ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்: 7

காஞ்சிபுரத்தில் அண்ணா வசித்த வரகு வாசல் தெருவை அடுத்த நிமந்தக்காரத் தெருவில் டி.பி.எஸ். பொன்னப்பாவுக்குச் சொந்தமான ஒரு சிறு கட்டடத்தில் 1942 மார்ச் 8ஆம் நாள் 'திராவிட நாடு' வார இதழ் தொடங்கப்பட்டது.
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்: 7

காஞ்சிபுரத்தில் அண்ணா வசித்த வரகு வாசல் தெருவை அடுத்த நிமந்தக்காரத் தெருவில் டி.பி.எஸ். பொன்னப்பாவுக்குச் சொந்தமான ஒரு சிறு கட்டடத்தில் 1942 மார்ச் 8ஆம் நாள் "திராவிட நாடு' வார இதழ் தொடங்கப்பட்டது.

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற ஈழத்துச் சிவானந்த அடிகள் இப்பத்திரிகையின் நிர்வாகி. ஓரணா விலையில் 8 பக்கங்களோடு இதழ் வெளி வந்தது. எல்லாப் பக்கங்களிலும் அண்ணாவின் எழுத்துகளே இடம் பெற்றிருந்தன. செüமியன், பரதன், ஒற்றன் போன்ற பல புனைப்பெயர்களிலும் அண்ணா எழுதுவார். மிக முக்கியமான கட்டுரைகளுக்குத் தவிர்க்க முடியாத நிலையில் ஓவியங்கள் இடம் பெறும். தலைவர்களது புகைப்படங்கள் இடம் பெற்றதில்லை. இருபதாண்டு கால "திராவிடநாடு' இதழ் வரலாற்றில் அதன் ஆசிரியரான அண்ணாவின் புகைப்படம் ஓர் இதழில்கூட வெளிவந்ததாக நினைவில்லை. மேலும் அண்ணாவின் பெயர் சி.என். அண்ணாதுரை என்றே குறிப்பிடப்படும். கழகத்தின் கொலையுண்ட தியாகிகளின் படங்கள் வெளிவந்துள்ளன. கட்டுரை தலைப்புகளுக்குத் தனியே பிளாக் செய்ய மாட்டார். பார்டர்களைச் சுற்றிலும் அடுக்கி இடையில் தலைப்புக்கான அச்சுக் கோர்த்துப் போடச் சொல்வார். இவை யாவும் பெரியாரிடம் கற்ற சிக்கன வழிமுறைகள்.

அண்ணாவின் நண்பரான ஏ.கே. தங்கவேல் முதலியாரின் சகோதரர் பொன்னுச்சாமி முதலியார் என்பவரிடம் ரூ.500 கடன் வாங்கி "திராவிட நாடு' இதழை அண்ணா தொடங்கினார். பின்னர் "வேலைக்காரி' திரைப்படத்தின் மூலம் அண்ணாவுக்குக் கிடைத்த வருவாயில் திருக்கச்சி நம்பி தெருவில் இருந்த "திராவிட நாடு' கட்டடம் வாங்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் திண்ணையில்தான் அண்ணா அமர்ந்து தமது தம்பிமார்களுடன் இரவு நெடுநேரம்வரை கலந்துரையாடுவார்.

காஞ்சி கல்யாண சுந்தரம் "திராவிட நாடு' ஏட்டின் பொறுப்பாசிரியராக இருந்தார். அவர் பெருமளவு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார். அண்ணாவின் பள்ளித் தோழரான அவர் அண்ணாவை "வா, போ' என்றுதான் பேசுவார். அவர் பேசுவதே வேடிக்கையாக இருக்கும். அவரை ஓர் இடத்தில் உட்கார வைப்பதே கடினம்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்று இளந்தாடி வீரராகப் பொதுக் கூட்டங்களில் முழங்கிய இரா. நெடுஞ்செழியன் கோவை அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு மாணவர் விடுதியில் காப்பாளராகப் பணியாற்றி அதிலிருந்து விடுபட்டு, பெரியாருடன் சுற்றுப் பயணம் நடத்தி, பின்னர் "திராவிட நாடு' இதழின் பொறுப்பாசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

அண்ணாவின் தாயார் பங்காரு அம்மாள். அண்ணாவை அவரது சிறிய தாயார் (தொத்தா) வளர்த்தார். அண்ணாவின் ஒரே ஒரு அக்கா (சிற்றன்னையின் மகள்) நாகம்மா. அவருக்கு செüந்தரவள்ளி என்று ஒரு பெண். பொன்னப்பா செüந்தர வள்ளியை மணந்து கொண்டார். அத்தம்பதிகளுக்கு நான்கு மகன்கள். அண்ணாவுக்குப் பிள்ளை இல்லாத காரணத்தால் நான்கு பிள்ளைகளையும், தம் பிள்ளைகளாகவே வளர்த்தார். அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார் தாய்மை உள்ளத்துடன் அனைவரையும் உபசரிக்கக் கூடியவர்.

பள்ளி இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்த சம்பத், (அப்போது அவருக்கு வயது 16) தந்தை பெரியாருக்கு உதவியாக இருந்து பொது அறிவு பெற்றார்.

அண்ணாவைப் பார்க்காமல் சம்பத்தால் ஒரு மாதம்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு அண்ணாவைக் காண காஞ்சிபுரம் வந்தார். அண்ணாவும் ராணி அம்மையாரும் சம்பத்தை மிகவும் உபசரிக்கக் கூடியவர்கள். அவருக்கு விருப்பமானவற்றை ராணி அம்மையார் சமைத்து விருந்தளிப்பார். சம்பத் உரிமையோடு சமையல் அறைவரை சென்று, ""அக்கா அந்த மீனுக்கு மிளகுத்தூள் போட்டு வறுத்துவிடுங்கள்'' என்று கூறுவார்.

அண்ணாவோடு மட்டுமன்றி, அவரது குடும்பத்தாரும் சம்பத்திடம் கலகலப்பாக பழகுவார்கள். சம்பத் வருகையில் அண்ணாவுக்குத் தனி மகிழ்ச்சிதான் என்றாலும், "படிப்பைக் கெடுத்துக் கொண்டு வந்துவிட்டான்' என்று பெரியார், தன்னைக் கடிந்து கொள்வார் என்னும் அச்சமும் உண்டு. ஆகவே இரண்டொரு தினங்களிலேயே சம்பத்தை ஈரோட்டுக்கு அனுப்பி வைப்பார்.

அண்ணாவின் காஞ்சிபுரம் இல்லம் அடக்கமான ஒரு சிறிய வீடு. நுழைந்ததும் ஒரு பெரிய திண்ணை. அடுத்து ஒரு தாழ்வாரம். பக்கத்தில் ஒரு சிறிய படுக்கை அறை, அதிலே ஒரு பெஞ்ச். அதன்மேல் துணி விரிக்கப்பட்டு ஒரு தலையணை, ஒரு சாய்வு நாற்காலி, ஒரு சிறிய மின் விசிறி, இதுதான் அண்ணாவின் படுக்கை அறை. பக்கத்தில் சமையல்கூடம். அண்ணாவின் இல்லம் அவ்வளவுதான்.

அண்ணாவின் நண்பர் புட்டாசாமி சம்பத்திற்கும் தோழர். ஆடிசன் பேட்டையில் அவருக்குச் சொந்தமான சுவாமிஸ் கபே. அங்கே கழக நண்பர்களுக்கு இலவசச் சிற்றுண்டி கிடைக்கும். சம்பத், நெடுஞ்செழியன், கருணாநிதி, சிவாஜிகணேசன் போன்றவர்களுக்கு அங்கேதான் காலைச் சிற்றுண்டி.

அண்ணாவின் மற்றொரு நண்பர் டபிள்யூ. கே. தேவராஜன். அவருக்குச் சொந்தமான ராஜா பஸ் சர்வீஸ் பேருந்துகளில் அண்ணாவின் நெருங்கிய நண்பர்களுக்கும், "திராவிடநாடு' ஊழியர்களுக்கும் பயணச் சீட்டு தேவையில்லை; இலவசப்பயணம்.

காஞ்சியில் சி.வி.எம். அண்ணாமலை, கல்யாணசுந்தரம், கே.எஸ். மணி, சி.வி. ராஜகோபால் போன்றவர்களெல்லாம் சம்பத்திற்கும் நெருக்கமானவர்கள். பள்ளி விடுமுறை நாட்களில் சம்பத் காஞ்சி வந்து அண்ணாவோடு தங்கிச் செல்வதில் தனி மகிழ்ச்சி காண்பார்.

கே.ஆர். ராமசாமி தஞ்சையில் கிருஷ்ணன் நாடக சபா என்னும் நாடகக் குழுவை நடத்தி வந்தார். அவருக்குத் துணையாக நாடக விவசாயி யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, கம்பெனி நடிகர்கள் வி.சி. கணேசன் (சிவாஜி கணேசன்), எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி, எம்.என். கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, பி.கே. சரஸ்வதி போன்றவர்கள். அண்ணாவின் "ஓர் இரவு' நாடகத்தை அவர்கள்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். அண்ணா அடிக்கடி தம்பி சம்பத்துடன் தஞ்சை சென்று கே.ஆர்.ஆர். நாடகக் குழுவினர்க்கு உற்சாகம் ஊட்டிவந்தார்.

"திராவிட நாடு' தொடங்கிய பிறகு (1942) அதன் ஊழியர்களையும், தமது நண்பர்களையும் நடிக்க வைத்து "வழக்கு வாபஸ்', "சந்திரோதயம்', "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' ஆகிய நாடகங்களை காஞ்சி மறுமலர்ச்சி நாடக மன்றம் என்னும் பெயரில் அண்ணா நாடெங்கிலும் நடத்தி வந்தார்.

இந்த நாடகங்களில் ஜமீன்தார், சாமியார், இப்படிப் பல வேடங்களில் அண்ணாவே நடிப்பார். "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடகம் "சந்திரமோகன்' என்னும் பெயரிலும் நடைபெறும். இதில் காகப்பட்டராக அண்ணா நடிப்பார். சிவாஜியாக சம்பத் தத்ரூபமாக நடிப்பார்.

அப்போது சம்பத் கல்லூரியில் இன்ட்டர் மீடியட் படித்துக் கொண்டிருந்தார். "படிப்பைக் கெடுத்துக் கொண்டு அண்ணாவுடன் கூத்தாடிக் கொண்டிருக்கிறான் சம்பத்' என்று பெரியார் ஒரு பக்கம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது.

அப்போது திருச்சியில் பெரியார் தலைமையில் "சந்திரமோகன்' நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் நாடகத்தில் சம்பத்தை நடிக்க வேண்டாமென்று அண்ணா கேட்டுக் கொண்டார். அவருக்குப் பதிலாக யார் நடிப்பது? ஒரே நாளில் முழுப் பாடத்தையும் மனப்பாடம் செய்ய முடியுமா என்றெல்லாம் பிரச்னை ஏற்பட்டபோது அந்த நாடகத்தில் வேறு பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த வி.சி. கணேசன் தமக்கு வசனம் மனப்பாடமாக இருக்கிறதென்றும், சிவாஜியாக நடிக்க முடியும் என்றும் கூறினார். அதன்படி அன்று இரவு சிவாஜி வேடத்தில் கணேசன் நடித்தார். நாடகத்திற்கு தலைமை ஏற்ற பெரியார் முன்வரிசையில் அமர்ந்து சிவாஜி வேடத்தை உற்று உற்றுப் பார்த்து, ""சம்பத் குரல் மாதிரி இல்லையே'' என்று கேட்க, பக்கத்திலிருந்த குருசாமி, ""இது வேற யாரோங்க?'' என்று சொன்னார்.

நாடக இடைவேளையில் அண்ணாவையும் மற்ற நடிகர்களையும் பாராட்டிப் பேசிய பெரியார், ""இந்த சிவாஜி வேஷத்திலே சம்பத் நடிக்கிறான்னு சொன்னாங்க, அவனுக்கு எங்க நடிக்கத் தெரியும், இப்படி நடிச்ச பையன்... (நடித்தவர் பெயரைக் கேட்கிறார்,"கணேசன்' என்று அண்ணா சொன்னார்) அதுதான் கேட்டேங்க, இந்த சிவாஜி வேஷத்துக்கு இவர்தான் பொருத்தம். ரொம்ப நல்லா நடிச்சாரு. இனிமேலும் ஆள மாத்த வேண்டாம், இவரே அதுல நல்லா நடிக்கிறதனால, "சிவாஜி' என்று பட்டம் கொடுக்கிறேன்'' இவ்வாறு பலத்த சிரிப்பொலி, கரவொலிக்கு இடையே பெரியார் குறிப்பிட்டார்.

அண்ணா விஷம் சாப்பிடாதே

"சந்திரோதயம்' நாடகத்தில் ஒரு வேடிக்கை நடைபெற்றது. "திராவிடநாடு' இதழ் வளர்ச்சிக்காகச் சிதம்பரத்தில் "சந்திரோதயம்' நாடகம் நீதிக்கட்சி பிரமுகர் திருவொற்றியூர் டி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஜமீன்தாராக நடித்த அண்ணா பல நல்ல கருத்துகளையும் கொள்கைகளையும் வழங்குவதற்காக ஜமீன்தார் வேடத்தில் தாம் செய்த கொலை முதலான குற்றங்களுக்காகத் தண்டனை பெறுவதிலே இருந்து தப்ப விஷமருந்தி உயிர்விடுவது போல் ஒரு காட்சி. அதில் அண்ணா உருக்கமாக நடிப்பார். விஷத்தைக் குடிக்க நச்சுக் கோப்பையை வாயருகே கொண்டு போகும்போது நாடகத்திற்குத் தலைமை தாங்கிய சண்முகம்பிள்ளை எழுந்து, ""அண்ணா சாகக் கூடாது அவர் எதற்காக விஷம் அருந்த வேண்டும்?'' என்று பதறிப் போய் மேடையில் ஏறித் தடுத்துவிட்டார். இது கண்டு பார்வையாளர்கள் பலமாகச் சிரித்துவிட்டனர். அந்த அளவு நடிப்புக் கலையிலும் அண்ணாவின் திறமை மேலோங்கி இருந்தது.

மாயவரத்தில் தி.ப. நாதன் என்பவர் "பசி' என்றொரு நாடகத்தை எழுதி மாணவத் தோழர்களைக் கொண்டே நடிக்க வைத்தார். இந்த நாடகத்தின் அரங்கேற்றம் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் (அப்போது அவர் மாணவர்) நடைபெற்றது. இரண்டாம் நாள் நாடகம் மு. கருணாநிதியின் தலைமையில் நடைபெற்றது.

அக்காலத்தில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களைக் கவர்ந்திழுக்க அண்ணா அரசியல் கலவாத தமது சொற்பொழிவுகளைக் கல்லூரிகளில் நிகழ்த்தினார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அப்போது நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் கல்வி பயின்றனர். மெத்தச் சிரமப்பட்டு துணைவேந்தரிடம் அனுமதி வாங்கினர். அண்ணா பேசுவதற்கு முன் துணை வேந்தர் ஒரு நிபந்தனை விதித்தார். அரசியல் துளியும் கலவாது பேச வேண்டுமென்பதற்காக "ஆற்றோரம்' என்னும் தலைப்பில் பேசுமாறு பணித்தார்.

"ஆற்றோரம்' என்ற தலைப்பிலேயே தமது கருத்துகளை அழகுபட எடுத்துரைத்தார். இந்தக் கூட்ட நிகழ்ச்சிக்கு சம்பத்தும் உடன் வந்திருந்தார் (அப்போதும் அவர் ஒரு மாணவரே).

அது போலவே மாநிலக் கல்லூரியில் மோகன் (பின்னாளில் நீதிபதி) கல்லூரி மாணவராய் இருந்து நடத்திய கூட்டத்தில், "அச்சம்' என்னும் தலைப்பில் அண்ணா பேசினார். சம்பத், மதியழகன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

இப்படிப் பல கல்லூரிகளிலும், பலத்த எதிர்ப்புக்கிடையே தலைப்பு வட்டங்களுக்குள் உரையாற்றிய அண்ணா தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியில் பேச அழைக்கப்பட்டபோது, ஒலிபெருக்கியின் முன்வந்து நின்று, "தலைப்பு என்ன?' என்று கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது அவர், ""தலைப்பு இல்லை!'' என்று சொன்னார்.

அண்ணா,"தலைப்பு இல்லை' என்னும் தலைப்பிலேயே கருத்துரை ஆற்றினார். "தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று தலைப்பில்லை, தமிழ்ச் சமுதாயத்திற்கும் உரிய தலைப்பில்லை' என்றெல்லாம் அவர் அடுக்கியபோது பலத்த கரவொலி ஏற்பட்டது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com