வெற்றி ஒரேநாளில் கிடைத்து விடாது!

BE POSITIVE இது விக்ரமின் ப்ளட் குரூப் மட்டுமல்ல... அவர் அடிக்கடி உச்சரிக்கும் தாரக மந்திரமும் இதுதான்! எந்தவித சினிமாப் பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் முயற்சியாலும் பயிற்சியாலும் இந்திய அளவில் ச
வெற்றி ஒரேநாளில் கிடைத்து விடாது!
Updated on
4 min read

BE POSITIVE இது விக்ரமின் ப்ளட் குரூப் மட்டுமல்ல... அவர் அடிக்கடி உச்சரிக்கும் தாரக மந்திரமும் இதுதான்! எந்தவித சினிமாப் பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் முயற்சியாலும் பயிற்சியாலும் இந்திய அளவில் சிறந்து விளங்கக் கூடிய ஒரு நடிகராக உருவெடுத்துள்ளார் என்றால் அதற்குக் காரணம், உதிரத்துளிகளை வியர்வைத்துளிகளாக மாற்றும் வித்தையை விக்ரம் கைவரப் பெற்றதால்தான்.

"ராஜபாட்டை' படப்பிடிப்புக்காக கிளம்பிக் கொண்டிருந்த விக்ரமை சந்தித்தோம்.

ஏற்கெனவே பலருக்கு தெரிந்ததுதான் என்றாலும் தெரியாத வாசகர்களுக்காக உங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு..?

விக்ரம் கென்னடி வினோத் ராஜ் என்கிற நான் 1966-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தேன். சொந்த ஊர் பரமக்குடி. அப்பா வினோத் ராஜ். அம்மா ராஜேஸ்வரி. அண்ணன் அரவிந்த். அக்கா அனிதா. ஏர்காட்டில் உள்ள மான்ட்ஃபோர்ட் ஸ்கூலில் பள்ளிப் படிப்பு. லயோலா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டப் படிப்பு முடித்தேன். அதன் பிறகு எம்.பி.ஏ. படித்தேன். மனைவி ஷைலஜா சைக்காலஜி டீச்சர். மகள் அக்ஷிதா, மகன் துரு ஆகியோர் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். போதுமா..?

சினிமா ஆர்வம் வந்தது எப்படி?

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக பரமக்குடியிலிருந்து வீட்டை விட்டு ஓடி வந்தவர் என் அப்பா. பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று போராடியபோதும் சிறு சிறு வேடங்களில்தான் நடித்து வந்தார். அதனால் என் ஜீன்களிலேயே நடிப்பு ஆசை ஊறியிருக்கலாம். சிறு வயது முதலே எனக்கு சினிமாதான் பிடித்த விஷயமாக இருந்தது. பள்ளியிலும் கல்லூரியிலும் பல நாடகங்களில் நடித்தபோது நடிப்பு மீதான வெறி இன்னும் அதிகமானது. ஸ்கூல் முடித்தவுடனேயே நடிக்க வேண்டும் என்று கிளம்பிய என்னை அப்பாதான் வற்புறுத்தி காலேஜில் சேர்த்தார்.

சினிமா வாய்ப்புகள் பற்றி..?

டிகிரி முடித்தவுடன் வாய்ப்புகளுக்காக பல இடங்களில் அலைந்தேன். ஆரம்பத்தில் சோழா டீ, டிவிஎஸ் எக்ùஸல், ஆல்வின் வாட்ச் என விளம்பரப் பட வாய்ப்புகள்தான் கிடைத்தன.

அதன்பிறகு 1990-ல்தான் ஸ்ரீதர் சாரின் "என் காதல் கண்மணி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானேன். அதையடுத்தும் அவருடைய "தந்துவிட்டேன் என்னை' படத்தில் நடித்தேன்.

என் மூன்றாவது படம் பி.சி.ஸ்ரீராமின் 'மீரா'. இந்தப் படங்கள் எனக்கு ஓரளவு அடையாளத்தைக் காட்டினாலும் அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளத்திலும் தெலுங்கிலும் நடித்தேன். அங்கும் சிறு சிறு வாய்ப்புகள்தான் கிடைத்தன. இருந்தாலும் சினிமாவிலேயே இருக்க வேண்டும் என்ற காரணத்தால் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தேன்.

நடிக்க வாய்ப்புகள் குறைந்தபோது பல நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்து வந்தேன். நடிகனாக இருந்துவிட்டு டப்பிங் பேசுகிறோமே என்று எப்போதும் நினைத்ததில்லை. அப்படியாவது நான்கு டைரக்டர்கள் பழக்கம் கிடைக்கும்; அதை வைத்து புதிய வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம்தான் காரணம்.

ஒரு பெரிய "கேப்'புக்குப் பிறகு விக்ரமனின் "புதிய மன்னர்கள்' படத்தில் பெரிய எதிர்பார்ப்போடு நடித்தேன். ஆனால் அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை. பிறகு மீண்டும் தெலுங்கு, மலையாளம் எனக் கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதற்குப் பிறகு "உல்லாசம்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தேன். அந்தப் படம் எனக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவாகக் காரணமாக இருந்தது.

திருப்புமுனை..?

1999-ல் "சேது' வெளியான நாள்தான்! அந்தப் படம் எனக்கு மட்டுமல்ல பாலாவுக்கும் பெரிய திருப்புமுனை. இந்திய சினிமாவுலகம் உற்றுநோக்கும் பாலா என்ற இயக்குநரைத் தந்த காரணத்தால் "சேது' தமிழ்த் திரைப்படத்துறைக்கே ஒரு திருப்புமுனையான படம் என்பதுதான் என் கருத்து. ஆனால் அந்தப் படம் தயாராகி சுமார் ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் படம் வெளிவருமா? வராதா? என்ற விரக்தியில் இருந்தேன்.

பாலாவுக்கு அது முதல் படம் என்பதால் அவர் என்னை விட டென்ஷனாக இருந்தார். குறைந்தது எழுபது தடவைக்கு மேல் விநியோகஸ்தர்களுக்குத் திரையிட்டுக் காண்பித்திருப்போம். ஆனால் க்ளைமாக்ஸ் சரியில்லை என எல்லோரும் படத்தை வாங்க மறுத்துவிட்டனர். கடுமையாக உழைத்திருக்கிறோம். அதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தோம்.

இறுதியில் ஒருவழியாக ஒரு காட்சி மட்டும்தான் ஓட்ட முடியும் எனக் கூறி சிலர் படத்தை வெளியிட சம்மதித்தனர். படம் பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும் முதல் வாரம் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லை. ஆனால் "மவுத் பப்ளிசிட்டி' மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்கள் போன்றவை படத்தை தூக்கி நிறுத்தின. இந்த நேரத்தில் நான் அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஒரு காட்சி மட்டும்தான் ஓட்ட முடியும் என்றவர்கள் தங்கள் திரையரங்குகளிலேயே நான்கு காட்சிகள் ஓட்டினர். பல திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது.

"சேது' பெரிய வெற்றி பெற்றும் தமிழ் சினிமாவுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி விழுந்ததே..?

அதுதான் ஏன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தேன். அது கேரக்டர் செலக்ஷன். நான் எதிர்பார்த்தது போன்ற வாய்ப்புகள் தமிழில் கிடைக்காததால் மீண்டும் மலையாளம், தெலுங்கு எனப் போய்விட்டேன். அதன் பிறகு தரணியின் "தில்' படம் என்னை ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோவாக அடையாளம் காட்டியது. "காசி' என்னை நல்ல நடிகன் என மீண்டும் நிரூபிக்க வாய்ப்பளித்தது. பிறகு கமர்ஷியல் ரூட்டில் பயணிக்க ஆரம்பித்தேன். "ஜெமினி', "தூள்', "சாமி' என வரிசையாக ஹிட் படங்கள் அமைந்தன.

அதையடுத்து மீண்டும் பாலாவுடன் "பிதாமகன்' படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் சில வரிகள்தான் வசனம் பேசியிருப்பேன். படம் பெரிய வரவேற்பைப் பெற்றதோடு எனக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

அதற்குப் பிறகு "அருள்', "அந்நியன்', "மஜா', "கந்தசாமி' என ஹீரோயிசப் படங்கள். மணிரத்னத்தின் "ராவணன்' ஒரு புதுமையான அனுபவத்தைத் தந்தது. மணிரத்னத்தின் "பாம்பே' படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது வேறு சில படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால் "கன்டினியுட்டி' விஷயத்துக்காக என்னால் தாடியை ஷேவ் செய்ய முடியாத நிலை. அதனால் அப்போது அந்த வாய்ப்பு அமையவில்லை. இப்போது "தெய்வத் திருமகள்' வரை வந்துவிட்டேன். நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கும்போது ஏதோ சாதித்துவிட்டது போலத் தெரிந்தது. ஆனால் சிவாஜிகணேசன், கமல்ஹாசன் ஆகியோரின் சாதனைகளைப் பார்க்கும்போது இப்போதுதான் நாம் ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்ற மனநிலைதான் ஏற்படுகிறது.

இதுவரை நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் உங்களுக்குப் பிடித்தது?

உங்கள் பிள்ளைகளில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் என்ன சொல்லுவது..? இருந்தாலும் சில கதாபாத்திரங்களைச் சொல்லலாம். "சேது', "காசி', "தில்', "சாமுராய்', "தூள்', "சாமி', "அந்நியன்', "கந்தசாமி', "தெய்வத்திருமகள்' இப்போது நடித்துக்கொண்டிருக்கும் "ராஜபாட்டை' படங்களில் நான் ஏற்றுள்ள கதாபாத்திரங்களைக் குறிப்பிடலாம். இவை தவிர நான் ஏற்று நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களும் அந்தந்த நேரத்தில் நான் விரும்பிச் செய்தவைதான். அவை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப அமையாததில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. நாம்தான் அடுத்தடுத்து நம்மை "டெவலப்' செய்துகொள்ள வேண்டும்.

வாய்ப்பு இல்லாத காலங்களில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

நம்பிக்கை இருந்ததால் எல்லாமும் மாறும் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன். ஆனால் உழைப்பதை மட்டும் விட்டுவிடவில்லை. அந்தச் சமயங்களில் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரின் ஆறுதல் வார்த்தைகளும் என் நம்பிக்கைக்கு உரமூட்டின.

கதையம்சம் உள்ள படங்களை விட கமர்ஷியல் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது போல் தெரிகிறதே?

இரண்டும் தேவை. நான் நடித்த படங்களின் பட்டியலைப் பார்த்தாலே புரியும். இரண்டு மூன்று கமர்ஷியல் படங்கள் கொடுத்தால் அடுத்து ஒரு மாற்று சினிமாவுக்கான முயற்சி இருப்பது தெரியும். நான் மட்டுமே முக்கியம் அல்ல. என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், படத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் ஆகியோரையும் நான் கருத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்த இலக்கு..?

இப்போது சுசீந்தரன் இயக்கத்தில் "ராஜபாட்டை', புதியவர் கண்ணன் இயக்கத்தில் "கரிகாலன்' எனப் பிஸியாக இருக்கிறேன். அடுத்து விஜய் இயக்கத்தில் ஒரு படம். அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும். அதே போல அனைவரும் ரசிக்கும் வகையில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.

வளர்ந்து வரும் இளைய தலைமுறை நடிகர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது?

நானே என்னை இன்னும் இளைய தலைமுறை நடிகனாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் கேட்டால்... ம்ம்ம்... சினிமா என்று இல்லை எந்தத் துறையாக இருந்தாலும் நாம் அடைய வேண்டிய இலக்கை முதலிலேயே முடிவு செய்துகொள்ள வேண்டும். அந்த இடத்தை அடைய அயராமல் உழைக்க வேண்டும். வெற்றி ஒரே நாளில் கிடைத்துவிடாது. வாய்ப்பு குறைந்தாலோ எதிர்பாராத தோல்வி ஏற்பட்டு வீட்டில் முடங்க நேர்ந்தாலோ அந்த நேரத்தை நமது திறமையை மெருகேற்றிக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். It is not my advice; just a suggestion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com