Enable Javscript for better performance
அமரகாவியம்: திமலா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அமரகாவியம்: திமலா

    By   |   Published On : 01st January 2011 12:00 AM  |   Last Updated : 20th September 2012 01:41 AM  |  அ+அ அ-  |  

    sujatha

    உங்களைப் பார்க்க உங்கள்...'' என்ற வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு ""எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். இந்த வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்காதே'' என்று வெட்டினான்.

    கோபக் கதவு திறந்தது.

    ""நான் பார்வையாளர் இல்லை. உன் மனைவி.''

    ""ஓ நித்யா! நீயா?''

    ""உள்ளே வரலாமில்லையா?''

    ""தாராளமாக. உனக்கு யார் தடை செய்ய முடியும்? அருகே வா. முத்தம் தருகிறேன்.''

    நித்யா அருகே செல்லாமல் தீர்க்கமாகத் தன் கணவனைப் பார்த்தாள். ஆத்மாவின் மேசையில் டெர்மினல் திரையில் எழுத்துகள் அதிவிரைந்தன. சுவரில் உயர வரைபடங்கள் சிவப்பிலும் பச்சையிலும் உயிர் பெற்று "ஆத்மா அண்ட் கோ'வின் அந்த நிமிஷ ஆரோக்கியத்தை அடித்துக்காட்டின. ஆத்மா டச் போனில் ""நியூயார்க்!'' என்று கூப்பிட்டுவிட்டு ""உட்காரேன் நித்யா'' என்றான்.

    நித்யா உட்காராமல் கைகளைக் கட்டிக்கொண்டு கணவனைக் கவனித்தாள்.

    ""நியூயார்க் நியூயார்க்!''

    ""நியூயார்க் ஸôர்.''

    ""எத்தனை வேண்டுமாம்?''

    ""இருபது மிலியன்.''

    ""பத்தொன்பதிற்குத் தீர்த்துவிடு.''

    ""நிக்ஸ் ஸôர்.''

    ""வாங்குவது யார்?''

    ""ராத்சைல்ட்.''

    ""அந்தக் கழுகா? சரியாக ஒரு நிமிஷம் பார். அதன்பின் பத்தொன்பது நாற்பது வரை போ.''

    ""சரி.''

    ஆத்மா டச் போனிலிருந்து நிமிர்ந்து நித்யாவை ஒரு மில்லி செகண்டு புன்னகைத்துவிட்டு ""பிஸி! பிஸி! பிஸி! இந்தச் சமயத்தில் வந்தாயே'' என்றான்.

    நித்யா பதில் சொல்லவில்லை. ஆத்மா தன் கோட்டின் உட்புறத்தில் கைவிட்டு பேஸ் மேக்கரை அமைத்து இதயத் துடிப்பை அதிகரித்துக் கொண்டான். மூளைக்கு ரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்திக் கொண்டான். துல்லியமாகச் சிந்திக்க முடிந்தது. அந்த வரைபடங்கள் இன்னும் நடனித்துக் கொண்டிருந்தன. அவைகளை ஒரு கணம் நிறுத்தி ஆராய்ந்து ""க்ரேட்! ஒரு நிமிஷத்தில் ஒரு லட்சம் செய்து விட்டேன். நித்யா நீ நிற்கிறாயே! என்ன வேண்டும் சொல்.''

    ""நான் யார் தெரியுமா உனக்கு?''

    ""என்ன பைத்தியக்காரக் கேள்வி? நீ என் மனைவி... ஹலோ நியூயார்க்? பத்தொன்பது ஐம்பதா? முடியாது. இன்னும் நாற்பது செகண்டு தயங்கி நாற்பத்தி ஐந்துக்கு முடித்துவிடு... என்ன சொன்னே நித்யா?''

    ""ஒன்றுமே சொல்லவில்லை. என் கணவன் இயங்குவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.''

    ""என்ன வேண்டும், சொல்லவே இல்லையா?''

    ""ஆத்மா, எனக்கு நீ வேண்டும்.''

    ""நானா? அதான் எதிரிலேயே இருக்கிறேனே!''

    ""என் எதிரில் இருப்பது ஒரு பணம் பண்ணும் இயந்திரம்.''

    ""பணம் சக்தி நித்யா. வந்த காரியத்தை நாற்பது செகண்டுக்குள் சொல்.''

    ""ஆத்மா, நீ ஒரு மணி நேரம் எனக்கே எனக்கு என்று பிரத்தியேகமாக வேண்டும்.''

    ""ராத்திரிதான் வருகிறேனே!''

    ""வருகிறாய். மாத்திரை விழுங்குகிறாய். இதயத் துடிப்பைக் குறைத்துக் கொள்கிறாய், தூங்கிவிடுகிறாய். காலை எழுந்து நான் காண்பது காலிப் படுக்கை.''

    ""தேவைப்பட்டபோது ஸ்.டி.வியில் பேசிக் கொள்கிறோமே.''

    ""அது வெறும் பிம்பம். எனக்கு வேண்டியது நிஜ நீ!''

    ""ஹலோ டோக்கியோ!''

    நித்யா டச் போனைப் பட்டென்று நிறுத்தினாள்.

    ""என்ன நித்யா இது?''

    ""ஆத்மா! நான் சொல்வதைத் தயவுசெய்து கவனி. போன வருஷம் திமலா போவதற்கு அனுமதி கேட்டு எழுதினோமே, ஞாபகம் இருக்கிறதா?

    ""அதற்கென்ன?''

    ""அனுமதி கிடைத்திருக்கிறது!'' என்று ஆர்வத்துடன் ஒரு மஞ்சள் அட்டையை எடுத்து அவனிடம் காட்டினாள். அதில் கம்ப்யூட்டர் அச்சில், திமலா நிர்வாகம் உங்கள் வேண்டுகோள்:

    20-2-2080 அன்று காலை

    10:16 உங்களுக்காக

    ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    நேரந்தவறாமல் வாருங்கள்.

    இந்த அட்டையையும்

    கொண்டுவாருங்கள். உங்கள்

    பார்வையாளர் எண் 164396

                                 (இது செயற்கைக் காகிதம்)

    ஆத்மா அதை அவளிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, ""அப்பாடா... கடைசியில் அனுமதி கிடைத்துவிட்டது. சந்தோஷம். போய் வா!'' என்றான்.

    நித்யா கோபத்துடன் தெளிவாகப் பேசினாள். ""ஆத்மா! நீயும் என்னுடன் வருகிறாய்--வந்துதான் ஆகவேண்டும். ஒருமணி நேரம்தான் ஆகும். வரவில்லையென்றால் இந்த அலுவலகத்தை நாசம் பண்ணிவிட்டுத்தான் போவேன். அத்தனையும் உடைத்து...''

    ""இரு இரு! எப்போது போக வேண்டும்?''

    ""நாளை காலை 10:16.''

    ""ஹேய் கம்ப்யூட்டர்! நாளைக் காலை 10:16க்கு நான் ஃப்ரீயா?'' என்றான்.

    அறையில் ஓர் அமானுஷ்யக் குரல் ஒலித்தது. ""நாளைக் காலை 10-16க்கு வத்தாநபே வருகிறார்.''

    ""ஓ காட்! வத்தாநபே ஜப்பானியன். மிக முக்கியமான சந்திர காண்ட்ராக்ட். ஸôரி நித்யா, நான் வர முடியாது.''

    நித்யா இப்போது அழுந்தி உட்கார்ந்தாள். ""முடியாது. நீ நாளை என்னுடன் வந்துதான் ஆக வேண்டும். டச் போன் கொடு. ஜப்பான்காரனுடன் பேசுகிறேன். ஹேய் கம்ப்யூட்டர்! வத்தாநபே கொடு.''

    ""ஸôரி கிடைக்கவில்லை'' என்றது குரல்.

    ""போய் உன் தலையைத் தின்னு.''

    ""ஸôரி, தலை கிடையாது.''

    ""இரு நித்யா கோபிக்காதே. நான் வந்துதான் ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? நீதான் திமலா பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தாய். தனியாகப் போய்ப் பாரேன். மற்றொருமுறை உன்னுடன் வருகிறேன்.''

    நித்யா பதற்றத்துடன், ""ஆத்மா! எப்படி இதைச் சொல்வேன்? இரண்டு பேரும் போவதாகத்தானே முதலிலிருந்தே பேச்சு. அட்டையைப் பார் -- அனுமதி இரண்டு பேருக்கு!''

    ""கூட யாரையாவது அனுப்பட்டுமா?''

    நித்யா அழ ஆரம்பித்தாள்.

    ""நித்யா என்ன இது? இந்த நூற்றாண்டில் யாரும் அழுவதில்லை.''

    மேலும் அழுதாள்.

    ""இதோ பார் நித்யா, உனக்கு என்ன குறை? கல்யாணம் செய்து கொள்ளும்போது என்னுடன் வாழ்க்கை அப்படித்தான் இருக்கும் என்று நான் சொல்லவில்லையா?''

    ""ஒரே ஒரு மணி நேரம்! அப்படி நான் என்ன பெரிசாகக் கேட்கிறேன்.''

    ""ஒன்று செய்யலாம். திமலா எவ்வளவு தூரம்?''

    ""நூற்றம்பது கிலோ.''

    ""நீ முதலில் போ. நான் சட்டென்று அவனுடன் பேச்சை முடித்து விட்டு வந்துவிடுகிறேன்.

    "முடியாது. நீ வர மாட்டாய். எனக்குத் தெரியும். நான் போகிறேன். எனக்கு ஒன்றும் வேண்டாம்! உனக்கு வாழ்க்கைப்பட்டதற்குப் பதில் ஒரு கம்ப்யூட்டரைக் கட்டி கொண்டிருக்கலாம். ஹேய் கம்ப்யூட்டர்! என்னக் கல்யாணம் செய்து கொள்வாயா?

    ""ஸôரி. பதில் இல்லை''

    ஆத்மா சிரித்தான்.

    ""சிரிக்கிறாய்! எனக்குப் பற்றிக்கொண்டு வருகிறது. ஆத்மா நாம் பிரிந்து விடுவோம் என்று நினைக்கிறேன். எனக்காகப் பத்துப்பேர் மனு போட்டிருக்கிறார்கள்.''

    ""அப்படி எல்லாம் பேசாதே, நித்யா.''

    ""பின்னே என்ன?''

    ""அந்தத் திமலா அப்படி என்ன முக்கியம் உனக்கு?''

    ""முக்கியம் ஆத்மா! அங்கே போக வேண்டியது என் நிம்மதிக்கு முக்கியம். என மனநிலை ஸ்திரமடைவதற்கு முக்கியம். ஒரு வருஷமாக நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அங்கே நமக்குக் கிடைக்கப்போகும்

    ஆறுதலும் நிம்மதியும் பிரபஞ்சத்தில் எங்கேயுமில்லை.''

    ""இந்த நூற்றாண்டில் இதெல்லாம் அபத்தமாக, பிற்போக்காகப் படுகிறது எனக்கு.''

    ""ஒருமுறை வந்து பார். உன் மனம் மாறிவிடும். அவ்வளவு நிம்மதி கிடைக்கிறதாம். கணவன் மனைவியாகச் செல்வது பெரும் பாக்கியம் என்கிறார்கள்.''

    ""இந்த முறை மன்னித்துவிடு நித்யா. மற்றொரு மனு போடலாம்... ஹலோ நியூயார்க்... என்ன ஆச்சு?''

    நித்யா டச் போனைப் பிடுங்கி எரிச்சலுடன் கீழே எறிந்தாள். ஹை இம்பாக்ட் பாலிமரில் செய்யப்பட்ட அது சேதமடையவில்லை. ஆத்மா அதைப் பொறுக்கிக் கொண்டு ""கோபம் கூடாது என் மனைவியே!'' என்றான்.

    ""நான் இனி உன் மனைவி இல்லை!''

    கம்ப்யூட்டர் குறுக்கிட்டது. ""ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது...''

    ""என்ன?''

    ""வத்தாநபேக்கு நாளை வேறு அவசர வேலையிருப்பதால் வர முடியாதாம். அதிக மன்னிப்புகள் கேட்கிறார்.''

    நித்யா முகம் மலர்ந்தது. ""வாழ்க வத்தாநபே! கம்ப்யூட்டரே, நீயும் வாழ்க!'' என்று கூவினாள்.

    ""மிகைப்பட்ட உற்சாகம் எதற்கு என்று தெரியவில்லை. எனினும் வாழ்த்துக்களுக்கு அஸ்ட்ரா கம்பெனியின் சார்பாக வந்தனம்'' என்றது கம்ப்.

    ஆத்மா சிரித்து ""திருப்திதானே? நாளை வருகிறேன். முத்தம் உண்டா?''

    நித்யா அவன் உதடுகளில் முத்தமிட்டாள்.

    மறுநாள் ஒன்பது மணிக்கே தயாராகிவிட்டாள். ஸ்டி.வி. அலுவலகத்தில் சொல்லி விடுமுறை வாங்கிக்கொண்டாள். தன்னை மெலிதாக அலங்கரித்துக் கொண்டாள். ஸின்த்ரானில் பாட்டு அமைத்தாள். பைக்குள் தேவையான சாமான்களை அடைத்துக் கொண்டாள். போனை எடுத்து வான டாக்ஸியை அழைத்தாள். ஒன்பது பதினைந்துக்கு மேல் மாடிக்கு வந்து காத்திருந்தாள். நிறைய சமயமிருக்கிறது. திமலா! அவள் எதிர்பார்த்து ஏங்கிய திமலா! கணவனுடன் சென்று வர வேண்டும் என்று ஒரு வருஷ வைராக்கியம். ஏன், விரதம் இன்று பூர்த்தியாகப் போகிறது. நித்யா மற்ற பெண்களைப் போலில்லை. கணவன் மனைவி உறவுக்கு இந்த நூற்றாண்டின் புதிய அர்த்தங்கள் அவளுக்குப் பிடிக்கவில்லை. அயற்சேர்க்கை விழாவிற்கு அவள் போவதேயில்லை. குருட்டுக் கூட்டுகள் அவளுக்குப் பிடிக்காது. கணவன் மனைவி உறவில் இன்னும் சில கவிதை கலந்த சங்கதிகள் இருப்பதாகவே நம்புகிறவள். அது ஜீன்களின் கோளாறு என்று ஆத்மா சொல்லியிருக்கிறான். இருக்கட்டும். கோளாறு அவளுக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு ஆத்மா ஒருவன் போதும். அவனுடன் என் சக துக்கங்கள் அனைத்தும் ஐக்கியமாகட்டும்.

    மெலிதாகப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு வான டாக்ஸி வந்து, வரைந்த வட்டத்தில் இறங்கிச் சுவாசித்தது.

    நித்யா ஏறிக்கொண்டாள்.

    ""எங்கே?'' என்றான் டாக்ஸி ஓட்டி.

    ""முதலில் அஜாக்ஸ் கட்டிடம். அங்கே கணவனை அழைத்துக் கொண்டு திமலா போக வேண்டும் பத்தே காலுக்குள். உன்னிடம் பூஸ்டர் இருக்கிறதா?''

    ""இருக்கிறது. நிறைய சமயமும் இருக்கிறது. அஜாக்ஸ் கட்டடத்தில் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?''

    ""அதிகப்படியாக ஐந்து நிமிஷம்.''

    ""சரி.''

    டாக்ஸி நழுவியது.

    அஜாக்ஸ் கட்டிடத்தில் இறங்கியபோது ஒன்பது நாற்பது முப்பது. ""ஒரு நிமிஷம்'' என்று சொல்லிவிட்டு அதிவேக லிஃப்ட்டில் இறங்கி ஆத்மாவின் அறைக்குள் சென்றாள். எப்போதும் போல் அவன் பணம் பேசிக்கொண்டிருந்தான். ""ஹலோ லண்டன்! ஸýப்ரா மெட்ரோவில் டாக்டர் டாம்லின்ஸன் வேண்டும். ஹலோ நித்யா!''

    ""நேரமாகிறது, கிளம்பு கிளம்பு...''

    ""ஒரு நிமிஷம்... டாக்டர் டாம்லின்ஸன், ஆத்மா ஹியர்... ஐம் ஹோல்டிங்...எங்கே போகிறோம் நித்யா?''

    ""நாசமாப் போச்சு. திமலா!''

    ""ஓ எஸ், திமலா! திமலா... நமக்கு அனுமதி கிடைத்து விட்டதல்லவா? இன்னும் அரைமணி இருக்கிறதே! இதோ வந்து விட்டேன்.''

    ஆத்மாவை ஒரு வழியாகப் பிடுங்கிக் கொண்டு வர பத்தாகி விட்டது. பத்துப் பதினாறுக்கு அனுமதி. நித்யாவுக்குக் கவலை அதிகரித்தது. கடவுளே! போக்குவரத்துக் குழப்பமில்லாமல் போய்ச் சேர வேண்டும்!

    ""டிரைவர். பத்துப் பதினாறுக்கு நாங்கள் அங்கே இருக்க வேண்டும்.''

    ""கவலைப்படாதீர்கள்''. ஃப்யூயல் ùஸல்கள் எல்லாம் புதிதாக சார்ஜ் வாங்கியிருக்கின்றன. பூஸ்டர் வைத்திருக்கிறேன். திமலாவில் எந்தப் பிளாட்பாரம்?

    ""புரியவில்லை.''

    ""உங்கள் அனுமதி அட்டை என்ன நிறம்?''

    ""மஞ்சள்.''

    ""பத்தாவது பிளாட்பாரம்.''

    வான டாக்ஸி அம்பாக விரைந்தது. அதன் வேக ஈர்ப்புடன் நித்யாவின் வயிற்றில் அந்த எதிர்பார்ப்பின் ஈர்ப்பும் கலந்திருக்கிறது. ஆத்மாவை முழுசாகப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாள். அவனை உரசிக் கொண்டாள். திமலாவுக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது பத்துப் பதினான்கு நாற்பது. அப்பாடா! ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்...

    நீண்ட பிளாட்பாரத்தில் அதிகம் சந்தடி இல்லை. "திமலாவுக்கு வரவேற்கிறோம்' என்று úஸôடியம் ஒளிர்ந்தது. நித்யா வேகமாக நடந்தாள். நீண்ட சதுர இயந்திரங்கள் "உங்கள் அனுமதிச் சீட்டை சொருகுங்கள்'' என்றன.

    சொருகினாள். உள்ள காந்த எண்கள் படிக்கப்பட்டு -- "நீங்கள் ஒரு நிமிஷம் முன்னதாக வந்திருக்கிறீர்கள். நேராக நடந்து இடதுபுறம் திரும்புகள். ஒன்பதாம் எண் கன்வேயரில் செல்லுங்கள்.'

    சற்றுத் தூரம் நடந்தார்கள். ஒன்பதாம் கன்வேயருக்கு ஒரு வரிசை காத்திருக்க, மேலே ஓர் ஆரஞ்சு வண்ண விளக்கு பளிச்சிட்டது. "இன்னும் முப்பது செகண்டுகளில் புறப்படும்' என்றது ஒலிபெருக்கி. ஆத்மாவும் நித்யாவும் அதன்மேல் மற்றவர்களுடன் ஏறி நிற்க, சற்று நேரத்தில் ஆரஞ்சு சிவப்பாகி டர்ன்ஸ்டைல் பூட்டிக்கொள்ள ஊஷ் என்ற சத்தத்துடன் பெல்ட் நகர ஆரம்பித்தது. முதலில் ஒரு மண்டபத்தின் ஊடே விரைந்தது. மேலும் வேகம் பிடித்து... கட்டிடத்தைச் சுற்றி வந்து... கோபுரம் தெரிந்தது. நித்யாவின் துடிப்பு அதிகரிக்க, ஆத்மாவை அப்படியே அணைத்துக் கொண்டாள். பிரதான வாசல் திறந்திருந்தது. அவர் இங்கிருந்தே தெரிந்தார். நித்யா துள்ளினாள்.

    ""பார் ஆத்மா அவர்தான்!''

    வேகம் குறைந்து சரியாகப் பத்துப் பதினாறுக்கு ஆத்மாவும் நித்யாவும் சன்னதியில் அனுமதிக்கப்பட்டார்கள். மெலிதாக ஏர்கண்டிஷனரின் மூச்சு கேட்டது. அருகே அருகே சென்றார்கள்.

    அப்பா! என்ன வாஜ்ஜல்யம்! என்ன கம்பீரம்!

    "உங்களுக்காகச் சரியாக இருபது செகண்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆசை தீரச் சேவிக்கலாம்' என்று குரல் மேலே ஒலித்தது.

    அர்ச்சகர் பட்டாடை அணிந்து நெற்றியில் நாமம் அணிந்து ""அர்ச்சனை உண்டா? என்ன மொழி?'' என்றார்.

    ""தமிழ்'' என்றாள் நித்யா.

    அர்ச்சகர் அருகே இருந்த பட்டன்களைத் தொட்டார். மெலிதான இசை பரவியது. துல்லியமான கணீர் என்ற பெண் குரலில் பாட்டுக் கேட்டது.

    குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்

    அன்று ஞாலம் அளந்த பிரான் பரம்.

    சென்று சேர் திருவேங்கட மாமலை

    ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

    ""சேவிங்கோ சேவிங்கோ! நன்னா கண்குளிர சேவிங்கோ. சீனிவாசப் பெருமாள்! முன்னெல்லாம் திருப்பதி திருவேங்கடம் திருமலைனு பேரு. இப்பதான் கம்ப்யூட்டருக்குத் தோதா திமலான்னு சின்னதாக்கிட்டா.. பூலோக தெய்வம்... பிராசீனமான கோவில் -- நின்ற திரு உருவும் திரு முடியும் தாளும் தடக்கையும்...''

    கற்பூர ஒளியில், ஆத்மா ""த்ரில்லிங்!'' என்றான்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp