
எனக்கு ரொம்ப வருடங்களாகவே இரு கால்களிலும் கெண்டைக் காலுக்கு மேல் பெரும்பாலும் மாலை வேளையில் அரிப்பு எடுக்கும். சொறிந்த உடன் அந்த இடத்தில் நீர் கோர்த்துக் கொள்ளும். ஆயின்மென்ட் போட்டால் சரியாகிவிடும். கொஞ்சநாள் கழித்து மீண்டும் அரிப்பு எடுக்கும். அந்த இடம் சிறிது கறுத்து இருக்கிறது. இதற்கு நல்ல ஆயுர்வேத மருந்து கூறவும்.
எம்.ஐ.ஃபெய்ரோஸ், காயல்பட்டினம்.
லில் ஏற்படும் அரிப்பு, கபம் எனும் தோஷத்தின் சேர்க்கையில்லாமல் ஏற்படுவதில்லை. சொறிந்தவுடன் நீர் கோர்த்துக் கொள்ளும் தன்மையது. தோலில் அடிப்பகுதியில் அமைந்துள்ள கோளங்களில் கெட்ட நீரின் சேர்க்கையை வெளிப்படுத்துகிறது. ஆயின்மென்ட் போட்டால், அரிப்பையும் நீரையும் உண்டாக்கக் கூடிய தோஷங்களின் சேர்க்கையை அமுக்கிவிடுவதால், தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது. அதற்காக, நோய் முற்றிலும் மாறிவிட்டதாகக் கருத முடியாது. அதனால்தான் கொஞ்சநாள் கழித்து மறுபடியும் அரிப்பு ஏற்படுகிறது. வாத தோஷத்தின் சீற்றமானது தோல் பகுதியில் ஏற்படுவதால், அப்பகுதி கறுத்து விடுகிறது. ஆக, இதனால் நாம் அறிய வேண்டியது, கபம் நிணநீர்க் கிரந்திகளிலுள்ள நீர் - வாயு ஆகியவற்றின் சீற்றத்தை அடக்கக் கூடிய மருந்துகளால் இந்த உபாதை மாற அதிக வாய்ப்பிருக்கிறது.
வாய் வழியாக அருந்தக் கூடிய மருந்தானது வயிற்றிலுள்ள பசித் தீயில் நன்றாக வெந்து, குடல் வழியாக அதன் சாரமானது, கால்களின் கரண்டைப் பகுதிக்கு வந்து சேருவதற்கு, பாதை தங்குதடையேதுமில்லாமல் இருந்தால்தான் விரைவில் நிவாரணம் கிடைக்கும். அதற்கு ஆரம்பமாக, குடல் சுத்தமாகும் வகையில் மருந்துகளைச் சாப்பிட்ட பிறகு, நோய் நிவாரணிகளான மருந்துகளைச் சாப்பிடுவது உசிதம். அந்த வகையில் -
மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை, சுமார் 10 கிராம் காலை, மாலை வெறும் வயிற்றில் 3 -5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட, நீர் பேதியாகி குடல் சுத்தமாகும். இந்த மருந்தைச் சாப்பிடும் நாட்களில் தயிர், கத்தரிக்காய், நல்லெண்ணெய், கடுகு ,மீன், சிக்கன், முட்டை போன்றவற்றை உணவில் தவிர்க்க வேண்டும்.
அதன் பிறகு அரிப்பையும் நீரையும் வற்றச் செய்யும் சரக்கொன்றைப்பட்டை, கருங்காலிக்கட்டை, வேப்பம்பட்டை, ஏழிலைப் பாலைப்பட்டை, புங்கம்பட்டை, அரசம் பட்டை போன்றவற்றைச் சுமார் 5 கிராம் வீதம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி, கரண்டைப் பகுதியில் ஏற்பட்டுள்ள அரிப்பு, நீர்ப் பகுதியில் காலை, இரவு உணவுக்குப் பிறகு, கழுவி வர, விரைவில் குணமாகும்.
வீனஸ் அல்சர் எனப்படும் உபாதையாகவும் இது இருக்கலாம். கரியமில வாயுவை ஏந்திச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்பகுதியில் அமைந்துள்ள வால்வு தொய்வடைந்திருந்தால், ரத்தம் கட்டி நிற்கும். ரத்தத்தை மேலே செலுத்துவதற்காக வேலை செய்யும் இந்த வால்வுகள் பழுதடைந்து போனால் காலில் ரத்தக் குழாய் சுருண்டு, தோலின் மேற்பகுதியில் காணும். அதுமாதிரியான நிலைகளிலும் மேல் குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் பலனளித்தாலும், கால்களை அதிக நேரம் தொங்கவிட்டு அமர்ந்தாலோ, சைக்கிள் பெடலை அழுத்தி ஓட்டினாலோ,அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்தாலோ, இந்த உபாதையின் தாக்கம் மறுபடியும் ஏற்படும். தொய்வடைந்த ரத்தக் குழாய்ப் பகுதியை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்கிவிடும் மருத்துவர்களும் உள்ளனர்.
இரவில் படுத்துறங்கும்போது கால்களை கைத்தறித் துணியால் நெய்யப்பட்ட வேட்டியால் மறைத்து படுத்துக் கொள்வது நல்லது. இதனால் கொசுத் தொல்லை, பூச்சி உபாதைகளிலிருந்து விடுதலை கிடைக்கலாம்.
ஒரு சில ஆயுர்வேத கஷாய மருந்துகள் உங்களுக்கு உதவிடக் கூடும். ஆரக்வதாதி, படோகடுரோஹிண்யாதி, படோலமூலாதி, திக்தகம், மஹாதிக்தகம் என்ற வகையில் பல மருந்துகள் உள்ளன. அவற்றில் எது தங்களுக்கு உபயோகப்படும் என்பதை ஒரு ஆயுர்வேத மருந்துவரை அணுகி விபரமறிந்து சாப்பிடுவதே நல்லது.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.