மொய்

இன்று என்னுடைய அண்ணன் மகனுடைய திருமணம். அண்ணன் என்றால் ஒரு கால் விட்ட தூரத்து பங்காளி. அதாவது என் தாத்தாவும், அவர் தாத்தாவும் அண்ணன் தம்பிகள். அவர் இங்கே நுங்கம்பாக்கத்தில் அறநிலையத்துறையில் பெரிய அதி
மொய்

இன்று என்னுடைய அண்ணன் மகனுடைய திருமணம். அண்ணன் என்றால் ஒரு கால் விட்ட தூரத்து பங்காளி. அதாவது என் தாத்தாவும், அவர் தாத்தாவும் அண்ணன் தம்பிகள். அவர் இங்கே நுங்கம்பாக்கத்தில் அறநிலையத்துறையில் பெரிய அதிகாரியாக வேலை செய்கிறார். அவருடைய ஒரே பிள்ளை அரவிந்த், சாஃப்ட்வேர் என்ஜினியர். அவனுக்குத்தான் இப்போது திருமணம். சாஃப்ட் வேர் ஆட்களுக்கே உரித்தான அம்சம் போல சிலமாதங்களுக்கு முன்பு வரை அவனுடைய இருப்பிடம் பெங்களூர், இன்றைக்கு அமெரிக்கா, நாளைக்கு எந்த ஊரோ, அல்லது எந்த நாடோ? சம்பளம் உள் நாட்டில் லட்சத்துக்கு நெருக்கமாய். வெளி நாட்டில் -இரண்டு லட்சங்களைத் தாண்டி.. வரப் போகிற பெண்ணும் சாஃப்ட்வேர் என்ஜினியர்தானாம்.. அப்ப ஒரு விஷயம் தெளிவு. லட்சுமி கடாட்சத்தின் பிரதிகூலமாய் வயசான பெற்றவர்களை கை கழுவிட்டு அமெரிக்கா போய் க்ரீன் கார்டு வாங்கி, அமெரிக்க பிரஜையாகி, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, நான்வெஜ் பிட்சாவையும், பர்கரையும் தின்று கொழிக்கப் போகிற ஜோடி இது.

வீட்டில் எல்லோரையும் அவசரப்படுத்தித்தான் கிளப்ப வேண்டியிருந்தது. முகூர்த்தம் காலை 9.00 -10.30.எட்டு மணிக்கெல்லாம் மண்டபத்துக்குப் போய் விட்டால் நல்லது அவசரமில்லாமல் சொந்தங்களையெல்லாம் பார்க்க முடியும். பார்த்து பழைய கதைகளைப் பேசி, அளவளாவி, புறணிக் கதைகளையும் பேசிச் சிரித்து,கல்யாணத்தைப் பார்த்து விட்டு, அட்சதை போட்டு,மொய் பணம் எழுதி, டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்.

என்னுடைய ஹீரோ ஹோண்டாவில் எல்லாரும் கிளம்பினோம்.

வேலப்பன் சாவடியிலதான் திருமண மஹால். டிராஃபிக் ஜாமில் திணறி, அடிச்சிபுடிச்சி 8-20 மணிக் கெல்லாம் மண்டபத்துக்குப் போய் விட்டோம். இரண்டு சம்பந்திகளுமே வி.ஐ.பி. க்கள் என்பதால் செம கூட்டம். ஹால் நிரம்பி வழிகிறது. வரவேற்பில் பட்டு வேஷ்டி, பட்டு சேலையில் பளிச் என்று என் அண்ணனும், அண்ணியும் நின்று வருபவர்களை வரவேற்று, குசலம் விசாரித்து,உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அண்ணன் என்னைப் பார்த்ததும், ""என்ன இப்படித்தான் கரெக்ட் டைமுக்கு வர்றதா? ஹும்.சரி சரி உள்ளே போங்க'' உணர்ச்சியின்றி சொல்லிவிட்டு, வெளியே காரிலிருந்து இறங்கிய தம்பதிகளை வரவேற்க வாயெல்லாம் பல்லாய் ஓடினார். அண்ணி வாயைத் திறக்காமல் எங்களை பார்த்துக் கொண்டு நின்றாள். உள்ளே நுழைந்தோம்.

""ஹும் வர்றவங்களை இப்படித்தான் வரவேற்கிறதா உங்க அண்ணி? வாயைத் திறந்தாளா பாருங்க. ஒப்புக்காவது சிரிக்கலாமில்ல.என்ன நாகரீகமோ'' என்றாள் புவனா.

""சரி..சரி..முணுமுணுக்காம வா''

""என் வாயை அடைச்சிடுங்க. அங்க பாருங்க வந்தவங்க கிட்ட எப்படி இழையறாங்க.ரெண்டு பேரும். ஹும்அவங்கள்லாம் பெரிய இடம்.. கார்ல வந்தவங்க..அதான் வேண்டிவேண்டி உபசரிக்கிறாங்க''

நான் பார்க்க அண்ணனும்,அண்ணியும் அப்படித்தான் வந்தவர்களிடம் இழைந்துக் கொண்டிருந்தார்கள்.

மேடையில் இப்போதுதான் அரசாணிக்கால் நடும் சடங்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.. நாதஸ்வர வித்வான் ஷண்முகப்ரியாவில் கமகங்கள் சுத்தமாய் ஆலாபனையில் சன்னமாய் உருகிக் கொண்டிருக்க... தவில்காரர் "தமுக்கு தமுக்கு' என்று பிளந்துக்கொணடிருந்தார்,தாளம் சேராமல்... தாளம் தட்டுபவர் இயந்திர கதியில் தட்டியபடி சுருதிப் பெட்டி ஆளுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்... நுழைவாயிலிலிருந்து உள்ளே ஹால் முழுக்க பளிச்..பளிச்..புகைப்படக்காரர்களின் அட்டகாசங்கள். மூன்று நான்கு வீடியோ கேமராக்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடி ஓடி காட்சிகளை உள்வாங்கி மூலைக்குமூலை நிற்கும் டி.வி.பெட்டிகளுக்கு அஞ்சல் செய்துக் கொண்டிருக்கின்றன. கேமராக்களின் பார்வைகள் மேலே விழும் போதெல்லாம் மனிதர்களிடம்தான் எத்தனை விதமான பாவனைகள். எங்கோ தூரப் பார்வை பார்ப்பதும் அந்நேரத்துக்கு வசீகரமாய் சிரித்தபடி பக்கத்து மனிதரிடம் வலிந்து பேசுவதும்,மீசையை தடவி நேர் பார்வை பார்ப்பதுவும், அனாவசியத்துக்கு சிரிப்பதுவும்இத்தியாதி இத்தியாதி சேட்டைகள்.

மண்டபம் முழுக்க பட்டும்,தங்கமும்,வைரமும் அணிந்து வளைய வரும் பெண்களும்,ஜிவ்வென்று குளிரூட்டும் ஏ.சி. ஹாலும்,வெளியே அணி வகுத்து நிற்கும் கார்களின் எண்ணிக்கையும், வார இதழில் சமையல் குறிப்பு எழுதி புகழடைந்த சமையல்காரரின் சமையல்தான் இங்கே என்று சொல்லும் பேனரும், எல்லாம் சேர்ந்து இந்த திருமணத்தின் பணக்காரத்தனத்தை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் வீட்டு ஆட்கள் யாரோ ரெண்டு பேர் கோபத்துடன் பேசிக்கொண்டிருந்தனர்.

""வாணாம்யா நான் கௌம்பறேன் . சோத்துக்கு கதி கெட்டுப் போய் இங்க வரல. என்னா..தெர்தா..''

""இருய்யா அதுக்குன்னு வந்துட்டோம்.எல்லாத்தையும் நானும்தான் பார்த்தேன். என்ன பண்றதுவுடு வுடு...''

""நாம யாரு. ஊர்காரங்கதானே.. அதிலியும் நான் சொந்தக்காரன்யா. ஒரு மரியாதை இல்ல. உள்ள வர்றேன் வாசல்லதான் நிக்கிறாரு ஏன்னு ஒரு வார்த்தை கேக்கல. காரில் வர்றவனை மட்டும் ஓடிஓடி கையைப் புடிச்சிக்கிறீயே பணக்காரன்னுதானே. நானுன்னா தலை காஞ்சவன்''.

""கேட்டீங்களா எல்லா பணக்காரங்களும் இப்படித்தான். இப்பவாவது மனுஷங்களை புரிஞ்சிக்கோங்க.நம்மள மாதிரி வசதி இல்லாதவங்க உறவா இருந்தாக்கூட ஏழை வீட்டு கல்யாணத்துக்கு போகலாமே தவிர இந்த மாதிரி பணக்காரங்க வீட்டு கல்யாணத்துக்கு வந்து அசிங்கப் பட்டு நிக்கக் கூடாது. ஆமா..''

""பதில் சொல்ல இது நேரமல்ல'' என்று அமைதியாக இருந்துவிட்டேன்.

மேடையில் மலர் அலங்காரம் அசத்தலாக இருந்தது. நடப்பது தமிழ் திருமணம்.ஒரு முதியவர் சடங்குகளை ஒவ்வொன்றாய் நிதானமாக செய்துக் கொண்டிருக்க, உதவியாளர் தேவாரம்,திருவாசகப் பாடல்களை இனிமையுடன் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார். இது பற்றிய புறசிந்தனைகள் எதுவுமின்றி மாப்பிள்ளையும், பெண்ணும் சற்று மிகையுடன் சிரித்துசிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

டைனிங் செக்ஷனில் கூட்டம் அலைமோதுகிறது. இருந்தும் யூனிஃபாம் போட்ட கேட்டரிங் சர்வர்கள் ஓடிஓடி பரிமாறி, சத்தமில்லாமல் அவ்வளவு கூட்டத்தையும் சமாளிக்கிறார்கள். சாப்பிட்ட இலைகளில் பெரும்பாலும் இனிப்பு ஐட்டங்களும், ஆயில் ஐட்டங்களும் தொடப்படாமலேயே குப்பை கூடைக்குப் போய்க் கொண்டிருந்தன. உபயம் சர்க்கரை வியாதியும், கொலஸ்ட்ராலும்.. இந்த அழகில் டபுள் ஸ்வீட் கலாச்சாரம் வேறு, இது போன்ற விருந்துகளில் இனி பஃப்பே சிஸ்டத்துக்கு நாம் மாறிக்கொள்ளலாம். உணவுகள் வீணடிக்கப்படுவது குறையும். பெண் வீட்டார் எல்லா ஏற்பாடுகளையும் ஒழுங்காக செய்து வைத்திருந்தார்கள்.வராண்டா பகுதியில் டேபிள் சேர் போட்டு,பெண் வீட்டார் ஒரு பக்கம், பிள்ளை வீட்டார் ஒரு பக்கம் என்று மொய் வசூல் நடக்கிறது. பரிசுப் பொருட்களை மட்டும் மேடையில் பெண்ணும், பிள்ளையும் சிரித்து சிரித்து வாங்கிக் கொள்ள ஏற்பாடாகியிருந்தது. இருந்தும் பெரும்பாலானவர்கள் மொய் எழுதும் இடத்திலேயே பரிசுப் பொருட்களை ஒப்படைத்து விட்டு அவசரமாய் உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள்.

சாப்பிட்டுவிட்டு வெளியே வருபவர்களுக்காக வெளிப்பக்கம் மரத்தடியில் ஸ்டால் போட்டு ஃப்ரூட் சாலட், ஐஸ்க்ரீம், பீடா வகையறாக்களின் விநியோகம் நடந்துக் கொண்டிருந்தன. அது முடிந்ததும் அடுத்ததாக நாலுபேர் கொண்ட குழு ஒன்று எல்லோருக்கும் தேங்காய் பையை கொடுத்துக் கொண்டிருந்தனர்.

மூன்றாவது பந்தியில்தான் எனக்கு இடம் கிடைத்தது. என் குடும்பம் இரண்டாவது பந்தியிலேயே சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலுக்குப் போய்விட்டார்கள். நான் சாப்பிட்டு முடித்து, வெளியே வந்து ஃப்ரூட் சாலடை உள்ளே தள்ளி, தேங்காய் பையை வாங்கிக் கொண்டு, பீடாவை மென்றபடியே ஹாலுக்குள் நுழைய, என் அண்ணி என்மனைவியை பேர் சொல்லி கூப்பிட்டபடி ஓடி வந்துக் கொண்டிருந்தாள். புவனா பதறி எழ, ""மச்சினன் எங்கடீ. எங்க போயிடுச்சி''

நான் விரைந்தேன்.

""என்ன அண்ணி?''

""தாலி கட்ற நேரத்தில ரெண்டு பேரும் மேடையில இல்லாம இங்க என்ன பண்றீங்க? தாலி கட்ற நேரம். இப்பவாவது பங்காளியா என் கூட வந்து நிக்கிறானா பாருன்னு அங்க உன் அண்ணன் காச்மூச்னு கத்தறார் பாரு. சீக்கிரம் சீக்கிரம். புவனா சீக்கிரம்கூட்டிக்கிட்டு மேல வாடி'' சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அண்ணி மேடைக்கு ஓடினாள். என் மனைவியின் முகத்தில் ஈயாடவில்லை.

""புவனா இப்ப புரிஞ்சிக்கிட்டியா நீ இன்னும் அடிப்படையையே சரியா தெரிஞ்சிக்கல. உன்னை மாதிரிதான் நிறைய பேர் இருக்காங்க. அண்ணன் அப்படி பேசியது கூட நீ என் உறவு, என் வீட்டு ஆளு., கூட இருந்து செய்யவேண்டியவன் இந்நேரத்துக்கு வர்றீயே என்ற உரிமை. மத்தவங்களை கைகுலுக்கி, அணைத்து வரவேற்றது அசலார்க்கு தரவேண்டிய மரியாதை. புரிஞ்சிக்கோ. அப்படிப் பார்த்தால் நாமதான் பங்காளியா நடந்துக்கல. சம்பந்தி மாதிரி குறை பேசினோம்.''

அவளையும் குழந்தைகளையும் இழுத்துக் கொண்டு மணமேடைமீது ஏறினேன். அண்ணன் என்னை கிட்டே இழுத்துக் கொண்டார்.

கெட்டிமேளம்..கெட்டிமேளம்..

அட்சதையை போடும்போதுதான் கவனித்தேன். எனக்கு சற்று அதிர்ச்சியாய் இருந்தது. மக்கள்கூட்டம் பிதுங்கிக் கொண்டிருந்த அந்த ஹாலில் இப்போது அட்சதைப் போட அங்கே நூறுக்கும் குறைவாகத்தான் ஆட்கள் இருந்தார்கள். எல்லோரும் எங்கே? எங்கே போயிட்டாங்க? வெளியேயும் கும்பல் இல்லை. டைனிங் செக்ஷனிலும் கூட்டமில்லை. இரண்டு வரிசையில் மட்டுமே அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். என் பக்கத்தில் நின்றிருந்த மாமாவிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.

""நிறைய பேர் போயிட்டாங்கப்பா...''

""என்ன சொல்றீங்க கல்யாணத்தைப் பார்க்காமலேயா..இப்பத்தானே தாலிய கட்றாங்க?''

""ஆமாம். யார் இல்லேன்னது. முகூர்த்த நேரம் ஒன்பது பத்தரைன்றது ரொம்ப லேட் டைம்பா. அதான்..''

எனக்கு எரிச்சலாயிருந்தது.

""அதுக்காக நீ தாலி கட்டினா கட்டு கட்டாட்டிப்போ ன்னு இப்படியா ஒட்டு மொத்தமா போயிட்றது கேவலமாயிருக்கு. .அப்புறம் எதுக்கு வரணுமாம்?''

""மாப்ளெ நம்ம உறவுக்காரங்களுக்குத்தான் தீராது. மத்தவங்களுக்கு என்ன. வந்தாங்க,மொய் எழுதினாங்க,சாப்பிட்டாங்க, உடனே தேங்காய் பையையும் குடுத்துட்டீங்க. அப்புறம் என்ன? ஏற்கனவே நாம அவங்கவங்களுக்கு எழுதி வெச்சிருந்த மொய் பாக்கியை திருப்பி எழுதியாச்சு,அவ்வளவுதான். வந்த வேலை முடிஞ்சிட்டுதுன்னு கிளம்பிட்டாங்க . ஹ.ஹா.ஹா.ஹ. இது அவசர உலகம்பா''

மாமா எவ்வளவு ஈஸியா எடுத்துக்கிறார் என்று தோன்றியது எனக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com