திரைக் கதிர்

கடற்பரப்பில் பல சாகசங்களுக்கிடையே நடைபெறும் காதல் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு
திரைக் கதிர்
Published on
Updated on
2 min read

கடற்பரப்பில் பல சாகசங்களுக்கிடையே நடைபெறும் காதல் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு கவிஞர் வைரமுத்து எழுதிய "தண்ணீர் தேசம்' நாவல், அதே பெயரில் திரைப்படமாக உருவாகிறது. கன்னடத்திலும் தெலுங்கிலும் தலா இரண்டு படங்களை இயக்கிய ஷிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். "எங்கேயும் எப்போதும்' படத்துக்கு இசையமைத்த சத்யா இசையமைக்கிறார். கதாநாயகன், கதாநாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மலேசியாவைச் சேர்ந்த ரெட் எர்த் மூவிஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

"ஆரோகணம்' படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய சுப்பு, லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவி.சி தயாரிக்கும் "சுட்டகதை' படத்தின் மூலம் இயக்குநர் ஆகியுள்ளார். பாலாஜி என்ற புதுமுகமும், யூ டியூபில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கும் "ஸ்டெப் ஸ்டெப்' மணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இயக்குநரிடம் "இது எந்த டி.வி.டி.யில் இருந்து சுட்ட கதை?' என்று கேட்டால்... ""இது எங்கேயும் சுடாத கதை. விமர்சனத்தின்போது வழக்கமாக பத்திரிகைகள் டைட்டிலை தொடர்புபடுத்தி ஒரு பஞ்ச் வைப்பதுண்டு. இந்தப் படத்துக்கு "சுட்ட கதை - எங்கேயுடம் சுடவில்லை' என்றுதான் பஞ்ச் வைப்பார்கள். அந்த அளவுக்கு கதையில் புதுமை இருக்கிறது'' என்கிறார்.

"முனி', "முனி-2' (காஞ்சனா) வெற்றிப் படங்களுக்கு பிறகு ராகவா லாரன்ஸ் "முனி-3' படத்தை இயக்கி நடிக்கிறார். "காஞ்சனா'வில் கதாநாயகியாக நடித்த லட்சுமி ராய், "முனி-3' யிலும் தான்தான் கதாநாயகி எனக் கூறி வந்தார். ஆனால் ராகவா லாரன்ஸோ, ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் படத்தை உருவாக்குவதால் இரண்டு மொழி ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான நடிகை நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறி டாப்ஸியைக் கதாநாயகி ஆக்கிவிட்டார்.

ஹாலிவுட்டில் முன்னணி நட்சத்திர நாயகியாக இருப்பவர் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்த 2005 முதல் ஹாலிவுட்டின் பிரபல ஹீரோ பிராட் பிட்டுடன் "லிவிங் டுகெதர்' பாணியில் வாழ்ந்து வருகிறார்.

37 வயதான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்; தவிர 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஹாலிவுட்டில் இப்போதும் முன்னணி நாயகியாக உள்ள ஏஞ்சலினா, திடீரென இனி நடிக்கப் போவதில்லை என அறிவித்திருக்கிறார். காரணம் கேட்டால்... "எனது குழந்தைகளை கவனிக்க போதுமான நேரம் இல்லை; எனவே சினிமாவை விட்டு விலகி அவர்களை நல்ல முறையில் வளர்க்க விரும்புகிறேன். அவர்கள் தங்கள் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன்'' என்கிறார்.

"கேளடி கண்மணி', "ஆசை', "நேருக்கு நேர்', "ரிதம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய வஸந்தின் புதிய படம் "மூன்று பேர் மூன்று காதல்'. இதில் அர்ஜுன், சேரன், விமல் ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். புதுமுகங்கள் சுர்வீன், லாசினி, "தாமிரபரணி' பானு ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். "ரிதம்' படத்தில் பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பாடல்களை அமைத்த வஸந்த், இந்தப் படத்தில் ஐந்திணைகளுள் மூன்றான குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்), நெய்தல் (கடலும் கடல் சார்ந்த இடமும்), மருதம் (நிலமும் நிலம் சார்ந்த இடமும்) ஆகியவற்றை மையமாகக் கொண்டு படத்தையும் பாடல்களையும் உருவாக்கியிருக்கிறார். நா.முத்துகுமாரின் வரிகளுக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

பொதுவாக ஒரு படத்துக்கு முப்பது நாள்களுக்கு மேல் கால்ஷீட் கொடுக்க மாட்டார் அனுஷ்கா. அப்படிப்பட்டவர் செல்வராகவனின் "இரண்டாம் உலகம்' படத்துக்கு அறுபது நாள் கால்ஷீட் கொடுத்தது திரையுலகில் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் இப்போது அந்த சாதனையையும் முறியடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் "ராணி ருத்ரம்மாதேவி' படத்துக்காக 150 நாள்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அனுஷ்கா. பதின்மூன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தை தெலுங்கின் பிரபல இயக்குநர் குணசேகர் இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

தன்னுடைய அதிரடியான ஆக்ஷன் படங்கள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற ஆசியாவின் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான், "இனி ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன்' என அறிவித்திருக்கிறார். "அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறேன்; இதுவரை ஆக்ஷன் காட்சிகளில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறேன். உடலில் 300-க்கும் அதிகமான எலும்புகள் உடைந்து அதற்காக சிகிச்சை எடுத்துள்ளேன். இதுவே போதும் என நினைக்கிறேன். ஆனாலும் என்னுடைய ரசிகர்களுக்காக இன்னும் பத்து படங்களில் செய்ய வேண்டிய ஆக்ஷனை என்னுடைய 101-வது படமான "சிஇசட்-12' (இழ-12)  படத்தில் செய்துள்ளேன்'' எனக் கூறியுள்ளார். ஜாக்கியின் இந்தக் கூற்று வெறுமனே ரசிகர்களைச் சரிக்கட்ட என நினைத்துவிட முடியாது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்தால் ஜாக்கிசான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என புரியும். அந்த அளவுக்கு இந்த வயதிலும் சாகசக் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com