

கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜீவா. "வந்தான் வென்றான்', ஷங்கர் இயக்கும் "நண்பன்' அடுத்தடுத்த ரிலீசுக்கு தயாராக இருக்க, எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம், மிஷ்கின் இயக்கும் "முகமூடி' என கால்ஷீட் நிரம்பி வழிகிறது. இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் வராத "சூப்பர் மேன்' கதைதான் "முகமூடி'. படத்துக்காக ஜீவா அணியும் சூப்பர் மேன் ஆடை அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது.
தமிழில் பெரும் வெற்றி பெற்றுள்ள "காஞ்சனா' படத்துக்கு முதலில் ஹீரோயினாக பேசப்பட்டவர் அனுஷ்கா. கால்ஷீட்டைக் காரணம் காட்டி அவர் படத்திலிருந்து விலகினார். இதனால் அவசரத்துக்கு லட்சுமிராயை நடிக்க வைத்தார் லாரன்ஸ். இப்போது தெலுங்கில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க லாரன்ஸ் இயக்கும் படத்திலிருந்தும் விலகியுள்ளார் அனுஷ்கா. இம்முறை அனுஷ்காவின் இடத்தைப் பிடித்திருப்பவர் தமன்னா.
நயன்தாராவின் கடைசிப் படமாக உருவாகியுள்ள "ஸ்ரீராம ராஜ்ஜியம்' படத்துக்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்துக்காக 14 பாடல்களை உருவாக்கியிருக்கிறார். 14 பாடல்களும் படத்தில் இடம் பெறுகின்றன. இளையராஜாவின் இசையில் அதிகப் பாடல்கள் இடம் பிடித்த படங்களின் பட்டியலில் இணைவது மட்டுமல்ல; பாடல்கள் அடங்கிய "சிடி' விற்பனை சூப்பர் போடு போடுகிறதாம்.
கவுண்டமணி - செந்தில் ஜோடி இப்போதும் சந்தித்து பேசிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. கவுண்டமணியை நிஜ வாழ்க்கையில் "அண்ணன்' என்றே அழைக்கும் செந்தில், அதற்குரிய தகுதியை தன் வாழ்வில் எப்போதும் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் தன் வீட்டு வாசல் கதவை வாஸ்து முறையில் மாற்றி அமைத்து, அதன் புகுவிழாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். விழாவுக்கு வந்த கவுண்டமணி, ""ஏண்டா... இப்படியெல்லாம் செய்தால் நமக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் கிடைத்து விடுமா என்ன?'' என்று அங்கேயும் செந்தில் தம்பியைக் கலாய்த்துவிட்டார் கவுண்டமணி.
வாழ வேண்டும் என ஆசைப்படும் நால்வரும் கேன்சரால் பாதிக்கப்படுகிறார்கள். மரணம் அது வரும் போது வரட்டும், அதற்கு முன் வாழ்வதற்கு நிறைய இருக்கிறது. இந்தக் கருத்தை எடுத்துச் சொல்லும் பாத்திரத்தில் கமல் நடித்துள்ள படம் "அன்புள்ள கமல்'. மலையாளத்தில் வெளிவந்த "4 ப்ரெண்ட்ஸ்' என்ற படத்தின் ரீமேக் இது. சம்பளம் வாங்காமல் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.
பாலா பட நாயகிகளுக்கு எப்போதும், எங்குமே மவுசுதான். "அவன் இவன்' படத்தில் நடித்த மதுஷாலினி, ராம்கோபால் வர்மா இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகும் "டிபார்மெண்ட்' என்ற படத்தில் அறிமுகமாகிறார். சேரிப் பகுதியில் வாழ்ந்த பெண் தாதா ஒருவரின் கதையை தன் பாணியில் படமாக்குகிறார் ராம்கோபால்வர்மா. பெண் தாதாவின் தளபதிதான் மதுஷாலினி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.