

நாவல் பழம் தற்சமயம் நிறையக் கிடைக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் எவை? நாவல் மரத்தின் இலை, பட்டை, கொட்டை அனைத்திலும் பல மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கேள்விப்படுகின்றேன். இது பற்றி ஆயுர்வேதக் குறிப்புகள் உள்ளனவா?
செந்தில்குமார், சென்னை.
தன்வந்திரி நிகண்டுவில் நாவல் பழம் கபத்தின் கோளாறுகளையும் பித்தத்தின் கோளாறுகளையும் குணப்படுத்திவிடும். ஆனால் அதிகமாய் வாயு தோஷத்தை வளர்க்கும், மலத்தைக் கட்டும் என்று காணப்படுகிறது. இதே கருத்தை ஆமோதிக்கும் வகையில் சரக ஸம்ஹிதையிலும் காணப்படுகிறது.
ராஜநிகண்டுவில் பித்தக் கொதிப்பினால் ஏற்படும் உள்காந்தல், எரிச்சல், தாகம், வறட்சி, வெப்பம் போன்றவை நாவல் பழம் சாப்பிட்டால் குறைந்துவிடும் என்றும், குடலிலுள்ள கிருமித் தொற்றை அழித்து வெளியேற்றிவிடும் என்றும் காணப்படுகிறது.
சாதாரணமான மற்ற பழங்கள் போல நாவல் பழத்தை அதிகம் சாப்பிட்டால் பசி மந்தம், வயிற்றுப் பொருமல், குடல், கை, கால், கீல்களில் வலி போன்ற தொந்தரவு ஏற்படும் என்று சுஸ்ருத ஸம்ஹிதை கூறுகிறது. இது போன்ற கெடுதல்களைப் போக்க பச்சை நெல்லிக்காயை மென்று சாப்பிட்டுக் குளிர்ந்த நீரைப் பருகினால் போதுமானது.
நாவல் பழத்தை நன்றாகப் பிசைந்து கொட்டையை நீக்கி பிழிந்து வடிகட்டிய சாறு 1 லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையையோ, சீனாக் கற்கண்டையோ சேர்த்துக் கரைத்து வடிகட்டி மெல்லிய தீயில் தேன் பதமாகக் காய்ச்சி இதில் 2 கிராம் குங்குமப் பூ, 1 கிராம் பச்சைக் கற்பூரம் அரைத்துக் கலக்கி, கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். சுமார் 10- 15 மி.லி. வரை ஒரு நாளில் 3 -4 முறை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் எரிச்சல், தாகம், உடற்சூடு, ரத்த மூலம், மூலச் சூடு, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு போன்றவை குணமாகும்.
சிறுநீரில் வெளியாகும் இனிப்பு (சர்க்கரை) நாளடைவில் குறைய, நாவல் பழக்கொட்டையை வெய்யிலில் உலர்த்தி உடைத்து உள் பருப்பைச் சூரணம் செய்து காலை, மாலை 1- 2 கிராம் இடைவிடாமல் சாப்பிட்டு வந்தால் போதுமானது. மலக்கட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதால், சிறிது நெல்லி முள்ளி சூரணத்தைக் கலந்து சாப்பிட்டால், சரியாகிவிடும். நாவற் பருப்புடன் மாங்கொட்டை பருப்பு சூரணத்தைச் சேர்த்துக் கொடுத்தால் பேதி நின்று விடும். சிறுநீர் நன்றாகப் பிரியும்.
சீதபேதி, ரத்த பேதி, அஜீரண பேதி, வாந்தி போன்றவை குணமாக, நாவற் கொழுந்தை ஆட்டுப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டால் குணமாகிவிடும். நொதநொதவென்று வலியுடன் போகும் பெருமலப் போக்குக்கு, நாவல் இலைக் கொழுந்து, மாந்தளிர் இரண்டையும் சேர்த்தரைத்துச் சாறு பிழிந்து 15 மி.லி. எடுத்து, கொஞ்சம் பிஞ்சுக் கடுக்காயின் சூரணத்துடன் சாப்பிட்டால் குணமாகிவிடும்.
நிகண்டு ரத்னாகரம் நாவற் பட்டையின் பெருமைகளை விளக்கிக் கூறுகிறது. பச்சையாக வெட்டி வெய்யிலில் உலர்த்தி சூரணம் செய்து, துணியில் சலித்து வைத்துக் கொண்டு, ஒன்றிரண்டு சிட்டிகை ஒரு நாளில் 3 -4 முறை சாப்பிட்டு வர, தொண்டைப் புண், கபம், இருமல், ஆஸ்த்துமா, மூலம், பேதி, மாதவிடாய் அதிக உதிரப் போக்கு, சர்க்கரை உபாதை, ரத்த பேதி போன்றவை குணமாகும். பட்டையைக் கஷாயமாகக் காய்ச்சி, வாய் கொப்பளிக்க வாய்ப் புண் ஆறிவிடும்.
புண்ணைக் கழுவினால் புண் ஆறிவிடும். ஆவாரை, மருதம் பட்டை, கொத்தமல்லி விதை, நெல்லி வற்றல், மஞ்சள், நன்னாரி வேர், நாவற்பட்டை, நாவல் கொட்டை ஆகிய எட்டு மருந்துச் சரக்குகளையும் சமமான அளவில் சேர்த்துப் பெருந்தூளாக இடித்துக் கஷாயம் செய்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இன்ஸýலின் இன்ஜெக்ஷன் யூனிட்டின் அளவைப் படிப்படியாகக் குறைத்து, நிறுத்திவிடக் கூடிய அளவுக்கு உபயோகமாக இருக்கும். சிலாஜித் எனும் ஆயுர்வேத மருந்தையும் இதனுடன் உபயோகித்தால் மிகவும் சிறந்தது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.