
தமிழ்நாடு அரசுக்கென ஒரு மலர் இருக்கிறது. அது காந்தள். காந்தள் பெரும்பாலும் மலைப் பகுதியான குறிஞ்சி நிலத்தில் வளர்கிறது. ஆனால் பிற பகுதிகளிலும் காணப்படுகிறது. ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டது என்று தாவரவியல் அறிஞர்கள் கூறினாலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் மலேசியா, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலும்கூட வளர்கிறது.
காந்தள் ஒரு செடி. மேல்நோக்கி கிளைகள் பரப்பி படர்ந்து வளர்கிறது. நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் பூக்கிறது. பூ ஆறு இதழ்கள் கொண்டது. அதில் மஞ்சள், சிவப்பு நிறங்கள் பளிச்சென்று இருக்கும். சிவப்பு அதிகமாக இருப்பதால் செங்காந்தள், குருதிப் பூ என்று சொல்வதும் வழக்கம். தமிழ் மாதமாகிய கார்த்திகையில் காந்தள் அதிகமாகப் பூப்பதால், கார்த்திகைப் பூ என்றும் சொல்வது உண்டு.
காந்தள் மலரை பெண்களின் கைக்கும் இதழ்களை விரல்களுக்கும் உவமையாகச் சங்கப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். குறுந்தொகையில் தலைவி பாடுவதாக ஒரு பாடல் இருக்கிறது. அது இதுதான்:
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
அழகும் வனப்புங்கொண்ட இந்த காந்தள் செடி நச்சுத் தன்மை கொண்டது. அதன் தண்டு, வேர்களை எவ்வகையாகவும் பயன்படுத்துவதில்லை. மீறித் தின்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்கிறார்கள். காந்தள் செடியின் தாவரவியல் பெயர் Glorisa Superba.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.