து வந்தனர். இதனால் சாகித்துடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. அவர் ஜெனிலியாவுடன் அடிக்கடி போனில் பேசுவதாகவும், ஆனால் இது ஜெனிலியாவுக்குப் பிடிக்கவில்லை என்றும் பேசப்பட்டு வந்தன. ஜெனிலியாவின் நட்பை காதலாக மாற்ற சாகித் முயல்கிறார் என ரித்தேஷ் தரப்பு கருதுகிறது. படத்தின் விளம்பரத்துக்காக ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் காதல் என கிசுகிசுக்கப்படுவது வழக்கம். ஆனால் அதை படத்தின் ரிலீசுக்குப் பின்னும் செய்து வருகிறார் சாகித். 

இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தில் சாகித்துடன் ஜோடி சேர ஜெனிலியாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படத்தின் வாய்ப்பைத் தட்டிக் கழித்திருக்கிறாராம் ஜெனிலியா.

வெள்ளத்தில் சிக்கிய படப்பிடிப்புக் குழு!

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் படம் "மௌனமான நேரம்'. படம் குறித்து இயக்குநர் மோகன்ராஜ் கூறியது, ""ஐ.டி. துறை மாணவர்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அந்தப் பகுதியிலிருந்து அவர்கள் மீண்டு வரும் பரபரப்பான சம்பவங்களே கதை. இதற்காக இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப் பகுதிகளைத் தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். கேரளத்தின் முக்கிய வனப்பகுதியான மறையூர் என்ற இடத்தில் உள்ளது நந்தனா என்ற எஸ்டேட். அதன் அருகில் பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கினோம்.

புதுமுக நடிகை டெய்சிஷா நடனத்தில் பாடலைப் படமாக்கினோம். அடர்ந்த வனப் பகுதி என்பதால் மழை அவ்வப்போது லேசாகத் தூறல் போட்டது. இறுதிக் கட்டத்தில் அங்கிருந்த ஓடை அருகே படப்பிடிப்பு நடத்தினோம்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த அணை ஒன்றைத் திறந்து விட்டனர். திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் செய்வதறியாது திகைத்துப் போனோம். கதாநாயகி டெய்சிஷா மற்றும் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். அந்தப் பகுதியில் பாறைகள் அதிகம் இருந்ததால் பாறைகளைப் பிடித்து அவர்கள் தப்பி வந்தனர். உடனே படப்பிடிப்பை ரத்து செய்து இரண்டு நாள்கள் கழித்து அந்தப் படப்பிடிப்பை நடத்தினோம்'' என்றார் இயக்குநர் மோகன்ராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com