

எம்.எஃப். உசேன் என்கிற மக்பூல் ஃபிதா உசேன், மராட்டிய கலாசார நகரமான புணேயை ஒட்டியுள்ள பந்தர்பூரில் 9.6.1915-ல் பிறந்தார். தந்தை குதிரை வியாபாரி; தாத்தா லாந்தர் விளக்கு வியாபாரம் செய்தவர். குடும்பத்தில் ஏழ்மையே நிலவியது. பரோடாவில் உள்ள மதரஸாவில் ஆரம்ப காலப்படிப்பு. பெரும்பாலும் சுயமாகவே ஓவியம் வரையக் கற்றுக் கொண்டாலும்கூட, பிறகு இந்தூரில் ஓவியப் பள்ளியில் படிப்பு, மும்பை ஜே.ஜே. நுண்கலைக் கல்லூரியில் ஓவியப் படிப்பு படித்துள்ளார். பற்பல வேலை பார்த்தவர்.
இளம் வயதில் சினிமா பலரையும் கவர்ந்தது போலவே உசேனையும் கவர்ந்தது. மராத்தியத்தின் ஆரம்ப கால சினிமா என்பது புணேயைத்தான் மையம் கொண்டிருந்தது.
சினிமாத்துறையில் அரங்குகள் போடும்போது ஓவியம் தீட்டவும், படவெளியீட்டின்போது பேனர்கள் வரைவதுமாக இருந்தார். சாந்தாராமின் பிரபாத் ஸ்டூடியோ மும்பைக்கு இடம் பெயர்ந்ததால் இவரும் அங்கு குடியேறினார். நாளடைவில், பிரபாத் ஸ்டூடியோவில் கலை இயக்குநராகவும் ஆனார்.
இந்தத் தொழிலுடன், இவர் ஓவியக் கலையிலும் ஈடுபட்டு வந்தார். இவர் வரைந்த ஆரம்பகால ஓவியங்களில் குடை, விளக்கு முக்கியத்துவம் பெற்ற பின்னர், பறவைகள், விலங்குகள் எனத் தீட்டி இறுதியில் குதிரை வரைவதில் தங்கிற்று. உசேனின் குதிரைகள் வெகுவாக மக்களைக் கவர்ந்தன. மனிதர்களைப் பற்றிய ஓவியம் தீட்டுகையில் முகமற்றவர்களாகவே அவற்றை வரைந்தார்.
1940-களின் இறுதியில் ஒரு நல்ல ஓவியராகப் புகழ் அடையத் தொடங்கியிருந்தார். 1990-களில் அவரது ஓவியங்கள் பத்து கோடி ரூபாய்க்கு விற்பனையாகி, இவரை புகழின் உச்சத்துக்கு இட்டுச் சென்றன. உலகப் பிரசித்த ஓவியர் பிகாúஸாவுக்கு நிகரானவர் என்றும் சிலரால் பேசப்பட்டார்.
நல்ல சினிமா, மக்கள் சினிமா குறித்து இவரிடம் தனிப்பட்ட கருத்துகள் சில இருந்தன. இக்கருத்துகளின் அடிப்படையில் சினிமாத்துறையில் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அவர் மாறினார். "த்ரூ த ஐஸ் ஆஃப் எ பெயிண்டர்' என்கிற அவரது குறும்படம் பெர்லின் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு "தங்கக்கரடி' விருதினைப் பெற்றது.
பின்னாளில் இந்தி நடிகைகள் மாதுரி தீட்சித்தை வைத்தும், தபூவை வைத்தும் "கஜ காமினி', "மீனாட்சி', "எ டேல் ஆஃப் த்ரீ சிட்டிஸ்' ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து இயக்கினார்.
இந்தியாவின் உயரிய
விருதுகளான பத்மஸ்ரீ(1955), பத்மபூஷண்(1973), பத்மவிபூஷண்(1991) ஆகிய மூன்றும் இவரை நாடி வந்தன. மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆனார் (1986).
ஹிந்து பெண் கடவுள்கள், பாரத மாதாவின் படங்களை வரைந்ததில் ஏற்பட்ட சர்ச்சையில் இவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவரின் கலைக்கூடங்கள் பாதிக்கப்பட்டன. சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவானது. எனவே வெளிநாடுகளில் சுற்றினார். இறுதியில் கத்தார் நாட்டின் பிரஜையாகி தலைநகர் தோஹாவில் தங்கி ஓவியங்கள் தீட்டினார். அவர் எங்கு சென்றபோதிலும், தான் பிறந்த மண்ணை மறக்கவில்லை. "காலம் கனியும்போது இந்திய மண்ணில் அடியெடுத்து வைப்பேன்' என்றே கூறி வந்தார்.
லண்டனில் இறக்கும்போது அவருக்கு 96 வயது நிரம்ப இன்னும் மூன்று மாதங்களே இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.